-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

16 ஏப்., 2010

ஒரு மழைக் காலத்தின் ஆரம்பம் -பகுதி:2




கல்லூரி நுழைவுக்கான நேர்முகத் தேர்வுக்கு போய் வந்து இரண்டு நாட்களாகி விட்டன. அது பற்றிய நினைவுடன் தம்பியோடு வீட்டுத் தோட்டத்தில் மட்டையும் பந்துமாக விளையாடிக் கொண்டிருந்தேன்.;. ஊருக்கு வெளியிலுள்ள மைதானத்தில் விளையாடப் போவதற்கு சின்ன வயதிலிருந்தே அனுமதி மறுக்கப்பட்டு வந்ததால் வீட்டுத் தோட்டத்தையே ஒரு கெத்தாராமையாக நினைத்து விளையாடி வந்தோம். நான், தம்பி, அஸ்மத், யாசிர், பவாஸ் ஐந்து பேரும் ஐந்து நாடுகளாக உலகக் கோப்பை போட்டிகளைக் கூட இந்த தோட்டத்தில் விளையாடி இருக்கிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டுத் தோட்டத்தில் நாம் விளையாடும் இந்த விளையாட்டுக்கு நிறையவே எதிர்ப்பிருந்தது. பந்து கூரையில் அடிக்கடி சிக்கிக் கொள்வதால் நாம் ஏறி எடுக்க வேண்டியிருந்தது. இது வாப்பாவுக்கு பிடிக்கவில்லை. கூரையில் ஏறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உம்மாவின் எச்சரிக்கை 'டேய் விழுந்து கால கீல உடைச்சிக் கொள்ள போறீங்க...இருங்க வாப்பா வரட்டும்..' இதற்கெல்லாம் பயந்தா எப்படி விளையாடுவது.

அதே போன்றே எமது விளையாட்டில் உம்மும்மாவுக்கும் விருப்பம் இருக்கவில்லை. உம்மும்மா மரங்கள் வளர்ப்பதில் அதீத ஈடுபாடுள்ளவர். எமது விளையாட்டில் அதிகம் பாதிப்படைவது அவர் நட்டிய மரங்கள்தான். மாலையில் மரங்களுக்கு நீரூற்றும் போதுதான் எமது அட்டகாசங்களை கண்டு கொள்வார். இரக்கமான மனுசி. திட்டமாட்டா. வாய்க்குள் முணு முணுப்பதோடும் மறுநாள் விளையாடும் போது 'டேய் மரங்கள உடைச்சிராம விளையாடுங்க' என்ற வேண்டுதலோடும் தன் எதிர்ப்பை முடித்துக் கொள்ளுவா.


எம் விளையாட்டை விரும்பி ரசிக்கும் ஒரே ஆள் அப்பா மட்டும்தான் - பாக்கிஸ்தான் சப்போர்டர். இலங்கைத் தோற்றுப் போனால் அந்த பக்கம் தலைகாட்ட முடியாது. 'எங்கடாப்பா போயிட்டு வார..பருப்பு மூட்டை எடுக்கவா?' – 'பாருங்களே! அடுத்த மெச்சில எப்படி பருப்பு தாரம் என்று' நின்று பேசாமல் பதிலை மட்டும் சொல்லி விட்டு ஓடி வந்து விடுவோம்.

இந்த தோட்டம்..விளையாட்டு இதையெல்லாம் விட்டு விட்டு புதிய ஒரு அத்தியாயத்தை தொடங்கச் சொல்லும் ஒரு செய்தியோடு சகோ:நிஸாம் வீட்டுக்கு வந்தார். கல்லூரி தேர்வில் நான் சித்தியடைந்திருப்பதாக வந்து சொன்னார். அவர் போய் சிறிது நேரத்தில் சகோ:ராபியும் அதே செய்தியோடு வீட்டுக்கு வந்தார். நான் புதிதாய் பிறப்பெடுத்தேன்.

கல்லூரிக்குச் செல்வதில் எல்லோருக்கும் சந்தோசம். ஆனால் ஊர் தலைவர் வாப்பாவிடம் 'அங்கு அனுப்ப வேண்டாம், அங்கு போனால் விரல் ஆட்டும் கொள்கையோடுதான் மகன் வந்து சேருவான்' என்று சொல்லியதாக வாப்பா வந்து வீட்டில் சொன்ன போது உம்மா சொன்னார் : 'ஏன்ட மகன் எங்க போனாலும் அப்படி ஆக மாட்டான்..அவர்களுக்கு பொறாமை..அதுதான்' எல்லா தாய்மாருக்கும் பிள்ளை மீதுள்ள நம்பிக்கை என் உம்மாவுக்கும் இருந்தது.

என் மீது பள்ளி நிர்வாகத்திற்கு மட்டுமல்ல என் வீட்டாருக்கும் இந்த விரல் ஆட்டும் விசயத்தில் நீண்ட நாட்களாகவே ஒரு கண் இருந்து வந்தது. தொழுகையில் தப்பித் தவறியாவது விரல் அசைந்து விடாமல் இருக்க நான் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. கல்லூரி முதல் லீவில் ஊருக்கு வந்த போது எல்லோரும் என் செயல்களை அவதானிப்பதை நான் உணர்ந்தேன். தொழுது விட்டு வீட்டுக்கு வந்த போது என் கடைசித் தம்பி வாப்பாவிடம் ரகசியமாய்ச் சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. 'வாப்பா பள்ளித் தலைவர் சொன்னது போல நானா ஆட்ற குரூப் இல்ல..நான் தொழும் போது பார்த்தேன்..அவன் ஆட்டல்ல'.

நான் கல்லூரியிலிருந்து வெளியேறும் வரை அதே தலைவர்தான் நிர்வாகியாக இருந்தார். நான் வெளியாகி சில மாதங்களில் தெரிவான புதிய நிர்வாகத்தினருக்கு என் மீது அத்தகைய தேவையில்லாத பயங்கள் இருக்கவில்லை. பள்ளிவாசலுக்கான சட்டக் கோவையை எழுதும் பொறுப்பை என்னிடம் தரும் அளவுக்கு அவர்களிடம் என் மீது நம்பிக்கை இருந்தது.




2000 மே 17 :

அது ஒரு அழகான பௌர்ணமி தினம். வெசக் தினம் என்பதால் வாகன நெரிசல். அலையாய் வீதிகள் தோறும் சனக் கூட்டம். தோரணங்கள், மின் விளக்கு அலங்காரம் - தலைநகரின் அழகை ஒரு கிராமத்துப் பையனாக ரசித்துக் கொண்டு பயணித்தேன்.

பேருவலைச் சென்றடையும் போது இரவு பத்து மணியிருக்கும்..பஸாரில் பஸ்மினா ஹோட்டல் மட்டும் திறந்திருந்தது. சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம்.நாளை புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நாள்.

எனக்கு முன்பே சில மாணவர்கள் தமது பெற்றோர் சகிதம் வந்திருந்தனர். அந்த இரவில் அறிமுகமாகிக் கொள்ள சந்தர்ப்பம் இருக்கவில்லை. பிரயாணக் களைப்பில் அவர்கள் உறங்கிப் போயிருந்தனர்.

ஒருவன் மட்டும் வந்து கதைத்தான். பெயரையும் ஊரையும் கேட்டான். ஓ! நீங்க கெக்கிறாவையா?? –நான் தம்புள்ளை, பேரு தஸ்லீம். அவன் நீங்க என்று மரியாதையாக அழைத்த முதலும் கடைசியுமான தருணம் அது மட்டும்தான். பக்கத்து ஏரியா, கூடவே என் மாமா ஒருவர் அவர்களின் ஊரில் திருமணம் முடித்திருந்தார். விசாரித்துப் பார்த்ததில் தூரத்து சொந்தம். அறிமுகத்தோடு நட்பும் துளிர்விட்டது.

சுபஹூக்கே எழுந்து குளித்து நான் ரெடியாகி இருந்தேன். 'எப்படியும் பெயர்களைப் பதிவதற்கு எட்டு ஒன்பது மணியாவது ஆகும்..யாராவது வாங்க..நான் டைனிங் ஹோலில் டீ எடுத்துத் தாரேன்.' என்று ஹொஸ்டல் வோர்டன் சொல்ல அப்போது ஹொஸ்டலில் இருந்த நானும் இன்னொருவனும் அவரோடு கிளம்பினோம். என்னோடு கூட வந்தவன் வோர்டனோடு சகஜமாகப் பேசிக் கொண்டு வந்தான். அவன் சீனியராக இருக்க வேண்டும். நான் நினைத்துக் கொண்டேன். திரும்பும் போது அவனிடம் கேட்டேன் : 'நானா நீங்க எத்தனையாம் ஆண்டு??' – நானும் புதிய பெட்ஜ்தான் - பேரு சாலிஹீன் - ஊரு புல்மூட்டை – நாங்க மூணு நாளைக்கு முன்னுக்கே வந்துட்டம்.

பதிவுகள் முடிந்து கூட்டி வந்தவர்கள் விட்டுச் செல்லும் தருணம். நிறைய பேருக்கு கண்கள் கலங்கி இருந்தன. நான் வாப்பாவை வழியனுப்பிவிட்டு சோகத்தோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்..அப்போது திடீர் என்று ஒருத்தன் முன்னால் வந்து 'நான் நப்லான்வா, நான் மாத்தரவா...இது ஏன்ட உம்மாவா..இது..'' அந்த பாஸை புதிதாக இருந்தது. மட்டுமல்ல அந்த அறிமுகம் மறக்காமலும் இருக்கிறது.

ஒரே நாளைக்குள் அதிகமானவர்களோடு அறிமுகம் ஆகிக் கொண்டேன். வீட்டில் எட்டரை மணிக்கு உண்டு ஒன்பது மணிக்குள் உறங்கிப்போகும் நான் முதன் முதலாய் அன்று பதினொன்னரை மணி தாண்டியும் தூக்கத்தை மறந்து புதிய நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன்.

(மழை தொடர்ந்து பொழியும் - இன்சா அல்லாஹ்)

5 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. தொடர்ந்தும் மழை பொழியட்டும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி..இன்சா அல்லாஹ் தொடரும்.

    பதிலளிநீக்கு
  3. ஏப்ரலில் பெய்த உங்கள் மழையில் டிசம்பரில்தான் நனையும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது இஸ்மத் புரூணி..... டூ லேட் இல்லையா?

    கொழும்பில் சோவெனப் பொழியும் சீசன் மழையில் நனையக் கூடாது என்பதற்காக புதிதாக ஒரு குடை வாங்கியிருக்கிறேன்.... ஆனால் உங்கள் மழையில் குடையின்றி தொடர்ந்து நனைய ஆசைப்படுகிறேன்.... விரைவில் என் ஆசையை நினைவேற்றுவீர்கள்தானே...? வாழ்த்துக்கள்...

    உங்கள் பயணம் சொல்லும் நேரம் கவிதையை 9.12.2010 'விடிவெள்ளி'யில் பிரசுரிக்க அனுமதி தருவீர்களா?

    பதிலளிநீக்கு
  4. ஏப்ரலில் பெய்த உங்கள் மழையில் டிசம்பரில்தான் நனையும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது இஸ்மத் புரூணி..... டூ லேட் இல்லையா?

    கொழும்பில் சோவெனப் பொழியும் சீசன் மழையில் நனையக் கூடாது என்பதற்காக புதிதாக ஒரு குடை வாங்கியிருக்கிறேன்.... ஆனால் உங்கள் மழையில் குடையின்றி தொடர்ந்து நனைய ஆசைப்படுகிறேன்.... விரைவில் என் ஆசையை நினைவேற்றுவீர்கள்தானே...? வாழ்த்துக்கள்...

    உங்கள் பயணம் சொல்லும் நேரம் கவிதையை 9.12.2010 'விடிவெள்ளி'யில் பிரசுரிக்க அனுமதி தருவீர்களா?

    பதிலளிநீக்கு
  5. நன்றிகள் பைரூஸ். குடை கவனம். செருப்புக்களையே விட்டு வைக்காத மக்கள் எம் மக்கள்.

    பதிலளிநீக்கு