-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

14 ஏப்., 2010

ஒரு மழைக் காலத்தின் ஆரம்பம் - 1

வாழ்க்கையில் முதல் தடவையாக ரயில் பிரயாணம். இரவு பத்தரை மணிக்கு வந்து சேர்ந்த மட்டக்களப்பு-கொழும்பு ரயிலில் ஏறி கிட்டத்தட்ட ஏழு மணித்தியாலம் பயணித்து கோட்டை ரயில் நிலையத்தை அடைந்த போது உலகத்தைக் கண்டுவிட்டதான மகிழ்ச்சி.

தலைநகரத்தைக் காணும் முதல் அனுபவம் அது. பதினாறு வயது என்றாலும் வாப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டே பாதையைக் கடந்து ரயில் நிலையத்துக்கு முன்பிருக்கும் 'பிட கோட்டே கோப்பி கடே'யில் டீ குடித்து அலுத்கமை பஸ்ஸில் ஏறினோம் நானும் வாப்பாவும். (அப்போது பாம் லீப் ஹோட்டல் அங்கிருக்கிறது என்ற விபரம் எல்லாம் எனக்குத் தெரியாது).

ஓ.லேவல் பரீட்சை முடிவுகள் வெளியாகி அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த நேரம் - மாத்தளை சாஹிராவில் கொமர்ஸ் படிக்க முடிவெடுத்து கடைசி நேரத்தில் ராஜூ நாநா என்பவர் சொன்ன ஐடியாவில் புறப்பட்ட பயணம்தான் இது.


காலை ஏழு மணியளவில் பேருவலை பஸ் தரிப்பிடத்தில் போய் இறங்கினோம்.

பேருவலை – நிறைய தடவைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.மாணிக்கக் கல் வியாபாரத்துக்கு பெயர் போன ஊர் அது. எங்கள் வீட்டுக்கு முன் வீட்டில் குடியிருந்த ஒரு அப்பாவின் மூலம் கெச்சிமலை தர்காவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் தவறாமல் வருஸா வருஸம் கெச்சிமலை தர்காவுக்கு போய் வருபவர்.அது தவிர பாணந்துறை, அலுத்கமை, தர்கா நகர் என்ற ஊர்களின் பெயர்கள் ஓரளவுக்கு பரீட்சயமாய் இருந்தன. பாணந்துறையில் எங்கள் அயல் வீட்டு நோநக்காவும் அலுத்கமையில் அவளது தம்பி ஜனக அய்யாவும் மணம் முடித்திருந்தனர். ரேடீயோவில் அடிக்கடி தர்காநகர் பஸால் முஹம்மத் என்ற பெயரைக் கேட்டிருக்கிறேன். இந்த அறிமுகங்கள் தவிர இந்த ஏரியாவைப் பற்றி வேறெதுவும் தெரியாதவனாக பேருவலையில் கால்பதித்தேன்.. லேசாகத் தூறிய மழையில் வீதி நனைந்திருந்தது.


கல்லூரி நுழைவுக்கான நேர்முகத் தேர்தல். யாரும் அறிமுகமில்லாத சூழல். என்றாலும் போட்டி போட்டுக் கொண்டு கவனிக்க ஆட்கள் இருந்தனர். என் பக்கத்து ஊரைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருந்தனர்.(ராபி நானாவும், பாயிஸ் நாநாவும்). ஆனால் அவர்களை எனக்கு தெரியவில்லை. என்னை அழைத்துச் சென்று நேர்முகப் பரீட்சை எப்படி இருக்கும், என்ன மாதிரியான கேள்விகள் வரும் என்றெல்லாம் சொல்லித் தந்தனர். நான் அங்கிருக்கும் சீனியர் விடுதியின் ஒன்பதாம் இலக்க அறையில் தங்க வைக்கப்பட்டேன். அந்த விடுதியில்தான் சகோ:அஸ்மினை முதன் முதல் சந்தித்தேன்.

எழுத்துப் பரீட்சையை நன்றாய் எழுதி விட்ட திருப்தி என்றாலும் வாய்மொழித் தேர்வை நினைக்கும் போது உதறல் எடுத்தது. என்ன கேட்பார்கள்?? அவர்கள் எப்படி இருப்பார்கள்?? எனக்கு சான்ஸ் கிடைக்குமா? இதயம் இடம் மாறித் துடிக்கும் சொல்ல முடியாத உணர்வு அது. பயப்படாமல் போ!!வாப்பா தைரியம் ஊட்டி அனுப்பினாலும் எனக்குள் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க முடியவில்லை.

இயல்பில் நான் மிகவும் கூச்சமுடையவன். மற்றவர்களோடு பேசுவதற்கு பெரியளவில் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். யாராவது வீட்டுக்கு வந்தால் கூட அறைக்குள் அடைந்து கொள்வேன். பொம்புளப் புள்ள போல இருக்கிறான் என்று வாப்பாவிடம் நிறையவே திட்டு வாங்கியிருக்கிறேன். அவர்கள் கேள்வி கேட்கும் போது அழுதுவிடுவேனோ என்று கூட அஞ்சினேன்.

எனது அச்சத்திற்கும் ஒரு காரணம் இருந்தது. தனி வெள்ளை நிற சூட் போட்டு ஒருத்தர் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தார். அகப்பட்டவர்களோடு அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். எனக்குத்தான் ஆங்கிலம் வரவே வராதே..ஓ.லெவலில் ஏதோ ஒரு எஸ் எடுத்து பாஸாகி இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு எனக்கு ஆங்கில அறிவு அப்போது இருக்கவில்லை. யா அல்லாஹ் அந்த வெள்ளை சூட் மனுசன் இருக்கக் கூடாது. அவர்கள் ஆங்கிலத்தில் எதுவும் கேட்கக் கூடாது. மனசுக்குள் வேண்டிக் கொண்டேன்.

வாய்மொழித் தேர்வுக்கான எனது முறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐந்து பேர் எனக்கு முன்னால் இருந்தார்கள். என் கூட இருந்த ஐவரில் ஒருத்தன் மட்டும் சிரித்துக் கொண்டே இருந்தான். பல் மட்டும் பளிச்சென்று இருந்தது. கருப்பாய் இருந்தாலும் எடுப்பாய் இருந்தான். என் பெயரைக் கேட்டான். சொன்னேன். உங்கட பேரு?? நான் வினவினேன். நவ்பல் - ஊரு சம்மாந்துறை. அவன் சிரிப்பதை விடுவதாய் இல்லை. பின்புதான் தெரிந்தது பயத்தை அடக்கவே அவன் சிரிக்கிறான் என்பது. அவன் கூட இருந்த நால்வரில் இருவர் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். தாம் ஹாபிஸூக்கு ஓதியிருக்கிறோம் என்றார்கள். ஓ.லேவல் ரிஸல்ட்டைக் கேட்டேன். என்னை விட அவர்களுக்கே வாய்ப்பிருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

டிங் என்ற மணியோசை – எனது பெயரைச் சொல்லி அழைப்பது கேட்கிறது. சலாம் சொல்லி உள்நுழைந்தேன். நல்ல வேலை அந்த வெள்ளை சூட் மனிதர் இல்லை. (அவர் ஹொஸ்டல் வோர்டன் என்பது பிறகுதான் தெரிந்தது). என்ன கேட்டார்கள். நான் என்ன பதில் சொன்னேன் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாய் இப்போது ஞாபகத்தில் இல்லை.

ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் மறக்கப்படாமல் மனசுக்குள் அப்படியே ஒட்டிப் போய் இருக்கிறது. 'ஏன் இந்த கல்லூரியில படிக்கனும்னு ஆசைப்பட்றீங்க?, இங்க படிக்க வார நோக்கம் என்ன? - இதைக் கேட்பார்கள் என்று ஏற்கனவே சிலர் சொல்லி அனுப்பினார்கள். அதற்கான பதிலையும் அவர்கள் சொல்லித் தந்திருந்தனர். 'உலகக் கல்வி..மார்க்கக் கல்வி'. சீ அவர்கள் சொல்லித் தந்ததை அப்படியே சொல்வதற்கு என்னால் முடியவில்லை. 'நான் ஒரு நல்ல மனுசனா எங்கட உம்மா,வாப்பா,ஊர் பெருமைப்பட்ற அளவுக்கு பெரிய மனுசனா வரனும். இந்த சமூகத்திற்கு என்று நான் ஏதாவது செய்யனும். அதுக்காகத்தான் இங்க படிக்க ஆசைப்பட்றேன்'. நான் இப்படித்தான் பதிலளித்தேன்.

இன்டர்வ்யூ முடிந்து விட்டது. பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். நான் தெரிவாகியிருக்க வேண்டும் என்று ஆயிரம் தடவைகளுக்கு மேல் இறைவனை வேண்டிக் கொண்டேன். இன்டரவ்யூ முடிந்து அங்கிருந்து கிளம்பும் போது மாலை நான்கு மணியைத் தாண்டிவிட்டது. வானம் இருட்டியிருந்தது. ஆட்டோ பிடித்து பேருவலை பஸ் தரிப்பிடத்தை (பேருவலையில் எங்கே பஸ் தரிப்பிடம் இருக்கிறது? என்று கேட்க வேண்டாம்.) அடையும் போது மழை சோவென்று பொலியத் தொடங்கியது.

2000ம் ஆண்டின் மழைக் காலம் இப்படித்தான் ஆரம்பித்தது.




(மழை தொடர்ந்து பொழியும் - இன்சா அல்லாஹ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக