-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

25 ஏப்., 2010

நீரோடு பிரியமான சமூகம்

தென் கிழக்காசியாவில் : தென் சீனக்கடலில் அமைந்திருக்கிரும் இலட்சக் கணக்கான தீவுக் கூட்டங்களில் புருனையும் ஒன்று. இலங்கையை விட பத்து மடங்கு சிறிய இந்நாட்டில் அரை மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்து 1984ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இக்குட்டி நாடு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் கூடிய தலா வருமானம் பெறும் நாடாக மாறியுள்ளது. எதிர்பாராதவிதமாக கிடைக்கப்பெற்ற எண்ணெய் வளத்தில் புதிய பணக்காரர்களாக மாறியவர்கள் இந்நாட்டு மக்கள். நாட்டில் மன்னர் ஆட்சி நிலவிய போதிலும் மக்கள் குறையில்லாமல் நடத்தப்படுகின்றனர். 'அமைதியின் இல்லம்' என்று பொருள்படும் வகையில் 'புருனை – தாருஸ் ஸலாம்' என்ற அடைமொழியோடே இந்நாடு அழைக்கப்படுகின்றது.





எண்ணெய், எரிவாயு வருமானம் கிடைக்கப் பெற முன்னர் இந்நாட்டு மக்கள் மீன் பிடிக்கும் சமூகமாகவே இருந்துள்ளனர். சுற்றி வர கடல்: நதிகள், ஏரிகள் என்று இயற்கை இவர்களை நீரோடு பிணைத்துவிட்டது. ஆரம்ப காலத்தில் இவர்கள் தமது இருப்பிடங்களைக் கூட நீரின் மேலேயே அமைத்து வாழ்ந்து வந்தனர். பணக்காரர்களாக மாறிவிட்ட பின்பும் நீரின் மேலிருக்கும் பிரியம் இவர்களை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.
தலைநகர் பந்தார் சிறீ பகவானை ஒட்டி இருக்கும் கம்பூங் தமோய் (நீரின் மேலிருக்கும் கிராமம்) இவர்களின் பழைய வாழ்க்கையை தொடர்ந்தும் நினைவூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கின்ற போது செல்வ வளம் கொழிக்கும் இந்நாட்டில் ஏன் இந்த பலகை வீடுகள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ஆனால் இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது. இதை விட்டுவிட எமக்கு விருப்பமில்லை என்பதுதான் நீரின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பலகை வீடுகளில் வசிப்போர் சொல்லும் பதில். பலகை வீடுகள் என்றாலும் ஏ.சீ. செட்டலைட் டீ.வி என்று எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏரியின் இரு கரைகளிலும் இப்படி அமைக்கப்பட்ட வீடுகள் ஒன்று இரண்டல்ல. ஓராயிரத்துக்கு மேல் இருக்கின்றன. இக்கிராமத்திற்கான பாடசாலையும் தண்ணீரின் மேல்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறுவதிலிருந்து இவர்களுக்கு தண்ணீர் மேலுள்ள பற்று எவ்வளவு என்பது புரியும்.




இன்று ஞாயிற்றுக் கிழமை. இந்த தண்ணீர் கிராமத்தை தாண்டி புரூனையின் இன்னொரு மாகாணமான தம்புரோங் பகுதிக்கு செல்லும் வாய்ப்புக்கிடைத்தது. தம்புரோங் ஒரு கிராமப்புற மாகாணம். நில வழியாகச் செல்ல வேண்டுமாயின் மலேசியாவின் சரவாக் மாகாணத்தைக் கடந்துதான் இங்கு செல்ல வேண்டும். நீர் வழி பயணத்தின் போதும் மலேசியாவின் ஒரு சிறு பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.



பந்தாரிலிருந்து காலை எட்டரை மணிக்கு எம் படகுப் பயணம் தொடங்கியது. முக்கால் மணி நேரப் பயணம். லம்பூங் ஆற்றைக் கிழித்துக் கொண்டு படகு பறந்தது. ஆற்றின் இரு மருங்கும் அடர்ந்த காடு. பெயர் தெரியாத அடர்ந்த புதர்கள். முதலைகள் அதிகமாக வாழும் ஏரியா என்று படகோட்டி கொச்சை ஆங்கிலத்தில் சொல்ல முதலை தேடத் தொடங்கினோம். போகும் போதும் சரி திரும்பும் போதும் சரி கண்ணுக்கு ஒரு முதலையும் தென்படவில்லை. கூட வந்த இரண்டு ஆபிரிக்க மாணவர்கள் முதலைகளால் எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் படகு கவிழ்ந்து விடக் கூடாதென்பதற்காகவும் அடிக்கடி 'ஆயத்துல் குர்ஸியை' ஓதிக் கொண்டனர்.
முதலைகள் இருப்பதாகச் சொன்ன அந்தப் பகுதியில் எந்த வித பயமும் இல்லாமல் ஒரு இளம் ஜோடி இறால் பிடித்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும் போது எம் நாட்டு சிங்களப் பாடல்களில் வரும் காட்சி போலிருந்தது.



தம்புரோங்கில் விசேசமாக பார்ப்பதற்கு பெரிதாய் எதுவும் இல்லை என்றாலும் அந்த மக்களின் வாழ்க்கை நீரோடு ஒட்டியதாக அமைந்திருந்தது. வீட்டின் முன்னால் காரோடு சேர்த்து படகையும் நிறுத்தி வைத்திருந்தனர். வசதி இருந்தவர்கள் ஆற்றோரமாய் அழகாய் பலகைகளால் சிறிய ரெஸ்ட்டுரன்ட் போன்று அறைகளை அமைத்து வைத்திருந்தனர். அவ்வறைகளில் மீன் பிடிப்பதற்கான கருவிகள்;, மீனை சுட்டு உண்பதற்கான ஏற்பாடுகள் என்பவற்றையும் செய்து வைத்திருந்தனர். சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.


இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கு ஏற்ற நிலப்பகுதிகள் காணப்பட்ட போதிலும் இவர்கள் அதன்பால் ஆர்வம் அற்றவர்களாகவே உள்ளனர். இவர்கள் மண்வெட்டி தூக்குவதை விட தூண்டிலோடு திரியவே ஆசைப்படுகின்றனர். ஏனென்றால் இவர்கள் நீரோடு பிரியமான மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக