-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 அக்., 2014

குவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்.


  இஸ்மத் அலி (நளீமி)


  நபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவரது வரலாற்றை வாசிக்கின்ற எவரும் உணர்ந்து கொள்வார்கள். மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் நிறுவிய அரசானது சமகாலத்திலிருந்த ரோம, பாரசீக, இந்திய மற்றுமுண்டான பாரம்பரிய அரசுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டிருந்தது. அவ்வரசுகள் ஆட்சியாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டிருந்த அதேவேளை நபிகளாரின் அரசானது மக்கள் நலன்களை அடிப்படையாக் கொண்டமைந்திருந்தது. மக்களின் நலன் என்பது மனித சட்டங்களால் நிலைநாட்டப்பட முடியாதது. ஏனெனில் மனித சட்டங்கள் சார்புநிலைத் தன்மைக் கொண்டவை. மட்டுமல்ல பாரபட்சமுடையவை. எனவே மக்கள் நலன்களை முழுமையாக உறுதிப்படுத்தும் வகையில் இறைசட்டங்களை அடிப்படையாக் கொண்ட அரசாக மதீனா அரசு உருவாக்கப்பட்டது.


இஸ்லாமிய அரசானது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டமைந்தது என்ற வகையில், அது ஆட்சியாளன் என்ற தனி மனிதனிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பதை தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் இறைதூதராக இருந்த போதிலும் நாட்டின் நிர்வாக மற்றும் நடைமுறை விவாகரங்கள் தொடர்பில் எதேச்சதிகாரமாக தீர்மானங்களை எடுக்கின்றவராக இருக்கவில்லை. இவ்விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கென நபி(ஸல்) அவர்கள் 03 முக்கிய அமைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்கள்.

1) முஅஸ்ஸஸதுல் உமரா.
2) முஅஸ்ஸஸதுன் நுகபா.
3) மஜ்லிஸூஸ் ஷூறா.

முஅஸ்ஸஸதுல் உமரா என்பது முஹாஜிரீன்களின் பத்து சஹாபாக்களைக் கொண்ட அமைப்பாகும். இச்சபையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அபூஉபைததிப்னுல் ஜர்ராஹ், ஸஃத் பின் அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் பின் அவ்ப், ஸஈத் பின் சைத் (ரழியல்லாஹூ அன்ஹூம்) ஆகியோர் அங்கம்வகித்தனர்.

முஅஸ்ஸஸதுன் நுகபா என்பது நபி(ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கு முன்னரே உருவாகப்பட்ட அமைப்பாகும். இச்சபையானது அன்சாரி ஸஹாபாக்களின் பன்னிரெண்டு பேரை கொண்டமைந்திருந்தது. இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது 'உங்களில் பன்னிரெண்டு பேரைத் தெரிவு செய்து எனக்குச் சொல்லுங்கள். தமது கோத்திரத்தாரின் பிரதிநிதிகளாக அவர்கள் செயற்படுவார்கள்' என்ற நபிகளாரின் கட்டளைக்கேற்ப, கஸ்ரஜ் கோத்திரத்திலிருந்து ஒன்பது பேரையும், அவ்ஸ் கோத்திரத்திலிருந்து மூன்று பேரையும் அன்சாரிகள் தெரிவு செய்தனர் என்று வரலாற்றாசிரியர் இப்னு ஹிசாம் குறிப்பிடுகின்றார்.
இவ்விரு சபைகளின் பிரதிநிதிகளோடு சேர்த்து நபிகளாரின் மஜ்லிஸூஸ் ஷூறாவானது 70 சஹாபாக்களைக் கொண்டமைந்திருந்தது என்பது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர் முஹம்மத் அம்மாராவின் கூற்றாகும். பத்ர் யுத்த கைதிகள் விடயத்தில் நபிகளார் மேற்கொண்ட ஆலோசனை, கந்தக் யுத்தத்தில் ஸல்மானுல் பாரிஸி (ரழி) ஆலோசனைப் பிரகாரம் செயற்பட்டமை, மட்டுமன்றி, பல போது சஹாபா பெண்மணிகளிடம் கூட நபிகளார் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இஸ்லாமிய அரசில் சட்டவாக்க அதிகாரம் என்பது அல்லாஹூக்குரியது. அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசு பரிபாலிக்கப்பட வேண்டும். இவ்விரண்டு சட்ட மூலாதாரங்களில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பில் இஜ்திஹாதின் மூலம் முடிவுகளைப் பெறுவதற்கு ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் சுதந்திரமளித்துள்ளது. ஆனால் இம்முடிவுகள் குர்ஆன், சுன்னா, இஜ்மா என்பவற்றுக்கு முரணில்லாத வகையிலும் - பலரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பெறப்பட்ட முடிவுகளாக அமைய வேண்டும். ஏனெனில் ஒரு தனிமனிதனின் முடிவு எப்போதும் மிகச் சரியானதாகவோ, சரியானதாகவே அமையும் என்று கூற முடியாது. 

மேலும் அல்-குர்ஆன், சமூக தளத்தின் மூன்று முக்கிய அலகுகளான குடும்பம், சமூகம், நாடு என்பவற்றின் தீர்மானங்கள் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. குழந்தைக்குப் பால்குடி மறக்கடிக்கப்படும் விடயம் கணவன்-மனைவி ஆகிய இருவரினதும் ஆலோசனையின் பிரகாரம் அமைய வேண்டும் என்பது அல்-குர்ஆனின் கட்டளையாகும். மேலும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றாக 'ஆலோசித்தல்' என்பதை அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது. 

'அவர்கள் தமது இரட்சகனின் அழைப்புக்கு பதிலளித்தார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டினார்கள். தமது விடயங்கள் தொடர்பில் தமக்கு மத்தியில் ஆலோசித்துக் கொண்டார்கள். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளிலிருந்து செலவு செய்வார்கள்' ( சூறதுல் ஷூறா : 38). 

இவ்வசனத்தில் ஆலோசித்தல் தொழுகைக்கும் இறை பாதையில் செலவு செய்வதற்குமிடைப்பட்ட தரத்திலுள்ள பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை சமூக வாழ்வில் ஆலோசனையின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகின்றது.

குடும்ப மற்றும் சமூக விவகாரங்களில் ஆலோசனை நடத்துவதை வலியுறுத்தும் இஸ்லாம் நாட்டின் ஆட்சியியல் விவகாரத்தில் அதனை ஒரு கடமையாக ஆக்கியுள்ளது. 
'அவர்களின் விடயங்கள் தொடர்பாக அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வீராக!' (ஆல-இம்றான்:159)
 என்ற அல்-குர்ஆனிய வசனத்திற்கு விளக்கமளிக்கும் இமாம் இப்னு அதிய்யா (ஹி:481-542) ' ஷூறா (கலந்தாலோசனை) என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை அம்சமாகும். யாரொருவர் மார்க்க மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனையின்றி செயற்படுகின்றார்களோ அவர்களை பொறுப்பிலிருந்து நீக்குவது கடமையாகும்' என்று குறிப்பிடுகின்றார்.

பிறரின் ஆலோசனைகள் கருத்திற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு தனியொரு மனிதனின் விருப்பங்களும், கருத்துக்களும் அதிகாரம் செலுத்த முற்படுகின்ற போது அதன் விளைவு சமூகத்தினதும், அரசினதும் அழிவாகவே அமையும் என்பது வரலாறு சொல்லும் சாட்சியாகும். உண்மையில் அதிகாரம் தனி மனிதர்களிடம் குவிக்கப்படுகின்ற போது தன்னை மிகைக்க எவருமில்லை என்ற எண்ணத்தையும், தற்பெருமையையுமே அது ஆட்சியாளர்களிடம்  குடிகொள்ளச்செய்யும். இந்நிலையானது, ஆட்சியாளனை 'நானே கடவுள்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவனில் தற்பெருமையை உருவாக்கிவிடும் என்பதற்கு அல்-குர்ஆன் கூறும் பிர்அவ்னின் வரலாறு உதாரணமாகும். 


நவீன கால அரசுகளில் அதிகாரம் என்பது தனியொரு மனிதனிடம் குவிக்கப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை யாப்பின் ஊடாக வரையறுப்பதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அனேகமான நாடுகளில் நாட்டின் தலைவர் அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியின் விருப்புக்களும், கருத்துக்களும் மட்டுமே மக்கள் விருப்பங்களாக பிரதிபலிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அதிகாரம் என்பது தனியொரு மனிதனிடம் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையையே நாம் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு இத்தகைய குவிக்கப்பட்ட அதிகாரமே பிரதான காரணியாகும் என்றால் அது மிகையல்ல. 

ஒரு தேசத்தில் அதிகாரம் தனியொரு மனிதனிடம் குவிக்கப்பட்டிருக்கின்றதென்றால் அங்கு மக்கள் விருப்புக்கோ அல்லது அவர்களின் நலன்களுக்கோ எவ்வித பெருமானமும் வழங்கப்படவில்லை என்பதே அதன் கருத்தாகும். இத்தகைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி என்பது தவிர்க்க முடியாதது என்பதற்கு பிர்அவ்னின் அதிகாரத்திற்கு எதிராக மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களுடன் இணைந்து மேற்கொண்ட புரட்சியும், மிக அண்மைக் காலங்களில் நிகழ்ந்த  டியூனீசியா, எகிப்து, லெபனான், யமன் போன்ற நாடுகளின்  மக்கள் புரட்சிகளும் சான்றாகும். 

எனவே ஒரு தேசத்தின் நிலைத்த தன்மைக்கும், அதன் உண்மையான அபிவிருத்திக்கும், மக்கள் சுபீட்சத்திற்கும் அடிப்படையாக அமைவது குவிக்கப்படாத அதிகாரமும், நபிகளார் காட்டித்தந்த ஆலோசனை முறைமையுமே என்பது தெளிவாகும். 

சிறுபான்மை சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம் சமுகம் இப்பண்பைப் பெற்றிருப்பது இன்றியமையாததாகும். எமது பாடசாலைகள், பள்ளிவாசல்கள், ஊர் விவகாரங்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களின் தேசிய அரசியல் விவகாரங்களும் இத்தகைய 'ஷூறா' – ஆலோசனையின் அடிப்படையில் அமைவதே எமது விடிவுக்கான ஒரே வழியாகும். 

ஆனால் நடைமுறையில் எமது சமூகம் இப்பண்பைப் பெற்றிருக்கின்றது என்பது கேள்விக் குறியே. எமது பெற்றோர்களில் எத்தனை பேர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் ஆலோசித்து திட்டமிடுகின்றனர்?. எமது பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்து எத்தனை அதிபர்கள் சக ஆசிரியர்களிடமும், மாணவர்கள்கள், பெற்றோர்களிடமும் ஆலோசனை நடத்துகின்றனர்?. எமது பள்ளிவாசல்கள், ஊர் விவகாரங்கள் தொடர்பிலான தீர்மானங்கள் பலதரப்பட்டோரினதும் ஆலோசனை அடிப்படையிலான தீர்மானங்களாகவா அமைகின்றன? ஏன், எமது அரசியலில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் எடுக்கின்ற முடிவுகள் எமது சமூகத்தின் புத்திஜீவிகளையும், ஆலிம்களையும், சமூக நலன் விரும்பிகளையும் கலந்தாலோசித்தா மேற்கொள்ளப்படுகின்றன? மேற்குறிப்பிட்ட விடயங்களில் தொண்ணூறு வீதமான விடயங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் ஒரு சில தனிமனிதர்களின் விருப்புக்களாக அமைகின்றனவே தவிர மக்களின் விருப்புக்களாக அமைவதில்லை. 






11 செப்., 2012

ஆட்சியாளர்கள் மக்கள் நலன் காக்கத் தவறினால்...

இஸ்மத் அலி (நளீமி)



இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நாங்கள் மஃகில் இப்னு யஸார் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது பஸராவின் ஆட்சியாளர் உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஃகில் (ரழி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள் : 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சுவனத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்'   (ஸஹீஹூல் புகாரி). 


ஆட்சியாளர்களுக்கும் - குடிமக்களுக்கும் இடையில் நடைபெறும் ஓர் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே சமூகத்தின் அரசியல் அதிகாரத்தை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வுடன்படிக்கையை மேற்கத்தேய அரசறிவியலாளர்கள் social contract என்றும் முஸ்லிம் அறிஞர்கள் 'பைஅத்' அல்லது 'அல்-அக்துல் இஜ்திமாஇ' என்றும் அழைக்கின்றனர். இதன் கருத்து சமூக உடன்படிக்கை என்பதாகும். மேற்கத்தேய அரசியல் பரிபாசையில் இவ்வொப்பந்தம் உலக நலன் சார்ந்த உடன்பாடாக மாத்திரம் அமைந்திருக்கும். ஆனால் இஸ்லாமிய அரசியல் பரிபாசையில் இப்வொப்பந்தம் உலக மற்றும் மறுமை நலன் சார்ந்த உடன்படிக்கையாக அமைவது அவசியமாகும். இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் இரு வகையான கடமைப்பாடுகள் ஆட்சியாளர்கள் மீது பொறுப்பாகின்றன என்று இமாம் மாவர்தி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.  அவையாவன : 

 1) மார்க்கத்தைப் பாதுகாத்தல். ( ஹிராஸதுத் தீன்) 
2) உலகத்தை நிர்வகித்தல் (ஸியாஸதுத் துன்யா). 

மார்கத்தைப் பாதுகாத்தல் : முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவப் பொறுப்பைச் சுமக்கின்றவர்களின் முதன்மையான பொறுப்பு இதுவாகும். இஸ்லாத்தைப் படிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சமூகம் வழிகேட்டில் விழாமல் அவர்களை வழிப்படுத்தல், கொள்கை ரீதியாகாவும், நடைமுறை ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது அப்பிரச்சினைகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளை செய்வது முஸ்லிம் ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். இதனை அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான். 'நாம் அவர்களுக்கு பூமியில் அதிகாரத்தை வழங்கினால், தொழுகையை நிலைநாட்டுவார்கள், ஸக்காத்தை வழங்குவார்கள். நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பார்கள்'.   
                                                                                                   (சூறதுல் ஹஜ் : 41).  
உலகத்தை நிர்வகித்தல் : மனிதர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற இன்னோரன்ன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டை நிர்வகிப்பதும் ஆட்சியாளர்கள் மீதுள்ள அடுத்த பொறுப்பாகும். இப்பொறுப்பை அல்குர்ஆனின் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது. 'அவன் உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதனை பரிபாலிக்கின்றவர்களாகவும் உங்களை ஆக்கினான்' (சூறதுல் ஹூத் : 61). 

 எனவே ஆட்சி செய்தல் என்பது அல்லாஹ்வின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மக்களை வழிப்படுத்தல்;, மக்கள் வாழும் வகையில் பூமியை வளப்படுத்தல் ஆகிய இரு வகையான பாரிய பொறுப்புக்களைக் கொண்ட பணியாகும். இப்பொறுப்பை ஆட்சியாளர்கள் நிறைவேற்றத் தவறும் போது மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட அவர்கள் நுகர முடியாது என்ற எச்சரிக்கையை நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸிலே நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 

 மேலும் இந்த ஹதீஸ் தொடரிலே இமாம் புகாரி அவர்கள் பின்வரும் ஹதீஸ்களையும் பதிவு செய்துள்ளார்கள்.

 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சுவனத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' (ஸஹீஹூல் புகாரி). 

 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். (ஸஹீஹூல் புகாரி)

நாம் ஏலவே குறிப்பிட்டது போல, அரசியல் அதிகாரத்தை ஆட்சியாளர்கள் மக்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையின் மூலமே பெற்றுக் கொள்கின்றனர். இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் மக்களின் ஈருலக நலனுக்காக உழைப்பது அவர்களின் மீது கடமையாகின்றது. இக்கடமையை நிறைவேற்றுகின்ற நிலையில் அவ்வாட்சியாளர்களுக்குக் கட்டுப்படுவது குடிமக்கள் மீது கடமையாகின்றது. இரு தரப்பாரில் யாராவது ஒருவர் தமக்குரிய கடமையில் குறைவிடுகின்ற போது உடன்படிக்கை மீறப்படுகின்றது. உடன்படிக்கையை மீறுவது இஸ்லாத்தின் பார்வையில் பாரிய குற்றங்களில் ஒன்றாகும். 

 'ஈமான் கொண்டவர்களே, நீங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை (பூரணமாக) நிறைவேற்றுங்கள்'. (சூறதுல் மாஇதா : 1) என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். 

மேலும் உடன்படிக்கைக்கு மாற்றமாக நடந்து கொள்வது நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றாகும். 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான் பேசினால் பொய்யே பேசுவான் ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹூல் புகாரி). மேலும் நபியவர்கள் கூறினார்கள் : மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும். (ஸஹீஹூல் புகாரி). 

மேலுள்ள எச்சரிக்கை வார்த்தைகள் அல்லாஹ்வினாலும், அவனது தூதரினாலும் கூறப்பட்டவைகள். அவை சத்தியமானவை. மக்களுக்கு நலவு செய்வதாகக் கூறி, அவர்களிடம் வாக்குப் பிச்சைக் கேட்டு, பின்னர் தாம் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து போகும் சுய நல அரசியல்வாதிகள் இந்த வார்த்தைகளுக்கு அச்சப்படுவார்களா?. அரசியல் என்பது உழைத்துக் கொள்வதற்கான ஒரு தொழிலாக இன்று மாறிவிட்டது. மக்களை ஏமாற்றி அல்லது அராஜகம் செய்து தேர்தல்களில் வெற்று பெற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றவர்கள், தமது ஆட்சிக் காலம் முடியும் வரையில் சுரண்டல், இலஞ்சம், களவு போன்ற ஹராமான வழிகளில் முடியுமான அளவுக்கு சொத்து சேர்ப்பதற்கே தமது முழு நேரத்தையும் செலவு செய்கின்றனர். மக்களின் நலன் பற்றி சிந்திப்பதற்கோ, அவர்களுக்காக பணியாற்றவோ அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இத்தகைய அநீதியாளர்கள் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றலாம். ஆனால் அவர்களால் அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியாது. சுவனத்தின் வாடையைக் கூட அவர்கள் நுகர்வதற்கு அல்லாஹூத்தஆலா அனுமதிக்கப் போவதில்லை. 

மேலும் நாம் மற்றுமொரு விடயத்தையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தியாக வேண்டும். ஏனைய இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் உலக நலனை மாத்திரம் கருத்திற் கொள்பவர்கள். ஆனால் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி அவ்வாறு இருக்க முடியாது. அவர் தமது சமூகத்தின் மறுமை நலனுக்காக உழைக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்பொறுப்பை உணர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை எமது சமூகம் மிகக் குறைந்தளவிலேயே கொண்டிருக்கின்றது. இது துரதிஸ்டவசமான நிலையாகும். தேர்தல் மேடைகளில் பாதை அமைத்துத் தருவதாகவும், பாலம் கட்டித் தருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் எமது அரசியல்வாதிகள் அப்பிரதேசத்தின் மார்க்க மற்றும் ஒழுக்க ரீதியான வீழ்ச்சி நிலைக் குறித்து ஒரு வார்த்தையாவது பேசும் நிலையிருப்பதாகத் தெரியவில்லை. 

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் சமூகத் தலைமைத்துவத்தையேற்றவர்கள் உலக மற்றும் ஆன்மீக தலைமைத்துவத்தை சமூகத்திற்கு வழங்குகின்றவர்களாகவே இருந்துள்ளனர். அந்த வரலாற்றை மறந்த நிலையிலேயே எமது சமூகத்தின் கடந்த அறுபது வருட கால அரசியல் பயணமும் கழிந்திருக்கிறது. ஆன்மீகமில்லாத அரசியல்வாதிகளும், அரசியல் தெரியாத ஆன்மீகவாதிகளையும் கொண்ட சமூகம் என்ற நிலை மாற வேண்டும். 

  இந்த ஹதீஸின் மூலம் நாம் தெளிவுபெற வேண்டிய மற்றொரு விடயமும் இருக்கின்றது. இந்த ஹதீஸை மஃகில் இப்னு யஸார் (ரழி) அவர்கள் வெறுமனே ஹதீஸ் பாட போதனை வகுப்பொன்றில் அறிவிக்கவில்லை. பஸராவின் கவர்னராக இருந்த உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் என்பவருக்கு உபதேசிக்கும் வகையிலேயே அறிவிக்கின்றார்கள். ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்த வேண்டியது உலமாக்களின் பொறுப்பு என்பதை மஃகில் (ரழி) அவர்களின் இச்செயல் எமக்குக் கற்றுத் தருகின்றது. 

ஆட்சியாளர்களுக்கும் - ஆலிம்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவிருக்க வேண்டும். அவ்வுறவு வெறுமனே ஆள்வோரை புகழ்கின்ற உறவாக அல்லது அரசியல் மேடைகளில் பாத்திஹாவையும், துஆவையும் ஓதுவதற்கு மாத்திரம் ஆலிம்களை நாடி வருகின்ற உறவாக அன்றி, சமூக நலன் காக்கின்ற விடயங்களில் பரஸ்பரம் கலந்தாலோசனை செய்து கொள்கின்ற, அரசியல்வாதிகள் தவறுவிடுகின்ற போது அழகாகச் சுட்டிக் காட்டித் திருத்துகின்ற உறவாக அமைய வேண்டும். ஆனால் இத்தகைய உறவு நிலையை மிக அரிதாகவே காண முடிகின்றது. ஆட்சியாளர்களை அவர்களின் போக்கில் விட்டு விட்டு, நல்லவர்கள் தாம் மாத்திரம் நன்மை செய்து கொண்டிருப்பது நமது சமூகத்தின் விடிவுக்கு வழியாக அமைய மாட்டாது. மாற்றமாக அது எம் அனைவரினதும் அழிவுக்குக் காரணமாகவே அமையும். இதனை விளங்கிக் கொள்ள நபிகளார் சொன்ன பின்வரும் உதாரணம் மிகப் பொருத்தமானதாகும். 

 'அல்லாஹ்வின் சட்ட வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்குமான உதாரணம் ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ் தளத்திலே இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அதைக் கொண்டு வர அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் நாம் தண்ணீர் பெற நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம் நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் மற்ற அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்'. (ஸஹீஹூல் புகாரி). 

 ஆம், கப்பலின் அடித்தளத்திலிருந்தவர்களைப் போன்று, இன்று உலமாக்களையும், இஸ்லாமி அமைப்புக்களையும் சிரமத்திற்கு உள்ளாக்காமல் அரசியல்வாதிகள் தமக்குரிய வழிகாட்டலை தாமே பெற்றுக் கொள்ள முயல்கின்றனர். அவர்களை வழிப்படுத்தாமல் உலமாக்களும், இஸ்லாமிய அமைப்புக்களும் வெறும் பார்வையாளர்களாய் மாத்திரம் இருப்பார்களெனில் முழு சமூகத்தின் அழிவும் நிச்சயம் என்பது திண்ணம். (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்). எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் நரக நெருப்புக்குக்குப் பயந்து கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெற்றதன் பின்பு முஸ்லிம் சமூகத்தின் உலக மற்றும் மறுமை நலன்களை பேணாதிருந்தால் சுவனத்தின் வாடையைக் கூட தம்மால் சுகிக்க முடியாது போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சமூகத்தின் அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்துகின்ற, அரசியல்வாதிகளை நல்வழிப்படுத்துகின்ற பெரு முயற்சியையும் எமது தாஈக்களும் தஃவா நிறுவனங்களும் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

16 மார்., 2011

துருக்கிய இஸ்லாமிய அரசியல் இயக்கத்தின் முன்னோடி அர்பகானின் மறைவு

இஸ்மத் அலி (நளீமி)




கடந்த பெப்ரவரி 27ம் திகதி இறையடி சேர்ந்த பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகான் துருக்கிய இஸ்லாமிய அரசியல் இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

1926ம் வருடம் பிறந்த அர்பகான் ஸல்ஜூக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பாட்டன் அக்குடும்பத்தின் கடைசி நிதி அமைச்சராகப் பணியாற்றியவர். இத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்ட அர்பகான் ஒரு பொறியியல் துறைப் பேராசிரியர். 1948ம் வருடம் இத்துறையில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து அடுத்த 05 வருட காலத்தில் தனது எம்.ஏ. மற்றும் கலாநிதிப் படிப்பினை ஜேர்மனியில் பூர்த்தி செய்தார்.

1969ம் வருடம் அர்பகான் அரசியலுக்குள் பிரவேசித்தார். அவ்வாண்டு கவ்னிய்யா நகராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இஃவானிய சிந்தனைப் போக்குக் கொண்ட அர்பகானின் இவ்வெற்றி, துருக்கியில் மீண்டுமொரு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது.




சுமந்து செல்லப்படும் அர்பகானின் ஜனாஸா



ஹிஸ்புந் நிழாமில் வதனி

கிலாபத்தின் வீழ்சிக்குப் பின்னர் துருக்கியில் நிறுவப்பட்ட முதலாவது இஸ்லாமிய கட்சியாக ஹிஸ்புந் நிழாமில் வதனி கருதப்படுகின்றது. 1970ம் ஆண்டு அர்பகான் இக்கட்சியை தாபித்தார். இது பற்றிய கலந்துரையாடல்களில் புத்திஜீவிகளையும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டார்.
இக்கட்சியை நிறுவும் விடயம் பற்றி கமால் அதா துர்க்கின் மறைவின் பின்னால் துருக்கியை ஆட்சி செய்த அதிபர் இஸ்மத் இனனுவிடம் சிலர் வினவிய போது 'அவர்கள் ஆரம்பித்து செயற்படட்டும். துருக்கியில் இஸ்லாம் என்பது எப்போதோ முடிவடைந்த கதை. இவர்கள் அதை நிரூபிப்பார்கள், அவர்களுக்குகப் பின்னால் செல்வதற்கு யாருமில்லை' என்றார்.

என்றாலும் துருக்கிய ஆட்சியாளர்களின் கூற்றுக்களும் எண்ணங்களும் பொய்த்துப் போயின. இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் மாத்திரம் 15,000 பேர் அர்பகானுடன் இணைந்து கொண்டனர். மட்டுமன்றி ஜமாஅதுன் நூர் (இமாம் சஈத் நூர்ஸியால் ஆரம்பிக்கப்பட்டது) போன்ற கட்சி உறுப்பினர்களும் அர்பகானின் கட்சியோடு இணைந்து கொண்டனர்.



இக்கட்சியின் வளர்ச்சி மதச்சார்பற்ற துருக்கிய ஆட்சியாளர்களுக்கு சவாலாக அமைந்ததால் 1971ம் வருடம் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இக்கட்சியின் அங்கத்தவர்கள் யாரும் அடுத்து வரும் 05 வருடகாலங்களுக்கு இன்னொரு அரசியல் கட்சியில் அங்கத்துவம் பெற முடியாதென்றும், தேர்தல்களில் பங்கு பெற முடியாதென்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.



மில்லி கோரிஸ் இயக்கம்.

அரசியல் ஈடுபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் அர்பகான் தளர்வடையவில்லை. இக்காலப்பிரிவில் மில்லி கோரிஸ் என்ற இஸ்லாமிய இயக்கத்தோடு அர்பகான் தன்னை இணைத்துக் கொண்டார். அதை துருக்கிய மண்ணுக் கேற்ற தஃவா இயக்கமாகவும் மாற்றி அமைத்தார். துருக்கிய இஸ்லாமிய அரசியல் கட்சிகளான 'ஸலாமா', 'ரபாஹ்', 'பழீலா', 'ஸஆதா' ஆகிய கட்சிகளின் பெரும்பாலனவர்கள் மில்லி கோரிஸ் இயக்கத்தில் பயிற்றப்பட்டவர்களே.

அர்பகான் அரசியல், சமூக இயக்கத்தையும், தஃவா, தர்பிய்யா இயக்கத்தையும் இரு வேறாக்கி செயற்பட்டார். மில்லி கோரிஸ் தஃவா இயக்கமாக செயற்பட்ட அதேவேளை அவர் ஆரம்பித்த ஸலாமா,ரபாஹ் போன்ற கட்சிகள் அரசியல் இயக்கமாகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஹிஸ்புஸ் ஸலாமா

1971ம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிகள் மேற்கொண்ட ஆயுதப் புரட்சிகளின் காரணமாக அப்போதைய அதிபர் ராஜினாமாச் செய்தார். புதிய பிரதமராக நிஹாத் இப்ராஹீம் தெரிவானார். இப்புதிய அரசியல் சூழ்நிலையில் புதிய கட்சிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியது. அவ்வனுமதியைப் பயன்படுத்தி ஹிஸ்புஸ் ஸலாமா அல்வதனீ என்ற கட்சியை அர்பகான் ஆரம்பித்தார். 1973ம் வருடம் நடைபெற்றத் தேர்தலில் இக்கட்சி 12 வீதமான வாக்குகளைப் பெற்று 48 பாரளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டது.

இடதுசாரிகள் அமைத்த இவ்வரசாங்கத்தில் அர்பகான் இணைந்து பதில் பிரதமராகச் செயற்பட்டார். இக்காலப்பிரிவில் அர்பகானின் முயற்சிகளினால் கிலாபத்தின் மறைவுக்குப் பின்னர் முதன்முறையாக 3000 அல்-குர்ஆன் மத்ரஸாக்களும், 10 இஸ்லாமிய கலாநிலையங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் இஸ்லாமிய நாடுகளுடனான துருக்கியின் தொடர்புகள் வலுப்பெறத் தொடங்கின. இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி () என்பவற்றில் துருக்கி அங்கத்துவத்தையும் இக்காலப்பிரிவிலேயே பெற்றுக் கொண்டது.




அர்பகான் பதில் பிரதமராகச் செயற்பட்ட போது



அர்பகானின் இம்முயற்சிகளில் மேற்குலக நாடுகளும், மதச் சார்பற்ற துருக்கிய ராணுவமும் அவதானத்தோடு இருந்தன. அவருக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை மேற்குலக ஊடகங்கள் முடக்கிவிட்டன. எனவே 1977ம் ஆண்டு தேர்தலில் அர்பகானின் கட்சியால் 24 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது.




1980ம் ஆண்டு ராணுவப் புரட்சி


அர்பகானின் அரசியல் பிரவேசம் துருக்கியில் பெரியதொரு இஸ்லாமிய அலையை ஏற்படுத்தியிருந்தது. 1980ம் வருடம் சர்வதேச முஸ்லிம் இளைஞர் மாநாட்டை துருக்கியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அர்பகான் மேற்கொண்டிருந்தார். என்றாலும் அரசாங்கம் இம்மாநாட்டில் அர்பகான் உரை நிகழ்த்துவதற்கு தடை விதித்திருந்தது. அத்தடையையும் மீறி அர்பகான் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இம்மாநாடு நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு சுமார் ஐம்பதினாயிரம் துருக்கிய இளைஞர்கள் குத்ஸ் விடுதலைக்கான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலைமை மதச்சார்பற்ற துருக்கியின் அரசியல் யாப்புக்கு முரணானது என்ற வகையில் ராணுவம் அரசியல் அதிகாரத்தை தம் கைக்குள் கொண்டு வந்தது. அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே தாம் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக ராணுவம் தெரிவித்தது. ராணுவத் தளபதியாக இருந்த கன்ஆன் அப்ரீன் அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும் அனைத்துக் கட்சிகளும் தடைசெய்யப்பட்டதோடு அர்பகான் உள்ளிட்ட இஸ்லாமியவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அர்பகானுக்கு 04 வருட சிறைவாசம் விதிக்கப்பட்டது.



ஹிஸ்புர் ரபாஹ்.


பல்வேறு வகையில் அர்பகானின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அல்லாஹ்வின் உதவியினால் அர்பகான் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றார். தனக்குக் கிடைக்கின்ற சின்னதொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள அவர் தவறவில்லை.

1983ம் ஆண்டு ராணுவ ஆட்சியிலிருந்து மீண்டும் ஜனநாயக வழிக்கு துருக்கி மீளலானது. தடைசெய்யப்பட்ட கட்சிகள் மீண்டும் அரசியலில் ஈடுபடவும், புதிய கட்சிகளை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அர்பகானின் ஆதரவாளர்கள் ஹிஸ்புர் ரபாஹ் கட்சியை ஆரம்பித்தனர். தனது சிறைவாசம் முடிவடைந்து விடுதலையான அர்பகான் 1987ம் ஆண்டு ரபாஹ்வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவ்வருடம் நடைபெற்றத் தேர்தலில் இக்கட்சியானது 8.2 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. மேலும் 1991ம் ஆண்டுத் தேர்தலில் 17 வீதமான வாக்குகளைப் பெற்று 44 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

1994ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இக்கட்சியானது 400 சபைகளில் வெற்றிபெற்றது. துருக்கியின் பிரதான நகரங்களான இஸ்தான்பூல், அன்காரா, கௌனிய்யா போன்ற நகராட்சி சபைகளும் இதில் உள்ளடங்கும். ரபாஹ் கட்சியின் கீழ் செயற்பட்ட உள்ளுராட்சி சபைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் வளர்ச்சி கண்டன. அது வரை நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுப்போக்குவரத்து அதிகார சபை போன்ற நகராட்சி சபைகளுக்கு கீழ் இயங்கி வந்த சபைகள் துருக்கிய வரலாற்றில் முதல் தடவையாக இலாபமீட்டிக் கொடுக்கும் சபைகளாக மாறின.

அர்பகானின் அரசியல் வாழ்வில் 1995ம் வருட பாராளுமன்றத் தேர்தல் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இத்தேர்தலில் தேசிய ரீதியில் அதிகப்படியான வாக்குகளை (21 வீதம்) ரபாஹ் கட்சிப் பெற்றுக் கொண்டது. எனவே அரசாங்கத்தை அமைப்பதற்கு அர்பகானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் அரசாங்கம் அமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவை அர்பகான் வேண்டி நின்றார். இறுதியில் பல்வேறு உடன்பாடுகளுக்குப் பின்னர் தன்சோ சீலர் தலைமையிலான கட்சியோடு கூட்டமைப்பை ஏற்படுத்தி அர்பகான் அரசாங்கத்தை அமைத்தார். சுமார் 02 வருடங்கள் மாத்திரமே ஆட்சியிலிருந்த அர்பகானின் அரசாங்கம் பின்வரும் சாதனைகளை துருக்கிய அரசியல் வரலாற்றில் மேற்கொண்டது.

1) அணு மின் உற்பத்தியை ஆரம்பித்தமை.
2) துருக்கிய நாணயத்தின் பெறுமதியை உயர்த்தியமை.
3) தேசிய உற்பத்தியை 6.7 வீதத்தால் அதிகரித்தமை.
4) இஸ்லாமிய வங்p அமைப்பை அறிமுகப்படுத்தியமை.
5) கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை.
6) இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளை புதுப்பித்தமை. இதன் முக்கிய அம்சமாக துருக்கி, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, மலேசியா, இந்தோனேசியா, ஈரான், நைஜீரியா ஆகிய எட்டு முஸ்லிம் நாடுகளின் அபிவிருத்திக்கான டீ -8 ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
7) அதாதுர்க் காலத்திலிருந்து அமுல்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்பட்டமை.

அர்பகான் மேற்கொண்ட இம்முயற்சிகள் மேற்குலகை அச்சம் கொள்ளச் செய்தன. துருக்கியை ஐரோப்பாவின் நோயாளியாக வைத்திருக்கவே அவைகள் விரும்பின. எனவே மதச் சார்பற்ற துருக்கிய இராணுவம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அர்பகானை பதவி கவிழ்த்தது. ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பும் ஐரோப்பிய நாடுகளின் நாவுகள் இச்சந்தர்ப்பத்தில் மௌனித்துப் போயின. இந்நிகழ்வோடு அர்பகானின் நேரடி அரசியல் ஈடுபாடு முடிவுக்கு வந்தது.



என்றாலும் அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் துருக்கியை இஸ்லாம் வாழும் தேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். ரஜாஇ கௌதான் தலைமையிலான ஹிஸ்புல் பழீலா, ரஜப் தையுப் அர்துகான் தலைமையிலான ஹிஸ்புஸ் ஸஆதா ஆகிய கட்சிகளின் ஊடாக அர்பகானின் சிந்தனைக் கொண்டோர் ஜனநாயக ரீதியிலான அரசியல் முன்னெடுப்புக்களை தொடர்ந்தனர். இதன் விளைவாக 2002ம் ஆண்டுக்குப் பின்னரான தேர்தல்களில் ஹிஸ்புஸ் ஸஆதா வெற்றி பெற்று துருக்கிiயை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை சமயோசிதமாக மேற்கொண்டு வருகின்றன.


12 நவ., 2010

அல்-குர்ஆன் கூறும் இரு வகை ஆட்சியாளர்கள்.




இஸ்மத் அலி (நளீமி)


' எமது கட்டளையைக் கொண்டு நேர்வழியின்பால் (சமூகத்தை) வழிநடத்துகின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மேலும் நல்லவைகளைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்தை வழங்கிடுமாறும் அவர்களுக்கு நாம் அறிவித்தோம். அவர்கள் எங்களுக்கு அடிபணிகின்றவர்களாக இருந்தனர்' அன்பியா :21)


' மேலும், நரகத்தின்பால் அழைக்கின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் யாராலும் உதவிசெய்யப்பட மாட்டார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சாபத்தை விதியாக்கினோம். மேலும் மறுமையில் அவர்கள் இழிவடைந்தோராக இருப்பார்கள்'. (ஸூறதுல் கஸஸ் : 41)



ல்குர்ஆன் மனித சமூகத்திற்குத் தேவையான அனைத்து வாழ்வியல் நெறிகளையும், போதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. இப்போதனைகளும், நெறிகளும் எல்லா காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் பொதுவானவைகளாகவும், பொருத்தமானவைகளாகவும் அமைந்துள்ளன. இவற்றை மனித சமூகம் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துவதிலேயே அதன் உண்மையான வெற்றியும், சந்தோசமும் தங்கியிருக்கின்றது. ஆனால் துரதிஸ்டவசமாக இன்றைய உலகு அல்-குர்;ஆனின் வழிகாட்டலை விட்டும் திசைத்திருப்பப்பட்டிருக்கிறது. அசிங்கங்களும், அருவருப்புக்களும் மனித சமூகத்தின் மகிழ்ச்சிக்குரியவைகளாக புனையப்பட்டிருக்கின்றன.


னித சமூகத்தை நிலையான வெற்றியின்பாலும், உண்மையான சுபீட்சத்தின்பாலும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு சமூகத்தின் தலைமைத்துவத்தைக் கொண்டிருப்பவர்களேயேச் சாரும். ஏனெனில் இத்தலைமைத்துவமே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் (ஆட்சியாளர்கள்) இரு வகையில் சமூகத்தை வழிநடத்த முற்படுவர் என அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.


முதல் வகையினர்
: நேர்வழியின்பால் வழிநடத்துவோர்.
இரண்டாம் வகையினர் : நரகத்தின்பால் வழிநடத்துவோர்.


முதல் வகையினரைப் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

' எமது கட்டளையைக் கொண்டு நேர்வழியின்பால் (சமூகத்தை) வழிநடத்துகின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மேலும் நல்லவைகளைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்தை வழங்கிடுமாறும் அவர்களுக்கு நாம் அறிவித்தோம். அவர்கள் எங்களுக்கு அடிபணிகின்றவர்களாக இருந்தனர்'
(அன்பியா :21)


அரசியல் அதிகாரமென்பது தன் சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கல்ல, மாறாக – அல்லாஹூத்தஆலாவின் விருப்புக்களை நிறைவேற்றி, அவன் வெறுக்கின்றவைகளை பூமியிலிருந்து துடைத்தெறிவதற்கே என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது. இப்பணியைச் செய்வதனாலேயே ஆட்சியாளன் பிரதிநிதி எனும் பொருட்பட 'கலீபா' என்று இஸ்லாமிய பரிபாசையில் அழைக்கப்படுகின்றான்.

இரண்டாம் வகை ஆட்சியாளர்கள் பற்றிய அல்குர்ஆனின் கூற்று பின்வருமாறு அமைந்திருக்கிறது.

' மேலும், நரகத்தின்பால் அழைக்கின்ற தலைவர்களாக அவர்களை நாம் ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் யாராலும் உதவிசெய்யப்பட மாட்டார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சாபத்தை விதியாக்கினோம். மேலும் மறுமையில் அவர்கள் இழிவடைந்தோராக இருப்பார்கள்'
. (ஸூறதுல் கஸஸ் : 41)

இவ்வசனம் மூஸா (அலை) அவர்களின் காலத்தில் அதிகாரபீடத்திலிருந்த பிர்அவ்னையும் அவனது அமைச்சன் ஹாமானையும் குறித்துப் பேசுகின்றது. தற்பெருமை, சத்தியத்தை ஏற்க மறுத்தமை, தனக்கு கீழிருந்த 'கிப்தி' இனத்தவர்களுக்கு அநீதியிழைத்தமை போன்ற காரணிகளால் பிர்அவ்னின் ஆட்சி,அதிகாரம் நைல் நதிக்குள் மூழ்குண்டு அழிய வேண்டியதாயிற்று. ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்ற இத்தகைய பண்புகள் அவர்கள் உலகில் வீழ்ச்சியடைவதற்கும், மறுமையில் தோல்வியடைவதற்கும் வழிகோலும் என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது.


சமூகத்தை வழிநடத்துகின்ற ஆட்சியாளர்கள் உயரிய பண்புகளையும், குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிட்டு அல்லாஹூத்தஆலா பின்வருமாறு பணிக்கின்றான்.

'தாவூதே உம்மை பூமியின் ஆட்சியாளராக (கலீபாவாக) நாம் ஆக்கினோம். எனவே சத்தியத்தைக் கொண்டு மக்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. மனோ இச்சைக்கு ஒருபோதும் கட்டுப்பட்டுவிடாதீர். அது அல்லாஹ்வின் (நேரிய) பாதையிலிருந்தும் உம்மை திசைத்திருப்பி வழிகெடுத்துவிடும்'
( சூறதுல் பகரா : 247)

மேலும் மதீனாவில் இறை தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அல்லாஹூத்தஆலா, சமூகத் தலைவர் என்ற வகையில் மக்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின்வறுமாறு கூறுகின்றான்.

'அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களோடு இரக்கத்தோடு நடந்து கொண்டீர். நீர் மோசமான பண்புள்ளவராகவும், கல்நெஞ்சக்காரராகவும் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் தூரவிலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் முன் செய்த தவறுகளை மன்னித்து அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவீராக!.மேலும் (நடைமுறை) விவகாரங்கள் தொடர்பாக அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வீராக'.
(ஆல இம்ரான் -159).

மக்களுக்கும் - ஆட்சியாளனுக்கும் இடையிலான உறவு சீராக இருப்பதிலேயே நாட்டினதும் சமூகத்தினதும் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது. ஆட்சியாளர்களின் பண்புகள், குணாம்சங்களைப் பொறுத்தே குடி மக்களின் பண்புநலன்களும் அமையும். இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இமாம் மாவர்தி(ஹி.450) அவர்கள் இது பற்றிய அழகான உதாரணமொன்றைக் குறிப்பிடுகின்றார்.

'ஆட்சியாளர்கள் என்போர் தரையில் நட்டப்பட்ட ஒரு தடியைப் போன்றவர்கள். அத்தடியின் நிழலே நாட்டின் குடிமக்கள். தடி கோணலாக இருக்கின்ற போது அதன் நிழலும் கோணலாகவே அமையும். தடியின் கோணலை சீராக்கினாலேயன்றி ஒரு போதும் நிழலின் கோணலை சீர்படுத்திட முடியாது'
(நூல் : நஸீஹதுல் முலூக்).

இன்றைய உலகின் அனைத்து விவகாரங்களும் சடவாத சிந்தனையின் அடியாகவே தீர்மானிக்கப்படுகின்றன. அரசியல் விவகாரமும் அப்படித்தான். பண பலமும், செல்வாக்குமே ஆட்சியாளனைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கணிக்கப்படுகின்றன. பண்புகளுக்கும், நடத்தைகளுக்கும் எத்தகைய பெருமானங்களும் வழங்கப்படுவதில்லை. ஆனால் இச்சிந்தனை பிழையானது என்பதை அல்-குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது. தாலூத் (அலை) அவர்களை பனூ இஸ்ரவேலர்களின் ஆட்சியாளராக அல்லாஹூத்தஆலா தெரிவு செய்த போது அச் சமூகம் அவரைப் பார்த்து இவரிடம் பணமோ அந்தஸ்த்தோ இல்லையே, இவர் எப்படி எங்களை வழிநடத்தப் போகிறார் என வினவியது. இச்சம்பவம் பற்றி அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

'உங்களுக்கு தாலூதை ஆட்சியாளராக அல்லாஹ் அனுப்பியிருக்கின்றான் என்று அவர்களின் நபி அவர்களுக்குக் கூறிய போது, 'அவர் எப்படி எமக்கு ஆட்சி செலுத்த முடியும்? அவரிடம் பெரும் சொத்துக்களோ, செல்வாக்கோ இல்லையே? அவரை விட நாமே ஆட்சிக்கு உரித்துடையவர்கள்' என்று அவர்கள் கூறினர். அதற்கு அந்நபி கூறினார்: 'அல்லாஹ்தான் அவரை உங்களுக்குத் தெரிவு செய்து அனுப்பியுள்ளான். அவருக்கு அறிவு ஞானத்தையும், வீரத்தையும் அதிகமாக அல்லாஹ் கொடுத்திருக்கின்றான்'
(பகரா :251)

மேலுள்ள வசனம் ஆட்சியாளரை தெரிவு செய்வதில் பண பலமோ, அதிகாரச் செல்வாக்கோ தாக்கம் செலுத்தக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இன்றைய அரசியல் ஒழுங்கில் பணமும் , அதிகார பலமுமே ஆட்சியாளனைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக இருக்கின்றன. கொலைக் காரர்களும், கொள்ளையர்களும் அதிகாரபீடத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற அவலநிலையை நாம் எல்லா தேசங்களிலும் காண்கின்றோம். இவர்களின் தலைமைத்துவம் சமூகத்தை நேர்வழியின்பாலும், சுபீட்சத்தின்பாலும் இட்டுச் செல்லுமா? அல்லது அழிவின்பாலும், நரகத்தின்பாலும் இட்டுச் செல்லுமா?

நவீன கால அரசியல் தத்துவங்கள் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வரையறுப்பதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தில் ஒரு சிறு அளவையேனும் அவர்களின் நடத்தைகளும், பண்புகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்ற அம்சத்திற்கு வழங்காதிருப்பதை நாம் காண்கின்றோம். இதன் விளைவாக அதிகாரத் துஸ்பிரயோகங்களும், ஊழல் - மோசடிகளும் பெருகி நாடுகளும், சமூகங்களும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை நடைமுறையில் காண்கின்றோம்.

ஆனால், இஸ்லாமிய அரசியல் சிந்தனையில் ஆட்சியாளர்களின் பண்புகள்,நடத்தைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இது குறித்த தனியான நூற்களை ஆரம்ப கால இமாம்கள் எழுதியுள்ளனர். அதபுத் துன்யா வத் தீன், நஸீஹதுல் முலூக், அல்-அஹ்காமுஸ் ஸூல்தானிய்யா (இமாம் மாவர்தி), இஸ்லாஹூர் ராஇ வர் ரஇய்யா (இமாம் இப்னு தைமிய்யா) , அத்துருகுல் ஹூகுமிய்யா (இமாம் இப்னுல் கையிம் அல்-ஜவ்ஸி) ஆகியன அவற்றுள் சிலவாகும்.

ஒரு தேசத்தை சிறப்பான தேசமாக(அல்-மதீனா fபாழிலா) மாற்றுவதும் அல்லது சீரழிந்த தேசமாக (அல்-மதீனா fபாஸிதா) மாற்றுவதும் ஆட்சியாளாகளின் பண்பு நடத்தைகளிலேயே தங்கியுள்ளன. முஸ்லிம் சமூகம் ஓர் இலட்சிய சமூகம். மறுமையில் சுவனத்தை பெற்றுக் கொள்வதும் , உலகில் நீதியை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்துவதுமே அதன் இலட்சிய வேட்கை. இவ்விலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்கின்ற தலைமைத்துவமே முஸ்லிம் சமூகத்திற்குத் தலைமையாக அமைய வேண்டும். பண்பு நலனற்ற, ஜாஹிலிய்யத்தின் அத்தனை பண்புகளையும் அணிகலனாய்க் கொண்டிருக்கின்ற தலைமைத்துவங்களில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் திருப்தியுறாது. அல்லாஹூத்தஆலா அல்-குர்ஆனில் பின்வருமாறு வினவுகின்றான்.

'அவர்கள் ஜாஹிலிய்ய ஆட்சியையா விரும்புகின்றனர்? அல்லாஹ்வை விசுவாசிக்கின்றவர்களுக்கு அவனை விட சிறந்த ஆட்சியாளன் யாரிருக்க முடியும்?'

(அல்-மாஇதா : 50)
ஆம் அல்லாஹ்வை விட சிறந்த ஆட்சியாளன் யாருமில்லை. அவனது ஷரீஅத்தின் பிரகாரம் ஆளப்படுகின்ற ஆட்சியைத் தவிர சிறந்த ஆட்சி முறை இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை.

28 ஜன., 2010

சிறுபான்மை சமூகங்களின் வாக்களிப்புக்கும் அவர்களின் தேசப்பற்றுக்கும் முடிச்சிப் போடுவது தவறு.



இஸ்மத் அலி


இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார். பெரும்பான்மை மக்களின் மனோநிலையில் 'யுத்தத்தை வென்று நாட்டை மீட்டெடுத்த வரலாற்று நாயகன்- மஹிந்த' என்ற பசுமையான நினைவு இன்னும் மாறிவிடவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெளிவாகின்றது. ஜனாதிபதிக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல்,குடும்ப ஆட்சி, எதேச்சதிகாரம் போன்ற எதிர்த் தரப்பினரின் குற்றச் சாட்டுக்கள் எடுபடவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன.

இத்தேர்தலில் எதிர்த்தரப்பினரின் கூட்டணி பலமானதாகவும் ஆளும் தரப்பிற்கு பெரும் சவாலாகவும் கட்டமைக்கப்பட்டிருந்த போதிலும் முடிவு எதிர்ப்பார்த்தது போல் அமையவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் தரப்பிற்கு எதிரான கூட்டணிக்கு தமிழ்,முஸ்லிம்,மலையக சிறுபான்மையின கட்சிகள் ஆதரவு அளித்தன. தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எதிர்த்தரப்பினர் கணிசமான அளவிலான வாக்குகளை சிறுபான்மையினர் செறிவாக வாழும் பகுதிகளிலேயே பெற்றுக் கொண்டனர்.

என்றாலும் மிக நுணுக்கமாக அவதானிக்கின்ற போது ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் முழுமையாக மஹிந்தவை நிராரித்தனர் என்று கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எதிரணி வேட்பாளரை சிறுபான்மையினர் ஆதரித்து வாக்களித்தனர் என்ற போதிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிதறி வாழ்கின்ற சிறுபான்மையினரின் வாக்களிப்பு மனோநிலை இதற்கு மாற்றமாகவே இருந்தது என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். கண்டி, குருநாகல், அநுராதபுரம், கம்பஹா, களுத்துறை, கேகாலைப் போன்ற பகுதிகளில் வாழும் சிறுபான்மையினரின் ஆதரவுடனேயே அப்பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த வெற்றி பெற முடிந்தது.

மஹிந்தவை எதிர்த்து பெரும்பாலான சிறுபான்மை மக்கள் ஏன் வாக்களித்தனர் என்பது சிந்திக்கப்பட வேண்டியது. மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை ஓர் இமாலயச் சாதனைதான். யுத்த வெற்றியின் பின்னர் அதனைக் கொண்டாடுவதற்கும் மஹிந்தவை வரலாற்று புருசராக பார்ப்பதற்கும் சிறுபான்மையினர் தவறிவிட்டனர் என்று தேர்தல் முடிவுகளை வைத்து கூறுவது தவறானது. ஏனெனில் யுத்த வெற்றியை பெரும்பான்மை சமூகங்களைப் போன்றே சிறுபான்மையினரும் கொண்டாடினர் என்பது மறக்கப்பட முடியாதது.



இவ்விடத்தில்தான் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் மனோநிலை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசைகள் அபிவிருத்தி என்பதை விட உரிமைகள் சார்ந்தவையாகவே அமைந்திருக்கும் . அபிவிருத்தியில் எவ்வளவுதான் பலனைப் பெற்றுக் கொண்டாலும் உரிமைகள் விடயத்தில் ஒரு இழப்பைச் சந்திக்க நேரிடுகின்ற போது சிறுபான்மைச் சமூகம் தன் மனோநிலையை மாற்றிக் கொண்டு விடுகின்றது. இது இயல்பானதும் கூட. இதனை நன்றி கெட்டத்தனம் என்றோ அல்லது தேசப் பற்றின்மை என்றோ வர்ணிப்பது தவறானது.

நடந்து முடிந்த தேர்தலுக்கு பின்னர் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளில் சிறுபான்மையினர் தேசப்பற்றில்லாதவர்கள்..எனவேதான் தேசத் துரோகிகளுக்கு வாக்களித்தனர் என்ற வகையிலான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது 'இலங்கையர்' என்ற தேசியவாத சிந்தனையிலிருந்து சிறுபான்மையினரை தூரமாக்குமே தவிர 'ஐக்கிய இலங்கை – வளமான எதிர்க் காலம்' என்ற கருத்தியலை ஒரு நாளும் மெய்ப்பிக்க உதவிடாது.

அனைத்துக்கும் மேலாக சிறுபான்மையினர் ஒரு பௌத்தரை எதிர்த்து இன்னொரு பௌத்தருக்கே வாக்களித்துள்ளனர் என்ற உண்மைமையையும் சிறுபான்மை சமூகங்களின் வாக்களிப்பையும் அவர்களின் தேசப்பற்றையும் முடிச்சிட்டு நோக்குவது தவறு என்பதையும் பௌத்த தேசியவாதிகள் புரிந்து கொண்டாக வேண்டும்.