-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூலை, 2011

முத்தகீ + ரமழான் + அல் குர்ஆன் = இலக்கு

இஸ்மத் அலி




ரமழான் மாதத்தின் சிறப்புகள் குறித்த பயான்கள் ஒருபுறமும், அம்மாதத்தோடு தொடர்பான சட்டப் பிரச்சினைகள் குறித்த சூடு பறக்கும் விவாதங்கள் மறுபுறமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், எமது இறுதி இலக்கான "அல்லாஹ்வின் திருப்தியையும்- சுவனத்தையும் அடைதல்” என்ற இலக்கை நோக்கி எம்மை வழிப்படுத்தவே ரமழான் வருகின்றது என்பதை விளக்கும் வகையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

எமது இறுதி இலக்கு மறுமையில் இறை திருப்தியும், சுவனமும்தான் என்பதில் எமக்கிடையில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த இறுதி இலக்கை அடைகின்றவர்களாக நாம் மாற - ரமழான் எவ்வகையில் எம்மைப் பயிற்றுவிக்கிறது என்பதை பின்வரும் வினாக்களுக்கு அல்-குர்ஆன் ஒளியில் பதிலளிப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


வினா 01 : ரமழானில் நோன்பு விதியாக்கப்பட்டது ஏன்?

இதற்குரிய பதிலை அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

' ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்த சமூகங்களுக்கு நோன்பு விதியாக்கப்பட்டதைப் போல உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் 'முத்தகீன்களாக' (இறையச்சம் உள்ளவர்களாக) ஆக வேண்டும் என்பதற்காக”
(சூறதுல் பகரா : 183).


இறையச்சமுள்ள 'முத்தகீன்களாக' மனிதர்கள் மாற வேண்டும் என்பதே நோன்பின் நோக்கம் என்பது இங்கு தெளிவாகின்றது. 'தக்வா' என்பதற்கு இறையச்சம் என்றும் 'முத்தகீ' என்பதற்கு இறையச்சமுள்ளவர் என்றும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டாலும், அதன் உண்மையான விளக்கம் ஒருவர் தனது விருப்பங்களை அல்லாஹூக்காக விட்டுக் கொடுத்து அவனது விருப்பத்தை செயற்படுத்த முனைவதைக் குறிக்கும்.

நோன்பில் நாம் இத்தகைய பயிற்சியைப் பெற்றுக் கொள்கின்றோம். சுவையான உணவுகள் கண் முன்னிருக்க - வயிற்றுப் பசியால் உடம்பு தளர்ந்து, நா வரண்டு "உண்டு விடு” என்று உள்மனம் சொல்லியும், அல்லாஹ்வின் விருப்பத்திற்காக நாம் மஃரிபு அதான் கேட்கும் வரை உண்பதற்கு எத்தனிப்பதில்லை. இங்கு எமது ஆசைகளை அல்லாஹூக்காக நாம் விட்டுவிடுகின்றோம். இதே போன்றுதான் எமது பாலுணர்வு, பகையுணர்வு, கோபம் அனைத்தையும் நோன்பு கட்டுப்படுத்தி விடுகின்றது. நோன்பின் மூலம் நாம் பெறும் இத்தகைய பயிற்சிகளே எம்மை 'முத்தகீ' எனும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது.



வினா 02 : சரி, நாம் ஏன் முத்தகீன்களாக மாற வேண்டும் ?


இதற்குரிய பதிலை அல்-குர்ஆன் இப்படிச் சொல்கின்றது.

'அலிப், லாம், மீம். இந்த வேதத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது 'முத்தகீன்களுக்கு' (இறையச்சம் உள்ளவர்களுக்கு) வழிகாட்டியாகும்”
(சூறதுல் பகரா : 1-2)


ஆம், இந்த உலகத்தின் இறுதி வேதம் - அதுவும் ரமழானில் அருளப்பட்ட புனித வேதம் - யாருக்கு வழிகாட்டியாக அமையுமென்றால் முத்தகீன்களுக்கே அது முழுமையான வழிகாட்டியாக அமையும். அல்லாஹ்வின் விருப்பங்கள் என்ன? அவனது வெறுப்புக்கள் என்ன? என்பதை தெளிவுபடுத்தக் கூடிய அல்லாஹ்வின் வார்த்தைகளே அல்-குர்ஆன். ரமழானில் அல்லாஹ்வின் விருப்புக்களை முதன்மைப்படுத்த பயிற்சி பெற்ற ஒருவர் தனது முழு வாழ்வையும் அல்லாஹ்வின் விருப்பத்தின் பிரகாரம் மட்டும் அமைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போது அல்-குர்ஆன் அவருக்கு வழிகாட்டலை வழங்கக் காத்திருக்கின்றது. தனது தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, பொருளாதார வாழ்வு, அரசியல் வாழ்வு, சமூக வாழ்வு என்று எல்லா அம்சங்களின் போதும் வழிகாட்டலைப் பெற 'முத்தகீ' அல்-குர்ஆனை நாடி வருவார்.


நாம் எத்தனை ரமழான்களைக் கடத்தி விட்டோம். அதிலே நோன்பு நோற்றோம், நின்று வணங்கினோம், தர்மங்கள் செய்தோம். ஆனால் அந்த ரமழான்கள் எங்களை அல்-குர்ஆனின் வழிகாட்டலைப் பெற்று எமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றவர்களாக ஆக்கியதா? என்பதை இந்த ரமழானுக்கு நுழைவதற்கு முன் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் அல்-குர்ஆனை எமது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொள்வதே நாம் 'முத்தகீ' என்பதற்கு அடையாளமாகும். மேலும், அல்-குர்ஆனின் வழிகாட்டலை புறக்கணித்து, நாம் எடுத்து வைக்கும் ஒரு நகர்வு கூட எமக்கு பயனாக அமையப் போவதில்லை. அல்-குர்ஆனைப் புறக்கணித்து, அதன் வழிகாட்டலை மறந்து செயற்படுகின்றவர்களை அல்லாஹூத்தஆலா இப்படி எச்சரிக்கின்றான்.


'யார் என்னுடைய வழிகாட்டலைப் புறக்கணித்தானோ அவனுக்கு நெருக்கடியான வாழ்வு இருக்கின்றது. மேலும் அவனை மறுமையில் நாம் குருடனாக எழுப்புவோம். அப்போது அவன்> இறைவா! நான் உலகத்தில் பார்வையுள்ளவனாக இருந்தேனே> இப்போது ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? என்று வினவுவான். அதற்கு அல்லாஹ்> அப்படிதான்> எம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது நீ அதை மறந்து வாழ்ந்தாய். இன்று நீயும் மறக்கப்பட்டவனாய் ஆனாய்”
( சூறா தாஹா : 124-126)

எனவே இவ்வுலகத்தில் அல்-குர்ஆனையும், அதன் வழிகாட்டலையும் மறந்து வாழும் நாம் இந்த எச்சரிக்கைக்குப் பயந்து கொள்வோமாக. நாம் அல்-குர்ஆனை வழிகாட்டியாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றால் எம்மை 'முத்தகீ” யாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், அதற்குரிய பயிற்சியைத் தரவே ரமழான் வருகின்றது என்பதையும் புரிந்து கொள்வோமாக.


வினா : 03 : 'முத்தகீன்களாக மாறி விட்டால் எமக்கு கிடைக்கப் போவது என்ன?


இதற்குரிய விடையினை அல்-குர்ஆன் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்துகின்றது.

- இறைவனின் நேசமும் அன்பும் கிடைக்கப் பெறல்.


'அல்லாஹூத்தஆலா முத்தகீன்களை விரும்புகின்றான்” (அத்-தவ்பா : 4)

'அல்லாஹூத்தஆலா முத்தகீன்களின் நேசனாவான்” (அல்-ஜாஸியா : 19)


- இறைவன் கூட இருக்கின்ற பாக்கியம்.

அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹூத்தஆலா முத்தகீன்களோடு இருக்கின்றான்' (பகரா:194)


- முத்தகீன்களின் செயல்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவை.


' நிச்சயமாக செயல்களை அல்லாஹூத்தஆலா முத்தகீன்களிடமிருந்தே ஏற்றுக் கொள்கின்றான்' (அல்-மாஇதா : 27)


- மறுமையில் அல்லாஹ்விடம் கூட்டமாக அழைத்துச் செல்லப்படும் பாக்கியம்.

மறுமையில் முத்தகீன்கள் கூட்டமாக ஒன்றிணைக்கப்பட்டு ரஹ்மானாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவர்' ( மர்யம் : 85)


- மஹ்சரில் பாதுகாப்புப் பெற்றவர்களாக இருக்கும் பாக்கியம்


' நிச்சயமாக முத்தகீன்கள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் (மறுமையில்) இருப்பர்' (அத்துஹான்: 51)



- சுவனத்தை அடையும் பாக்கியம்.


' நிச்சயமாக முத்தகீன்கள் சுவனங்களில், அருள்கள் வழங்கப்பட்டோராக இருப்பர்' ( அத்தூர் : 17).



எமது இறுதி இலக்கு 'அல்லாஹ்வின் திருப்தியும் – சுவனமும்” என்பதை நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இந்த இலக்கை அடைபவர்கள் முத்தகீன்களைத் தவிர வேறு ஒருவராகவும் இருக்க முடியாது என்பதை மேலுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே, மேலே மூன்று வினாக்களின் மூலம் விளக்கிய விடயங்களை ஒன்றிணைத்து இப்படிச் சொல்ல முடியும். 'அல்லாஹ்வின் திருப்தியும் - சுவனமும்' என்ற இலக்கை முத்தகீன்கள் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். அல்-குர்ஆனை வழிகாட்டியாகக் கொண்டு அதனை தனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதே 'முத்தகீ” என்பதற்கு வரைவிலக்கணமாகும். அத்தகைய முத்தகீன்களாக எம்மை மாற்றியமைக்கும் பயிற்சியை வழங்கவே ரமழான் எம்மை நோக்கி வருகின்றது.. சுருக்கமாகச் சொன்னால் எம் இறுதி இலக்கை அடைவதற்கு எம்மை பயிற்றுவிக்கவே ரமழான் வருகின்றது.

ஆகவே, எம்மை நோக்கி வரும் ரமழானை சென்ற வருடங்களில் எப்படிக் கடத்தினோமோ, அப்படி என்றில்லாமல் நாம் முத்தகீயாக மாறுவதற்குரிய நல்ல சந்தர்ப்பமாக அதனை ஆக்கிக் கொள்ள எம் அனைவருக்கும் அல்லாஹூத்தஆலா அருள் புரிவானாக!!!.

27 மார்., 2011

அறிவியல் யுகத்தின் அறியாமைகள்

இஸ்மத் அலி (நளீமி)




மனித வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அறிவியல் வளர்ச்சியை இன்றைய உலகம் கண்டிருக்கின்றது. எனவேதான் அதனை 'அறிவியல் உலகம்' என்று நாம் அழைக்கின்றோம். இத்தகைய அறிவியல் வளர்ச்சியைக் கண்ட உலகம் அறியாமையில் இருக்கின்றது என்று சொன்னால் சிலர் ஆச்சரியப்படலாம். அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கின்ற போது அறியாமைக்கு இடமேது?? என்று தர்க்க ரீதியாக வினாவெழுப்பலாம். என்றாலும் இன்றைய உலகம் பல்வேறு அறியாமைகளுக்குள் மூழ்கிப் போயிருக்கிறது என்ற யதார்த்தத்தை நடுநிலை நின்று சிந்திக்கின்ற எவரும் புரிந்து கொள்வார்கள்.

இன்றைய உலகம் எவ்வகையான அறியாமைகளுக்குள் மூழ்கியிருக்கின்றது?, அதற்கான காரணிகள் என்ன? என்பவைகளை சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


சிந்தனை, நம்பிக்கையில் அறியாமை



இவ்வகையான அறியாமையினைக் குறிக்க அல்-குர்ஆன் ظن الجاهلية 'ழன்னுல் ஜாஹிலிய்யா' (அறியாமை எண்ணம்) என்ற பதப் பிரயோகத்தை உபயோகிக்கின்றது. படைப்பாளனாகிய அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை படைப்புக்களின் மீது வைப்பதையும், அல்லாஹ்வின் ஆற்றல்களில் சந்தேகப்படுவதையும், அல்லாஹ்வின் மீது நிராசையடைவதையும் குறிக்கவே அல்-குர்ஆன் இச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றது.

இன்றைய அறிவியல் யுகம் எத்தகைய சிந்தனையின் அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது? இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற சடவாத சிந்தனையினையே நவீன அறிவியல் உலகம் அடித்தளமாகக் கொண்டிருக்கின்றது.



15ம் நூற்றாண்டில் மத்திய ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியோடு அறிவியல் யுகத்தின் ஆரம்பம் தொடக்கம் பெறுகின்றது. இம் மறுமலர்ச்சியில் அறிவியலாளர்களுக்கும், கிறிஸ்த்தவ திருச்சபைக்குமிடையில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான மோதலின் போது கிறிஸ்த்தவ திருச்சபை மேற்கொண்ட வன்முறை நடவடிக்கைகளின் விளைவால் அறிவியலாளர்கள் மதத்தை தமது எதிரியாக நோக்கத் தொடங்கினர். அதுவரைக் காலமும் கிறிஸ்த்தவ திருச்சபைக்கு தமது வருமானத்தில் பெரும் தொகையை வரிப் பணமாகச் செலுத்தி வந்த ஆட்சியாளர்கள், திருச்சபையின் கெடுபிடிகளிலிருந்து விடுபட அறிவியலாளர்களின் பக்கம் சார்ந்தனர். இரு தரப்பினரும் இணைந்து மதத்தை அறிவியல், ஆட்சியியல் துறைகளிலிருந்து ஒதுக்கி வைத்தனர்.


இதன் விளைவே சடவாத சிந்தனையின் தோற்றமாக அமைந்தது. மதம், கடவுள், ஒழுக்கம் முதலியவை மனிதனால் புனையப்பட்டவையே தவிர, கடவுளால் மொழியப்பட்டவை அல்ல என்ற தவறான சிந்தனையினை அறிவியல் உலகம் தனது கொள்கையாக ஆக்கிக் கொண்டது. மேலும் அல்லாஹ்வை அறிந்து கொள்வதையும், அவனது இருப்பையும் அறிவுக்கு முரணானதாகவே அது கருதுகின்றது. மனித வாழ்வென்பது பிறப்போடு தொடங்கி, இறப்போடு முடிவடைகின்ற ஒன்று என்பது அதன் நம்பிக்கையாக அமைந்துவிட்டது.

இது எத்தகைய அறியாமை?? இந்த அறியாமையை அறிவியல் உலகம் அறியாமை என்று உணர்ந்திருக்கிறதா? இல்லை என்பதே இதற்கான பதிலாகும்.

உண்மையில் படைப்பாளன் விடயத்தில் மனிதன் அறியாமையில் இருப்பதென்பது அவனது வாழ்வின் நோக்கத்தையே தலை கீழாக மாற்றியமைத்து விடுகின்றது. படைப்பாளன் பற்றிய அறியாமை மறுமை நம்பிக்கையை இல்லாமலாக்கிவிடுகின்றது. இது மனிதனை இவ்வுலகத்தில் மனம் போன போக்கில் வாழ வைத்துவிடுகின்றது. இந்த அறிவீனமான சிந்தனை மனிதர்களில் எப்படி சீரான நடத்தையினை ஏற்படுத்த முடியும்? மாட்டிக் கொள்ளாமல் திருடு!! மாட்டிக் கொண்டால் தற்கொலை செய்து கொள்!! என்ற நடத்தையியலைதான் இந்த அறியாமை கற்றுக் கொடுத்து நடைமுறையாக்கியுள்ளது.


பண்பாடு, கலாசாரத்தில் அறியாமை

அறிவியல் உலகத்தின் சிந்தனையிலும், நம்பிக்கையிலும் ஏற்பட்ட அறியாமை அதன் கலாசாரத்திலும், பண்பாட்டிலும் பல்வேறு அறியாமைகளை தோற்றுவித்தது. மதங்களைப் புறக்கணித்த அறிவியல் உலகம் அவற்றின் நம்பிக்கை கோட்பாடுகளை மட்டுமன்றி அவை போதித்த ஒழுக்கங்களையும் புறக்கணிக்கத் தொடங்கின. தனி மனிதன், குடும்பம், சமூகம் இவற்றின் சுபீட்சத்திற்காக எல்லா மதங்களும் பெரும்பாலும் ஒரே வகையான ஒழுக்க விழுமியங்களை போதிக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் புறக்கணித்து தமது மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலான கலாசாரமொன்றையும், அதற்கேற்ற பண்பாடுகளையும் அறிவியல் உலகம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

பெண்கள் அரை நிர்வாணத்தோடு அலைவதே உயர் கலாசாரத்தின் அடையாளம் என்று அறிவியல் உலகம் கருதுகின்றது. பெண்கள் தம் உடலை மறைப்பதை பிற்போக்குத்தனமென்றும், அடக்குமுறை என்றும் அறிவியல் உலகம் உரத்துச் சொல்கின்றது. சில நாடுகள்; பெண்கள் தமது முழு உடலையும் மறைப்பதை குற்றமாக்கி அதற்கு தடை விதிக்கவும் எத்தணிக்கின்றன. பெண்களின் அழகை வெளிப்படுத்தி அதனை உயர் கலாசாரமாகக் கருதும் விடயத்தை இஸ்லாம் அறியாமைக் கலாசாரமாகவே அடையளாளப்படுத்துகின்றது. تبرج الجاهلية 'தபர்ருஜூல் ஜாஹிலிய்யா' என்ற பதப்பிரயோகத்தின் மூலம் அல்லாஹூத்தஆலா பெண்கள் தம் அழகை பிறருக்கு வெளிப்படுத்துவதை அறியாமைக் கலாசாரம் என்று குறிப்பிடுகின்றான். சுதந்திரத்தின் பெயரால் பெண்களை வீதிக்கு கொண்டு வந்ததன் விளைவை அறிவியல் உலகம் நன்றாகவே அனுபவிக்கின்றது. ஒரு பெண் எத்தனை ஆண்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தன் விளைவே அறிவியல் உலகில் குடும்ப அமைப்பின் சிதைவுக்குக் காரணமாகியது.

அறிவியல் உலகின் பண்பாட்டிலும், கலாசாரத்திலும் ஏற்பட்ட அறியாமை மதுவோடும், போதையோடும் காலம் கழிக்கின்ற இளைஞர்களையும், பள்ளிப் பருவத்திலேயே கற்பம் தரிக்கின்ற யுவதிகளையும் கொண்ட ஒரு பரம்பரையை தோற்றுவித்துள்ளது.


ஆட்சியியலில் அறியாமை

கட்டுக்கோப்பான சமூக அமைப்புக்கு அதிகாரம்மிக்க தலைமை என்பது இன்றியமையாதது. இந்த அதிகாரத்தை சமூகம் ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. சமூகத்தின் உயிர்,பொருள், மானம், நம்பிக்கை என்பவைகளுக்கு உத்தரவாதமளிக்கின்ற வகையில் சட்டங்களை அமுல்படுத்துவதும், சமூகத்தின் உலக, மறுமை சுபீட்சத்திற்காக உழைப்பதுமே ஆட்சியாளாகளின் கடமையாகும்.

அறிவியல் உலகம் இரண்டு வகையான ஆட்சி முறைகளை இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. ஜனநாயகம், சோசலிஷம் ஆகிய இவ்விரு முறைமைகளில் சோலிஷம் தோல்வி கண்டுவிட்டது. ஜனநாயக அரசியல் பணமும்,பலமும் கொண்டவர்களின் கைகளில் அதிகாரம் சென்றடைவதையே நடைமுறையாக்கியுள்ளது.



அறிவியல் யுகத்தின் ஆட்சியியலை சூழ்கொண்டிருக்கின்ற மிகப் பெரிய அறியாமை மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களால் சமூகத்தை வழிநடத்த முனைவதாகும். இறைவனால் இறக்கப்பட்ட சட்டங்களை புறந்தள்ளிவிட்டு, மனிதன் தன் விருப்பு,வெறுப்புக்களின் அடிப்படையில் இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இஸ்லாம் அறியாமையாகவே நோக்குகின்றது. இதனைحكم الجاهلية - 'ஹூக்முல் ஜாஹிலிய்யா' (அறியாமையின் ஆட்சி) என்று அல்லாஹூத்தஆலா குறிப்பிடுகின்றான்.
'அவர்கள் அறியாமையின் ஆட்சியையா விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு, அல்லாஹ்வைத் தவிர சிறந்த ஆட்சியாளன் வேறு யார் இருக்க முடியும்?' (அல்-மாஇதா : 50) என்று அல்-குர்ஆன் வினவுகின்றது.

அறிவியல் உலகம் ஆட்சியியலில் கொண்டிருக்கின்ற இந்த அறியாமையினால் குற்றங்கள் பெருகிய ஓர் உலகத்திலேயே எம்மால் வாழ முடிகின்றது. கொலை, கொள்ளை, ச10து, கற்பழிப்பு, விபச்சாரம் என்பவை நாளாந்த செய்திகளாகி விட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் விபச்சாரம், மது, ச10து என்பவை அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரத்தோடு மேற்கொள்ளப்பட்டால் குற்றமல்ல, அனுமதியின்றி மேற்கொள்வதுதான் தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்வதுதான்.

இறை சட்டங்களை ஆட்சியியலிருந்து ஒதுக்கிய அறிவியல் யுகத்தின் அறியாமை மனித சமூகத்தின் வளமான இவ்வுலக வாழ்வின் சீரழிவுக்கு காரணமாகியதோடு, அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்துக்கும், மறுமை ஈடேற்றத்துக்குமான உரிய பெறுமானத்தை வழங்கவும் தவறிவிட்டது. 'மனிதர்களின் உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் வளப்படுத்துவதே ஆட்சியாளர்களின் கடமை' என்ற இமாம் இப்னு கல்தூனின் கூற்றின்படி அறிவியல் உலகின் ஆட்சியாளர்கள் தமது கடமையினைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அறியாமையிலேயே இருக்கின்றனர்.


வஞ்சம் தீர்க்கும் அறியாமை


அறிவியல் உலகின் அறியாமைகளுள் இதுவும் ஒன்று. சமூகங்களுக்கு மத்தியில் குரோதம் வளர்ப்பதும், வஞ்சம் தீர்ப்பதும், ஆக்கிரமிப்புச் செய்வதும் அறியாமையின் பண்பென்றே அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதனை حمية الجاهلية 'ஹமிய்யதுல் ஜாஹிலிய்யா' என்று அல்லாஹூத்தஆலா குறிப்பிடுகின்றான். ஹூதைபிய்யா உடன்படிக்கை எழுதப்பட்ட போது அதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனும் வசனத்தைச் சேர்த்துக் கொள்வதை மக்கத்து காபிர்கள் விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் மீதும், முஃமீன்கள் மீதும் மக்கத்து காபிர்கள் ஏற்கனவே கொண்டிருந்த காழ்ப்புணர்வும், குரோதமுமே அதற்குக் காரணமாகும். இவர்களின் இப்பண்பைக் குறிக்கவே அல்-குர்ஆன் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.

இன்றைய அறிவியல் உலகத்திடமும் இத்தகைய காழ்ப்புணர்வும், குரோதமும் குடிகொண்டிருப்பதையே அவர்கள் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன. அறிவியல் புரட்சியில் கிறிஸ்த்தவ அறிவியலாளாகளோடு யூத சமூகமும் இணைந்து கொண்டது. இவ்விரு சமூகத்தினதும் பொது எதிரியாக முஸ்லிம் சமூகம் மாறியுள்ளது. கிறிஸ்த்துவை கொன்றதாக நம்பப்படும் யூத சமூகத்தோடு உறவு பாராட்டும் கிறிஸ்த்தவ உலகம் முஸ்லிம் சமூகத்தோடு பகைமைப் பாராட்டவே முனைகின்றது. சிலுவை யுத்தத்தின் தோல்விகளை கிறிஸ்த்தவ ஐரோப்பா மறக்காமையும், முஸ்லிம் தேசங்களிலுள்ள வளங்களை சூறையாடுவதுமே இந்த பகைமைக்குக் காரணமாகும்.
அறிவியலில் உச்சத்தை அடைந்து சாதனைப் படைக்கும் அறிவியல் உலகம் சமூகங்களுக்கு மத்தியில் குரோதம் வளர்ப்பதையும், அதனூடாக ஆக்கிரமிப்புச் செய்வதையும் அறியாமை என்று உணர்ந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் அறிவியல் உலகம் நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்து சுரண்டிய வளங்களினால்தான் தனது வளர்ச்சிக்கான அடித்தளத்தையிட்டுக் கொண்டது. 15ம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு வெறி இன்னும் அடங்கியதாகத் தெரியவில்லை. இலட்சக் கணக்கான உயிர்களை கொன்று குவித்து அறிவியல் உலகம் தன் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே எத்தணிக்கின்றது. அதன் இந்த அறியாமை முழு மனித குலத்தின் அழிவுக்கும் காரணமாகும் என்பதை அது அறியாமல் இருப்பது எத்தகைய அறியாமை?

எனவே...

இன்றைய உலகு 'அறிவியல் உலகம்' என்று அழைக்கப்பட்டாலும் அது மிகப் பெரிய அறியாமைகளுக்குள் மூழ்கியிருக்கின்றது என்பதே உண்மையாகும். இன்றைய அறிவியல் யுகத்தின் வளர்ச்சி என்பது ஒரு பக்கம் வீங்கிய வளர்ச்சியே அன்றி முழுமையான வளர்ச்சியல்ல. இந்த நிலையை இந்தியக் கவிஞர் ரவீந்த்ரநாத் தாஹூர் அழகாகக் குறிப்பிடுகின்றார்.
'மனிதன் நீரிலே நனையாமல் எப்படி மிதப்பது என்பதை அறிந்து கொண்டான். ஆகாயத்தில் சிறகின்றி பறப்பது எப்படியென்றும் அறிந்து கொண்டான். ஆனால் பூமியில் எப்படி நடப்பது என்பதை அவன் மறந்துவிட்டான்' என்று தனது கவிதையொன்றில் குறிப்பிடுகின்றார். ஆம், அறிவியல் உலகம் மனித வாழ்வை இலகுபடுத்திக் கொடுக்கும் சாதனங்களை அவனுக்குக் கொடுக்கின்றனவே தவிர மனித நடத்தைக்கான வழிகாட்டல் விடயத்தில் அறியாமையிலேயே இன்னும் இருக்கின்றது.

அறிவியல் உலகம் வஹியைப் புறக்கணித்ததே இந்த அறியாமைகளுக்கெல்லாம் காரணம். அறிவியல் யுகத்தில் வருடத்துக்கு பல லட்சம் அறிவியலாளர்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர். பல்லாயிரம் ஆய்வுகள் வருடம் தோறும் எழுதப்படுகின்றன. ஆனால் குற்றங்கள் அதிகரிக்கின்ற, அநாகரிகமான உலகொன்றையே எம்மால் காண முடிகின்றது. படைப்பாளன் பற்றிய நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் போதிக்காத அறிவியல் உலகத்தின் கலாசாலைகள் 'அறிவுள்ள பிசாசுகளையே' உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
மறுபுறத்தில், வஹியைச் சுமந்த சமூகம் மற்றொரு வகையான அறியாமையில் மூழ்கியிருக்கின்றது. தலைமைத்துவமின்மை, சிந்தனைக் கோளாறு, கோழைத் தனம், சோம்பேறித்தனம், திட்டமிடலின்மை, மேற்கத்தேய கலாசாரம் போன்ற அறியாமைகளுக்குள் மூழ்கியிருக்கின்றது. அறிவியலையும், வஹியையும் எம் சமூகமும் இன்னும் பிரித்தே வைத்திருக்கின்றது.

வஹியோடு இணைந்து இன்றைய அறிவியல் உலகம் தன் பயணத்தைத் தொடருமென்றால், நிச்சயமாக இவ்வுலகம் ஒரு தூய தேசமாக மலரும். அத்தகைய ஒரு தூய தேசமே எம் அனைவரினதும் பேரவாவாகும்.

5 ஜூலை, 2010

ஷஃபான் வருகிறது.





நிமிடங்களும், மணித்தியாலங்களும், நாட்களும் கணக்கின்றி கழிகின்றன. மாதங்கள் உருண்டோடி வருடமொன்று நிறைவடைகின்ற போதே நாம் ஓரளவாவது காலத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்கின்றோம். கண் மூடித் திறப்பதற்குள் வருடமொன்று முடிவடைந்துவிட்டதே என்று அங்கலாய்க்கின்றோம். தொழில், குடும்பம், சொத்து சேகரிப்பு இதிலேயே எம் காலங்கள் கழிந்து போய்விடுகின்றன. படைத்த இறைவனுக்காக நான் என்ன செய்தேன்? என்று சிந்திப்பவர்கள் எம்மில் குறைவாகவே உள்ளனர். செல்வத்தை அள்ளிச் சேகரித்து வைப்பதில் ஆர்வம் உள்ள அளவுக்கு எமக்கு நன்மைகளை அள்ளிக் கொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை.

நன்மைகளை அள்ளிக் கொள்வதில் போட்டி போட்டுக்கொள்ளுங்கள் என்று அல்-குர்ஆன் எமக்கு கட்டளையிடுகின்றது. முஃமின்களின் பண்பு அதுவாகத்தான் இருக்க வேண்டும். அவர்களின் போட்டி பணத்தையும் செல்வத்தையும் சேகரிப்பதிலோ, பதவிகளைப் பெற்றுக் கொள்வதிலோ, பிறரை வீழ்த்தியேனும் தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதிலோ இருக்க மாட்டாது.

سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ


'உங்கள் இறைவனிடமிருந்து பாவ மன்னிப்பையும், சுவனத்தையும் பெற்றுக் கொள்வதில் போட்டி போட்டு முந்திக் கொள்ளுங்கள். அந்த சுவனத்தின் விசாலம் வானம், பூமி அளவுடையது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிக்கைக் கொண்டவர்களுக்காக அது தயார்படுத்தப்பட்டுள்ளது. சுவனம் என்ற இந்த அருளை தான் நாடிய மனிதர்களுக்கு அல்லாஹூத்தஆலா வழங்குகின்றான். மேலும் அல்லாஹூத்தஆலா சிறப்பும் கண்ணியமும் கொண்டவனானவான்'.
(சூறதுல் ஹதீத் : 21)


சகோதரர்களே !! சகோதரிகளே!!
நன்மைகளை அள்ளி, இறை அன்பையும் அவனது அவனது அருளையும் பெற்று சுவனத்தின் சொந்தங்களாய் மாற எமக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பம் வருகிறது.

ஷஃபான் வருகிறது.



ஸஃபான் மாதத்தின் சிறப்பு.


இறை தூதருக்கு மிக விருப்பமான மாதங்களில் ஸஃபானும் ஒன்றாகும். கண்ணியத்துக்குரிய நான்கு மாதங்களில் ஒன்றான ரஜப் மாதத்திற்கும், அல்-குர்ஆன் இறக்கப்பட்ட ரமழானுக்கும் இடைப்பட்ட மாதம் என்ற வகையிலும், மனிதர்களின் செயல்கள் அல்லாஹூத்தஆலாவிடத்தில் எடுத்துக்காட்டப்படுகின்ற மாதம் என்ற வகையிலும் ஸஃபான் மாதம் சிறப்புப் பெறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'ரமழான் - ரஜப் ஆகிய இரு மாதங்களுக்கிடையே வரும் ஸஃபான் மாதத்தில் மக்கள் பொடுபோக்காக இருக்கின்றனர். அம்மாதத்தில்தான் மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் எடுத்துக் காண்பிக்கப்பட்டு உயர்த்தப்படுகின்றன. என்னுடைய செயல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்படுவதை விரும்புகின்றேன்'.
(நூல் : நஸாஈ)

ஸஃபான் மாத நோன்பு.


நபி(ஸல்) அவர்கள் ஏனைய மாதங்களை விட சுன்னத்தான நோன்புகளை ஸஃபான் மாதத்திலேயே அதிகம் நோற்பவர்களாக இருந்துள்ளார்கள்.
ரமழான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதத்திலும் நபி (ஸல்) முழுமையாக நோன்பு வைத்ததாக நான் பார்த்ததில்லை. மேலும் ஷஃபான் மாதத்தில் அன்னார் அதிகமாக நோன்பு நோற்றது போல வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.
(நூல் : புகாரி, முஸ்லிம்)

நன்மைகளை அள்ளிக் கொள்ளும் விருப்பமுடையவர்கள் இம்மாதத்தில் அதிகமதிகம் நோன்புகளை நோற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முடியாதவர்கள் திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் அல்லது குறைந்தது பிறை 13,14,15 ஆகிய தினங்களிலாவது நோன்பு நோற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மேலும் கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் ஸஃபான் என்பதால் நோன்புகளை கழாச் செய்ய வேண்டியவர்கள் இம்மாதத்தில் தமது நோன்புகளை கழாச் செய்து கொள்ள வேண்டும்.
ஆயிஷா (ரழி) அறிவிக்கின்றார்கள் எனக்கு ரமழான் நோன்பு(களில் சில) விடுபட்டுப் போகும். அவற்றை நான் ஷஃபான் மாதத்தில்; நிறைவேற்றுவேன்.
(நூல் : புகாரி, முஸ்லிம்)

என்றாலும் இம்மாதத்தின் பிறை 15 மாத்திரம் குறிப்பாக்கி அதில் இபாதத் செய்வது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத வழியாகும். இம்மாதம் முழுதும் விசேடமானதே. ஒரு தினத்தை மாத்திரம் குறிப்பாக்கி அதில் நோன்பு நோற்பதோ அல்லது விசேடமான இபாதத்களைச் செய்வதோ ஆகுமானதல்ல.

ரமழானுக்கு தயார்படுத்தும் மாதம்.


ஸஃபான் மாதம் ரமழான் மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான முன்னோடி பயிற்சியை வழங்கும் மாதமாகும். அறிஞர்கள் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்புகளை பர்ளான தொழுகைகளுக்கு முன்னால் தொழப்படும் சுன்னத்தான தொழுகையோடு ஒப்பிட்டு நோக்குகின்றனர்.
இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள் : ஸூன்னத்தான அமல்களில் ரமழானுக்கு நெருக்கமான காலத்தில் நிறைவேற்றும் அமல்கள் சிறந்தது. இம்மாதத்தில் நோன்பு நோற்பது ராதிபத்தான ஸுன்னத்தின் நன்மையைப் பெற்றுத் தரும். அது பர்ளான நோன்புகளில் விடுபடும் குறைபாடுகளுக்கான நிவர்த்தியாகவும் அமையும்.
எனவே இம்மாதம் நாம் நன்மைகளை அள்ளிக் கொள்வதற்கான மாதமாக வருகிறது. இம்மாதத்தில் நோன்பு நோற்று எமது அமல்கள் நாம் நோன்பாளிகளாக இருக்கின்ற நிலையில் உயர்த்தப்படுவதற்கு வழிசெய்வோமாக. தர்மங்கள் ஏனைய இபாதத்களை அதிகமதிகம் நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்றுக் கொள்வோமாக !!

« யாஅல்லாஹ் எங்களுக்கு ரஜப், ஷஃபான் மாதங்களில் அருள்பாளிப்பாயாக! மேலும் ரமழானை அடைந்து கொள்ளச் செய்வாயாக. »