-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 மே, 2012

மல்லிகை இதயங்கள்

நூல் அறிமுகம் : பாத்திமா முஸைனா




நூல் : மல்லிகை இதயங்கள் (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர் : ஷாறா
வெளியீடு : ஐ.பீ.ஸி அச்சகம்.
பக்கங்கள் : 119
விலை : 175

இஸ்லாமிய இயக்கத்திற்குள்ளிருந்து உருவான விரல்விட்டு எண்ணக் கூடிய ஈழத்து பெண் எழுத்தாளர்களில் சகோதரி ஷாறா முதன்மையானவர் என்பது மிகைப்பட்ட கருத்தாக இருக்க முடியாது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எழுத்து ஊடக பயணத்தில் அருள்ஜோதி சஞ்சிகைக்கு அடுத்து 1958 – 1960 காலப்பகுதிகளில் வெளிவந்த வழிகாட்டி சஞ்சிகையில் 'சோதரிகள் சோலை' எனும் பெண்களுக்கான பகுதி இஸ்லாமிய இயக்கத்திற்குள்ளிருந்து பெண் எழுத்தாளர்களை உருவாக்கும் ஆரம்பக் களமாக அமைந்தது எனலாம். பிற்பட்ட காலப்பகுதியில் அல்ஹஸனாத்தின் 'அந்நிஸா' பக்கம் மற்றும் எங்கள் தேசம் சஞ்சிகையின் 'பெண்கள் தேசம்' பகுதி என்பன இஸ்லாமிய இயக்கம் ஒரு சில பெண் எழுத்தாளர்களையாவது ஈன்றெடுக்கக் காரணமானது என்றால் அது பிழையாகாது.

இஸ்லாமிய தஃவாவில் பெண்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரிசணைக் காட்டப்படும் இக்காலையில், தஃவாவிற்கான பெண்களின் பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என்பதற்கு சிறந்ததொரு முன்னுதாரணத்தை சகோதரி ஷாறா அவர்கள் தனது 'மல்லிகை இதயங்கள்' எனும் சிறுகதைத் தொகுதி நூல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இலக்கியத்தில் கதாசிரியர்கள் இருவகையான கதாபாத்திரங்களை புனைவார்கள். அதில் ஒரு வகை நேர்வகை (positive) பண்பு கொண்ட கதாபாத்திரங்கள். அடுத்த வகை எதிர்மறை (negative) பண்பு கொண்ட கதாபாத்திரங்கள். சடவாத சிந்தனைக் கொண்ட எழுத்தாளர்கள் இத்தகைய எதிர்மறை பண்பு கொண்ட கதாபாத்திரங்களைப் புனைந்து அவர்களை கதாநாயகர்களாகக் காட்டவே முயற்சிப்பார்கள். ஆனால் சகோதரி ஷாறா இச்சிறுகதைத் தொகுதியில் படைத்திருக்கும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை 'மல்லிகை இதயங்களாக' மணம் வீசும் நேர் வகைப் பண்பு கொண்ட கதாபாத்திரங்கள். இலக்கியத்தின் மூலம் சமூகத்தில் முன்மாதிரி மனிதர்களை உருவாக்க நினைக்கும் எழுத்தாளர்கள் இத்தகைய கதாபாத்திரங்களைப் புனையவே முயற்சிப்பார்கள்.

'மல்லிகை இதயங்கள்' என்பது மென்மையான பெண்ணின் மனதைச் சுட்டும் குறியீடு என்பது இந்நூலை வாசிக்கும் போது புரிகின்றது. ஏனெனில் இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களைக் கருவாகக் கொண்டவை. பெண்ணின் இயல்புகளைச் சொல்பவை. மட்டுமன்றி சமூக உருவாக்கப் பணியில் பெண்ணின் பங்களிப்பை விளக்குபவை.இக்கதைத் தொகுதியில் சகோதரி ஷாறா சமூக உருவாக்கப் பணியில் ஒவ்வொரு பெண்ணும் தான் இருக்கும் நிலையிலிருந்து கொண்டு எப்படிப் பங்களிப்புச் செய்யலாம் என்பதை அழகாக விபரிக்கின்றார். 'குடை நிழலில்' எனும் கதையில் வரும் நாஹித், 'நிலை மாறிய நிமிசங்கள்' கதையில் வரும் பர்ஹா, 'தோற்றுப் போன வாழ்க்கை' யில் வரும் ரைஹான், 'மௌனமாய் ஒரு...' கதையில் வரும் ரஹ்மத் தாத்தா, 'சுவனத்துப் பெருநாள்' கதையின் நாயகி ஆதிகா, 'நிறம் தெரியாத அத்திபாரங்கள்' கதையில் வரும் ஹஸீனா...இப்படி இத்தொகுதியில் முன்மாதிரிப் பெண்மணிகளை சகோதரி ஷாறா சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். இஸ்லாமிய இயக்கப் பணியில் பெண்ணின் பங்களிப்பென்பது பயான் வகுப்புக்களில் குந்தியெழுந்துச் செல்வதோ, அல்லது கூட்டங்கள் கூடிக் கலைவதோ மட்டுமல்ல, அவர்கள் தமது இயல்புக்கேற்ப பங்களிப்புச் செய்வதற்கு நிறையவே இருக்கின்றது என்பதை ஷாறா மேற்கூறிய கதாபாத்திரங்களின் ஊடாக தெளிவுபடுத்துகிறார்.

மேலும், 'பெண்ணின் குணங்கள்' என்று சமூகத்தில் குறையாகக் கூறப்படும் சில பண்புகளை திருத்திக் கொள்வதற்கான வழிகாட்டல்களையும் சகோதரி ஷாறா இக்கதைத் தொகுதியில் பேசுகிறார். வீண் விரயம், போலி கௌரவம், ஆடம்பரப் பிரியம், சீதனம், மாமி – மருமகள் பிரச்சினை...இப்படி குடும்ப அமைப்பின் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் கேடுகளையும் கதைகளின் கருவாக்கியுள்ளார் சகோதரி ஷாறா. மட்டுமன்றி குடும்ப அமைப்பின் சந்தோசத்திற்கு வழிவகுக்கும் கணவன் - மனைவி புரிந்துணர்வு எனும் விடயத்தையும் சகோதரி ஷாறா ' உன்னைச் சொல்லிக் குற்றமில்லை' எனும் கதையில் தெளிவுபடுத்த முனைகிறார். மொத்தத்தில் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒரு பெண்ணின் பங்கு என்ன என்பதை 'மல்லிகை இதயங்கள்' சிறுகதைத் தொகுதி தெளிவுபடுத்த முனைகிறது.

'கதையென்றால் யாருக்குத்தான் பிடிக்காது?' என்று நூலாசிரியர் முன்னுரையில் கேட்கிறார். ஆம் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இல்லை பிடிக்கின்ற வகையில் எழுதினால்தான் பிடிக்கும். இதைச் சகோதரி ஷாறா நன்றாகவே செய்திருக்கிறார். நூலை வாசித்துப் பாருங்கள். கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். இன்ஷா அல்லாஹ்.
(வாசிக்க :- 2012 மே மாத அல்ஹஸனாத் பக்கம் : 42)

16 செப்., 2011

வாழ்த்துக்களோடு சில வார்த்தைகள்.

நாம் படித்து வளர்ந்த எங்கள ஊர் பாடசாலைக்கு மிகப் பெரிய பெருமை சேர்த்த ஒரு குட்டித் தம்பியை பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் மிக மகிழ்ச்சியடைகின்றேன். ஆம், கடந்த 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் ஆகக் கூடிய மதிப்பெண்கள் (195) பெற்று கெக்கிறாவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பால் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கச் செய்த முஹம்மது ஸக்கீ தனது எதிர்கால கல்விப் பயணத்திலும் சாதனைகள் பல புரிய அல்லாஹ்வுத்தஆலா அருள்பாலிப்பானாக!! ஸக்கீயின் இந்த சாதனைக்குப் பின்னால் உழைத்த வகுப்பாசிரியை, அதிபர் மற்றும் பாடசாலையின்; ஆசிரியர் குலாத்தினர் அனைவருக்கும் அல்லாஹூத்தஆலா நிறைவான கூலியை வழங்குவானாக!!


அல்லாஹ்வின் அருள், நாட்டம் இரண்டுக்கும் அடுத்தபடியாக இந்தச் சாதனைக்கு மிகப் பிரதான காரணம் மாணவன் ஸக்கீயின் திறமையும்;, ஆசிரியர்களான ஸக்கீயின் பெற்றோர் அளித்த ஊக்கமும் வழிகாட்டலுமே என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இதன் கருத்து இந்தச் சாதனையில் பாடசாலையின் பங்களிப்பைக் குறைத்துச் சொல்வதல்ல.



என்றாலும், இந்தச் சாதனை புகழப்படும் இந்நேரத்தில் கெக்கிறாவை முஸ்லிம் மஹா வித்தியாலம் பற்றி சில வார்த்தைகளையும் சொல்லியாக வேண்டும். எமது கல்விப் பயணத்திற்கு சரியான அடித்தளத்தை வழங்கிய இப்பாடசாலைக் குறித்துச் சொல்லும் இவ்வார்த்தைகள் நாம் படித்த – எங்கள10ர் பாடசாலை என்ற உரிமையில் என்பதனையும், யாரையும் குறை கூறும் நோக்கத்தில் அல்ல என்பதையும் ஆரம்பத்திலேயே கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.


கெக்கிறாவை முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட முன்னர் பிரதேசத்தின் முஸ்லிம் மாணவர்கள் நகரின் முடிவில் அமையப் பெற்றுள்ள தமிழ் மிசனறிப் பாடசாலையில் அல்லது ஏனைய சிங்களப் பாடசாலைகளிலேயே தமது கல்வியைத் தொடர வேண்டிய நிலையிருந்தது. இந்நிலையை அவதானித்த ஊரின் நலன் விரும்பிகள் 1960களின் பின்னரைப் பகுதியில் கெக்கிறாவை டவுன் பள்ளிவாசல் வளவில் ஓர் ஓலைக் குடிலில் இப்பாடசாலையை ஆரம்பித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.


இப்பாடசாலை தனது வராலாற்றில் பல தடவை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சை, க.பொ.த சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளில் பிரதேச ரீதியில் சாதனைமிக்க பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது தேசிய ரீதியிலும் சாதனைப் பெறுபேற்றைப் பெற்று உயர்ந்து நிற்கின்றது. என்றாலும் ஐந்து தசாப்தங்களைக் கடந்தும் தன்னை ஒரு மத்திய மஹா வித்தியாலயமாக தரம் உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உயர் தரத்தில் கலைத் துறையைத் தாண்டி வர்த்தக துறைப் பாடங்களைக் கற்பிக்கின்ற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ளவோ முயற்சிக்காமை துரதிஷ்டவசமானதே.


இதற்குரிய காரணங்களை ஒழிவு மறைவின்றிச் சொல்லப் போனால் பொல்லாப்பாகிவிடும். உனக்கேன் தேவையில்லாத வேலை என்று குடும்பத்தாரிடம் ஏச்சுக் கேட்க வேண்டி வரும். என்றாலும் படித்த பாடசாலையே என்ற நல்லெண்ணத்தில் சொல்ல வந்ததை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.


இப்பாடசாலை ஐந்து தசாப்தங்களாக நிர்வாக திறமைமிக்க ஒர் அதிபரை பெற்றுக் கொள்ளத் தவறியமை இக்காரணங்களில் முதன்மையானது என்பது எனது கருத்து. இதனால் தற்போது இருக்கும் அதிபரையோ அல்லது இதற்கு முன்பிருந்த அதிபர்களின் சேவைகளையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் தம்மால் முடிந்ததை செய்தார்கள். என்றாலும் அதைவிட அவர்கள் ஒருபடி உழைத்திந்தால் இப்பாடசாலை எப்போதாவது ஒருமுறை என்றில்லாமல் எப்போதும் சாதனைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கும்.


அடுத்தது, முரண்பாடு :- பாடசாலையின் முயற்சிக்காக அதிபர், ஆசியர், பழையமாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் ஒட்டுமொத்தமாய்ச் சேர்ந்து உழைப்பதற்கு இதுவரை முயற்சித்ததாக நான் அறியவில்லை. எப்போதும் பாடசாலை விடயத்தில் இரண்டு அணிகள் இருக்கும்...ஆசிரியர்கள் இரண்டு அணிகளாக பிரிந்திருந்து செயற்படுவது பாடசாலையின் கூட்டு நோக்கத்தை அடைவதற்கு தடை என்பதை அவர்கள் சில நேரம் புரியாமல் இருக்கலாம். ஒரு காலத்தில் இந்தப் பிளவு இஸ்லாமியவாதிகள், நாகரிகவாதிகள் என்றிருந்தது. பிறகு ஊர் ஆசிரியர்கள் ஒரு கூட்டம், வெளியூர் ஆசிரியர்கள் மறு கூட்டம் என்றிருந்தது. இப்போதும் இந்தப் பிளவு இருக்கத்தான் செய்கிறது. இதில் அணிசேராதவர்கள் வந்தோம், படிப்பித்தோம், போனோம் என்றிருப்பவர்கள். ஒட்டுமொத்தமாய் அனைத்து ஆசிரியர்களும் 'இது எமது பாடசாலை' என்று பாடசாலை சுவற்றில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை தங்கள் உள்ளங்களிலும் பதித்துக் கொண்டு பாடசாலையின் குறுகிய, நீண்ட கால அடைவுகளை சரியாக வரையறுத்து ஒன்றுபட்டுச் செயற்படுவார்கள் என்றால் எம் பிரதேச மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு வெளியூர்களுக்குச் சென்று கஷ்டப்படவோ, அல்லது அதற்கு வசதியில்லாதவர்கள் கலைத்துறையோடு தம்மை சுருக்கிக் கொள்ளும் நிலையோ ஏற்படாது. ஆசிரியர்களே!! நீங்கள் எதைச் செய்தாவது – ( உங்கள் பிள்ளைகள் 03 திறமை சித்திகள் பெற்றிருந்தாலும் கூட) அவர்களை மடவளைக்கோ, மருதமுனைக்கோ அனுப்பி படிப்பிக்க வைத்துவிடுவீர்கள். ஆனால் இப்பிரதேசத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கு வசதியில்லாதவர்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இங்கு பாடசாலையின் முன்னேற்றத்திற்காய் முழு மூச்சாக ஈடுபடும் ஆசிரியர்கள் இப்படிச் சொல்வதற்காய் கவலைப்பட வேண்டாம். இது உங்களைக் குறிக்கவில்லை. உங்கள் முயற்சிகளின் முதல் அம்சமாய் பிரிந்து நிற்போரை ஒரு நோக்கத்திற்காய் ஒற்றுமைப்படவைக்க உழையுங்கள். இன்சா அல்லாஹ் அந்த முயற்சிகள் வெற்றி பெறுவது மட்டுமல்ல –நிறைவான கூலியையும் அதற்காக நீங்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வீர்கள்.

அடுத்து, பிரதேச அரசியல்வாதிகளே!! உங்கள் அரசியலில் பாடசாலையின் நலனை பலிக்கடாவாக்கி விடாதீர்கள். அதிபர் நியமணம், ஆசிரியர் இட மாற்றம் என்பவை திறமையினதும், அனுபவத்தினதும் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர அரசியல் அடிப்படையிலல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாக்குப் பெறுவதற்காய் பன்சலைகளுக்கு ஒலி பெருக்கிக் கொடுப்பதையும், பாதைகள் செப்பனிடுவதையும் தாண்டி உங்களுக்கு இந்தப் பாடசாலையின் முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டிய கடமைப்பாடும் இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். ஹொராபொல, மடாடுகம, மரதன்கடவலை, கள்ளஞ்சியாகமை போன்ற கெக்கிறாவையைச் சூழவுள்ள முஸ்லிம் பிரதேச மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பாடசாலையை நாடியே வருகின்றனர்.

எனவே இப்பாடசாலையின் பௌதீக ரீதியான வளப்பற்றாக்குறையைத் தீர்த்து வைப்பது உங்களின் கடமை. உங்களுக்கு முடியுமென்றால் ஒரு கேட்போர் கூடத்தையும், மைதானமொன்றையும் பெற்றுக் கொடுங்கள். எம் பாடசாலை மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளில் மட்டுமல்ல விளையாட்டிலும், கலை அம்சங்களிலும் சாதித்துக் காட்டுவர்கள். குறைந்தது சுற்று மதிலையாவது அமைத்துக் கொடுங்கள். சுற்றுப்புறத் தொல்லைகள் இன்றி நிம்மதியாகப் படிப்பார்கள்.

அடுத்து, மாணவன் ஸக்கீயின் சாதனை புகழப்படும் இந்நேரத்தில் மிக முக்கியமான விடயமொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு பாடசாலையில் அடைவு என்பது நல்ல பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. அது வெறும் சடரீதியான அடைவு. மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக, மார்க்கப்பற்றுள்ளவர்களாக வளர்த்தெடுப்பதும் முஸ்லிம் பாடசாலையின் மிகப் பெரிய பொறுப்பு. ஏனெனில் பண்பாடுகளை போதிக்காத கல்வி 'அறிவுள்ள பிசாசுகளையே உருவாக்கும்' என்பது ஒரு அறிஞர் சொன்ன கருத்து. இந்தப் பாடசாலை பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்திருக்கின்ற பாடசாலை. பண்பாட்டைச் சொல்லிக் கொடுக்கவும், மார்க்கப் பிண்ணனியோடு மாணவர்கள்; வளரவும் இச்சந்தர்ப்பத்தை பாடசாலை நிர்வாகம் - பள்ளி நிர்வாகத்தோடு சேர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்புக்கும் - மார்க்கத்திற்கும் இடையில் எந்தப் பிரிகோடும் இல்லை. சில முஸ்லிம் ஊர்களில் பாடசாலைகளுக்குள்ளேயே இப்போது சின்னதாய் பள்ளிவாசல்கள் அமைக்கப் பெற்று அவர்கள் தொழுகை நேரங்களில் தொழுது கொள்வதற்கும், மற்றும் மார்க்க ரீதியான விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் ஒழுக்கம் தவறும் பட்சத்தில் அவர்களை வெறுமனே திட்டித் தீர்ப்பதோடு, அல்லது பிரம்பு முறிய அடிப்பதோடு, மிஞ்சிப் போனால் பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதோடு நின்று விடாமல் அவர்களின் மார்க்க, பண்பாடு விடயங்களில் உரிய வழிகாட்டல்களை பாடசாலை வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கடைசியாக...இப்பாடசாலையில் படித்த அனைவரினதும் உள்ளத்தில் 'இது எனது பாடசாலை' என்ற உணர்வு உள்ளத்தின் ஆழத்தில் அழியாமல் பதிந்திருக்கும். அத்தகைய உணர்வினாலேயே இவ்வரிகள் நான் எழுதினேன். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எம் பாடசாலையின் முயற்சிக்காய் பங்களிப்புச் செய்ய முன்வாருங்கள்.

18 செப்., 2010

போர் முடிவடைந்துவிட்டது...ஆனால் என்னால் இனி வாழ முடியுமா?



அமேரிக்க-ஆப்கான் போர் குறித்த BROTHERS எனும் ஆங்கிலத் திரைப்படமொன்றை அண்மையில் பார்த்தேன். TOMMY, SAM எனும் இரு சகோதரர்களின் கதையை மையமாக்கொண்டது இத்திரைப்படம். கதையின் ஆரம்பத்தில் ஏற்கனவே செய்த ஒரு குற்றத்திற்காக TOMMY சிறையில் இருந்து விடுதலையாகின்றான். அவனது சகோதரன் SAM ஓர் அமேரிக்கப் படை வீரன். தன் இளைய மகனையிட்டு தந்தை பெருமைப்படுகின்றார். மூத்த மகன் TOMMY தன் மானத்தை வாங்குவதற்கென்றே பிறந்தவன் என்று கூறி அவனோடு அடிக்கடி சண்டையிடுகின்றார்.


SAM ஆப்கான் சென்று திரும்பும் நேரம். நாளை மனைவி மற்றும் தன் இரு செல்வங்களான மகள்மாரைக் காணப்போகும் சந்தோசத்தில் போர் நடைபெற்ற இடத்திலிருந்து அமேரிக்கப் படைத் தளத்திற்கு திரும்பும் வழியில் ஆப்கான் போராளிகள் ஹெலிகொப்டரைத் தாக்கிவிடுகின்றனர்.




கணவன் திரும்பும் சந்தோசத்திலிருந்த மனைவிக்கு அவனது மரணச் செய்திதான் வந்து சேர்கின்றது.
பிறகு TOMMY தன் சகோதரனின் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்குகின்றான். தன் சகோதரனின் மகள்மாருக்கு தந்தையில்லாத குறையை நிவர்த்திக்க முயற்சிக்கின்றான்.

என்றாலும் SAM இறக்கவில்லை. அந்த ஹெலிகொப்டர் தாக்குதலில் அவனும் இன்னொரு வீரனும் தப்பிக்க அவர்களை ஆப்கான் போராளிகள் கைது செய்கின்றனர். பிறகு இருவரையும் ஆப்கான் போராளிகள் துன்புறுத்துவதாகக் காட்டப்படுகின்றது. இங்கு அவர்களை துன்புறுத்தும் ஆப்கான் போராளிகளின் செயல், ஈராக்கில் அமேரிக்கப் படை வீரர்கள் செய்த அட்டூழியங்களில் ஒரு வீதமாவது இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.

கடைசியில் ஆப்கான் போராளிகள் SAM க் கொண்டு சக அமேரிக்க வீரனை கொன்றுவிடுகின்றனர். அமேரிக்க போர் ரகசியங்களைக் கூறா விட்டால் உனக்கும் இதே கதிதான் என்று கூறி அவனைத் துன்புறுத்தும் கட்டத்தில் அமேரிக்கப் படையினர் வந்து காப்பாற்றிவிடுகின்றனர். SAM அமேரிக்கா திரும்புகின்றான். மனைவி, குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர்.

தன் மனைவி, பிள்ளைகள் தன் சகோதரனுடன் முன்பை விட நெருக்கமாக இருப்பதை SAM ஆல் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் மனைவி மீது சந்தேகப்படுகின்றான். அவனால் சந்தேசமாக இருக்க முடியவில்லை. மனைவியோடு தினமும் சண்டை போடத் தொடங்குகின்றான். பிள்ளைகளும் தந்தையை வெறுக்கத் தொடங்குகின்றனர்.




மனைவியோடு சண்டையிட்ட ஒரு நாளில் பொலிசார் அவனது வீட்டைச் சுற்றி வளைத்து கைது செய்கின்றனர். ஆப்கானில் சக அமேரிக்கப் படை வீரனைக் கொன்ற குற்றத்திற்காக SAM சிறையிலடைக்கப்படுகின்றான்.

சில வருடங்களின் பின்...

SAM சிறையில் இருந்து விடுதலையாகின்றான். அப்போது அமேரிக்க-ஆப்கான் போர் முடிவடைந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வரும் SAM சொல்லும் பின்வரும் வசனத்தோடு திரைப்படம் முடிவடைகின்றது.

I HAVE SEEN END OF THE WAR - THE QUESTION IS CAN I LIVE AGAIN??



இலங்கைப் போரில் தெற்கு சிங்கள சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் கலாசார மற்றும் குடும்ப ரீதியான சீரழிவுகளை காட்சிப்படுத்தும் வகையில் இப்படியான திரைப்படமொன்று சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது ஞாபகம். ''அலு யட கினி' என்று நினைக்கிறேன்.

உண்மையில் போரின் வலியென்பது வெற்றி வெற்றவன் - தோல்வியடைந்தவன் என்ற வேறுபாடின்றி அனைவருக்குமானது என்பதில் சந்தேகமில்லை. போரினால் சந்தோசப்படுபவர்கள் ஏ.சிக் குளிரில் இருந்து கொண்டு அறிக்கை விடும் ஆட்சியாளர்கள் மட்டுமே. மற்றைய அனைவருக்கும் போர் என்பது வலியே.

4 மே, 2010

அன்புள்ள என் வருங்கால மனைவிக்கு,




அன்புள்ள என் வருங்கால மனைவிக்கு,


உன்னை மணக்கோலத்தில் காணும் நாள் எப்போது என்பது எனக்கு சரியாகத் தெரியாது. அது மிக விரைவிலோ அல்லது கொஞ்சம் தாமதமாகியோ நடக்கலாம். அந்த நாளைப் பற்றிய உன் கனவுகள் எப்படி இருக்கும் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாள் என்னைப் போலவே உனக்கும் மிக சந்தோசத்துக்குரிய நாளாக இருக்கும் என்பது சந்தேகமில்லை. அந்த சந்தோசமான நாளில் நான் சொல்வதற்கு ஆசைப்படுகின்ற இந்த விடயங்களை சொல்ல மறந்துவிடுவேனோ என்ற பயத்தில் முன் கூட்டியே இவற்றை சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.


என் மனைவியே உலகத்தில் எல்லோரையும் விட சிறந்தவள் என்ற நினைப்பு எல்லா கணவன்மாருக்கும் இருக்கிறது. எனக்கும் அப்படிதான். நீ இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் விட அன்பானவள்,அறிவும் விவேகமும் கொண்டவள், பண்பானவள், அழகானவள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.


எமக்கிடையே ஏற்படப்போகும் இந்த உறவு எப்படியானது என்பதை நீ அறிந்திருப்பாய். இந்த உலகத்தில் உள்ள எல்லா உறவுகளை விடவும் கணவன்-மனைவி என்ற உறவு வித்தியாசமானது. பரஸ்பர புரிந்துணர்வில்தான் இந்த உறவின் சந்தோசமே தங்கியிருக்கிறது. ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்மாக்களின் உலகில்தான் எமக்கிடையில் ஏற்படப்போகும் இந்த உறவு தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். மரணத்திற்கு பின்னரும் இந்த உறவு தொடரும் என்ற உணர்வோடு நாம் வாழ வேண்டும்.

உன்னைப் பற்றி வந்தடைந்த செய்திகளில் உன் பண்பைப் பற்றி அதிகமாய் தெரிந்து கொண்டேன். நீ படித்தவளும் கூட. ஒரு சராசரி வாழ்க்கை வாழ்வதை விட பெரும் இலட்சியங்களை சுமந்தவர்களாய் நாம் வாழ வேண்டும். ஒரு சராசரிப் பெண்ணின் இலட்சியங்கள் நல்ல வீடு, நான்குக்கு மேற்படாமல் பிள்ளைகள், கொழுத்த சம்பளம், சொந்த வாகனத்தில் விடுமுறையில் உல்லாசப் பயணம்... இதைத் தாண்டியதாக அவளது சிந்தனை இருக்காது. நீ சராசரிப் பெண்ணாய் இருக்க மாட்டாய் என்று நம்புகின்றேன்.

வரப்போகும் பெண்ணைப் பற்றி எனக்குள்ள எதிர்பார்ப்புக்கள் இருப்பது போலவே என் வீட்டாருக்கு வரப் போகும் மருமகளைப் பற்றிய அச்சமும் இருக்கிறது. உன்னைப் பற்றி என் வீட்டில் சொன்ன போது படித்த பெண் வீட்டுக்கேற்ற மருமகளாய் இருப்பாளா? என்றுதான் முதலில் கேட்டார்கள். மருமகள் வந்துவிட்டால் பிறந்த வீட்டுச் சொந்தங்களோடு ஒட்டவிடமாட்டாள் என்ற பயம்தான் எல்லா தாய்மாரையும் மருமகளை வில்லியாக பார்க்க வைக்கிறது. நான் - நீ என்பது நாமாகிவிட்ட பின்னர் உனது சொந்தங்கள், எனது சொந்தங்கள் என்பவை எமது சொந்தங்கள் என்றாகிவிட வேண்டும். தனிக் குடித்தனம், கூட்டுக் குடித்தனம் இது பற்றி பிறகு யோசிக்கலாம். ஆனால் இந்த யோசனை குடும்பத்திற்குள் ஏற்படும் பிரிவின் விளைவாக வந்துவிடக் கூடாது.

நீ படித்தவள். எந்த இலட்சியத்தோடு படிப்பைத் தொடர்ந்தாய் என்பது எனக்குச் சரியாகத் தெரியாது. படிப்பின் முடிவில் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் அதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டல்ல மூன்று முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வது ஆணின் கடமை. வீட்டின் அலுவல்களை கவனிப்பது பெண்ணின் முதல் கடமை. நாம் கடமைகளுக்கு முன்னுரிமைக் கொடுப்போம்.
இதன் கருத்து உன்னை வீட்டோடு முடக்கிக் கொள்வதல்ல. உனக்குள் இருக்கும் திறமைகளை நீ வெளிக்காட்ட நிறையவே களங்கள் இருக்கின்றன. தொழில் செய்துதான் உன் திறமைகளும் சமூகத்திற்கான சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தங்களும் இல்லை.

சரி, என்னிடம் நீ எதை எதிர்பார்க்கிறாய்?? நீ வாய் திறந்த சொல்ல மாட்டாய். ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கையும் அன்பும் பாதுகாப்பும்தான் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவாய் உனக்குக் கிடைக்கச் செய்வேன்.


இப்படிக்கு
உன் வருங்கால கணவன்.

6 ஜன., 2010

வெற்றி - தோல்விக்குரிய காரணிகள்

1) வெற்றியாளன் தீர்வைப் பற்றி யோசிப்பான் - தோல்வியாளனோ பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பான்.
2) வெற்றியாளன் பிறருக்கும் உதவிக் கொண்டிருப்பான் - தோல்வியாளன் பிறரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பான்.
3) வெற்றியாளன் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வைக் கொண்டிருப்பான்- தோல்வியாளனோ ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சினையைக் காண்பான்.
4) வெற்றியாளன் நிறைவேறக்கூடிய கனவுகளைக் காண்பான் - தோல்வியாளனோ பிரமையில் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்.
5) வெற்றியாளன் பிறர் தன்னோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றானோ அதே போல் அவர்களோடு நடந்து கொள்வான் - தோல்வியாளனோ பிறர் தன்னை ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்து அவர்களை ஏமாற்றுவதற்கு முந்திக் கொள்வான்.
6) வெற்றியாளனது தனது வேலையில் எதிர்ப்பார்ப்புடன் செயற்படுவான் - தோல்வியாளனோ தன் வேலையை சலிப்புடன் முன்னெடுப்பான்.
7) வெற்றியாளர்கள் நிகழ்வுகளை தோற்றுவிப்பார்கள் - தோல்வியாளர்கள் நிகழ்வுகளால் இயங்கிக் கொண்டிருப்பர்.
8) வெற்றியாளனின் கூற்று : '' தீர்வு கடினமானது - என்றாலும் முடியுமானது''
தோல்வியாளின் கூற்று : '' தீர்வு முடியுமானது - என்றாலும் கடினமானது'' என்பதாக இருக்கும் -



(அம்ரு காலிதின் கட்டுரை ஒன்றில் வாசித்தவை)