'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி – பதில் தருமா ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற தலைப்பில் SLTJ அமைப்பினர் தமது 'அழைப்பு' ஏப்ரல் மாத இதழில் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அசத்தியங்களை விளக்கி 'நுனிப்புல் மேயும் ஸலபித்துவ ஆய்வுகள் - மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறாரா?' எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். இக்கட்டுரை சத்தியத்தை நேசிக்கின்ற , அதை தேடுவதில் ஆர்வமுள்ள, அதை ஏற்றுக் கொள்கின்ற நல்ல உள்ளங்களுக்கு தெளிவை ஏற்படுத்தியிருந்தால் - அல்ஹம்துலில்லாஹ் - புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.
என்றாலும் சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ரசிகர் மன்றத்தினைச் சேர்ந்த பலர் 'மறுப்பெழுதி மானத்தை வாங்குகிறார்கள்...ஏதாவது செய்யுங்கள்' என்று அழாத குறையாக விண்ணப்பித்த வேண்டுகோள்களுக்கிணங்க 'நான் சில நாட்களாய் ஊரில் இல்லை..விரைவில் பதில் தருகின்றேன்' என்று அவர்களை ஆற்றுப்படுத்திவிட்டு ஒரு வார காலமாய் சிந்தித்து சிந்தித்து கடைசியில் 'வரிக்கு வரி பதில்' என்ற பெயரில் ஏற்கனவே சுட்டுப் புளித்துப் போன அப்பத்தை திருப்பிப் போட்டு 'புதுசா சுட்டப் பலகாரம்' என்று ஒரு கட்டுரையை எழுதி தமது ரசிகர் மன்றத்தினரை திருப்திப்படுத்த முனைந்திருக்கிறார் சகோ: ரஸ்மின். (அல்லாஹூத்தஆலா அவரின் இல்மையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தையும் விரிவுபடுத்துவானாக)
சகோ: ரஸ்மின் எழுதிய கட்டுரை இவர்கள் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் சுபாவம் இவர்களிடம் துளியும் இல்லை என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் நாம் ஆதாரத்தைக் காட்டிய பின்னரும் 'வரிக்கு வரி பதில் தர வேண்டியவர்கள், மலுப்பியிருக்கிறார்கள்' என்று சொல்லி திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை – அவன் தோன்றி விட்டானா? என்ற விடயத்தைதான் அவர் மறுக்கிறார் என்பதை நாம் எமது முதற்கட்டுரையில் தெளிவாக விளக்கியிருந்தோம். சகோதரர்கள் இதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு இது பற்றி சமரசம் மார்ச், ஏப்ரல் மாத இதழ்களில் வெளியான கட்டுரையின் பிரதிகளை இங்கு இணைத்துள்ளோம். இக்கட்டுரையின் அடுத்த பந்தியை வாசிக்க முன்னர் இவ்விரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்குமாறு வினயமாக வேண்டுகின்றோம்.




இவ்விரு கட்டுரைகளையும் முழுமையாக வாசித்திருந்தால் இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் எவ்வளவு அசத்தியமானவை என்பதையும், நுனிப் புல் மேய்ந்தவர்கள் யார்? பனிப் புல் நக்கியவர்கள் யார்? என்பதையும் நீங்கள் சரியாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.
முதல் கட்டுரையில் மௌலானா மௌதூதி கூறிய 'தஜ்ஜால் பற்றிய செய்திக்கு ஷரீஅத்தில் அந்தஸ்து எதுவுமில்லை. அவனைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்களிடையே இவ்வாரான செய்திகள் பிரபலமானதற்கான பொருப்பு இஸ்லாம் மீது இல்லை. அதில் ஏதாவது ஒன்று தவறு என்று நிரூபனமானாலும் அதனால் இஸ்லாத்திற்கு எந்த நஷ்டமும் வரப்போவதில்லை' என்ற கருத்தானது மௌலானாவின் தர்ஜூமானுல் குர்ஆன் சஞ்சிகையில் சகோதர் ஒருவர் கேட்ட நீண்ட கேள்வித் தொடரில் 'தஜ்ஜால் எங்கேயோ இருக்கிறான் என்பதுதான் பிரபலமான கருத்து. அந்த இடம் எது? இன்று உலகில் மூலை முடுக்கெல்லாம் மனிதன் அலசிப் பார்த்து உள்ளான். இருந்தும் தஜ்ஜால் பற்றிய விவரம் ஏன் கிடைக்கவில்லை? என்ற கேள்விக்கான பதிலாகவே அமைந்தது என்பது கட்டுரையை வாசித்த உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனால் இந்த பதில் மௌலானா தஜ்ஜாலின் வருகையை முழுமையாக மறுக்கிறார் என்ற கருத்தை ஏற்படுத்தியது. இதனை வெளிப்படுத்தி இன்னுமொருவர் அடுத்த தர்ஜூமானுல் குர்ஆன் கேள்வி – பதில் பகுதியில் பின்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தார்.
'தஜ்ஜால் பற்றிய செய்திகளெல்லாம் கதைகள், அதற்கு ஷரீஅத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. என பதில் அளித்திருந்தீர்கள். ஆனால் எனக்குத் தெரிந்த வகையில் குறைந்த பட்சம் முப்பது அறிவிப்புக்களில் தஜ்ஜால் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன...' என்று வினவியிருந்தார்.
இதற்கு மௌலானா மௌதூதி அளித்த பதிலானது மிகத் தெளிவாக அவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை என்பதைக் காட்டுகின்றது.
' தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதைதான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் 'மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்.
தஜ்ஜால் பற்றிக் கூறப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் அனைத்து நபிமொழிகளையும் ஒட்டுமொத்தமாக பார்வையிடும் போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெரும் பொய்யன் தோன்ற இருக்கிறான், அவனின் குணங்கள் இவ்வாறெல்லாம் இருக்கும், அவன் சில தனித் தன்மைகளைப் பெற்றிருப்பான் என்கின்ற இல்ம் கிடைத்திருக்கின்றது என்பது தெளிவு. எனினும் அவன் எப்போது தோன்றுவான், எங்கே தோன்றுவான், நபியின் காலத்திலேயே பிறந்துவிட்டானா? அல்லது நபியின் காலத்திற்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றுவானா? போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை'
மௌலானாவின் இக் கூற்று வாசிப்பறிவுள்ள சிறு பிள்ளைக் கூட அவர் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை, அவன் தோன்றிவிட்டானா என்ற விடயத்திலேயே சந்தேகப்படுகின்றார் என்பதை புரிந்து கொள்ளும். இதற்கு மேலும் ஆதாரம் காட்டும் வகையில் அவரின் தப்ஸீரில் சூறதுல் அஹ்சாப் 40 வசனத்திற்கான நீண்ட விளக்க உரையின் பின்னர் அவர் குறிப்பிட்டிருந்த பின்வரும் பந்தியையும் நாம் முதற் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
' நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும், அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும், அது சமயம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும், அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும், அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்' (தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு – பக்கம் : 78)
ஆனால் விதண்டாவாதிகள் இதற்கு பின்னரும் 'இல்லை..இல்லை...அவர் தஜ்ஜாலின் வருகையை முற்றாக மறுக்கிறார்..அது பற்றிய எல்லா ஹதீஸ்களையும் மறுக்கிறார்' என்று மல்லுக்கட்ட வந்தால் நாமென்ன செய்வது?? 'சரி நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று காலென்றே வைத்துக் கொள்ளுங்கள் - மஅஸ்ஸலாம்' என்று சொல்லிச் செல்வதுதான் குர்ஆன் சொல்லும் வழிமுறை.
தஜ்ஜால் தோன்றிவிட்டானா??
இது அல்லாஹூக்கு மட்டுமே தெரிந்த விடயம். தஜ்ஜாலின் குழப்பம், அவனின் பண்புகள், அவன் தோன்றவிருக்கும் இடம் என்பவை நபியவர்களுக்கு வஹியின் அறிவைக் கொண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் தோன்றிவிட்டானா என்பது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு ஏலவே வஹி மூலம் தஜ்ஜால் பற்றி அறிவிக்கப்பட்ட அடையாளங்கள் வெளிப்பட்ட சில நபர்களை நபியவர்கள் தஜ்ஜாலாக இருப்பானோ என்று சந்தேகித்தார்கள். அந்த வகையிலேயே இப்னு ஸியாத் (இப்னு ஸாஇத், இப்னு ஸய்யாத் என்றும் சில ஹதீஸ்களில் வந்துள்ளன) எனும் சிறுவன் விடயத்திலும் நபியவர்கள் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்கள். எனவேதான் ஸஹாபாக்களுக்கு நபியவர்களின் மரணத்தின் பின்பும் இப்னு சியாத் மீது சந்தேகம் இருந்தது. இமாம் முஸ்லிம் இது தொடர்பான ஹதீஸ்களை கிதாபுல் பிதன் அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸ்கள் இப்னு ஸியாதை நபியவர்கள் தஜ்ஜால் என்று நினைத்ததையும், பிறகு அவர்களின் எண்ணம் சரியானதாக இருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
அந்த ஹதீஸ்களில் சிலவற்றை இங்கு விளக்கத்திற்காக குறிப்பிடுகின்றோம். (எல்லா ஹதீஸ்களையும் குறிப்பிடுவதை விரிவஞ்சி தவிர்ந்து கொள்கிறோம்)
1) அப்துல்லாஹ் ரழியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள் : நாம் நபியவர்களுடன் சில சிறுவர்களை கடந்து சென்றோம். எம்மைக் கண்ட சிறுவர்கள் கலைந்து செல்ல இப்னு ஸியாத் மாத்திரம் தானிருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான். அவனது செயல் நபியவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவனிடம் சென்ற நபியவர்கள் 'நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்றுபகர்கின்றாயா?' என்று வினவ, அதற்கவன் 'இல்லை. மாறாக நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சான்றுபகரும்' என்று பதிலளித்தான். அப்போது உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் 'இறை தூதரே விட்டுவிடுங்கள், அவனை நான் கொன்றுவிடுகின்றேன்' என்றார்கள். அதற்கு நபியவர்கள் 'நீர் நினைக்கின்ற ஆளாக அவனிருந்தால் உம்மால் அவனைக் கொல்ல முடியாது' (ஹதீஸ் இலக்கம் : 7528)
2) ஸஈத் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இப்னு ஸியாதை நபியவர்கள் மதீனாவின் வீதியொன்றில் சந்தித்தார்கள். அவர்களோடு உமர், அபூபக்ர் ரழியல்லாஹூ அன்ஹூம் ஆகியோரும் இருந்தனர். அப்போது நபிகளார் அவனிடம் 'நான் இறைதூதர் என்று நீ சான்றுபகர்கின்றாயா? என்று வினவ, 'நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீர் சான்றுபகர்கின்றீரா?' என்று பதிலளித்தான். அதற்கு நபியவர்கள் 'நான் அல்லாஹ்வையும், அவன் மலக்குகளையும், அவனது வேதங்களையும் ஈமான் கொண்டிருக்கிறேன். சரி இப்போது நீ எதனைக் காண்கிறாய்' என்று வினவினார்கள். அதற்கு அவன் 'நீரில் மேலிருக்கும் ஒர் அரியாசணத்தைக் காண்கிறேன்' என்றான். 'கடல் நீரின் மீதிருக்கும் இப்லீஸின் அரியாசணத்தைதான் நீ காண்கிறாய்..வேறு எதனைக் காண்கிறாய்' என்று நபிகளார் கூறியதற்கு 'இரண்டு உண்மையாளர்களையும், ஒரு பொய்யனையும் அல்லது ஓர் உண்மையாளனையும் இரண்டு பொய்யர்களையும் காண்கிறேன்' என்று அவன் பதிலளித்தான். 'அவனுக்கு குழப்பமேற்பட்டுவிட்டது..அவனை விட்டுவிடுங்கள்' என்று நபிகளார் கூறிச் சென்றார்கள்.(ஹதீஸ் இலக்கம் : 7530)
3) முஹம்மத் பின் முன்திர் அறிவிக்கின்றார்: ஜாபிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் 'இப்னு ஸாஇத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுபவராக இருந்தார். அவரிடம் நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நீர் சொல்கிறீரா? என்று வினவ, 'ஆம். நபியவர்களின் முன்னிலையில் உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அவ்வாறு சத்தியம் செய்து கூறுபவராக இருந்தார் – அதனை நபியவர்கள் மறுக்கவில்லை' என்று பதிலளித்தார். (ஹதீஸ் இலக்கம் : 7537)
மேற் கூறிய ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் ஏற்கனவே தனக்கு அறிவிக்கப்பட்ட வஹியின் அடிப்படையில் , தஜ்ஜாலின் பண்புகள் வெளிப்பட்ட இப்னு ஸியாதை தஜ்ஜாலாக இருக்கலாம் என்று அனுமானித்தார்கள் என்பதையும், அந்த சந்தேகம் ஸஹாபாக்களிடம் இருந்தது என்பதையும், அது பற்றி தனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படாமையால் அவர்களின் சந்தேகம் பிழையானது என்பதை உணர்த்தாமலும் நபியவர்கள் இருந்தார்கள் என்பதையும், இச்சந்தேகம் நபிகளாரின் மரணத்தின் பின்பும் தொடர்ந்தது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
ஆனால், நபிகளார் அனுமானித்தது போன்றோ, அதன் அடிப்படையில் சஹாபாக்கள் சந்தேகம் கொண்டது போலவோ இப்னு ஸியாதின் விடயம் அமையவில்லை. இதனை இமாம் முஸ்லிம் அறிவிக்கும் அதே ஹதீஸ்களின் தொடரில் பதிவு செய்துள்ள பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.
ஸஈத் அல் குத்ரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் இப்னு ஸாஇத்துடன் மக்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவன் 'நான் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் நான்தான் தஜ்ஜால் என்று நினைக்கிறார்கள். 'தஜ்ஜால_க்க குழந்தைகள் இருக்காது' என்று நபிகளார் சொன்னதை நீர் கேள்விப்பட்டதில்லையா?' என்று வினவினான். அதற்கு நான் 'ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன்' என்றேன். பிறகு 'தஜ்ஜால் மக்கா, மதீனா நகரங்களுக்கு நுழைய முடியாது என்று நபியவர்கள் சொன்னதை நீர் கேள்விப்பட்டதில்லையா?' என்று வினவினான். அதற்கு நான் 'ஆம் ..கேட்டிருக்கிறேன்' என்று சொன்னேன். அதற்கு அவன் ' நான் மதீனாவில் பிறந்தவன். இதோ நான் மக்கா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்' என்றான். பிறகு கடைசியாக என்னிடம் அவன் இப்படிக் கூறினான். 'அறிந்து கொள்! அவனது பிறப்பைப் பற்றியும், அவனது இடத்தைப் பற்றியும், அவனது பெற்றோர் பற்றியும், அவன் எங்குள்ளான் என்பதையும் நான் அறிவேன்' என்றான். பின்னர் அது பற்றி தனக்கு குழப்பமேற்பட்டுவிட்டது என்றும் கூறினான்.
இந்த இப்னு ஸியாத் சூனியக்காரனாக இருந்தான் அல்லது குறிசொல்பவனாக இருந்தான், பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உமையாக்களின் ஆட்சியில் நடைபெற்ற ஒரு போரில் கலந்து கொண்டு உயிரிழந்தான் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.
இந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே மௌலானா மௌதூதி இப்னு ஸியாத் விடயத்தில் நபிகளார் தெரிவித்த கருத்து அனுமானம் என்றும் அந்த அனுமானம் சரியானதாக அமையவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். இதே அடிப்படையில்தான் தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தமது கடற்பிரயாணத்தில் கண்ட உருவம் பற்றிய விடயத்திலும் அது தஜ்ஜாலாக இருக்க முடியுமோ என்று நபிகளார் சந்தேகித்தார்கள். அதுதான் தஜ்ஜால் என்று அவர்கள் உறுதியாகக் குறிப்பிடவில்லை. இதனை குறித்த ஹதீஸின் போக்கிலிருந்தும், நபிகளார் இந்த செய்தியை அறிவித்த பின்னரும் இப்னு ஸியாத் மீது சஹாபாக்களுக்கிருந்த சந்தேகமும் உறுதிப்படுத்துகின்றன.
தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் குறிப்பிட்ட நிகழ்வு 'தாம் ஏற்கனவே கூறிய தஜ்ஜால் பற்றிய விடயத்தோடு உடன்படுவதால், அதனால் கவரப்பட்டே தாம் இச்செய்தியை அறிவிப்பதாக நபிகளார் குறிப்பிட்டது அந்த ஹதீஸில் நேரடியாகவே வந்திருக்கிறது.
« فَإِنَّهُ أَعْجَبَنِى حَدِيثُ تَمِيمٍ أَنَّهُ وَافَقَ الَّذِى كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْهُ وَعَنِ الْمَدِينَةِ وَمَكَّةَ أَلاَ إِنَّهُ فِى بَحْرِ الشَّامِ أَوْ بَحْرِ الْيَمَنِ لاَ بَلْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ ما هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ »
இதுதான் இமாம் முஸ்லிம் தமீம் அத்தாரீ ரழியல்லாஹூ அன்ஹூ விடயத்தில் அறிவிக்கும் ஹதீஸின் இறுதிப் பகுதி. (ஹதீஸ் இலக்கம் : 7573) இதன் கருத்தாவது :
'நான் உங்களுக்கு தஜ்ஜால், மதீனா, மக்கா பற்றி அறிவித்த விடயங்களோடு உடன்படும் வகையில் தமீம் சொன்ன செய்தி என்னைக் கவர்ந்தது. அறிந்து கொள்ளுங்கள் !! அவன் சிரியக் கடலில் இல்லை யமன் கடலில் இருக்கின்றான். இல்லை..அவன் கிழக்குப் புறத்திலிருந்து வருவான்..கிழக்குப் புறமிருந்து வருவான்...கிழக்குப் புறமிருந்து வருவான்'
தமீம் அத்தாரீ சொன்ன உருவம்தான் தஜ்ஜால் என்பதை நபிகளார் தெளிவாக வஹியின் அடிப்படையில் அறிந்திருந்தால் - அதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். இங்கு மூன்று இடங்களைக் குறிப்பிட்டு – அதிலும் கிழக்குப் பகுதியை அழுத்தம் கொடுத்து நபிகளார் தஜ்ஜால் தோன்றப் போகும் இடத்தை நபிகளார் அறிவித்தது தமீம் அத்தாரீ கண்ட உருவம்தான் தஜ்ஜால் என்பதை நபிகளார் உறுதியாகக் குறிப்பிடவில்லை என்பதைக் காட்டுகின்றது.
இத்தகைய விளக்கத்தின் அடிப்படையிலேயே மௌலானா மௌதூதி தஜ்ஜாலின் தோன்றிவிட்டான் என்ற செய்திக்கு ஷரீஅத்தில் எந்த அந்தஸ்த்தும் இல்லை என்றும் அவை நபிகளாரின் அனுமானமே தவிர வஹியல்ல என்றும் கூறினார்கள். இதனால் நபிகளாரின் நுபுத்துவத்தின் மீதோ, அவர்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் மீதோ துளியும் களங்கம் ஏற்பட்டுவிடாது என்பதையும் அக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.
எனவே தஜ்ஜாலின் வருகையையோ, அவன் ஏற்படுத்தப் போகும் பித்னாவையோ மௌலானா மௌதூதி மறுக்கவில்லை என்பதையும், தஜ்ஜால் தோன்றி விட்டானா என்ற விடயத்திலேயே அவர் சந்தேகப்படுகின்றார் என்பதையும், மௌலானா மௌதூதி மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுக்கள் காழ்ப்புணர்வினதும், நுனிப் புல் மேயும் ஆய்வாளர்களின் வெற்று விமர்சனங்களுமே என்பதை சுயமாக சிந்திப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.
இறுதியாக...
வரிக்கு வரி பதில் என்ற பெயரில் எதையோ எழுதி தமது முரீதுகளை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகளை இனியாவது கைவிடுங்கள். இத்தகைய ஒரு பதிலை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவேதான் 'ஏன் இதற்கு முன்னர் சொன்னவைகளுக்கு மௌனமாக இருந்து விட்டு இதற்கு மட்டும் பதில்' என்று கேட்டிருக்கிறார்கள். இது இயக்க விசுவாசத்தினாலோ மௌலானா மீது கொண்ட பக்தியினாலோ அல்ல. மௌலானாவின் தப்ஸீரை ஆய்வு செய்பவன் என்ற வகையிலும், இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஒரு யுக புருஷர் என்ற வகையிலும் சிலரின் தவளை முழக்கங்களால் அவர் பற்றிய நல்லெண்ணம் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே எழுதப்பட்டது. இத்தகைய நல்லெண்ணம் உங்கள் பார்வையில் பக்தி என்று படலாம். ஆனால் அது அல்-குர்ஆன் சொல்லும் நேசம் என்பதுதான் நாம் விளங்கிக் கொண்டது.
وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ
யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமீன்களையும் நேசத்துக்குரியவர்களாக ஆக்கிக் கொள்கின்றனரோ, நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியனர்தான் வெற்றி பெறுவர்'
(அல்- மாஇதா : 56) –
ஈமான் கொண்டு, அதற்காகாவே வாழ்வை அர்ப்பணித்த ஒரு மனிதர் மீது நாம் கொண்டிருக்கின்ற நேசம் - பக்தியோ, கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதோ என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
அடுத்து...உங்கள் ஏனைய கேள்விகளுக்கு எங்களிடம் மறுப்புக்கள் இல்லாமலில்லை. ஆனால் உங்களுக்கு பதில் சொல்லித்தான் நாங்கள் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. எங்களை விசாரிப்பதற்கும், தீர்ப்பு சொல்வதற்கும் அல்லாஹ் போதுமானவன். மேடைப் போட்டு விவாதிக்க அழைத்தும் தயக்கம் காட்டுவதேன்? அசத்தியத்தில் இருப்பதனால்தானே? என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். மேடை போட்டு விவாதிப்பதை தஃவா அணுகுமுறையாகவோ, நபிகளாரின் சுன்னாவாகவோ நாம் கருதவில்லை. நீங்கள் மேடை போட்டு நடத்திய விவாதங்களின் பயன்கள் என்ன என்பதை முழுச் சமூகமும் நன்கறியும். காபிர்களோடு ஆயுதம் தூக்கிப் போராட அனுமதித்த அல்லாஹூத்தஆலா அவர்களை நாவினால் நோகடிப்பதை நபிகளாருக்கோ, ஸஹாபாக்களுக்கோ அனுமதிக்கவில்லை. 'அழகிய முறையில் வாதிடுங்கள்' என்பதுதான் அல்லாஹூத்தஆலா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த உபதேசம். உங்கள் வாதட்ட முறைமை எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும்.
அடுத்து...உங்கள் அணியில் அரைகுறையாகப் படித்த பல பேர் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடயம். ஆனால் கட்டுரையாளர் தன்னை M.I.Sc என்று அடையாளப்படுத்திக் கொள்பவராக இருந்தும் ஆய்வு முறைமை, ஆய்வு ஒழுக்கம் பற்றி தெரியாமல் இருப்பது கவலையளிக்கின்றது. காரணம் மௌலானாவின் பந்தியொன்றை விளக்க நான் அடைப்புக் குறியிட்டு சில வசனங்களை சேர்ததை - இது விளக்கமளிக்கும் ஒரு முறை என்பதை தெரியாமல் 'மௌதூதியைக் காப்பாற்றும்' முயற்சி என்று சொல்லியிருப்பதுதான்.
இந்த பதிலைப் பார்த்த பின்பும் 'வரிக்கு வரி' பதில் கேட்டோம் - மலுப்புகிறார்கள்' என்று சொன்னால் உங்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் சுயமாக சிந்திப்பவர்கள் உண்மையைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்பதையும், ஆயிரம் தடவை 'விஷம்...விஷம்' என்று மந்திரித்தாலும் தூய பால் பால்தான் என்பதையும் அது விஷமாகி விடாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதில் உங்களை நோகடித்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். மனந் திறந்த கலந்துரையாடலுக்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். அல்லாஹ் உங்களினதும் எங்களினதும் அமல்களை ஏற்று அங்கீகரிப்பானாக.



