-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஏப்., 2011

இரண்டு போராளிகள் - இரண்டு வரலாறுகள்



அதிகாலைப் பொழுதொன்றில்
உடம்பில் பூசிய அத்தர் மணக்க
பிறைக் கொடியேந்தி
நான் நுழைந்தேன்
உன் தேசத்திலன்று.

நாய்கள் ஊளையிட்ட கருத்த இரவொன்றில்
குடித்த மதுவின் வாசனையோடே
சிலுவைக் குறி சுமந்து
நீ நுழைந்தாய் என் தேசத்திலின்று.

கொள்கையைச் சுமந்து நான் வந்தேன் அன்று.
கொலை வெறியை மட்டுமே
சுமந்து வந்திருக்கிறாய் நீ இன்று.

எனது போரின் முடிவில் உனக்கொரு
வசந்தம் காத்திருந்தது.
உனது போரோ எமது எல்லா
பசுமைகளையும் பொசுக்கிவிட்டது.

எனது வாள் உனக்காக மட்டுமே
சுற்றிச் சுழன்றது.
உனது துப்பாக்கியோ என் குழந்தைகளையே
முதலில் குறிவைத்துக் கொன்றது.

இடுப்பில் வாளும்
தோளில் நூலும் சுமந்தல்லவா
நாம் வந்தோமன்று.
ஆளோடு சேர்த்து அறிவையும்
எரித்த ஆனந்தமல்லவா உனக்கு இன்று.

எப்படியோ
நானும், நீயும் வரலாறு படைத்தவர்களானோம்.
மனிதத்தைப் புதைத்து
நாகரீகம் படைத்தாய் நீ.
மனிதர்கள் வாழ
நாகரீகம் படைத்தோம் நாம்.

10 ஏப்., 2011

மறக்கப்பட்ட ஜீவன்


பொழுது போக
கிரிக்கட்,சினிமா
கதையளக்க
நாளாந்த அரசியல்.
ஓய்வை கழிக்க
அரட்டைக்கு நண்பர்கள்.
மற்றபடிக்கு எட்டு மணி நேர உழைப்பு.
மாதச் சம்பளம் கைக்கு வர
காத்திருக்கும் செலவுகள்.
மிஞ்சிப் போனால்
குனிந்து எழும் தொழுகைகள்.
நின்று நிதானித்து சிந்திக்க நேரமில்லை.


பாவம் கல்பு
தன்னில் விழுந்த கருப்புப் புள்ளிகளை
கவனிக்க ஆளற்று
அழுக்கடைந்த ஆன்மாவோடு
இன்னொரு நாளும் கழிகிறது.

25 நவ., 2010

பயணம் சொல்லும் நேரம்




முதன்மையாய் இருந்த காலம்
போயிற்று – முடங்கிக்கிடக்கும்
நிலையாயிற்று.

மேனியைப் போலவே
பளபளப்பிழந்து வாழ்க்கையும்
சுருங்கிற்று...

மெல்ல முடியாததை
உண்ணத் தந்து சலித்துப் போகும்
மனைவி...

கேளாத காதுக்குள்
ஹலோ சொல்லி
இல்லாத சுகத்தை விசாரிக்கின்ற
பிள்ளை...

எப்போதாவது வந்து போகும்
உறவுகள்...

எனக்கு முன்பே செத்துப் போன
நட்புகள்...

எல்லாமே விலகிச் செல்ல
மரணம் மட்டும் நெருங்கி வருகிறது.

2010.11.25

9 செப்., 2010

பெருநாள் கவிதை



பெருநாள் கவிதை

அருள்கள் நிறைந்த மாதத்தின்
நிறைவில் - தூரத்து அடிவானில்
ஒற்றைக் கீறலாய் ஒளியொன்று
ஷவ்வாலின் தலைப் பிறை.

முப்பது நாட்களின் நிறைவில்
மனசுக்குள் படர்கிறது
சொல்ல முடியா சந்தோசமொன்று.
பிரசவத்தின் முடிவில்
பிள்ளை முகம் பார்த்து
பரவசப்படும் தாய்ப் போல.

நெஞ்சுக்குள் இருக்கும்
வஞ்சமெல்லாம் மறந்து
கட்டித் தழுவிச் சொல்லும்
ஈத் முபாரக் - வாழ்த்து.

பெருநாள் காசில் - குச்சி ஐஸ்
குடித்து குதூகலிக்கும்
குழந்தை முகம்.

தக்பீரின் ஓசையோடும்
மகிழ்ந்த மனசுகளோடும்
நிறையும் மஸ்ஜித்.

உறவுகளின் வீடு தேடி -
நண்பர்களின் நட்பு நாடி...
நடக்கின்ற பாதங்கள்.

தெருவுக்குள் இருக்கும்
அடுத்த இனத்தர் இல்லம் தேடி
பலகார பார்சலோடு செல்கையில்
அவர்கள் முகத்திலும்
எம் பெருநாளின் சந்தோசம்.

பெருநாளின் சந்தோசம்
அனைவருக்குமாகுக!!!
அகிலமே மகிழ்ந்திடுக!!!
அல்லாஹூ அக்பர்!!!

2010.09.09

10 மே, 2010

தாஹிரின் நினைவாய்...



கல்லூரிக் கருவறைக்குள்
நாம் ஒன்றாகவே சூழ்கொண்டோம்.
அந்த நினைவுகள் பசுமையானவை.
நித்தியம் என்பது இவ்வாழ்வில்
ஏதுமில்லை என்றாகிவிட்ட போது
அந்த வசந்த காலமும்
ஒரு கனவாகவே ஆகிவிட்டது.

விதி உனக்கென வரைந்த
இருபத்து நான்கு அகவைக்குள்
அமைதியான தென்றலாய்
நீ அடங்கிவிட்டாய்.

உன் இலட்சியக் கனவுக்காய்
நோய் கொண்டதையும் மறந்து
படித்தாய் -
பட்டம் பெறும் நாளில் நாம்
பட்டாம்பூச்சியாய் பறக்க
நீ மட்டும் சிறகிழந்து
ஊன்றுகோலோடு வந்தாய்.

எத்தனை கனவுகளை நீ
சுமந்திருப்பாய் என்பது
எனக்குத் தெரியாது.
சுவனத்து வீதியில் உனக்கென
ஒரு இல்லம்...
குளிர்ந்த ஆறு...
ஹூருல் ஈன்கள்...
பழங்கள் நிறைந்த மரச் சோலை...
இந்த இன்பங்களில் நீ இழந்தவை
நிச்சயமாய் உனக்கு மறந்து போகும்.

நாம் மரணத்தினால் பிரிபவர்களல்ல.
மஹ்சரின் நிழலில்
சந்திப்போம் - இன்சா அல்லாஹ்.


(ஏழு வருடங்கள் எம்மோடு ஒன்றாகப் படித்து நீரிழிவு நோய்க்கு மத்தியிலும் தனது நளீமிய்யா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பட்டப்படிப்பு என்பவற்றை பூர்த்தி செய்து 2008 மே மாதம் வபாத்தான சம்மாந்துறையைச் சேர்ந்த மர்ஹூம் தாஹிரின் நினைவாக...)

7 ஏப்., 2010

மௌனம்




















மௌனத்தை மொழிபெயர்ப்பது கஸ்டமானது.
அறிஞனின் மௌனம்
சிந்தனை.
பெண்ணின் மௌனம்
சம்மதம்.
குழந்தையின் மௌனம்
பயம், பிடிவாதம்.
எதிரியின் மௌனம்
எச்சரிக்கை.
கணவனின் மௌனம்
கடன் சுமை.
அயல்வீட்டானின் மௌனம்
வெறுப்பு.
முதுமையில் மௌனம்
இயலாமை.
இளமையில் மௌனம் -
ஒருதலைக் காதல்.

எதிர்ப்பின் மொழி கூட
மௌனம்தான்.

மௌனத்தை மொழிபெயர்ப்பது கஸ்டமானது

2010.04.06

17 மார்., 2010

இறைவனுடன் பேசுதல் -

இஸ்மத் அலி - 2010.03.16






வாய்த் திறந்து
மழலைப் பேசத் தொடங்கியது போதே
உன் நாமத்தை எனக்குச்
சொல்லித்தந்தனர்.
கூடவே உன்னைப் பற்றிய
அச்சத்தையும் ஊட்டியே
வளர்த்தனர் – ஐந்து
வயதில் உன்னைத் தேடி
பள்ளி சென்ற எனக்கு
தடித்த பிரம்பால் அவர்கள்
உன்னை அறிமுகப்படுத்தினர்;.

அச்சத்தோடு நான் அலிபு..பா..
கற்று - எழுத்துக் கூட்டி
உன் வசனம் படிக்க மூன்று வருஸமாச்சு.

ஓதக் கற்ற எனக்கு
நீ பேசும் பாஸைத் தெரிந்திருக்கவில்லை.
பொருள் புரிந்து பாத்திஹா ஓத
தசாப்தமொன்று கடந்தது...

உன்னோடு பேசும்
வேட்கையோடே விழித்திருந்துப்
படித்தேன் - நான் விழித்துப் படித்த
அந்த இரவுகள் நீளமானவை.
அதன் முடிவில் வந்த விடியலில்
என் வாழ்வும் பிரகாசமானது.

உன் வரிகள் இனிமையானவை-
மென்மையாய் சலசலத்தோடும்
நதியின் ஓசையை விட அவற்றையே
நான் அதிகம் ரசிக்கிறேன்.
சோகமான பொழுதுகளில்
அவையே எனக்கு ஆறுதலாகின்றன.

உன் வரிகள் மகத்துவமானவை-
என்னை மனிதனாக மாற்றியவை.
இருட்டில் நடந்த
எனக்கு அவைதான் விளக்காயின.

சத்தியத்தைத் தேடி
மலைகளில் திரிபவர்களே,
தத்துவங்களில் சத்தியம்
தேடி அலுத்துப்போனவர்களே,
அசத்தியத்தை சத்தியமாய்
எடுத்துக் கொண்டவர்களே,
சத்தியத்தை அடியோடு
மறந்து போனவர்களே!!!
கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்
படைப்பாளன் உங்களோடு
பேசுகின்றான் - அவன் பேசும்
பாஸையைப் புரிந்து கொள்ளுங்கள்.

30 ஜன., 2010

சுதந்திரமாய் பேச விடு





நீயெனக்கு எதுவும்
தரத் தேவையில்லை -
பசியாற சொட்டு கஞ்சி போதுமெனக்கு
குழி விழுந்த பாதைகளில் நடப்பதற்கு
என் பாதங்களால் முடியும்
குப்பி விளக்கில் படிக்க
என் கண்களால் முடியும்
நீயெனக்கென்று எதுவும்
தரத் தேவையில்லை
என்னை சுதந்திரமாய் பேசவும்
எழுதவும் விட்டுவிடு.
என்னால் வாய் மூடி இருக்க மட்டும்
முடியவே முடியாது.

25 ஜன., 2010

எனது வாக்கு...

(கவிதை - இஸ்மத்)



யுத்தத்தில் வென்று நீயெனக்கு அமைதி
தந்தாய் - அதற்காய் உனக்கொரு புள்ளடி.

வெற்றி தந்த வேந்தன் நீயே
வேதனைகளும் தந்தாய்.

கொள்ளை வரிப் பணத்தில்
மாடிகள் நீ கட்டி மகிழ்ச்சியாய்
வாழுகின்றாய் - கொசுக் கடித்து
மரணிக்கிறது என் குழந்தை.

தட்டிக் கேட்க நீ யாரையும்
விட்டு வைக்க வில்லை..
உன் புராணம் பாட மட்டுமே
நீ பேனைகளுக்கு மைக் கொடுத்தாய்.
எல்லா வாய்களுக்கும் பூட்டிட்டு
நீ பாடும் ஓலத்தை மட்டுமே
கேட்க வேண்டுமென்கிறாய்...
உன் ஆட்சிக்கு இல்லை வீழ்ச்சி
என்று ஆணவம் செய்கிறாய்.

எல்லாவற்றுக்கும் சேர்த்து
இதோ உனக்கெதிராய்
ஒன்று...இரண்டு..மூன்று
என்று என் கரம் புள்ளடியிடுகின்றது.
2010.01.26

14 ஜன., 2010

துருவங்கள் - கவிதை






நீயென்னை நெருங்கும் போதெல்லாம்
தள்ளியே நான் நடந்தேன்.
என்னைப் பற்றிய விம்பம்
துரோகி என்றே உன்
கண்ணில் விழுந்தது.

அவன் என்ன செய்துவிடுவானோ
என்ற பயம் எனக்குள்ளும்
உனக்குள்ளும் எப்போதுமிருந்தது.
சின்னச் சிறு கூட்டுக்குள்ளேயே
துருவங்களானோம் நாம் மூவரும்.

பக்கத்தில் சந்திக்கின்ற போதும்
நாம் புன்னகைக்க மறந்தோம்.
எனக்கும் உனக்கும்
தெரிந்த பாiஷ
அவனுக்குப் புரியவில்லை – நாம்
மனம்விட்டு பேசக் கொண்டதில்லை.

எனக்கு உன் பெயரோ
அவனுக்கு என் பெயரோ
உனக்கு நம் பெயரோ தெரியாது.
நாம் அறிந்து வைத்திருந்ததெல்லாம்
சிங்களவன்...
தமிழன்...
சோனகன் - என்பதை மட்டுமே

11 ஜன., 2010

குர்துபா என்னை மன்னித்து விடு


உங்களுக்கு குர்துபாவை ஞாபகம் இருக்கிறதா??
நாம் கோபுரங்களில் கூடு கட்டி வாழ்ந்த
நாட்களவை - அல்ஹம்ரா
அதன் அழகுக்கு இணையேது??
ஓ..அந்தலுஸ்!!!...
உன்னை வரலாற்றாய் பாட மட்டுமே
என்னால் முடிகிறது !!!
இஸபெல்லாவும் -பேர்டினென்டும்
உன் மினாராக்களின் உச்சியில்
சிலுவை வைத்த போது
என்னால் தடுக்க முடியவில்லை
மன்னித்து விடு என்னை