-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

5 ஜன., 2010


உறவுகள் (சிறுகதை) - கெகிறாவை இஸ்மத்.

2008 ஆகஸ்ட் - மருதானை

அந்தி நேரம் பெய்த மழையின் எச்சமாய் வீதியெங்கும் இன்னும் ஈரம் படர்ந்திருந்தது. வாகன நெரிசல்,மக்களின் ஓட்டம், வீதியோர வியாபாரிகளின் கூப்பாடுகள் எதுவுமின்றி நகரம் ஓய்வெடுக்கத் தொடங்கியிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் செல்லும் ஆட்டோக்களின் சத்தத்திற்கு மேலாக ஹோட்டல்களில் கொத்தடிக்கும் சப்தம் மட்டும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. மருதானையில் பெயர் போன அந்த சைவக் கடைக்குள் நான் நுழைந்தேன்.
பகல் முழுதும் நிரம்பி வழியும் சனக்கூட்டம் கடைக்குள் இல்லை.தூரத்து மேசையில் ஓர் இளம் ஜோடி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பூவோடும் பொட்டொடும் அந்தப் பெண் இருந்தாள். புதிதாக திருமணம் முடித்திருக்க வேண்டும். அல்லது கோயிலுக்கு போய் திரும்பும் பயணமாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தால் எனக்கென்ன?. நான் ஒரு டம்ளர் பசும் பால் ஓடர் செய்தேன்.
இந்த ஹோட்டலின் பசும்பாலுக்கு ஒரு தனிச் சுவை இருக்கிறது. ஒரு கிலாஸ் பாலும் ஒரு வடையும் போதும் கையுள்ள காசுக்கு வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம். வழமையாக இல்லாவிட்டாலும் அவசரத்துக்கு நான் தஞ்சம் புகுவது இந்த கடைக்குள்தான்.
பால் வரும் வரை நான் வடையைக் கடிக்கத் தொடங்கினேன். சட்னியை வாயில் வைத்த போது புளித்தது..கடை மூடும் நேரத்துக்கு சாப்பிட வந்தால் புளிக்காமல் என்ன செய்யும்?? சட்னியை ஒதுக்கி விட்டு வடையை மட்டும் சுவைக்கத் தொடங்கினேன். வெய்டர் பாலோடு வந்தான்.
கூடவே பின்னால் ஒரு பெண் குரல்
'' தம்பி எனக்கு ரெண்டு தோசை சுத்தி தாப்பா'' –
அறுபதை தாண்டும் வயது. கொஞ்சம் பருமன் என்றாலும் உடலின் தளர்ச்சி முகத்தில் தெரிந்தது..உடுத்தியிருந்த ஒயில் சேலையை சரி செய்து கொண்டே தலைக்கும் சேர்த்து முக்காடிட்டுக் கொண்டாள்.
''ஏன் கெழவி நீ உள்ளால சாப்பிடலயா''?
எனக்கு பால் டம்ளரை வைத்து விட்டு வெய்டர் அவளிடம் கேட்டான். அவளும் இதே ஹோட்டலில் வேலை செய்பவள் என்று தெரிந்தது..
சமையல் வேலைகளுக்கு உதவி செய்பவளாக இருக்கலாம்.
‘’ இல்லப்பா என் பேத்தி ..அவ எனக்காக காத்துட்டு இருப்பா..ஏம்பா பத்து மணி பஸ் போகல்லயே இன்னும்?''
‘’இல்ல..இல்ல-அவசரப்படாத..இந்தா'' தோசை பார்சலை அவள் கையில் கொடுத்தான்.
''ஏம்பா சாம்பாரு வைச்சியா?
‘’ஓம் கெழவி..அது சரி- நாளைக்கும் லேட்டாகி வந்துட்டு பின்ன காரணம் சொல்லாத என்ன.?''
‘’ நான் என்னடாப்பா செய்ய - எல்லாம் என்ட தல நஸீபு..நாஸமாப் போன அவள்ட அப்பன் நல்லா இருந்தா நான் ஏன் இத்தனை கஸ்டப்படனும்..பெத்த புள்ள ஒன்னு இருக்குன்ட ஞாபகமாச்சும் அவனுக்கு இருக்கா..'' கிழவியின் கண்கள் நிரம்பியது.
‘’சரி கெழவி கௌம்பு..பஸ் போயிடப் போகுது'' அவள் கதையைக் கேட்க வெய்டருக்கு நேரம் இருக்கவில்லை.
கெஸியர் மேசையில் அவள் தனது நாள் கூலியை பெற்றுக் கொள்வது தெரிந்தது. சரியாக நூற்றைம்பது ரூபாய். அதிலிருந்து தோசைக்கு அவள் காசு கொடுப்பதும் கெஸியரில் இருந்தவன் வேண்டாம் என்று சொல்வதும் தெரிந்தது. அவள் தன் பொலிவிழந்த தோல் பைக்குள் காசையும் தன் அன்பு பேத்திக்கான தோசைப் பார்சலையும் பத்திரமாய் திணித்தாள்.

******************************************************************************

2009 ஜூலை - தோஹா – கட்டார்

பனார் மஸ்ஜிதில் அஸர் தொழுகையை முடித்து விட்டு நான் இஸ்லாமிய நிலைய காரியாலய அறைக்குள் அமர்ந்திருந்தேன். அரபு தேசத்து வெயிலுக்கு அறையின் ஏ.சீ ஆறுதல் அளித்தது. அன்று வியாழக் கிழமை என்பதால் இஸாவுக்குப் பின் பொது பயான் நிகழ்ச்சி இருந்தது. செய்வதற்கு பெரிதாக எதுவும் இருக்கவில்லை என்பதால் புதிதாக வந்திருந்த அல்ஹஸனாத்திற்குள் நான் மூழ்கியிருந்தேன்..அப்போதுதான் அந்த மனிதர் ஸலாம் கூறிக் கொண்டு அறைக்குள் நுழைந்தார்..அவர் ஒரு இந்தியர்: தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்.
பக்கத்து அறையில் இருக்கும் இந்தோ-கட்டார் இஸ்லாமிய நிலையத்தில் அவரை இதற்கு முன் ஒரு தடவைப் பார்த்திருக்கிறேன்..
‘’ பக்கத்து ஆபிஸ்ல யாரும் இல்லையா?’’ அவர் வினவினார்.
‘’ஹ்ம்..அவங்க எப்படியும் இஸாவுக்கு பின்னாலதான் ஆபிஸ திறப்பாங்க...நாளைக்கும் சனிக் கிழமையும் முழு நாளும் திறந்திருக்கும்..உங்களுக்கு ஏதாச்சும் புத்தகங்கள் எடுக்கனுமா?’’ என்றேன்.
‘’இல்லை..என்ன அவங்களுக்கு நல்லா தெரியும்..பாய கொஞ்சம் சந்திக்கனும். அதுதான்’’. என்றார்
அவர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கிறார் என்பது புரிந்தது..
‘’ தம்பி எனக்கு ஹார்ட் வருத்தம்...இங்க உள்ள எல்லோருக்கும் தெரியும்..அவங்க செய்ற உதவியாலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்'' - அவர் பொய்ச் சொல்லவில்லை என்பது தெரிந்தது..ஏ.சீக் காற்றையும் தாண்டி வியர்வை அவரை நனைத்திருந்தது. நான் விசிறியையும் சுழலவிட்டேன்..
‘’ ஹார்ட் வருத்தத்தோட எப்படி வேலை செய்றீங்க?? நாட்டுக்கு போறதுதானே??’’ - என் கேள்வியில் அனுதாபம் இருந்தது.
‘’ போகலாம்தான் ..ஆனா அங்கப் போய் என்ன செய்றது?? நான் ஒரு வீட்டுல தோட்ட வேலை செய்றன்..அந்த அரபி கொஞ்சம் நல்லவர்..நான் நோயாளின்னு தெரிஞ்சி என்ன நாட்டுக்குப் போகச் சொன்னாரு..நான்தான் இன்னும் ஒரே ஒரு வருஸத்துக்கு வேலை செய்யறன்னு சொல்லியிருக்கேன்..அல்லாஹ்ட உதவியால ஒரு வருஸத்துக்கு அவன் என்ன உசிரோட வைச்சிருந்தான் என்றா எனக்குப் போதும்'' அவர் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்..கண்கள் பனித்திருந்தன.
அவரிடம் மேலும் கேள்விகள் கேட்டு அவரைச் சோர்வடைய வைக்க நான் விரும்பவில்லை. அவராகவே தொடர்ந்தார்.
‘’இன்னும் ஒரே ஒரு வருஸம் தம்பி..ஏன்ட மூத்த மகன் கொலேஜ் முடிச்சிருவான்.பிறகு அவன் குடும்பத்த காப்பாத்துவான். அதுக்குள்ள ஏன்ட உசிரு போயிடும் என்றா அவனால படிப்ப முடிக்க முடியாம போயிடும்..ஆண்டவனே..ரப்பே!!
அவர் கைகள் உயர்த்தி பிரார்த்திப்பது கேட்டது..அவர் இறைவனிடம் ஒரே ஒரு வருஸத்திற்கு தன் ஆயுளை நீடிக்குமாறு கேட்டது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..மூத்தவனின் படிப்பு முடியும் வரை இதய நோயோடு அரபு வெயிலில் வேலைச் செய்யவே அந்த ஒரு வருட ஆயுள்..

************************************************************************************


2009 டிசம்பர் - கடோங் -புரூனை


அன்று விடுதி உணவகத்தில் சாப்பாடு சரியில்லை என்ற படியால் நானும் ஜமாலும் தல்ஹாவும் வெளியில் சாப்பிடக் கிளம்பினோம். ஜமால் இந்தோனேசிய மாணவன். தல்ஹா மலேசியாவைச் சேர்ந்தவன். பாதையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து விட்டு ஜமால் இப்படிச் சொன்னான் :
''யா அகீ!! எங்களுக்கும் வாகனமொன்று இருந்தால் இப்படி நடக்கத் தேவையில்லை..பாரு நாங்க மட்டும்தான் நடந்து போகிறோம்''. அவனது பிரச்சினை அதுவாக இருந்தது..
கடோங் பிரதான பாலத்தைத் தாண்டி நாம் ‘’மோல் சுப்பர் மார்க்கட்டை’’ அடைந்தோம். எமது விடுதியில் இருந்து ஒரு முந்நூறு மீட்டர் தொலைவில்தான் ''மோல் சுப்பர் மார்கட்'' இருக்கிறது.. நாங்களும் நாகரீக உலகத்தில்தான் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஏற்ப மேற்கின் அத்தனைக் குப்பைகளையும் இறக்குமதி செய்து அந்த சுப்பர் மார்க்கட்டை அசிங்கப்படுத்தி - மன்னிக்கவும் - அழகுபடுத்தியிருந்தனர்.
கட்டடத்தின் மூன்றாம் மாடியை உணவகங்களுக்கு என்று ஒதுக்கியிருந்தனர். சுமார் இருபதுக்கு மேற்பட்ட உணவகங்கள் சுற்றி வர நடுவில் ஒரு ஐநூறு பேர் சாப்பிடுவதற்கான வசதி. ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு நாட்டு உணவுக்கென்று பிரத்தியேகமானவை.
இந்திய. அரபு நாட்டு உணவுகள் கிடைக்கும் உணவகங்கள் இருந்தாலும் நாம் வழமையாக சாப்பிடும் உணவகம் ஒன்றிருந்தது. ‘’ ரீஸா உணவகம்’’. எமது விடுதி உணவகத்தை நடத்தி வருபவர்களே இதனையும் நடத்தி வந்தனர்.எனவே எமது யுனிவர்ஸிட்டி கூப்பனைப் பயன்படுத்தி குறைந்த விலையில் இங்கு சாப்பிட முடியும்..
உணவோடு நாம் மூவரும் ஒரு மேசையைப் பிடித்து அமர்ந்தோம்..முதல் கவளத்தை வாய்க்குள் இட்டு நிமிரும் போதுதான் எனக்கு அந்த அற்புத காட்சி கண்ணில்பட்டது.
நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர்ப்புற மேசையில் ஒரு மூதாட்டி. எண்பதை தாண்டும் வயசு. சுருங்கி: வெளிரிய தோல். சிறுத்துப் போன: பார்வை மறந்த கண்கள். உடலில் சிறு நடுக்கம்.
அவளுக்கு பக்கத்தில் நாப்பத்தைந்து அல்லது ஐம்பது வயசு மதிக்கத்தக்க ஒருவர் அவளுக்கு கொஞ்ஞம் கொஞ்சமாய் உணவைப் பருக்கிக் கொண்டிருந்தார். அவளது மகனாக இருக்க வேண்டும்..ஆயிரத்தில் ஒருவராகவே அவர் எனக்குப்பட்டார்..
வயசு போனால் வீட்டோடு முடக்கி வைக்கும் இந்த காலத்தில் தன் தாயை வெளியில் அழைத்து வந்து தன் கையால் உணவு பருக்கும் காட்சியை வேறெப்படிச் சொல்வது??
அந்த மூதாட்டியால் மூன்று கவளங்களுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. அந்த மூன்று கவள உணவிலும் அவள் பட்ட திருப்தி அவளது முகத்தில் தெரிந்தது.
***
விடுதிக்கு திரும்பிய நான் அன்றைய என் நாட்குறிப்பில் இப்படி எழுதினேன்.
அன்புதான் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
உறவுகள்தான் வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன.
ஒரு கோடி அன்போடும் பல நூறு உறவுகளோடும்
எம்மைப் படைத்த இறைவனே நீ மகா கருணையாளன்.

2 கருத்துகள்:

  1. நன்றி இஸ்மத் கதைகளை தேடி அலைய வேண்டியதில்லை. எம் முன்னால் நிகழ்ந்தக்கொண்டிருப்பவை அனைத்தும் கதைகள்தான். ஆனால் வலிகள் நிறைந்தது. அற்புதம் என்று சொல்லமுடியாவிட்டாலும் அழகானது என்று துணிந்து சொல்லலாம்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நதீர் - கதை எழுதும் போது எனக்கு சலனம் சிறுகதைகளுக்கான இதழ்தான் ஞாபகம் வருகிறது..

    பதிலளிநீக்கு