
என் அப்பா (உம்மாவின் வாப்பா) மௌத்தாகி இன்னும் ஒரு வருஸமாக வில்லை. தேர்தல் இரவில் என் அப்பாவை எனக்கு மறக்க முடியாது. வெட்டினாலும் பச்சை இரத்தம்தான் வரும் என்று சொல்பவர். என் கூட எப்போதும் அப்பாவுக்கு தனிப் பிரியம் இருந்தது. கல்லூரி விடுமுறையில் நான் வீட்டிற்கு வந்து விட்டதைக் கேள்விப்பட்டால் அவராகவே பார்ப்பதற்கு ஓடி வந்து விடுவார். கடைசிக் காலத்தில் நடக்க முடியாமல் போன போது கூட தள்ளாடித் தள்ளாடி வீட்டிற்கு என்னைப் பார்க்கவென்று வந்தது இன்னும் ஞாபகமாய் மனசுக்குள் ஒட்டி நிற்கின்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டிற்குச் சென்றால் எனக்கு முதல் வேலை அப்பாவைப் பார்த்து விட்டு வருவதுதான்..நான் கொழும்பில் இருக்கும் ஒரு வெள்ளிக் கிழமைத் தினத்தில் அப்பாவின் மரணச் செய்தி வந்தது. அப்பாவின் ஜனாசாவை நானே முன்னின்று தொழுவித்தேன்.
இன்று தேர்தல் இரவு. கடந்த காலத் தேர்தல்களில் முடிவுகளுக்காய் எமது வீட்டில் விழித்திருப்பது நானும் அப்பாவும் மட்டும்தான். அடுத்தவர்கள் காத்திருந்து முதல் முடிவு வருவதற்கிடையில் தூங்கிப் போவார்கள்.
அப்பா பரம்பரைப் பச்சை என்று சொன்னேன். தேர்தல் முடிவு எதிர்ப்புறத்திற்கு சார்பாய் அறிவிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அப்பா வெளியில் சென்று காறி உமிழ்ந்து தன் எதிர்ப்பைக் காட்டிக் கொள்வார்.
எங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு மாமாவைத் தவிர எல்லோரும் அப்பாவைப் போன்றே பச்சைக்கு சார்பானவர்கள். ஆனால் சந்திரிக்கா வந்த போது கொஞ்சம் கட்சித் தாவல்கள் என் வீட்டுக்குள்ளும் நடந்தன.
அம்மையார் ஆட்சிக்கு வந்த பின்னர் எமது பாடசாலை திறப்பு விழா நிகழ்வில் இரு கட்சிக்குள்ளும் மோதல் ஏற்பட்டு கலவரத்தில் முடிந்தது. கட்டியவர்கள் நாங்கள் திறப்பது நீங்களோ என்ற வகையில் பச்சை அணியினர் திறப்பு விழாவுக்கு ஆயத்தமாகினர். ஆட்சியில் நாம் இருக்க நீர் எப்படி எம்மைப் புறக்கணிப்பீர் என்று நீலத்தினர் கொதித்தெழுந்தனர். திறப்பு விழா கடைசி நேரத்தில் குழப்பப்பட்டது. பச்சை அணியினர் தொடுத்த வழக்கில் என் தந்தையும் பிரதிவாதியாக்கப்பட்டார். குழப்பம் விளைவித்த அப்போதைய சமூக நிவாரண அமைச்சருக்கு மாலைப் போட்டதே கூறப்பட்ட குற்றச்சாட்டு.
அமைச்சரோடு ஏற்பட்ட தொடர்பு சில வருடங்கள் வரை நீலக் கட்சிக்கு வாக்களிக்க வைத்தது.ஆனால் அப்பா மட்டும் நிறத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தேர்தல் இரவுகளில் அவரது காறி உமிழல் தொடர்ந்தது.
அப்பாவுக்கு ஏன் இத்தனைப் பற்று என்பது எனக்குத் தெரியாது. மரவள்ளியும் பட்டிணியும் தேவையென்றால் பச்சையை மறுத்து வாக்களியுங்கள் என்று எமக்கு தேர்தல் நாளில் எச்சரிக்கைச் செய்வார்.
பச்சை மீதுள்ள பாசம் சிலவேளை ஜே.ஆர் காலத்தில் அப்பாவுக்குக் கிடைத்த இரண்டரை ஏக்கர் வயலுக்காய் ஏற்பட்டதாய் இருக்கலாம்...
நீலமும் சிவப்பும் கூட்டணி அமைத்த போது அப்பாவின் கவலை அதீதமானது. 89,90 களில் ஏற்பட்ட கலவர நிலையை ஞாபகப்படுத்துவார். அந்த கலவரக் கால நினைவுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு ஐந்து வயசு. கலவரக்காரர்களுக்குப் பயந்து சாந்த அய்யா எங்கள் வீட்டில் ஒரு நாள் ஒழிந்திருந்தது ஞாபகம் இருக்கிறது. அது தவிர என் வகுப்புத் தோழி ரிஸ்வானாவின் வாப்பா கோயா ஹாஜியாரை கலவரக் காரர்கள் வெள்ளிக் கிழமைத் தினமொன்றில் வாளால் வெட்டிக் கொன்றதும் என் பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர் சந்தியில் கட்டி வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் ஞாபகம் இருக்கிறது.(1990 ஜனவரி 01)
ஒரு நாள் கலவரக்காரர்கள் ஊர் பொலிஸ் நிலையத்தைத் தாக்கினர். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகத்தான் வாப்பாவின் தையல் கடை இருந்தது. வாப்பா திரும்பும் வரை உம்மா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் அழுதது ஞாபகம் இருக்கிறது. தவிர காரணமே இல்லாமல் என் உம்மும்மா வீட்டு ஜன்னலுக்கு கல்லெறிந்து உடைத்ததும் என் மாமாவிடம் பத்தாயிரம் ரூபா கப்பம் கேட்டு மிரட்டியதும் எனக்கு மறக்கவில்லை.
1994ல் கலவரக்காரர்கள் ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்த போது இந்தப் பின்னணிகளோடு அவர்கள் பற்றி என் அப்பா எச்சரித்தது நியாயமாகவே எனக்குப்பட்டது.
நேற்று வீட்டிலிருந்து கோல் வந்தது. தேர்தல் பற்றி விசாரித்தேன்.யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு 'நாம் அரசரை மாற்ற விரும்பவில்லை' என்று பதில் வந்தது. அத்தோடு கூடவே வாப்பா இன்னொரு செய்தியையும் சொன்னார். எனக்கு வந்திருக்கும் வாக்காளர் அட்டை என் அப்பாவின் பெயரை முதல் எழுத்தாய் கொண்டு வந்திருக்கிறதாம்...
'நான் அப்பாவின் பேரன் - அது தான்' என்று சொல்லிச் சிரித்து போனை வைத்தேன்.
very good
பதிலளிநீக்கு