
இஸ்மத் அலி
இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார். பெரும்பான்மை மக்களின் மனோநிலையில் 'யுத்தத்தை வென்று நாட்டை மீட்டெடுத்த வரலாற்று நாயகன்- மஹிந்த' என்ற பசுமையான நினைவு இன்னும் மாறிவிடவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் தெளிவாகின்றது. ஜனாதிபதிக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல்,குடும்ப ஆட்சி, எதேச்சதிகாரம் போன்ற எதிர்த் தரப்பினரின் குற்றச் சாட்டுக்கள் எடுபடவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் தெளிவாக்குகின்றன.
இத்தேர்தலில் எதிர்த்தரப்பினரின் கூட்டணி பலமானதாகவும் ஆளும் தரப்பிற்கு பெரும் சவாலாகவும் கட்டமைக்கப்பட்டிருந்த போதிலும் முடிவு எதிர்ப்பார்த்தது போல் அமையவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் தரப்பிற்கு எதிரான கூட்டணிக்கு தமிழ்,முஸ்லிம்,மலையக சிறுபான்மையின கட்சிகள் ஆதரவு அளித்தன. தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எதிர்த்தரப்பினர் கணிசமான அளவிலான வாக்குகளை சிறுபான்மையினர் செறிவாக வாழும் பகுதிகளிலேயே பெற்றுக் கொண்டனர்.
என்றாலும் மிக நுணுக்கமாக அவதானிக்கின்ற போது ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் முழுமையாக மஹிந்தவை நிராரித்தனர் என்று கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எதிரணி வேட்பாளரை சிறுபான்மையினர் ஆதரித்து வாக்களித்தனர் என்ற போதிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிதறி வாழ்கின்ற சிறுபான்மையினரின் வாக்களிப்பு மனோநிலை இதற்கு மாற்றமாகவே இருந்தது என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். கண்டி, குருநாகல், அநுராதபுரம், கம்பஹா, களுத்துறை, கேகாலைப் போன்ற பகுதிகளில் வாழும் சிறுபான்மையினரின் ஆதரவுடனேயே அப்பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த வெற்றி பெற முடிந்தது.
மஹிந்தவை எதிர்த்து பெரும்பாலான சிறுபான்மை மக்கள் ஏன் வாக்களித்தனர் என்பது சிந்திக்கப்பட வேண்டியது. மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை ஓர் இமாலயச் சாதனைதான். யுத்த வெற்றியின் பின்னர் அதனைக் கொண்டாடுவதற்கும் மஹிந்தவை வரலாற்று புருசராக பார்ப்பதற்கும் சிறுபான்மையினர் தவறிவிட்டனர் என்று தேர்தல் முடிவுகளை வைத்து கூறுவது தவறானது. ஏனெனில் யுத்த வெற்றியை பெரும்பான்மை சமூகங்களைப் போன்றே சிறுபான்மையினரும் கொண்டாடினர் என்பது மறக்கப்பட முடியாதது.

இவ்விடத்தில்தான் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் மனோநிலை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசைகள் அபிவிருத்தி என்பதை விட உரிமைகள் சார்ந்தவையாகவே அமைந்திருக்கும் . அபிவிருத்தியில் எவ்வளவுதான் பலனைப் பெற்றுக் கொண்டாலும் உரிமைகள் விடயத்தில் ஒரு இழப்பைச் சந்திக்க நேரிடுகின்ற போது சிறுபான்மைச் சமூகம் தன் மனோநிலையை மாற்றிக் கொண்டு விடுகின்றது. இது இயல்பானதும் கூட. இதனை நன்றி கெட்டத்தனம் என்றோ அல்லது தேசப் பற்றின்மை என்றோ வர்ணிப்பது தவறானது.
நடந்து முடிந்த தேர்தலுக்கு பின்னர் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளில் சிறுபான்மையினர் தேசப்பற்றில்லாதவர்கள்..எனவேதான் தேசத் துரோகிகளுக்கு வாக்களித்தனர் என்ற வகையிலான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இது 'இலங்கையர்' என்ற தேசியவாத சிந்தனையிலிருந்து சிறுபான்மையினரை தூரமாக்குமே தவிர 'ஐக்கிய இலங்கை – வளமான எதிர்க் காலம்' என்ற கருத்தியலை ஒரு நாளும் மெய்ப்பிக்க உதவிடாது.
அனைத்துக்கும் மேலாக சிறுபான்மையினர் ஒரு பௌத்தரை எதிர்த்து இன்னொரு பௌத்தருக்கே வாக்களித்துள்ளனர் என்ற உண்மைமையையும் சிறுபான்மை சமூகங்களின் வாக்களிப்பையும் அவர்களின் தேசப்பற்றையும் முடிச்சிட்டு நோக்குவது தவறு என்பதையும் பௌத்த தேசியவாதிகள் புரிந்து கொண்டாக வேண்டும்.
http://www.youtube.com/watch?v=jE1ILTct528
பதிலளிநீக்குplease refer this side