
அன்புள்ள என் வருங்கால மனைவிக்கு,
உன்னை மணக்கோலத்தில் காணும் நாள் எப்போது என்பது எனக்கு சரியாகத் தெரியாது. அது மிக விரைவிலோ அல்லது கொஞ்சம் தாமதமாகியோ நடக்கலாம். அந்த நாளைப் பற்றிய உன் கனவுகள் எப்படி இருக்கும் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாள் என்னைப் போலவே உனக்கும் மிக சந்தோசத்துக்குரிய நாளாக இருக்கும் என்பது சந்தேகமில்லை. அந்த சந்தோசமான நாளில் நான் சொல்வதற்கு ஆசைப்படுகின்ற இந்த விடயங்களை சொல்ல மறந்துவிடுவேனோ என்ற பயத்தில் முன் கூட்டியே இவற்றை சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.
என் மனைவியே உலகத்தில் எல்லோரையும் விட சிறந்தவள் என்ற நினைப்பு எல்லா கணவன்மாருக்கும் இருக்கிறது. எனக்கும் அப்படிதான். நீ இந்த உலகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் விட அன்பானவள்,அறிவும் விவேகமும் கொண்டவள், பண்பானவள், அழகானவள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
எமக்கிடையே ஏற்படப்போகும் இந்த உறவு எப்படியானது என்பதை நீ அறிந்திருப்பாய். இந்த உலகத்தில் உள்ள எல்லா உறவுகளை விடவும் கணவன்-மனைவி என்ற உறவு வித்தியாசமானது. பரஸ்பர புரிந்துணர்வில்தான் இந்த உறவின் சந்தோசமே தங்கியிருக்கிறது. ஆலமுல் அர்வாஹ் எனும் ஆன்மாக்களின் உலகில்தான் எமக்கிடையில் ஏற்படப்போகும் இந்த உறவு தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். மரணத்திற்கு பின்னரும் இந்த உறவு தொடரும் என்ற உணர்வோடு நாம் வாழ வேண்டும்.
உன்னைப் பற்றி வந்தடைந்த செய்திகளில் உன் பண்பைப் பற்றி அதிகமாய் தெரிந்து கொண்டேன். நீ படித்தவளும் கூட. ஒரு சராசரி வாழ்க்கை வாழ்வதை விட பெரும் இலட்சியங்களை சுமந்தவர்களாய் நாம் வாழ வேண்டும். ஒரு சராசரிப் பெண்ணின் இலட்சியங்கள் நல்ல வீடு, நான்குக்கு மேற்படாமல் பிள்ளைகள், கொழுத்த சம்பளம், சொந்த வாகனத்தில் விடுமுறையில் உல்லாசப் பயணம்... இதைத் தாண்டியதாக அவளது சிந்தனை இருக்காது. நீ சராசரிப் பெண்ணாய் இருக்க மாட்டாய் என்று நம்புகின்றேன்.
வரப்போகும் பெண்ணைப் பற்றி எனக்குள்ள எதிர்பார்ப்புக்கள் இருப்பது போலவே என் வீட்டாருக்கு வரப் போகும் மருமகளைப் பற்றிய அச்சமும் இருக்கிறது. உன்னைப் பற்றி என் வீட்டில் சொன்ன போது படித்த பெண் வீட்டுக்கேற்ற மருமகளாய் இருப்பாளா? என்றுதான் முதலில் கேட்டார்கள். மருமகள் வந்துவிட்டால் பிறந்த வீட்டுச் சொந்தங்களோடு ஒட்டவிடமாட்டாள் என்ற பயம்தான் எல்லா தாய்மாரையும் மருமகளை வில்லியாக பார்க்க வைக்கிறது. நான் - நீ என்பது நாமாகிவிட்ட பின்னர் உனது சொந்தங்கள், எனது சொந்தங்கள் என்பவை எமது சொந்தங்கள் என்றாகிவிட வேண்டும். தனிக் குடித்தனம், கூட்டுக் குடித்தனம் இது பற்றி பிறகு யோசிக்கலாம். ஆனால் இந்த யோசனை குடும்பத்திற்குள் ஏற்படும் பிரிவின் விளைவாக வந்துவிடக் கூடாது.
நீ படித்தவள். எந்த இலட்சியத்தோடு படிப்பைத் தொடர்ந்தாய் என்பது எனக்குச் சரியாகத் தெரியாது. படிப்பின் முடிவில் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் அதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டல்ல மூன்று முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வது ஆணின் கடமை. வீட்டின் அலுவல்களை கவனிப்பது பெண்ணின் முதல் கடமை. நாம் கடமைகளுக்கு முன்னுரிமைக் கொடுப்போம்.
இதன் கருத்து உன்னை வீட்டோடு முடக்கிக் கொள்வதல்ல. உனக்குள் இருக்கும் திறமைகளை நீ வெளிக்காட்ட நிறையவே களங்கள் இருக்கின்றன. தொழில் செய்துதான் உன் திறமைகளும் சமூகத்திற்கான சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தங்களும் இல்லை.
சரி, என்னிடம் நீ எதை எதிர்பார்க்கிறாய்?? நீ வாய் திறந்த சொல்ல மாட்டாய். ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கையும் அன்பும் பாதுகாப்பும்தான் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவாய் உனக்குக் கிடைக்கச் செய்வேன்.
இப்படிக்கு
உன் வருங்கால கணவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக