
அல்-குர்ஆனை அல்லாஹூத்தஆலா அரபு மொழியிலேயே இறக்கினான். அதன் மொழி,இலக்கிய நயம் என்பவைகளைக் கொண்டு அதனை அழியாத அற்புதமாகவும் ஆக்கினான். இஸ்லாத்தின் பால் பிற மொழி பேசுவோரும் உள்நுழைந்த போது அவர்கள் அல்-குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. என்றாலும் இஸ்லாமிய அறிஞர்கள் அல்-குர்ஆனை பிற மொழிகளில் பெயர்ப்புச் செய்வதை விடுத்து அரபு மொழியைக் கற்கச் செய்தல், அல்லது குர்ஆனுக்கான விளக்கவுரைகளை செய்தல் போன்றவற்றின் மூலம் அரபியர் அல்லாதவர்கள் அல்-குர்ஆனை விளங்குவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். அரபல்லாத மொழியில் அல்-குர்ஆனை மொழிபெயர்ப்பதையும் கண்டித்தனர்.
என்றாலும் கி.பி. 7ம் நூற்றாண்டில் முதன் முதலாக பாரசீக மொழியில் சூறதுல் பாத்திஹா மொழி பெயர்க்கப்பட்டது.கி.பி.9ம் நூற்றாண்டில் முழுமையாக அல்-குர்ஆன் பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டது என்றாலும் வெளியிடப்படவில்லை.
சிலுவை யுத்த காலப் பகுதியில் இருந்து அல்-குர்ஆனை ஐரோப்பிய மொழிகளில் பெயர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரொபர்ட் கேட்டன் என்பவர் 1143ம் ஆண்டில் லத்தீன் மொழியில் அல்-குர்ஆனை மொழிபெயர்த்தார். ஆங்கில மொழியில் முதன் முதலாக அல்-குர்ஆன் 1649ல் அலக்ஸான்டர் ரோஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.
காலணித்துவத்தைத் தொடர்ந்து கீழைத் தேய ஆய்வுகளில் முயற்சிகளை மேற்கொண்டவர்களும் அல்-குர்ஆன் மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற்கொண்டனர். John Rodwell (1808-1900), Edward Palmer (1840-1882),Sir William Muir (1819-1905)
போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
1936ம் ஆண்டளவில் சுமார் 102 மொழிகளில் அல்-குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

தமிழ் மொழியில் அல்-குர்ஆன் மொழிபெயர்ப்பு
1940 ம் ஆண்டின் முன்னரைப் பகுதியில் ஆ.க. அப்துல் ஹமீத் பாகவியால் அல்-குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.ஆ.க தனது மொழி பெயர்ப்பை பூர்த்தியாக்கிய போதும் அதனை வெளியிடுவதில் பணச் சிக்கலை எதிர்க் கொண்டார். இந்நேரத்தில் அவருக்கு பணவுதவி செய்து முதல் தமிழ் மொழிபெயர்ப்பை வெளிக் கொணர உதவி செய்தவர் ஓர் இலங்கைச் சோனகர் என்பது குறிப்பிடத் தக்கது.
மொழி பெயர்ப்பை வெளியிடுவதில் பண நெருக்கடியை ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி எதிர்க் கொண்ட போது அவர் இலங்கை தனவந்தர்களிடம் உதவி பெரும் நோக்கில் 1947ம் வருடம் இலங்கைக்கு வந்தார். அதன் போது அவருக்கு உதவி செய்வதற்கான ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. என்றாலும் பதிப்பிற்பதற்கான முழுச் செலவையும் N.M.M ஹனீபா(பாஃமன்ற உறுப்பினர் M.H. முஹம்மத் அவர்களின் தந்தை) பொருப்பேற்றுக் கொண்டார்.
இது பற்றி தர்ஜூமாவின் பதிப்புரையில் அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் குறிப்பிடும் போது..
''இறைவனின் அருளால் மாட்சிமைத் தாங்கிய நிஜாம் அரசாங்கத்தின் உதவியைக் கொண்டும் மற்றும் பல முஸ்லிம் பிரமுகர்களின் உதவியைக் கொண்டும் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்து உலமாக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்னர் இதனை அச்சிட்டு வெளியிடுவது பெரும் பிரச்சினையாயிற்று.ஏனென்றால் இதற்கு வேண்டிய காகிதம்இபிளாக்குகள் முதலியவைகளின் கிரயமும் அச்சுக்கூலி பைன்ட் கூலி முதலியவைகளின் செலவுத் தொகையும் யுத்த காலத்திற்கு முன்னிருந்ததை விட பல மடங்கு அதிகரித்து விட்டன.ஆகவே தயாராகியிருக்கும் மொழிபெயர்ப்பை அச்சிட்டுப் பிரசுரிப்பதற்கு ஒரு பெரும் தொகை தேவைப்படுமென தெரிய வந்தது.
இதற்காக நான் சிலோன் சென்று அங்குள்ள பல பிரமுகர்களைக் கொண்டதொரு கமிட்டியும் அமைத்து ஆவன செய்து வந்தேன்.இதன் மத்தியில் கண்டியார்| என அழைக்கப் பெற்ற மகா கனம் நாகூர் மீரான் அவர்களின் புதல்வராகிய கொழும்பு ஹோர்ட்டன் ப்ளேஸ் தாருல் மினனில் வசித்து வரும் மகா கனம் என்.எம்.எம்.ஹனீபா புறக்டர் அவர்களைச் சந்திக்கும்படி நேரிட்டது.அது சமயம் என்னுடன் வந்திருந்த பெரியார் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து நான் வந்திருக்கும் நோக்கத்தையும் எடுத்துரைத்தார்கள்.இதனை செவியுற்ற அவர்கள் மிக்க மேலான விதத்தில் இதனை அச்சிட்டு வெளியிட எவ்வளவுத் தொகை தேவைப்படுமென்று கேட்டார்கள்.அதற்கு நான் என்னுடைய மதிப்பையும் திட்டத்தையும் கூறினேன்.
...இதனை பிரசுரிப்பதற்குரிய முழுத்தெகையையும் ஆலி ஜனாப் N.ஆ.ஆ ஹனீபா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதின் காரணமாக இதறகென அமைக்கப் பெற்ற கமிட்டியில் அங்கம் வகித்த பெரியார்களுக்கு இவ்விஷயத்தில் எத்தகைய சிரமமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமலாகிவிட்டது’’. என்று குறிப்பிடுகின்றார்.
தமிழ் தர்ஜூமா இலங்கையில் அறிமுகமான பின்னணி :
அல்-குர்ஆனை இலங்கையில் அறிமுகப்படுத்திய பெருமை காணல்பட்டணத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஜீலானி ஸாஹிபவர்களுக்கே சாரும். இவர் அலிகார் பல்கலைகழகத்தின் பட்டதாரியாவார்.இந்திய உபகண்ட ஜமாஅதே இஸ்லாமியின் முதல் மர்க்கஸான பத்தான் கோட்டில் பல மாதங்கள் மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்களுடன் தங்கி பயிற்சிபெற்று அங்கத்துவ பைஅத் செய்து கொண்டவர்.
ஆ.க.அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் தமிழ் தர்ஜூமாவின் ஆயிரம் பிரதிகளை இலங்கையில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் நோக்கோடு 1949 ம் வருடம் இவர் இலங்கைக்கு வந்தார்.
ஆ.க.அப்துல் ஹமீத் பாகவியின் தமிழ்த் தர்ஜூமா பற்றிய செய்தி ஏற்கனவே இலங்கையில் அறியப்பட்டிருந்தது என்றாலும் அல்-குர்ஆனை மொழி பெயர்ப்பதோ அதனைப் படிப்பதோ பெரும் பாவங்களில் ஒன்றாகவே பெரும்பாலான இலங்கை முஸ்லீம்களால் பார்க்கப்பட்டது. இலங்கை முஸ்லீம்கள் அல்-குர்ஆனை மட்டுமன்றி மார்க்கம் சம்மந்தப்பட்ட எதனையும் அரபல்லாத மொழியில் எழுதுவது ஹராம் என்றே கருதினர். அரபுத் தமிழ் தோற்றம் பெறுவதற்கும் இதுவே பிரதான காரணியாக அமைந்தது.
எனவே மொழி பெயர்ப்புப் பிரதிகளை விற்பனைச் செய்வதில் ஜீலானி ஸாஹிபவர்கள் பெரும் சிரமங்களை எதிர்க் கொள்ள வேண்டியிருந்தது.
ஜீலானி ஹஸரத் அவர்கள் தர்ஜூமா பிரதிகளை எடுத்துக் கொண்டு நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அனுமதியைப் பெற்று அல்குர்ஆனை படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றி தான் கொண்டு வந்திருக்கும் தர்ஜூமாவை அறிமுகப்படுத்தி விற்பனைச் செய்துள்ளார். ஜீலானி ஹஸரத் அவர்களுக்கு மட்டக்களப்பில் புகாரி விதானையர்(ஏறாவூர்) என்பவரும் கல்முனையில் அஹ்மத் லெப்பை என்பவரும் பேருவலையில் எம்.எல்.எம்.ஹாசிம் என்பவரும் ஆதரவளித்து விற்பனைக்கான ஏற்பாடுகளைச் செய்த கொடுத்துள்ளனர்.புத்தளம் மௌலா மக்காம் பள்ளிவாசலில் தர்ஜூமா அறிமுக உரையை ஜீலானி ஹஸரத் நிகழ்த்தியதாக புத்தளம் மாவட்ட முன்னாள் உலமா சபைத் தலைவர் கூறிய தகவலொன்றையும் இவ்வாய்வுக்காக புத்தளம் சென்ற போது அறிந்து கொள்ள முடிந்தது.
வெறும் வியாபார நோக்கமாக மட்டும் ஜீலானி ஹஸரத் அவர்கள் இங்கு வரவில்லை என்பது தெளிவாகும்.ஏனென்றால் தனது விற்பனைப் பணி முடிவடைந்தவுடன் நாடு திரும்பாது அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களை ஆரம்பித்தhர். அத்தோடு அருள் ஜோதி எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டார்.அனைத்துக்கும் மேலாக 1954ம் வருடம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து அதன் அமீராக சுமார் இரண்டு வருடங்கள் பணியாற்றியமைக் குறிப்பிட்டு கூறத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக