இஸ்மத் அலி
-
نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது
பக்கங்கள்
14 ஜூலை, 2022
24 டிச., 2020
சமூகப் பொறுப்பாளர்களின் பொறுப்புணர்வை உணர்த்துவதற்கான பொறிமுறை.
S. H. இஸ்மத் அலி
கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை முஸ்லிம் சமூகம் மிக இக்கட்டான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இவற்றை எதிர்கொள்வதில் சமூகத்திடம் முறையான செயற்திட்டம் இருக்கிறதா? சமூகத்தை வழிநடத்தும் அரசியல் மற்றும் மார்க்க, சிவில் தலைமைகள் இத்தகைய செயற்திட்டத்தை வரைவதற்கும் செயற்படுத்துவதற்கும் முயற்சிக்கின்றவா என்ற விடயத்தில் சமூகம் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது
நிலைமை இவ்வாறு இருக்கையில் சமூகப் பொறுப்பை சுமந்து கொண்ட தலைமைகள் சிலபோது விடுகின்ற தவறுகள், அசமந்தப் போக்குகள் என்பவற்றை அவதானிக்கும் போது இவை மேலும் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, சமூகத் தலைமைகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களது தவறான முடிவுகள், அசமந்தப் போக்குகள் என்பவற்றை மிகச் சரியாக இனங்கண்டு, சுட்டிக்காட்டி அவர்களது செயற்பாட்டுத் திறனை வழிப்படுத்த ஒரு பொறிமுறை அவசியப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக யார், எதை, எங்கு யாரோடு பேசுவது குறித்தோ சவால்களை எதிர்கொள்வதற்கான ஒன்றிணைந்த அல்லது ஒருமுகப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் பற்றியோ சமூக அங்கீகாரத்தைக் கொண்டுள்ள நிறுவனத் தலைமைகளிடம் போதியளவு தெளிவுகள் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதன் விளைவே சமூகத் தலைமைகள் குறித்து சமூகத்திடம் அதிகரித்து வருகின்ற எதிர்நிலை மனப்பாங்கு. இத்தகைய மனப்பாங்குகளே பிறரின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு சமூக உறுப்பினர்கள் மிக இலகுவில் அகப்படக் காரணமாகின்றது.
அதே போன்று சமூக நிறுவனங்களுக்கிடையில் நிலவும் உள்ளக முரண்பாடுகள், பிற நிறுவனங்களோடுள்ள சித்தாந்தப் பிளவுகள் இவைகள் சமூக மட்டத்திற்கு வரும் போது அது சமூக நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைமைகள் பற்றிய குறை எண்ணங்களையே சமூகத்திடம் ஏற்படுத்தும்.
இலங்கை முஸ்லிம் சமூகம் மிக நீண்ட காலமாக கட்டிக்காத்து வந்த சமூக நிறுவனங்கள் அதன் மேல்மட்ட உறுப்பினர்களின் பலவீனங்களால் அல்லது அவற்றின் செயற்பாட்டு மந்த கதிகளினால் தடம்தெரியாது இல்லாமலாகிவிடக்கூடாது. ஏனெனில் அத்தகைய நிறுவனங்களை புதிதாய் கட்டியெழுப்புவதோ அவை அங்கீகாரம் பெறுவதோ மிக இலேசான காரியமல்ல. மட்டுமன்றி இத்தகைய சமூக நிறுவனங்கள் தனிநபர்களின் செயற்பாட்டுத் திறனின்மைகளால் செயலற்று போய்விடக்கூடாது.
கடந்த சில வருட வரலாற்றில் சமூகத் தலைமைகள் அல்லது குழுக்கள் சமூக விடயங்களில் நடந்துகொண்ட தவறான சில தருணங்களின் போது அத்தவறுகளை சரிசெய்துவிடுவதற்கோ அல்லது அவை குறித்த சரியான தெளிவை சமூகமயப்படுத்துவதற்கான முயற்சிகள் அறவே இருக்கவில்லை.
உதாரணத்திற்கு, முஸ்லிம் தனியார் சட்ட சீர்த்திருத்தம் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்வதில் ஏற்பட்ட இழுபறிகள், 20வது திருத்தச் சட்டத்திற்கு நிபந்தனைகளின்றி சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆதரவளித்தமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் சென்ற மார்க்கப் பிரதிநிதிகள் நடந்து கொண்ட முறை.. இவை போன்ற சந்தர்ப்பங்களில் சமூகம் இரு வேறாகப் பிரிந்து தெருச் சண்டைப் போட்டதே தவிர குறித்த விடயங்களை வழிப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க பொதுத் தரப்பொன்றோ பொறிமுறையொன்றோ இல்லாமையை நன்குணர முடிந்தது.
மேலும் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதலோடு தொடர்புபடாத பல்வேறு சமூக நிறுவனங்களும் சில சமூகத் தலைமைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சமூக நிறுவனங்களுக்கு சமூகம் சார்பாக பக்கபலமாக நிற்கின்ற மூன்றாம் தரப்பினரின் பிரசன்னத்தை மிக அரிதாகவே காணக்கிடைத்தது. இந்நிலையில் சமூகத்தின் பிரச்சினைகளை விட தமது நிறுவனத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் அவைக் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மறுமொழியளிப்பதற்குமே சமூக நிறுவனங்கள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டியிருந்தது.
இந்த வகையில் சமூகத் தலைமைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிப்பதற்கும் அதனைத் தூண்டுவதற்குமான புதிய பொறிமுறையொன்று சமூகத்தின் உள்ளிருந்து தோற்றம் பெறுவது அவசியமாகின்றது.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் துறைசார் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இத்தகைய பொறிமுறையை உருவாக்கலாம்.
இத்தகைய பொறிமுறையொன்று மிக விரைவில் உருவாக்கப்படாத போது சமூகம் இன்றுள்ள நிலையை விட மிகப் பலவீனமான நிலைக்கு கீழ்நோக்கிச் செல்லும் என்பதே யதார்த்தம். அதிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டும்.
15 ஜூன், 2020
ඥානසාර හිමි බේරුවල - නලිමියා විද්යාලය ගැන අසත්ය පතුරවයි.
ඥානසාර හිමි බේරුවල - නලිමියා විද්යාලය ගැන අසත්ය පතුරවයි.

බොදු බල සේනා සංවිධානයේ මහ ලේකම් ගලගොඩඅත්තේ ඥානසාර හිමි මාධ්ය හමුවක් කැඳවමින් 2020.06.04 දින නිකුත් කරන ලද නිවේදනයක ඔහු බෙරුවල නලිමියා සහ එහි උපාධිධාරීන් පිළිබඳව යම් යම් චෝදනා ඉදිරිපත් කර තිබුණි. නලිමියා අධ්යාපන ආයතනයේ ආදි ශිෂ්යයෙකු ලෙස මම ඔහුගේ ප්රකාශයන්ගැන පැහැදිලි කිරීමට කැමැත්තෙමි.
ඥානසාර හිමි විසින් සඳහන් කරන ලද නලිමියා විද්යාලය පසුගිය වසර 47 ක කාලය තුළ රට තුළ ක්රියාත්මක වන අධ්යාපන ආයතනයකි. සුප්රසිද්ධ මැණික් ව්යාපාරික වන නලීම් හජියාර් විසින් 1973 දී ආරම්භ කරන ලද මෙම පාසලෙන් 1500 කට අධික පිරිසක් උපාධි ලබා ඇත. තවද මෙම අායධනය පාර්ලිමේන්තුවේ සංස්ථාගත කර ඇති විද්යාලයකි.
සිංහල ප්රජාව අතර ආනන්ද සහ නාලන්දා වැනි විද්යාල ජනප්රියතාවය මෙන් මුස්ලිම් ප්රජාව තුළ නලිමියා විද්යාලය ජනප්රිය අධ්යාපනය ආයතනයක් වේ.
ඥානසාර හිමි විසින් සඳහන් කරන ලද නලිමියා විද්යාලය පසුගිය වසර 47 ක කාලය තුළ රට තුළ ක්රියාත්මක වන අධ්යාපන ආයතනයකි. සුප්රසිද්ධ මැණික් ව්යාපාරික වන නලීම් හජියාර් විසින් 1973 දී ආරම්භ කරන ලද මෙම පාසලෙන් 1500 කට අධික පිරිසක් උපාධි ලබා ඇත. තවද මෙම අායධනය පාර්ලිමේන්තුවේ සංස්ථාගත කර ඇති විද්යාලයකි.
සිංහල ප්රජාව අතර ආනන්ද සහ නාලන්දා වැනි විද්යාල ජනප්රියතාවය මෙන් මුස්ලිම් ප්රජාව තුළ නලිමියා විද්යාලය ජනප්රිය අධ්යාපනය ආයතනයක් වේ.
2000 සිට 2007 දක්වා මම අධ්යාපනය ලැබුවේ නාලිමියාවේ ය. ඥානසාර හිමි පවසන පරිදි අපට මෙහි මූලධර්මවාදී අදහස් හෝ ත්රස්තවාදී අදහස් උගන්වා නැත. මෙය රහසිගතව පවත්වාගෙන යනු ලබන නීති විරෝධී විද්යාලයක් නොවේ. ශ්රී ලංකාවේ ප්රමුඛ පෙළේ දේශපාලන නායකයින් මෙම විද්යාලය සමග සමීපව සම්බන්ධ විය.
අභාවප්රාප්ත සිරිමාවෝ බණ්ඩාරනායකගේ රජය මූල්ය අර්බුදය මුහුණ දීමට සිදු වූ විට මූල්ය ආධාර සැපයූ නලීම් හජියාර්, මෙම විද්යාලය විවෘත කළේ මෙම කාලය තුළ ය. තවද ජේ.ආර්. ජයවර්ධන මහතා, රණසිංහ ප්රේමදාස මහතා වැනි දේශපාලන නායකයින් මෙම විද්යාලය ඉදිරියට ගෙන යාම සඳහා නලීම් හාජියාර්ට ඔවුන් විශාල උදව් ලබා දී ඇත. මෑතකදී හිටපු ජනාධිපතිනිය චන්ද්රිකා බණ්ඩාරනායක මහත්මියද සමාජ සහජීවනය සඳහාවු මධ්යස්ථානයක ශාඛාවක් මෙම අායධනය තුළ විවෘත කිරීමත් විශේෂ ලෙස සඳහන් කළ යුතුය.
මෙතරම් ප්රමුඛ සංස්කෘතියක්යුත් ජනප්රිය මුස්ලීමි විද්යාලයක් පිළිබඳව ඥානසාර හිමි මෑතක සිට මාධ්යවල අසත්ය ප්රකාශ කරමින් සිටි. නලීමියා උපාධිධාරීන් රජයේ මර්මස්තානවල ප්රධාන තනතුරු දරන අතර මූලධර්මවාදී අදහස් ක්රියාත්මක කිරීමට උත්සාහ කරන බව ඔහු පැවසීය. සමහර නලිමියා උපාධිධාරීන් උසස් තනතුරුවල සිටින බව සත්යයකි. මේ රටේ පුරවැසියෙකු වන ඕනෑම පුද්ගලයෙකුට රටේ රාජ්ය පරිපාලනයේ නීතිවලට අනුකූලව පවත්වනු ලබන තරඟ විභාග සඳහා අයදුම් කළ හැකිය. මෙවැනි විභාගවලින් සමත් නලිමියා උපාධිධාරීන් පරිපාලන, අධ්යාපන හා විදේශ සේවා ක්ෂේත්රවල සිටීම ඔවුන්ව වැරදිකරුවන් ලෙස සැලකිය හැක්කේ කෙසේද?
මෙය ලියන මා පසුගිය වසර 4 ක කාලයක් මැද පෙරදිග ශ්රී ලාංකා තානාපති කාර්යාලයක භාෂා පරිවර්තකයෙකු ලෙස සේවය කරමි. මෙහි සේවය කරන අපේ රට වැසියන්ගේ දුෂ්කරතා විසඳන්න මට උදවිවුනේ නලිමියා මට උගන්වු අරාබි, ඉංග්රීසි සහ සිංහල භාෂා දැනුමන්ය. බොරු, අල්ලස් හා දූෂණයෙන් තොරව මගේ රට වැනුවෙන් සේවය කිරීමේ ගුණාංග නලිමියා මට උගන්වා ඇත. මනුෂ්යත්වය, යුක්තිය සහ සත්යය වැනුවෙන් පැණී සිටීම මා තුළ නිර්මාණය කළ නලීමියා බොරු කීමට වංචා කිරීමට මට උගන්වා නැත. නලීමීයා උපාධිධාරීන් වැඩ කරන ඕනෑම තැනකට ගොස් විමර්ශනය කරන්න, ඔවුන් රටේ සුභසාධනය සඳහා අවංකව කටයුතු කරන බව ඔබට පෙනී යනු ඇත.
ශ්රී ලංකාවේ වාර්ගික දේශපාලන ගැටඑ අැති කිරීමේ න්යාය පත්රයේ ඥානසාර හිමිට ඇති දායකත්වය මුළු රටම දනී. ධර්මය උගන්වන භික්ෂූන් වහන්සේලා බොරුව හා කෝපය පෝෂනය කිරීම ජාතියට හා රටට භයානක ය.
මෙවැනි පදනම් විරහිත ක්රියාව දැඩි ලෙස හෙළා දකීම සියලු ජනතාවගේ යුතුකම ය.
(ඉස්මත් අලී)
4 பிப்., 2015
இலங்கை மண்ணில் எமது வரலாறும் பங்களிப்பும்
இஸ்மத் அலி (நளீமி)
அரேபியத் தீபகற்பத்தில் இஸ்லாம் அறிமுகமாகி வளர்ச்சி பெறத்தொடங்கும் காலத்திலிருந்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் தொடங்குகின்றது என்பது வரலாற்று நூற்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் கி.பி 2ம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது என்று Thomas Arnold எனும் மேற்கத்தேய அறிஞர் Preaching Of Islam என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
நபி (ஸல்) அவர்களின் தூதுவர் வஹாப் இப்னு அபீ ஹப்ஸா கி.பி. 628ல் முதலாம் அக்கபோதியை சந்தித்து இஸ்லாத்தைத் தெளிவுபடுத்தி இங்கிருந்த அரேபியர்களில் சிலரை இஸ்லாத்தைத் தழுவச் செய்தல். அல்கியா பாக்கரி, ஹூசைன் பின் முஹம்மத், பக்: 184 – குறிப்பிடுவதாக சித்திலெப்பைக் குறிப்பிடும் குறிப்பு.
அஜாஇபுல் ஹிந்த் எனும் நூலில் இப்னு ஷஹ்ரயார் 'இலங்கை மன்னன் அரேபியாவுக்கு இஸ்லாத்தை அறிந்து வர ஒரு தூதரை அனுப்பினான்' என்று சொல்லும் குறிப்பு.
கி.பி. 700 ல் 2ம் தாதோபதிஸ்ஸ மன்னன் பனூஹாஷிம் இனத்துப் பெண்களை அரேபியாவுக்கு அனுப்பி வைத்த சம்பவம்.
என்பன இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அது இலங்கையிலும் பரவ ஆரம்பித்தது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன.
அப்பாஸிய கலீபா ஹாருன் அல்ரஷீதால் அனுப்பிவைக்கப்பட்ட காலித் பின் அபூ பகாயா என்பவரின் ஞாபகார்த்தமாக நடப்பட்ட நடுகல். (ஹி:317ஃகி.பி. 929 மரணம்)
'இலங்கை மன்னனின் ஆலோசனை சபையில் நான்கு பௌத்தர்கள், நான்கு முஸ்லிம்கள், நான்கு கிறிஸ்த்தவர்கள், நான்கு யூதர்கள் இருந்தனர்' என்ற அல்-இத்ரீஸி எனும் 12ம் நூற்றாண்டு அறிஞரின் கூற்று
மூன்றாம் விஜயபாகுவின் முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த வத்ஹிமி பண்டார குருநாகலையில் ஆட்சி செய்தமை
1211ல் மரணித்த காழி யூஸூப் அல்அலவி, அமீர் பத்ருத்தீன் ஹூசைன் என்பவரின் புதல்வி ஆகியோரின் கல்லறை நடுகற்கற்கள்
1344 ல் இலங்கையை தரிசித்த இப்னு பதூதா முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடும் குறிப்புக்கள்
என்பன எமது வரலாறு இந்த நாட்டில் 1000 ஆண்டுகளை விடப் பழமைவாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் இன்னும் சில ஆதராங்களாகும்.
இந்நாட்டிற்கு வியாபாரிகளாக வந்த எமது முன்னோர்கள் இலாப நோக்கத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளவில்லை. தாம் சுமந்திருந்த இஸ்லாமியத் தூதின் நல்லம்சங்களை எத்திவைப்பதற்கும் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்வதற்கும் அவர்கள் பின்நிற்கவில்லை.
கி.பி. 1070 சோழர்களை வெற்றிகொண்ட ருஹூனு மன்னன் முதலாம் விஜயபாகு காலத்தில் முக்கிய வணிகராக பெரிய தம்பி மரிக்கார் இருந்தமை, இவரது கப்பல் ஊடாக இந்தியாவிலிருந்து மன்னனின் முடி சூட்டு விழாவுக்கு பிராமணர்கள் அழைத்து வரப்பட்டமை...
தம்பதெனியவை ஆட்சி செய்த 3ம் விஜயபாகுவின் காலத்தில் பேருவலை மீராலெப்பை என்பவர் சாலியர் எனும் நெசவாளர்களை இலங்கைக்கு அழைப்பித்து நெசவுத் தொழிலை இங்கு உயிர்ப்பித்தமை.
இரண்டாம் பராக்கிரமபாகுவின் (1236-1270) தம்பதெனிய காலப்பகுதியில் கோபால முதலிகே அன்சார் துபைல் என்பவர் அரச வைத்தியராகச் செயற்பட்டுள்ளமை
யாப்பஹூவையை ஆட்சி செய்த 1ம் புவனேகபாகு (1273-1284) மன்னன் எகிப்திய மம்லூக்கிய சுல்தான் கலாஊனுக்கு 1283ம் ஆண்டு அனுப்பிய தூதுக் குழுவுக்கு அபூ உஸ்மான் என்பர் தலைமை தாங்கியமை.
2ம் ராஜசிங்கனின் காலத்தில் (1634-1684) மன்னனின் உதவிக்காக சென்ற முஸ்லிம்களின் 'ஒட்டுபந்திய' எனும் ஒட்டகப் படை
இவை எமது முன்னோர்கள் இந்நாட்டுக்குச் செய்த பல்துறை பங்களிப்புக்கான ஒரு சில உதாரணங்களே.
மேலும் எமது முன்னோர்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக பௌத்த, இந்துத் தலைவர்களோடு கைகோர்த்து உழைத்திருக்கிறார்கள். இந்நாட்டை ஆக்கிரமிக்க வந்த போர்த்துக்கேயர்களையும் ஒல்லாந்தர்களையும் எதிர்த்து நின்றவர்களில் முதன்மையானவர்கள் எம் மூதாதையர்கள். ஏனெனில் நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் என்ற வகையிலும் கப்பல் மூல வர்த்தகத்தில் ஏக போக உரிமைப்பெற்றவர்காக அது வரை திகழ்ந்தவர்கள் என்ற வகையிலும் காலணித்துவவாதிகளை எதிர்த்து நிற்பது அவர்களின் தேவையாக இருந்தது. எனவே சிங்கள மன்னர்களுக்கு உதவியாக அவர்கள் அரும்பெறும் தியாகங்களை மேற்கொண்டனர். கரையோரங்களிலிருந்து விரட்டப்பட்ட அவர்கள் பின்பு நாட்டின் உட்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சிங்கள மன்னர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் அவர்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுப்போராகவும் இதயசுத்தியோடு செயற்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் அவர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்காய் ஏனைய இனத்தவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையைக் கட்டியெழுப்பும் விடயத்தில் தமது நிலங்களையும் சொத்துக்களையும் வழங்கி எமது முன்னோர்கள் பெரும்பங்களிப்புச் செய்துள்ளனர்.
எமது முன்னோர்கள் ஒன்றிணைந்து பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாமும் கொண்டாடுவோம்! அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டிற்கு பங்களிப்புச் செய்வோம்!
26 அக்., 2014
புதிய வருடம் - புதிய பயணம் - ஹிஜ்ரி - 1436
இஸ்மத் அலி

புதியதொரு ஹிஜ்ரி வருடத்தில் (ஹி 1436) நாம் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். கடந்த வருடத்தில் நாம் எதனை சாதித்தோம்? எதனை சாதிப்பதற்கு தவறினோம்? எவற்றையெல்லாம் நாம் இழந்தோம்? என்பதை இந்த தருணத்தில் சிந்தித்துப் பார்ப்பதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாம் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த வருடம் முன்னைய வருடங்களை விட அருள்மிக்கதாக இருப்பதற்கு அல்லாஹூத்தஆலா ஒருவனே போதுமானவன். என்றாலும் நாம் எதிர்கொள்கின்ற சவால்களும், பிரச்சினைகளும் எமது இந்த வருடம் எப்படி அமையப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்குள் இன்று ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சவால்களை புத்திசாலித்தனத்தோடு எதிர்கொண்டு வெற்றிபெற்று இந்த வருடத்தை எமக்கும், எமது குடும்பத்திற்கும், எமது ஊருக்கும், எமது நாட்டிற்கும், முழு அகிலத்திற்கும் சுபீட்சம் மிக்கதாய் அமைத்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.
இந்த புதிய வருடத்தின் ஆரம்பம் எமக்கு நபிகளாரின் ஹிஜ்ரத்தை ஞாபகப்படுத்த வேண்டும். ஒரு பலவீனமான நிலையில் மக்காவை துறந்து மதீனாவைத் தளமாகக் கொண்ட பேரரசு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு மேற்கொண்ட பயணமே இந்த ஹிஜ்ரத் நிகழ்வாகும். இதனை ஞாபகப்படுத்துவதன் மூலம் நாம் எமது உள்ளங்களை பலப்படுத்திக்கொள்வதோடு எமக்குள் இருக்கின்ற அச்ச உணர்வை நீக்கிக்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். மேலும் இந்த புதிய வருடத்தில் எம்மை 03 முக்கியமான விடயங்களில் பலப்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். இம்மூன்று காரணிகளும் ஒரு சமூகத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஈமானிய பலம் : (قوة الإيمان)
எம்மைப் படைத்த இறைவனுக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு எப்போதும் பலமானதாக இருக்க வேண்டும். இந்த அகிலத்தில் இருக்கின்ற அத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து எம்மை அழிப்பதற்கு முயற்சித்தாலும் அல்லாஹூத்தஆலாவுடனான எமது இருக்கமான தொடர்பு அந்த சக்திகள் அனைத்தையும் பலவீனப்படுத்திவிடும் என்பதையும், அந்த தொடர்பு பலவீனமானதாக அமைகின்ற போது எமக்குள் இருக்கின்ற அனைத்து பலங்களும் பலவீனமானதாக ஆகிவிடும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொழுகை, பிரார்த்தனை, அல்குர்ஆனுடனான பிணைப்பு, தவ்பா, இஸ்திஃபார் மற்றும் ஏனைய வணக்கங்கள் என்பன எமக்கும் எமது இறைவனுக்கும் இடையிலான தொடர்பை பலப்படுத்தி நெருக்கமாக்கின்ற விடயங்களாகும்.
சகோதரத்துவப் பலம் : (قوة الأخوة)
எமக்கு மத்தியில் உள்ள இயக்க, அரசியல், பிரதேச ரீதியான பிளவுகள் எம்மை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. 'அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடியுங்கள்' என்ற குர்ஆனிய வசனம் எமக்குள் மறக்கடிகக்கப்பட்டுள்ளது. அற்பமான விடயங்களுக்காய் முரண்பட்டு பிரிந்துநிற்கின்ற அவலத்தையே எமது சமூகமெங்கிலும் காண்கின்றோம். கருத்து முரண்பாடுகளை அணுசரித்து செயற்படுகின்ற தன்மையும், உம்மத்தின் அனைத்து தரப்பினரையும் சகோதரர்களாக எண்ணுகின்ற நிலையும் எமக்குள் ஏற்பட வேண்டும். ஸலாம் சொல்லுதல், அன்புகாட்டல், மனித நேயம், உதவி மனப்பான்மை, ஆலோசித்தல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற பண்புகளின் ஊடாக எமக்கிடையிலான சகோதரத்துவத்தை நாம் பலப்படுத்த முடியும். குறிப்பாக ஊர் மற்றும் சமூக, தேசிய விடயங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற பொழுதுகளிலும் சமூக அபிவிருத்திக்கான செயற்பாடுகளிலும் எமது முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட நாம் முன்வரவேண்டும்.
சடரீதியான பலம் : (قوة المادية)
அல்லாஹ்வின் மார்க்கத்தை எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப, ஊர், தேசிய மட்டங்களில் நிலைநாட்ட வேண்டுமெனில் சடரீதியான சில பலங்களை நாம் பெற்றிருப்பது அவசியமாகும். உடல் ஆரோக்கியம், சிறந்த கல்வி, சுத்தமான சூழல், உயர் பொருளாதார நிலை, நீதியான அரசியல் என்பவை எமது சமூகத்தின் வெற்றிக்கு இன்றியமையாத விடயங்களாகும். இவற்றில் எமக்குள் இருக்கின்ற பலவீனங்கள் என்ன என்பதை கண்டறிந்து அவற்றைப் பலப்படுத்துவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பலவீனங்கள் எமது மார்க்கத்தினதும் சமூகத்தினதும் பலவீனமாகவே பிறரால் நோக்கப்படும்.
மேற்சொன்ன மூன்று வகையான பலங்களையும் பெற்று புதிய ஹிஜ்ரி வருடத்திலிருந்து புதியதொரு பயணத்தைத் தொடர அல்லாஹூத்தஆலா அருள்பாலிப்பானாக!!
(முஹர்ரமை முன்னிட்டு எழுதிய இந்த ஆக்கம் துண்டுப் பிரசுரமாக சில முஸ்லிம் பிரதேசங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. (புகழ் அனைத்தும் அல்லாஹூக்கே). )
20 அக்., 2014
குவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்.
இஸ்மத் அலி (நளீமி)
இஸ்லாமிய அரசானது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டமைந்தது என்ற வகையில், அது ஆட்சியாளன் என்ற தனி மனிதனிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருப்பதை தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் இறைதூதராக இருந்த போதிலும் நாட்டின் நிர்வாக மற்றும் நடைமுறை விவாகரங்கள் தொடர்பில் எதேச்சதிகாரமாக தீர்மானங்களை எடுக்கின்றவராக இருக்கவில்லை. இவ்விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கென நபி(ஸல்) அவர்கள் 03 முக்கிய அமைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்கள்.
1) முஅஸ்ஸஸதுல் உமரா.
2) முஅஸ்ஸஸதுன் நுகபா.
3) மஜ்லிஸூஸ் ஷூறா.
முஅஸ்ஸஸதுல் உமரா என்பது முஹாஜிரீன்களின் பத்து சஹாபாக்களைக் கொண்ட அமைப்பாகும். இச்சபையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அபூஉபைததிப்னுல் ஜர்ராஹ், ஸஃத் பின் அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் பின் அவ்ப், ஸஈத் பின் சைத் (ரழியல்லாஹூ அன்ஹூம்) ஆகியோர் அங்கம்வகித்தனர்.
முஅஸ்ஸஸதுன் நுகபா என்பது நபி(ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கு முன்னரே உருவாகப்பட்ட அமைப்பாகும். இச்சபையானது அன்சாரி ஸஹாபாக்களின் பன்னிரெண்டு பேரை கொண்டமைந்திருந்தது. இரண்டாவது அகபா உடன்படிக்கையின் போது 'உங்களில் பன்னிரெண்டு பேரைத் தெரிவு செய்து எனக்குச் சொல்லுங்கள். தமது கோத்திரத்தாரின் பிரதிநிதிகளாக அவர்கள் செயற்படுவார்கள்' என்ற நபிகளாரின் கட்டளைக்கேற்ப, கஸ்ரஜ் கோத்திரத்திலிருந்து ஒன்பது பேரையும், அவ்ஸ் கோத்திரத்திலிருந்து மூன்று பேரையும் அன்சாரிகள் தெரிவு செய்தனர் என்று வரலாற்றாசிரியர் இப்னு ஹிசாம் குறிப்பிடுகின்றார்.
இவ்விரு சபைகளின் பிரதிநிதிகளோடு சேர்த்து நபிகளாரின் மஜ்லிஸூஸ் ஷூறாவானது 70 சஹாபாக்களைக் கொண்டமைந்திருந்தது என்பது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர் முஹம்மத் அம்மாராவின் கூற்றாகும். பத்ர் யுத்த கைதிகள் விடயத்தில் நபிகளார் மேற்கொண்ட ஆலோசனை, கந்தக் யுத்தத்தில் ஸல்மானுல் பாரிஸி (ரழி) ஆலோசனைப் பிரகாரம் செயற்பட்டமை, மட்டுமன்றி, பல போது சஹாபா பெண்மணிகளிடம் கூட நபிகளார் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய அரசில் சட்டவாக்க அதிகாரம் என்பது அல்லாஹூக்குரியது. அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசு பரிபாலிக்கப்பட வேண்டும். இவ்விரண்டு சட்ட மூலாதாரங்களில் குறிப்பிடப்படாத விடயங்கள் தொடர்பில் இஜ்திஹாதின் மூலம் முடிவுகளைப் பெறுவதற்கு ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் சுதந்திரமளித்துள்ளது. ஆனால் இம்முடிவுகள் குர்ஆன், சுன்னா, இஜ்மா என்பவற்றுக்கு முரணில்லாத வகையிலும் - பலரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பெறப்பட்ட முடிவுகளாக அமைய வேண்டும். ஏனெனில் ஒரு தனிமனிதனின் முடிவு எப்போதும் மிகச் சரியானதாகவோ, சரியானதாகவே அமையும் என்று கூற முடியாது.
மேலும் அல்-குர்ஆன், சமூக தளத்தின் மூன்று முக்கிய அலகுகளான குடும்பம், சமூகம், நாடு என்பவற்றின் தீர்மானங்கள் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. குழந்தைக்குப் பால்குடி மறக்கடிக்கப்படும் விடயம் கணவன்-மனைவி ஆகிய இருவரினதும் ஆலோசனையின் பிரகாரம் அமைய வேண்டும் என்பது அல்-குர்ஆனின் கட்டளையாகும். மேலும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றாக 'ஆலோசித்தல்' என்பதை அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.
'அவர்கள் தமது இரட்சகனின் அழைப்புக்கு பதிலளித்தார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டினார்கள். தமது விடயங்கள் தொடர்பில் தமக்கு மத்தியில் ஆலோசித்துக் கொண்டார்கள். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளிலிருந்து செலவு செய்வார்கள்' ( சூறதுல் ஷூறா : 38).
இவ்வசனத்தில் ஆலோசித்தல் தொழுகைக்கும் இறை பாதையில் செலவு செய்வதற்குமிடைப்பட்ட தரத்திலுள்ள பண்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை சமூக வாழ்வில் ஆலோசனையின் முக்கியத்துவத்தை புலப்படுத்துகின்றது.
குடும்ப மற்றும் சமூக விவகாரங்களில் ஆலோசனை நடத்துவதை வலியுறுத்தும் இஸ்லாம் நாட்டின் ஆட்சியியல் விவகாரத்தில் அதனை ஒரு கடமையாக ஆக்கியுள்ளது.
'அவர்களின் விடயங்கள் தொடர்பாக அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வீராக!' (ஆல-இம்றான்:159)
என்ற அல்-குர்ஆனிய வசனத்திற்கு விளக்கமளிக்கும் இமாம் இப்னு அதிய்யா (ஹி:481-542) ' ஷூறா (கலந்தாலோசனை) என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை அம்சமாகும். யாரொருவர் மார்க்க மற்றும் துறைசார் அறிஞர்களின் ஆலோசனையின்றி செயற்படுகின்றார்களோ அவர்களை பொறுப்பிலிருந்து நீக்குவது கடமையாகும்' என்று குறிப்பிடுகின்றார்.
பிறரின் ஆலோசனைகள் கருத்திற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு தனியொரு மனிதனின் விருப்பங்களும், கருத்துக்களும் அதிகாரம் செலுத்த முற்படுகின்ற போது அதன் விளைவு சமூகத்தினதும், அரசினதும் அழிவாகவே அமையும் என்பது வரலாறு சொல்லும் சாட்சியாகும். உண்மையில் அதிகாரம் தனி மனிதர்களிடம் குவிக்கப்படுகின்ற போது தன்னை மிகைக்க எவருமில்லை என்ற எண்ணத்தையும், தற்பெருமையையுமே அது ஆட்சியாளர்களிடம் குடிகொள்ளச்செய்யும். இந்நிலையானது, ஆட்சியாளனை 'நானே கடவுள்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவனில் தற்பெருமையை உருவாக்கிவிடும் என்பதற்கு அல்-குர்ஆன் கூறும் பிர்அவ்னின் வரலாறு உதாரணமாகும்.
நவீன கால அரசுகளில் அதிகாரம் என்பது தனியொரு மனிதனிடம் குவிக்கப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை யாப்பின் ஊடாக வரையறுப்பதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அனேகமான நாடுகளில் நாட்டின் தலைவர் அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியின் விருப்புக்களும், கருத்துக்களும் மட்டுமே மக்கள் விருப்பங்களாக பிரதிபலிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் அதிகாரம் என்பது தனியொரு மனிதனிடம் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையையே நாம் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கு இத்தகைய குவிக்கப்பட்ட அதிகாரமே பிரதான காரணியாகும் என்றால் அது மிகையல்ல.
ஒரு தேசத்தில் அதிகாரம் தனியொரு மனிதனிடம் குவிக்கப்பட்டிருக்கின்றதென்றால் அங்கு மக்கள் விருப்புக்கோ அல்லது அவர்களின் நலன்களுக்கோ எவ்வித பெருமானமும் வழங்கப்படவில்லை என்பதே அதன் கருத்தாகும். இத்தகைய அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி என்பது தவிர்க்க முடியாதது என்பதற்கு பிர்அவ்னின் அதிகாரத்திற்கு எதிராக மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களுடன் இணைந்து மேற்கொண்ட புரட்சியும், மிக அண்மைக் காலங்களில் நிகழ்ந்த டியூனீசியா, எகிப்து, லெபனான், யமன் போன்ற நாடுகளின் மக்கள் புரட்சிகளும் சான்றாகும்.
எனவே ஒரு தேசத்தின் நிலைத்த தன்மைக்கும், அதன் உண்மையான அபிவிருத்திக்கும், மக்கள் சுபீட்சத்திற்கும் அடிப்படையாக அமைவது குவிக்கப்படாத அதிகாரமும், நபிகளார் காட்டித்தந்த ஆலோசனை முறைமையுமே என்பது தெளிவாகும்.
சிறுபான்மை சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம் சமுகம் இப்பண்பைப் பெற்றிருப்பது இன்றியமையாததாகும். எமது பாடசாலைகள், பள்ளிவாசல்கள், ஊர் விவகாரங்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களின் தேசிய அரசியல் விவகாரங்களும் இத்தகைய 'ஷூறா' – ஆலோசனையின் அடிப்படையில் அமைவதே எமது விடிவுக்கான ஒரே வழியாகும்.
ஆனால் நடைமுறையில் எமது சமூகம் இப்பண்பைப் பெற்றிருக்கின்றது என்பது கேள்விக் குறியே. எமது பெற்றோர்களில் எத்தனை பேர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் ஆலோசித்து திட்டமிடுகின்றனர்?. எமது பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்து எத்தனை அதிபர்கள் சக ஆசிரியர்களிடமும், மாணவர்கள்கள், பெற்றோர்களிடமும் ஆலோசனை நடத்துகின்றனர்?. எமது பள்ளிவாசல்கள், ஊர் விவகாரங்கள் தொடர்பிலான தீர்மானங்கள் பலதரப்பட்டோரினதும் ஆலோசனை அடிப்படையிலான தீர்மானங்களாகவா அமைகின்றன? ஏன், எமது அரசியலில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் எடுக்கின்ற முடிவுகள் எமது சமூகத்தின் புத்திஜீவிகளையும், ஆலிம்களையும், சமூக நலன் விரும்பிகளையும் கலந்தாலோசித்தா மேற்கொள்ளப்படுகின்றன? மேற்குறிப்பிட்ட விடயங்களில் தொண்ணூறு வீதமான விடயங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் ஒரு சில தனிமனிதர்களின் விருப்புக்களாக அமைகின்றனவே தவிர மக்களின் விருப்புக்களாக அமைவதில்லை.

16 ஜூன், 2014
வன்முறைகளுக்குப் பின்....எமது பணி.
இஸ்மத் அலி
![]() |
| வன்முறைகளுக்குப் பின்....எமது பணி. |
சிங்கள இனவாதப் பிசாசுகள் மிக நீண்ட நாட்களாய் தாம் எதிர்பார்த்ததை சாதித்து முடித்துள்ளன. அரசாங்கத்தின் ஆதரவோடு ஏழு உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் வீடுகளையும் இறையில்லங்களையும் அழித்து கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கிறது.
இந்த அரக்கத்தனத்தை தணிப்பதற்கு முஸ்லிம் தலைமைகள், அமைப்புக்கள் என்பன அயராது பாடுபட வேண்டியிருந்தது.
கொசு கடித்தாலும் அதில் தலையீடு செய்யும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுபல சேனாவின் செவிலித் தாய் கோத்தாபய இது பற்றி இது வரை எதுவும் வாய்த் திறக்கவில்லை.
இப்போது பிரச்சினைகள் தணிந்திருக்கின்றன. ஏனைய பகுதிகளுக்கு பரவலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட அச்சங்கள் குறைந்திருக்கின்றன. என்றாலும் எந்த உத்தரவாதமும் இல்லை என்றே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.
எமது முதல் பணி :
பாதிக்கப்பட்டவர்களின் உடனடி உணவு, தங்குமிட, மருத்துவ வசதிகளை கவனித்தல்.
பாதிப்புக்கள் குறித்த சரியான கணிப்பீட்டை மேற்கொள்ளல்.
பாதிப்புக்களை ஈடுசெய்ய உதவிசெய்து ஆறுதல் அளித்தல்.
அல்லாஹூத்தஆலா மீதான நம்பிக்கை, அவனுடனான தொடர்பு என்பவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்களைப் பலப்படுத்தவும், அமைதியடையச் செய்யவும் வழிகாட்டல்.
சட்ட ரீதியான நடவடிக்கைகள் :
இப்பிரச்சினைகளுக்கு பின்புலமாய் இருந்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது. குறிப்பாக ஞானசார கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அழுத்தங்களும் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட வேண்டும். பொதுபலசேனா அமைப்பு தடைசெய்யப்படும் வரை நாம் எமது போராட்டத்தை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அவன் விரும்பிய போதெல்லாம் குட்டி விட்டு சண்டித்தனம் செய்கின்ற நிலையே நீடிக்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈட்டை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க முயற்சித்தல்.
இன உறவைக் கட்டியெழுப்பல்
பொதுவாக அனைத்து ஊர்களிலும் குறிப்பாக சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளிலும் பாதிப்படைந்துள்ள இன உறவைக் கட்டியெழுப்ப முயற்சித்தல். ஏனெனில் குறிப்பிட்ட நிகழ்வுகளினால் ஏற்பட்டுள்ள மனக் கசப்புகள் இத்தகைய நிகழ்வுகள் தொடர் சங்கிலியான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும்.
சிந்திக்க வேண்டியது :
எமது முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்புக் குறித்தும் இத்தகைய முறுகல்களின் போது நாம் செயற்பட வேண்டிய முறை பற்றியும் பொறிமுறையொன்றை மிக அவசரமாக தயாரிப்பதும் அதனை தெளிவுபடுத்தலும்.
17 ஆக., 2013
ஜ.உலமா தொடர்பான உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரின் கருத்தும் அது பற்றிய தவறான சித்தரிப்புகளும்
மௌலவி ஹைதர் அலி அவர்களுக்கு
ஒரு பகிரங்க மடல்
மௌலவி அவர்கள் எழுதிய மடலும்
பகிரங்க மடல் என்ற காரணத்தினால் நானும் இம்மடலை பகிரங்கமாகவே எழுத யோசித்தேன் என்பதை
ஆரம்பமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பின் மௌலவி அவர்களே!
நீங்கள் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்
அவர்களுக்கு எழுதியிருந்த திறந்த மடலை நான் முழுமையாக வாசித்து விட்டு இக்கடிதத்தை
உங்களுக்கு மிகவும் மனவேதனையுடன் எழுதுகின்றேன்.
உண்மையில் வரிக்கு வரி பதில்
எழுதி, அடுத்தவர்களை கண்டபடி
விமர்சிப்பது நான் வளர்ந்த இயக்கத்தின் கலாசாரமல்ல என்பதை முதலாவதாக உங்களுக்குச் சொல்லிக்கொள்ள
விரும்புகின்றேன். நீங்கள் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் பல நூறு
முறைகள் யோசித்துவிட்டே இதனை நான் எழுதுகின்றேன். இது உண்மையில் உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரை
தூய்மைப்படுத்தும் நோக்கில் எழுதப்படும் கடிதமல்ல. அவர் உயிரோடிருக்கும் காலம் மட்டும்
அவரை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்வது அவருடைய பொறுப்பாகும். அவரது சிஷ்யர்கள் தனக்கு
தூய்மையைத் தேடித் தர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அவரிடமும் இல்லை. அக்கடமைப்பாடு
எமக்குமில்லை. ஆனால் ஓர் உண்மை உங்களால் பிழையாகப் புரியப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளதை
உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
மௌலவி அவர்களே!
சமூகத்தில் தலைவர்களுக்கு
பெரும் பங்கு இருக்கின்றது. அதனால் தான் அல்லாஹுத் தஆலா நீதியான ஆட்சியாளனுக்கு அர்ஷின்
கீழ் நிழல் கொடுக்கின்றான்,
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு
நரக வேதனையை பல மடங்காகக் கொடுக்கின்றான்.
நீங்கள் உங்களுடைய கடிதத்தில்
ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையையும் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமையையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கின்றீர்கள்.
ஆனால் அப்படி ஒப்பிட முடியாது என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். ஏனெனில் ஜம்இய்யதுல்
உலமா ஓர் இயக்கமல்ல, மாற்றமாக அது மார்க்க
விவகாரங்களுக்கான ஆலிம்களுடைய ஓர் அமைப்பாகும். அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமாவின்
தலைமைக்கு வருகின்றவர்களுக்கு ஏதாவது ஒரு ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை
விட பல மடங்கு பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.
ஒரு ஜமாஅத்தின் தலைவரது தனிப்பட்ட
கருத்து அந்த ஜமாஅத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடும். ஆனால் ஜம்இய்யதுல் உலமா போன்ற
ஒரு நிறுவனத் தலைமையின் கருத்து இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் பாதிப்படையச் செய்யக்
கூடியது என்ற விடயத்தை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
எல்லோரும் றிஸ்வி முஃப்தி
அவர்களை விமர்சித்தது போல சிறுபிள்ளைத்தனமாக நீங்களும் விமர்சித்திருக்கின்றீர்கள்
என்று நீங்கள் உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரின் விமர்சனத்தையும் நோக்கியுள்ளீர்கள். இந்த விடயத்தைப்
பற்றி விமர்சித்தவர்களில் பெரும்பாலானவர்கள் எதற்காக விமர்சித்தார்கள் என்பது அல்லாஹ்வுக்குத்தான்
வெளிச்சம். ஆனால் அவர்களில் பலர் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு விமர்சிக்கவில்லை
என்பது அவர்களது விமர்சனங்களை வாசித்த போது எளிதில் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.
இந்த இடத்தில் தான் சிறுபிள்ளைத்தனமான
சுய குரோதங்களை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களுக்கும் சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட
விமர்சனங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது.
உஸ்தாத் அவர்களுடைய விமர்சனத்தில்
றிஸ்வி முஃப்தி அவர்களுடைய நலவுகள் எதுவும் மறுக்கப்படவில்லை, அவருடைய சொந்த வாழ்க்கை
சந்திக்கிழுக்கப்படவில்லை,
பழைய தவறுகள் பட்டியல்
போடப்படவில்லை. மாற்றமாக பிறை விவகாரம் தொடர்பான தீர்மானத்தில் இருந்த சமூகம் பாதிப்படையக்
கூடிய விவகாரங்கள் மாத்திரமே சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. (ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமல்ல
உள்ளங்களிலிருப்பது எங்களுக்கும் தெரியும் என்று நினைக்கின்ற பலர் இந்தக் கட்டுரைகளுக்கு
ஷரஹ் செய்திருக்கின்றார்கள்,
அந்த விரிவுரைகளிலிருந்து
நீங்களும் சில மேற்கோள்களை சந்தேகங்களாக முன்வைத்துள்ளீர்கள).
உங்கள் மீது எனக்கிருக்கும்
பக்தி சிரத்தையை ஒருபக்கம் வைத்துவிட்டு... என்று நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள். உண்மையில் இந்த வசனம் எனது இஸ்லாமிய அறிவுக்குற்பட்ட
வகையில் பிழையானது என்று நினைக்கின்றேன். ஏனெனில் பக்தி சிரத்தை ஒரு மனிதனின் மீது
வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியுமானதல்ல. அதனைத்தான் உஸ்தாத் அவர்கள் தனது கட்டுரையில்
கட்டுப்பாடு மூன்று விதத்தில் வரலாம் என்று எழுதியிருந்தார்கள். அதில் பக்தி சிரத்தையினால்
வரும் கட்டுப்பாடு மார்க்கம் அங்கீகரித்ததல்ல என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
உங்கள் கட்டுரையின் உண்மை
வெளிப்பாடு.... என்று கூறி நீங்கள் எழுதியிருக்கும் விடயங்கள் விடயத்தில் ஒரு ஹதீஸை
நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். யுத்த களத்தில் கலிமா சொன்ன ஒருவரை
கொலை செய்து விட்டு வந்த ஒரு சஹாபியைப் பார்த்து நபியவர்கள் கூறினார்களே, அவருடைய உள்ளத்தை
நீங்கள் பிளந்து பார்த்தீரா?!
என்று. இந்த ஹதீஸின்
பாரதூரம் பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். அப்படியிருக்கும் போது நீங்கள் பயன்படுத்தியிருக்கும்
வார்த்தைகள் பற்றி தூய்மையான எண்ணத்தோடு நீங்கள் இன்னொரு முறை சிந்திக்க வேண்டும். ஏனென்றால் றிஸ்வி முஃப்தியைப்
பற்றி உங்களுக்குத் தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன் என்ற உங்களுடைய
எழுத்து உண்மையில் அவருடைய உள்ளத்தில் இருப்பவற்றை அறிந்து கொண்டு எழுதியது போன்ற தோரணையில்
இருப்பதாகவே எனக்குப் படுகின்றது.
அதே போன்று இரண்டாவது கட்டுரையின்
நோக்கமும் நீங்கள் கூறியது போலவே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகவே அமைந்திருந்தது.
ஏனெனில் முதல் கட்டுரையில் தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும், ஏதோ தவறு நடைபெற்றிருக்கிறது
திருத்திக்கொள்ளட்டும் என சித்தரிக்கப்பட்டிருந்தன. பின்னால் இணையதளங்கள்இ சமூக ஊடகங்கள்
போன்ற குட்டையைப் பார்த்த போது நன்றாகவே கலங்கி இருந்தன. பின்னர் ஆகா! எனது வார்த்தைகள்
காரம் போதாததாக ஆகிவிட்டதே. இது தான் சந்தர்ப்பம் என தமது சுய ரூபத்தைக் காட்டி இருந்தது
உண்மையில் எமக்கு மனவேதனையாக இருக்கிறது. என்ற உங்களுடைய கருத்தும்
ஒரு வித்தியாசமான தொனியை பிரதிபலிக்கின்றது, உண்மையில் உங்களுடைய உள்ளத்தில் உஸ்தாத் அவர்கள் பற்றி என்ன
கருத்திருந்தாலும் அது உங்களது தனிப்பட்ட விடயம், அதனால் வரும் பாதிப்புக்களும் உங்களுக்கு மட்டுமே!
ஆனால் நீங்கள் உங்களது சுயரூபத்தைக் காட்டியிருக்கின்றீர்கள் என்ற வார்த்தை பாரதூரமானது
என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில் சுயரூபங்களை அறிந்தவனும் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்.
அது மட்டுமல்ல ஒரு சந்தர்ப்பவாதியாக அவரை சித்தரிக்கும்; வகையில் உங்களது எழுத்துக்கள்
அமைந்திருப்பதாகவே எனது அறிவுக்குப் புலப்படுகின்றது.
அது மாத்திரமல்ல அந்தக் கட்டுரையில்
எழுதப்பட்டிருந்த சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிட்டு இதுவெல்லாம் தஃப்லீக்
ஜமாஅத்தை கேலி செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருக்கின்றன என்று விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள்.
அவருடைய நோக்கம் அதுதானென்று நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? என்ற கேள்வியை மிகவும்
தாழ்மையாக உங்கள் முன் வைக்கின்றேன்.
மற்ற ஜமாஅத்களுக்கு உள்ளே
என்ன நடக்கின்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் ஜமாஅதே இஸ்லாமியைப் பற்றி நன்கு தெரியும்.
அடுத்த இயக்கத்தையோ தனிமனிதர்களையோ விமர்சிப்பதில்லை சந்திக்கிழுப்பதில்லை என்பதை தனது
விதியாகக் கொண்ட இயக்கம் ஜமாஅதே இஸ்லாமி என்பதை பதிமூன்று வருடகாலம் எனக்கும் அவ்வியக்கத்திற்குமிடையில்
இருக்கும் தொடர்பைக்கொண்டு நான் உறுதியாக் கூறுவேன். இலங்கையில் ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்காத
ஜமாஅதே இஸ்லாமியை சந்திக்கிழுக்காத அதன் தலைமையை தாறுமாறாக விமர்சிக்காத ஒரு இயக்கமாவது
இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் தன்னை விமர்சித்த தனக்கெதிராக
நடவடிக்கை மேற்கொண்ட எந்தவொரு இயக்கத்துக்கும் எதிராக ஜமாஅத் எதுவும் செய்ததில்லை என்பது
யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
உங்களுடைய கருத்துக்களை வாசித்த
போது ஏன் இந்த மனிதர் தனக்குத் தெரியாத விடயங்களைப் பற்றியெல்லாம் எண்ணுகின்றார், எண்ணங்களில் அதிகமானவை
பாவமாயிற்றே என்ற நினைப்புத்தான் ஏற்பட்டது என்பதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகின்றேன்.
ஜமாஅதே இஸ்லாமியின் தலைவருக்கு
இந்த சமூகத்துக்கு வழிகாட்டும் பொறுப்பு இருப்பதை விட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருக்கு
அந்தப் பொறுப்பு மிக அதிகம் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.
யார் கூடி மஷூறா செய்தாலும்
இறுதி முடிவுக்கு பொறுப்புச் சொல்லும் கடமை தலைவருக்கே இருக்கின்றது என்பதையும் நீங்கள்
ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
பிறைக்குழுவின் முடிவால் சமூகம்
தளம்பியதை விட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரின் அடுத்த நாள் உரையால் இந்த சமூகம் அமளிதுமளிப்பட்டதும்
உண்மை என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.
இவ்வளவு காலமும் பிறை விவகாரத்தில்
முடிவெடுக்கப்படும் போது யாருமே ஜம்இய்யதுல் உலமா வேறு பிறைக் குழு வேறு என்று பிரித்துப்
பார்க்கவில்லை என்ற உண்மையையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
இந்த அத்தனை உண்மைகளுடனும்
சமூகத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தில் யாருமே அறிவுபூர்வமாக ஆக்கபூர்வமாக எந்தக் கருத்தையும்
முன்வைக்கவில்லை என்ற மறுக்க முடியாத உண்மை ஒன்றிருப்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள்
என்று நம்புகின்றேன்.
உண்மையில் தலைமைக்கு சாதனைகளின்
போது வரும் பாராட்டுக்கள் மட்டுமல்ல சோதனைகளின் போது வரும் விமர்சனங்களும் உரித்தானது
என்பது உலக நியதியாகும். நலவுகளின் போது தலைவர்களை நபிமார்களாகப் பார்க்கும் மக்கள்
சறுக்கல்களின் போது தலைவர்களை நாயை விடக் கேவலமானவர்களாகப் பார்ப்பார்கள். இது மக்களின்
மனோபாவம்.
ஆனால் உஸ்தாத் அவர்களின் விமர்சனம்
இந்த பாமரத்தனமான மனோபாவத்துக்கு அப்பால் நின்று சமூகம் பற்றிய அக்கறையோடு எழுதப்பட்டிருக்கின்றது
என்ற உண்மையை நடுநிலையாக நின்று அதனை வாசிக்கின்ற எவரும் புரிந்து கொள்வார்கள். ஆனால்
எமது சமூகத்தில் நடுநிலையான வாசிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது, ஒருவரது எழுத்தை அவர்
பற்றிய தன்சார்பான மனப்பதிவுடனே வாசிப்பதற்கு இந்த சமூகம் பழகியிருக்கின்றது என்பது
மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். சமூகத்தை வழிநடாத்தும் ஆலிம்களும் இதில் விதிவிலக்கில்லையோ? என்று சிந்திக்கத்
தோன்றுகின்றது.
உஸ்தாத் அவர்களின் விமர்சனத்தில்
சமூகம் பாதிக்கப்பட்ட இடங்கள் தான் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அப்படி
சமூகத்தைப் பாதிக்கும் வகையில் ஒரு தலைமை செயற்பட முடியாது என்பது தான் அந்தக் கட்டுரையின்
மூலம் அவர் சமூகத்துக்குச் சொல்ல வந்த செய்தியாகும். எனவே தான் அப்படி சமூகத்தைப் பாதிக்கும்
ஒரு தலைமை சமூகத்தை வழிநடாத்தப் பொருத்தமானதல்ல என்பதை அவர் தைரியமாகக் கூறியிருக்கின்றார்.
அந்த முன்மொழிவு றிஸ்வி முஃப்தியையோ
வேறுயாரையுமோ மட்டம் தட்டும் நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல என்பதற்கு அவர் அந்த முன்மொழிவையடுத்து
கூறியிருக்கும் உதாரணமே போதுமானதாகும் என்று நான் நினைக்கின்றேன்.
அது மாத்திரமல்ல அந்த ஆக்கத்தில்
பெயர் குறிப்பிடப்பட்ட குறிப்பிப்படாத அனைவரிடமும் அந்தக் கட்டுரையின் கருத்துக்களால்
அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் மன்னிப்பும் கேட்டுள்ளார். உண்மையில் சமூக வளைத்தளங்களில்
உலாவரும் பலருடைய ஆக்கங்களுக்கும் இந்த ஆக்கத்துக்கும் இடையில் உள்ள பாரிய வேறுபாடுகள்
இவையாகும்.
இப்போது சில சகோதரர்கள் கிண்ணியாவுக்கு
சென்று அங்குள்ள ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள், பிறை கண்டவர்கள் ஊரவர்கள்
என அனைவரையும் சந்தித்து பேட்டி கண்டு அதனை ஆவணப்படுத்திய அந்தக் காணொளிகளை நீங்கள்
நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் பார்த்த பின்னரும் கூட பிறை சம்பந்தமாக
எடுக்கப்பட்ட முடிவு சாணக்கியமற்ற சமூகத்தில் குழப்பத்தை உண்டுபன்னக் கூடிய முடிவு
என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதா?
ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்
தனதுரையில் பாவித்த வார்த்தைகளுக்கும் ஜமாஅத்தின் அமீர் தனது கட்டுரையில் பாவித்த இந்த
வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்ற ஒரு கேள்வியை முன்வைத்திருக்கின்றீர்கள்.
நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன். அந்த உரையில் பாவித்த வாசகங்களால்
சமூகம் குழம்பியது, ஹலாலுக்கும் ஹராமுக்கும்
இடையில் தத்தளித்தது. ஆனால் இந்தக் கட்டுரையில் பாவிக்கப்பட்ட இந்த வார்த்தைகளால் அந்த
சமூகம் அமைதியடைந்தது. ஆனால் நீங்கள் சொல்வது போல் ஒரு கூட்டத்தினர் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஒரு சிலருக்கேற்பட்ட
பாதிப்பை சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பாக சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்றே நான்
நினைக்கின்றேன். ஏனெனில் தங்களுக்கு வலித்தால் அது சமூகத்துக்குப் பாதிப்பு வேறு யாருக்கு
வலித்தாலும் அது சமூகத்துக்கான பாதிப்பு இல்லை என்ற நிலைப்பாடு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல.
ஏனென்றால் இந்த சமூகம் யாருடைய கருத்தால் பாதிக்கப்பட்டது என்பதை சமூகத்தில் போய் கேட்டுப்பார்த்தால்
நிச்சயம் நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் சமூகம் என்பது ஒரு இயக்கமல்ல என்பதை
நான் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.
உங்களுக்குத் தெரியும் நமது
மார்க்கத்தில் தனிமனித நலனை விட சமூக நலனுக்கு முன்னுரிமை இருக்கின்றது என்ற விடயம், அந்த வகையில் ஜம்இய்யதுல்
உலமாவின் தலைவர் என்ற தனிமனிதனை விட சமூகம் என்ற நிறுவனத்துக்கு பெரிய இடம் காணப்படுகின்றது
என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
பிறைப் பிரச்சினைக்குத் தீர்வல்ல
தலைவரை மாற்றுவது, என்ற கருத்தில் யாருக்கும்
மாற்றுக் கருத்திருக்காது. அந்த ஆக்கத்தில் எங்குமே அப்படியொரு கருத்து தொனிப்பதாக
எனக்குப் படவில்லை. சரியான வழிநடாத்தலுக்கும் சமூகத்துக்குத் தேவையான தலைமைத்துவத்தை
வழங்குவதற்குமே மாற்றம் தேவை என்பதை அந்தக் கட்டுரை உறுதிபடச் சொல்லியிருக்கின்றது.
சந்தர்ப்பம் பார்த்து ஜம்இய்யதுல் உலமாவைக் கைப்பற்றும் நோக்கம் ஜமாஅதே இஸ்லாமிக்கோ
அதன் தலைவருக்கோ இருக்கின்றதென்றால் ஒருவரது பெயரைக் கூட அந்த விமர்சனத்தில் முன்மொழியாமல்
இருந்திருக்கலாம். ஆனால் தனது உள்ளத்துக்குப்பட்ட ஒருவரை இந்த சமூகத்தின் பல மட்டங்களில்
தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கும் யாருமே துணியாத வகையில் தைரியமாக முன்வைத்ததானது
ஜம்இய்யதுல் உலமாவின் அதிகாரத்தைக் கைப்பற்றும் உள்நோக்கம் ஒரு சிறிதும் இன்றி முன்வைக்கப்பட்ட
ஒரு கருத்து அது என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.
தலைமை மாற்றப்பட வேண்டும்
என்ற முன்மொழிவானது சமூக ஒற்றுமைக்கெதிரானது, சிறுபிள்ளைத்தனமானது, ஊரோடு ஒத்துப்பாடியது என்று நீங்கள் கூறியிருப்பதை நான் ஆச்சரியத்தோடு
பார்க்கின்றேன். அப்படியென்றால் தலைவர் எப்படி வழிநடாத்தினாலும் அதற்கு உடந்தையாக இருப்பதுதான்
ஒற்றுமையா? அது தான் முதிர்ச்சியடைந்த
நிலையின் வெளிப்பாடா? என்று என்னால் புரிந்துகொள்ள
முடியாமல் இருக்கின்றது. அவர் தலைமைத்துவத்தை மாற்ற வரவுமில்லை, மாற்றுங்கள் என்று
உங்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கவுமில்லை, அந்த அதிகாரமும் அவரிடம் இல்லை, அவர் சொன்னதால் நீங்கள்
மாற்ற வேண்டும் என்றுமில்லை. அப்படியிருக்கும் போது நீங்கள் கூறியிருப்பதைப் போன்று
தப்லீக் ஜமாஅத்தின் அளவு பெரிய ஜமாஅத்தாக இல்லாத மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு சிறிய
கூட்டத்தை மாத்திரம் வைத்து இயக்கம் நடாத்திக் கொண்டிருக்கும் பெரிய அளவுக்கு மக்கள்
கேட்க விருப்பமில்லாத ஒருவருடைய கருத்தை நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள
வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகின்றது.
உண்மையில் நீங்கள் கூறியது போன்று அவர் செல்வாக்கற்றவராக இருப்பின் அவரது சாதாரண ஒரு
கருத்துக்கு ஏன் நீங்கள் இவ்வளவு தூரம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்வியும் எழுகின்றது.
இவையெல்லாம் நியாயமான கேள்விகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
இந்த இடத்தில் உஸ்தாத் அவர்களது
முன்மொழிவு தொடர்பாக யூஸுஃப் முஃப்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாகவும்
ஒரு விடயத்தைக் கூற வேண்டும். மிகவும் கண்ணியமான முறையில் அவர் அதனை வெளியிட்டுள்ளார்.
உஸ்தாத் அவர்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றது
என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீங்கள் தனது கருத்தை இந்த சமூகத்தில் சொல்வதற்குக்
கூட உரிமை இல்லை என்ற தோரணையில் எழுதியிருப்பது மனதுக்கு வேதனை அளிக்கின்றது. தலைவர்
என்னதான் தவறு செய்தாலும் அதற்கு மாற்றுக் கருத்துத் தெரிவிக்க முடியாது என்ற அளவுக்கு
தலைமையிடம் ஒரு சிந்தனை இருக்கின்றதா என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.
உண்மையில் எந்தக் கருத்தால்
சமூகம் குழம்பியது என்பதற்கு ஒரு சிறிய கணிப்பீடு செய்து பார்த்தால் தெளிவு பிறக்கும்
என்று நம்புகின்றேன். ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரின் உரையைத் தொடர்ந்து சமூகத்தின்
பல்வேறு தளங்களிலும் ஏற்பட்ட அதிர்வையும் தளம்பலையும் ஜமாஅத்தின் அமீர் அவர்களது கருத்தால்
நீங்கள் ஏற்பட்டதாகச் சொல்லும் குழப்பத்தையும் தராசின் இரண்டு தட்டுக்களிலும் போட்டு
நிறுத்துப் பார்த்தால் எதனால் குழப்பம் ஏற்பட்டது என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியுமாக
இருக்கும் என்று நினைக்கின்றேன். சம்பந்தப்பட்;ட தரப்பு குழம்பியுள்ளது, என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அந்தக் குழப்பத்தின்
விளைவாகத் தான் நீங்களும் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
ஒரு தெளிவோடு இருந்த நான் கூட அந்த ஒரு மணி உரைக்குப் பின்னால் எனது வாழ்வில் எந்த
சந்தர்ப்பத்திலும் ஒரு ஹராத்தை செய்து விட்டேனா என்று குழம்பாத அளவு குழம்பிப் போனேன்.
சமூகத்தில் உலமாக்களது கருத்தையே
எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் எந்தளவு குழம்பிப் போயிருப்பார்கள் என்பதனை
என்னால் ஊகிக்க முடியுமாக இருக்கின்றது. உஸ்தாத் அவர்களுடைய அந்தக் கட்டுரை அந்தக்
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடனே எழுதப்பட்டது, அந்த நோக்கத்தை அந்தக்
கட்டுரைகள் நூறு வீதம் இல்லாவிட்டாலும் நிறைவு செய்திருக்கின்றன என்பதே எனது அவதானமாகும்.
இந்த இடத்தில் உங்களுக்கு
இன்னுமொரு விடத்தை ஞாபகப்படுத்துவது பொருத்தம் என்று நினைக்கின்றேன். அந்த உரையால்
ஏற்பட்ட குழப்பத்தையடுத்து இந்த நிமிடம் வரையில் ஜம்இய்யதுல் உலமாவினால் உத்தியோகபூர்வமாக
அந்தக் குழப்ப நிலையை தவிர்ப்பதற்குரிய எந்த நடவடிக்கையும் சமூக மட்டத்தில் எடுக்கப்படவில்லை
என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு
யாப்பு இருக்கின்றது, அதன் அங்கத்தவர்கள்
இஸ்லாமிய இயக்கங்கள் அல்ல தகுதியான உலமாக்கள் மாத்திரமே றிஸ்வி முஃப்தி சரியான தகுதியான
தலைவர் என்பதற்கு அவர் மூன்று முறை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டதே போதுமான ஆதாரமாகும்.
ஆனால் உங்களைப் போன்ற தப்பான கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு அது புரியாது என்று நீங்கள்
எழுதியிருக்கின்றீர்கள்.
திரும்பவும் நான் கேட்கின்றேன்
நீங்கள் ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? ஏன் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் றிஸ்வி முஃப்தியைத் தப்பான கண்கொண்டு
பார்ப்பதாக எண்ண வேண்டும்?
மௌலவி அவர்களே!
ஒரு விடயத்தை சொல்லித்தான்
ஆக வேண்டும். பிறைப் பிரச்சினை என்று தொடங்கிய உங்களுடைய கடிதத்தில் பிறை வாசமே வீசவில்லை.
மாற்றமாக முழுப் பிறையும் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டு பிறை தொடர்பான பிரச்சினைகளும்
மறைக்கப்பட்டு அது தொடர்பாக பொறுப்புச் சொல்ல வேண்டிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின்
கடமை மறைக்கப்பட்டு சமூகத்தைக் குழப்பியவர் ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் தான் என்ற கருத்தை
ஏற்படுத்துகின்ற அமைப்பில் உங்களது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. அல்லாஹ்வைப் பயந்து
கொள்ளுங்கள், இந்த சமூகம் பிறையின்
மூலமாக ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையை அவ்வளவு இலகுவாக
இந்தத் தடவை மறந்து விடும் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.
அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்
என நான் தூய்மையாக பிரார்த்தித்துக் கொள்கின்றேன். உங்களுடைய இந்த எழுத்துக்களில் திருத்தப்பட
வேண்டிய பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
முதலில் இஸ்லாமிய இயக்கங்கள்
பலவற்றிலும் மிகத் தகுதியான உலமாக்கள் இருக்கின்றார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
அது மட்டுமல்ல ஜம்இய்யதுல் உலமாவில் இருக்கின்ற அனைவரும் ஏதாவதொரு இயக்கம் சார்ந்தவர்களே
அல்லாமல் ஜம்இய்யதுல் உலமாவுக்காகவென்றே பட்டம் பெற்று வந்தவர்களல்ல என்ற உண்மையையும்
என்னை விட நீங்கள் நன்கறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.
இரண்டாவதாக மூன்று முறை ஜனநாயக
வழிமுறையில் தெரிவு செய்யப்பட்டதால் ஒருவர் தகுதியானவர் என்ற வாதம் எந்தளவு பொருத்தம்
என்ற கேள்வியையும் உங்களுக்கு முன்னால் வைக்கின்றேன்.
ஒரு பேச்சுக்காக சொல்வதாக
இருந்தால் நீங்கள் யாரை சாடி எழுதியிருக்கின்றீர்களோ அந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்
(சாடி எழுதவில்லை என்று நீங்கள் கூறினாலும் அதனை நீங்களே இன்னுமொரு முறை ஆற அமற வாசித்தால்
அது சாடலைத் தவிர வேறில்லை என்பதை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்) அவர்கள் அவர்
தன்னைத் தெரிவு செய்ய வேண்டாம் என்று கூறியும் ஐந்துக்கு மேற்பட்ட தடைவைகள் நூற்றுக்கு
நூறு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர் என்பதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஒரு நீதியான அமீராக நீங்கள்
இருந்தால் என்று தொடங்கி நீங்கள் சில விடயங்களைப் பேசி இருக்கின்றீர்கள்... உண்மையில்
ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் நீதியாக நடந்து கொள்கின்றாரா இல்லையா என்ற கேள்விக்கு ஜமாஅத்தின்
அங்கத்தவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஜமாஅதே இஸ்லாமியின்
அமீரிடம் எந்த வகையில் நீதி தேவைப்படுகின்றது என்பதும் எனக்குப் புரியவில்லை. தனது
கருத்தை பகிரங்கமாகத் தெரிவிப்பது அநீதி என்றால் இந்த சமூகத்தில் அனைவரும் பேசாமல்
யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருந்து விட வேண்டும் என்றல்லவா பொருளாகி விடும்?!
அதனைத் தொடர்ந்து றிஸ்வி முஃப்தி
அவர்கள் எவ்வளவு நல்லவர் அவரால் எவ்வளவு நலவுகள் சமூகத்துக்கு நடந்துள்ளன என்று சில
விடயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றை நான் ஏற்றுக் கொள்கின்றேன், அதில் ஒன்றைக் கூட
மறுக்கவில்லை. ஆனால் ஆயிரம் நலவுகள் ஒரு பெரிய தவறை நியாயப்படுத்த மாட்டா என்ற மிகப்
பெரும் உண்மையையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். காலித் இப்னு வலீத் என்ற அல்லாஹ்வின்
வாளை தளபதிப் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணம் அவரது தவறுகளல்ல, அவரது நலவுகளை மறுதலிப்பதுமல்ல.
மாறாக அவர் எந்தத் தவறுமே செய்யாமல் அவரது பதவி வேறொருவருக்குக் கொடுக்கப்பட்டது மக்கள்
அவரால் வழிகெட்டுவிடக் கூடாதே என்ற உமர் (ரழி) அவர்களின் அச்சத்தின் காரணமாகவே. அவரது
நலவுகளால் அவர் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். உண்மையில் அதுவே
நலவுகள் செய்வதற்கான நோக்கமாகும். மாற்றமாக இவ்வளவு நலவு செய்திருப்பவரை எப்படி விமர்சிக்கலாம்
என்ற கேள்வி சில வேளைகளில் நலவு செய்தவரது தூய்மையைக் கூட பாதிப்பதற்கு இடமுண்டு என்ற
அச்சமே என்னுடைய உள்ளத்தில் ஏற்படுகின்றது.
அதே போன்று உங்கள் கருத்தை
தலைமையிடம் கூறாமல் ஏன் பகிரங்கமாகக் கூறினீர்கள்? என்று உஸ்தாத் அவர்களிடம் நீங்கள் ஒரு கேள்வியை
முன்வைத்திருக்கின்றீர்கள். உண்மையில் இக்கேள்விக்கு பதிலளிக்க அவரே பொருத்தமாக இருப்பினும்
கூட எனது அறிவுக்குட்பட்ட வகையில் நான் அதனை இப்படித்தான் பார்க்கின்றேன். ஜம்இய்யதுல்
உலமாவிடம் இதுவரை இந்த நாட்டில் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் எதுவுமே எந்த முறைப்பாடுகளையும்
செய்ததில்லையா?! யாருமே எத்தகைய ஆலோசனைகளையும்
முன்வைத்ததில்லையா?! தமக்கு அநீதி இழைக்கப்பட்ட
சந்தர்ப்பங்களை அறியத்தந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியதிpல்லையா?!
மற்ற இயக்கங்களைப் பற்றி எனக்குத்
தெரியாது. ஆனால் ஜமாஅதே இஸ்லாமியின் அமீருக்கு கண்டியில் ஒரு இஸ்லாமிய இயக்கத்தால்
அனுப்பப்பட்ட அடியாட்கள் நேரடியாக வந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக ஜம்இய்யதுல்
உலமாவில் முறைப்பாடு செய்யப்படவில்லையா?!
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்
என்று அதே இஸ்லாமிய இயக்கம் அழைத்து நுவரெலியாவில் ஆள் வைத்து அடித்து படுகாயப்படுத்தி
அனுப்பியதைப்பற்றி ஜம்இய்யதுல் உலமாவுக்கும் நீங்கள் சார்ந்த இயக்கத்தின் தலைமைக்கும்
அறியத்தரப்படவில்லையா?!
வெல்லம்பிடியவில் ரமழானின்
இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்தவர்களை ஆள் வைத்து அடித்து விரட்டிய சம்பவம் பற்றி ஜமாஅதே
இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவிடம் முறைப்பாடு செய்யவில்லையா?!
இது போன்ற பல சந்தர்ப்பங்களில்
இப்படியெல்லாம் செய்தார்கள் என்று சமூகமெங்கும் தூற்றித் திரியாமல் விமர்சித்துத் திரியாமல்
பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் முஸ்லிம் சமூகத்தின் அங்கங்கள் என்ற வகையில் அந்நியர்களிடம்
காட்டிக் கொடுக்காமல் ஜம்இய்யதுல் உலமாவை மதித்து ஜமாஅதே இஸ்லாமி செய்த எந்த முறைப்பாட்டுக்கும்
'செய்தவர்கள் யார்
என்று தெரியாது, அவர்கள் எங்களது கட்டுப்பாட்டுக்குட்பட்டவர்களல்ல' என்ற பொறுப்பற்ற பதிலைத்
தவிர வேறு எந்தப் பதிலும் கிடைக்கவில்லையே!
இப்படியெல்லாம் முன் அனுபவம்
இருக்கும் போது இதனை மட்டும் இரகசியமாக ஜம்இய்யதுல் உலமாவுக்கு தெளிவு படுத்துவதால்
சமூகத்தின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்? அந்த ஆலோசனைகள் முறைப்பாடுகள்
போன்று இதுவும் தூக்கிக் கிடப்பில் போடப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத
நிலையில் தான் உஸ்தாத் அவர்கள் தனது உள்ளத்தில் பட்ட கருத்தை பகிரங்கமாக இந்த சமூகத்துக்கு
சொல்லியிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
அதே போன்று 'ஜம்இய்யதுல் உலமாவின்
தலைவரது சில கருத்துக்களை விமர்சித்து எழுதியதானது தலைவரையும் தலைவரைத் தெரிவு செய்த
தகுதிவாய்ந்த பல உலமாக்களையும் கேவலப்படுத்தியதற்கு சமம். அதற்காக நீங்கள் பகிரங்கமாக
மன்னிப்புக் கோர வேண்டும்'
என்று நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
மௌலவி அவர்களே! அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுடைய பாசறையில் வளர்ந்த தலைவருடைய முன்மாதிரியைப் பாருங்கள்.
உமர் (ரழி) அவர்கள் மின்பரில்
குத்பா செய்யும் போது கூறிய சில கருத்துக்கள் முழு சமூகத்தையுமே பாதிக்கும் கருத்தாக
இருக்கின்றது என்று கருதிய போது ஒரு பெண் கூட எழுந்து பகிரங்கமாக அந்தக் கருத்துக்கான
ஆட்சேபனையை மிகவும் கடுமையான தொனியில் வெளியிட அந்த உமரின் சாம்ராஜ்யத்தில் சுதந்திரம்
இருந்தது. பள்ளிக்கு வெளியே வந்த பின்னர் உமரின் தோழர்கள் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தவுமில்லை
அவள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தவுமில்லை, அந்த ஆட்சேபனையை உமரையோ
உமரைத் தெரிவு செய்த அபூபக்ரையோ கேவலப்படுத்தும் அம்சமாக யாரும் பார்க்கவுமில்லை. மாற்றமாக
மன்னிப்புக் கேட்டதெல்லாம் யாரைக் கண்டு ஷைத்தான் கூட அஞ்சி வேறு வழியால் செல்வான்
என்று நபியவர்கள் கூறினார்களோ அந்த உமர்தான். அவர் தனது கருத்தை வாபஸ் வாங்கிக் கொள்கின்றார்.
உண்மையில் தலைவர்கள் தமது
முன்மாதிரியை இங்கிருந்து தான் பெற வேண்டும். அதைத் தவிர்த்து ஆட்சேபனைகளுக்கும் மாற்றுக்
கருத்துக்களுக்கும் இடமில்லாத ஒன்றாக தலைமை மாறக் கூடாது.
அது மட்டுமல்ல உமர் (ரழி)
அவர்களிடம் மக்கள் அவரது சொந்த வாழ்க்கை பற்றிக் கூட பகிரங்கமாக எழுந்து கேள்வி கேட்டிருக்கின்றார்கள்.
'மக்களே! செவிமடுங்கள்
கட்டுப்படுங்கள்' என்று உமர் மின்பரில்
வைத்துக் கூறிய போது 'நீர் அணிந்திருக்கும்
ஆடையைப் பற்றி சரியான விளக்கம் தராதவரை உமக்கு செவிமடுக்கவும் மாட்டோம் கட்டுப்படவும்
மாட்டோம்' என்று ஒரு ஸஹாபி எழுந்து
கேட்கின்றார். தன் சார்பாக தனது மகன் அப்துல்லாஹ்வை அதற்கு பதில் கூறத் தான் உமர் சொன்னாரே
அல்லாமல் நீங்கள் யார் அமீருல் முஃமினீனைக் கேள்வி கேட்க? இப்படிக் கேட்டு ஏன்
சமூகத்தைக் குழப்பப் பார்க்கின்றீர்கள்? என்று உமர் அவரிடம் பதில் கேள்வி கேட்கவில்லை.
ஆனால் உஸ்தாத் அவர்களுடைய
கட்டுரையில் எந்தத் தனிநபருடைய தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வீடு தொடர்பாக வாகனம் தொடர்பாக
ஆடை தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை, எந்த விளக்கமும் கோரப்படவில்லை. சமூகம் ஏன் குழப்பப்பட்டது
என்பது தான் அவருடைய ஒரே ஒரு கேள்வி.
அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல்
இவர் சமூகத்தில் குழப்பத்தை உண்டுபன்னப் பார்க்கின்றார் என்று பழியை மாற்றி உஸ்தாத்
அவர்களின் தலையில் கட்டிவிட முயற்சிப்பது பொறுப்புள்ள ஒரு நிறுவனத்தின் சார்பாக எழுதியிருக்கும்
உங்களுக்கு எவ்வளவு தூரம் பொருத்தம் என்ற ஒரு கேள்வியையும் முன்வைக்கின்றேன்.
இறுதியாக இந்த சமூகத்திடம்
பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டியவர் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரா? அல்லது அவரது தவறை
சுட்டிக்காட்டிய ஜமாஅதே இஸ்லாமியின் தலைவரா? இயக்கம், நெருக்கம் ஆகியவற்றை மறந்து நடுநிலையாக சிந்தித்து முடிவெடுக்குமாறு
உங்களிடம் மிகத் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.
என்னால் முடிந்த வரை ஷைத்தானின்
தூண்டுதல்களிலிருந்து தவிர்ந்து இம்மடலை வரைய முழுமையாக முயற்சித்திருக்கின்றேன், உங்களது மனதை நோகச்
செய்யும் நோக்கம் நிச்சயமாக இந்த எழுத்துக்களுக்கு இல்லை. ஆனால் நீங்கள் இக்கருத்துக்காளால்
பாதிக்கப்பட்டால் அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் நிறைவு செய்கின்றேன்.
வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக. அனைவரையும் சுவனத்தில் ஒன்றுசேர்த்து
வைப்பானாக!.
வஆஃகிற தஃவானா அனில்ஹம்து
லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











.jpg)


.jpg)


.jpg)

