-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

24 டிச., 2020

சமூகப் பொறுப்பாளர்களின் பொறுப்புணர்வை உணர்த்துவதற்கான பொறிமுறை.

 S. Hஇஸ்மத் அலி






டந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை முஸ்லிம் சமூகம் மிக இக்கட்டான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இவற்றை எதிர்கொள்வதில் சமூகத்திடம் முறையான செயற்திட்டம் இருக்கிறதா? சமூகத்தை வழிநடத்தும் அரசியல் மற்றும் மார்க்க, சிவில் தலைமைகள் இத்தகைய செயற்திட்டத்தை வரைவதற்கும் செயற்படுத்துவதற்கும் முயற்சிக்கின்றவா என்ற விடயத்தில் சமூகம் இன்னும் தெளிவற்ற நிலையிலேயே உள்ளது

நிலைமை இவ்வாறு இருக்கையில் சமூகப் பொறுப்பை சுமந்து கொண்ட தலைமைகள் சிலபோது விடுகின்ற தவறுகள், அசமந்தப் போக்குகள் என்பவற்றை அவதானிக்கும் போது இவை மேலும் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

எனவே, சமூகத் தலைமைகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களது தவறான முடிவுகள், அசமந்தப் போக்குகள் என்பவற்றை மிகச் சரியாக இனங்கண்டு,  சுட்டிக்காட்டி அவர்களது செயற்பாட்டுத் திறனை வழிப்படுத்த ஒரு பொறிமுறை அவசியப்படுகின்றது.



2019களின் இறுதிப்பகுதியில் ரியாத்தில் வசிக்கின்ற இலங்கை புலம்பெயர் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் (Muslim Community – Riyadh (MCR) அப்போதைய சவுதிக்கான இலங்கைத் தூதுவர் கெளரவ அஸ்மி தாஸிம் தலைமையில் கூடிய ஒரு கூட்டத்தில் இத்தகைய பொறிமுறையின் அவசியம் குறித்து பேசப்பட்டது. சமூக நிறுவனங்களின் தொழிற்பாடுகள் விடயத்தில் போதாமை அல்லது தவறுகள் நடைபெறும் போது அவற்றை எத்திவைத்து அவற்றை பலப்படுத்துவதற்கான சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. என்றாலும் அது செயற்பாட்டுவடிவம் பெறாமை கவலைக்குரியது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக யார், எதை, எங்கு யாரோடு பேசுவது குறித்தோ சவால்களை எதிர்கொள்வதற்கான ஒன்றிணைந்த அல்லது ஒருமுகப்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் பற்றியோ சமூக அங்கீகாரத்தைக் கொண்டுள்ள நிறுவனத் தலைமைகளிடம் போதியளவு தெளிவுகள் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதன் விளைவே சமூகத் தலைமைகள் குறித்து சமூகத்திடம் அதிகரித்து வருகின்ற எதிர்நிலை மனப்பாங்கு. இத்தகைய மனப்பாங்குகளே பிறரின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்கு சமூக உறுப்பினர்கள் மிக இலகுவில் அகப்படக் காரணமாகின்றது.

அதே போன்று சமூக நிறுவனங்களுக்கிடையில் நிலவும் உள்ளக முரண்பாடுகள்,  பிற நிறுவனங்களோடுள்ள சித்தாந்தப் பிளவுகள் இவைகள் சமூக மட்டத்திற்கு வரும் போது அது சமூக நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைமைகள் பற்றிய குறை எண்ணங்களையே சமூகத்திடம் ஏற்படுத்தும். 

இலங்கை முஸ்லிம் சமூகம் மிக நீண்ட காலமாக கட்டிக்காத்து வந்த சமூக நிறுவனங்கள் அதன் மேல்மட்ட உறுப்பினர்களின் பலவீனங்களால் அல்லது அவற்றின் செயற்பாட்டு மந்த கதிகளினால் தடம்தெரியாது இல்லாமலாகிவிடக்கூடாது. ஏனெனில் அத்தகைய நிறுவனங்களை புதிதாய் கட்டியெழுப்புவதோ அவை அங்கீகாரம் பெறுவதோ மிக இலேசான காரியமல்ல. மட்டுமன்றி இத்தகைய சமூக நிறுவனங்கள் தனிநபர்களின் செயற்பாட்டுத் திறனின்மைகளால் செயலற்று போய்விடக்கூடாது. 

கடந்த சில வருட வரலாற்றில் சமூகத் தலைமைகள் அல்லது குழுக்கள்  சமூக விடயங்களில் நடந்துகொண்ட தவறான சில தருணங்களின் போது அத்தவறுகளை சரிசெய்துவிடுவதற்கோ அல்லது அவை குறித்த சரியான தெளிவை சமூகமயப்படுத்துவதற்கான முயற்சிகள் அறவே இருக்கவில்லை.
 
உதாரணத்திற்கு, முஸ்லிம் தனியார் சட்ட சீர்த்திருத்தம் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்வதில் ஏற்பட்ட இழுபறிகள், 20வது திருத்தச் சட்டத்திற்கு நிபந்தனைகளின்றி சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆதரவளித்தமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் சென்ற மார்க்கப் பிரதிநிதிகள் நடந்து கொண்ட முறை.. இவை போன்ற சந்தர்ப்பங்களில் சமூகம் இரு வேறாகப் பிரிந்து தெருச் சண்டைப் போட்டதே தவிர குறித்த விடயங்களை வழிப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க பொதுத் தரப்பொன்றோ பொறிமுறையொன்றோ இல்லாமையை நன்குணர முடிந்தது. 



மேலும் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதலோடு தொடர்புபடாத பல்வேறு சமூக நிறுவனங்களும் சில சமூகத் தலைமைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சமூக நிறுவனங்களுக்கு சமூகம் சார்பாக பக்கபலமாக நிற்கின்ற மூன்றாம் தரப்பினரின் பிரசன்னத்தை மிக அரிதாகவே காணக்கிடைத்தது. இந்நிலையில் சமூகத்தின் பிரச்சினைகளை விட தமது நிறுவனத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் அவைக் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மறுமொழியளிப்பதற்குமே சமூக நிறுவனங்கள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டியிருந்தது. 

இந்த வகையில் சமூகத் தலைமைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிப்பதற்கும் அதனைத் தூண்டுவதற்குமான புதிய பொறிமுறையொன்று சமூகத்தின் உள்ளிருந்து தோற்றம் பெறுவது அவசியமாகின்றது. 




இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு துறைசார்ந்த புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் துறைசார் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இத்தகைய பொறிமுறையை உருவாக்கலாம். 

இத்தகைய பொறிமுறையொன்று மிக விரைவில் உருவாக்கப்படாத போது சமூகம் இன்றுள்ள நிலையை விட மிகப் பலவீனமான நிலைக்கு கீழ்நோக்கிச் செல்லும் என்பதே யதார்த்தம். அதிலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டும். 
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக