-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

14 ஜூலை, 2022

உமரின் வாழ்வில் 'அரகலய'




இஸ்மத் அலி

இறைதூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய வரலாற்றில் ஆட்சிக்கு வந்த இரண்டாவது கலீபா உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒருமுறை மக்கள் முன்னிலையில் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 'மக்களே, தலைமைத்துவதற்குச் செவிமடுத்துக் கட்டுப்படுங்கள்....' அப்போது ஒரு பொதுமகன் எழும்புகிறார். 'உமரே, உமக்குக் கட்டுப்பட மாட்டேன். போராட்டத்தில் கிடைத்த துணிகளில் எமக்கெல்லாம் ஒரு மேலாடை மட்டுமே தைத்துக்கொள்ள முடிந்தது. உமக்கு மட்டும் எப்படி ஒரு முழு நீள ஆடைத் தைத்துக்கொள்ள முடிந்தது? இதற்கு பதில் சொல்லாவிட்டால் நாம் உமக்குக் கட்டுப்ப மாட்டோம்'. 

மக்கள் சபையில் சலசலப்பு. 'உமரில் சந்தேகமா?',  'உமர் இப்படிச் செய்துவிட்டாரே'  சார்பாகவும் எதிராகவும் மக்கள் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். உமர் அமைதியாக இருந்தார். தனது மகன் அப்துல்லாஹ்வை அழைத்து வருமாறு கட்டளையிட்டார். 'அப்துல்லாஹ்வே, போரில் கிடைத்த துணியிலிருந்து நான் இந்த முழு நீள ஆடையை எப்படி தைத்தேன் என்பதை இந்த மக்களுக்கு தெளிவுபடுத்துவாயாக' என்று மகனை வேண்டினார். 'போரில் எனது பங்காகக் கிடைத்த துணித் துண்டை நான் எனது தந்தைக்கு பரிசாகக் கொடுத்தேன். தனக்குரிய பங்கையும் எனது பங்கையும் சேர்த்தே தந்தை இந்த ஆடையைத் தைத்துக்கொண்டார்' என்று மகன் விளக்கமளித்தார். 


இன்னொரு தடவை, திருமணத்திற்கு பெண்களுக்கு வழங்கும் மஹர் தொகையை வரையறுத்து உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சட்டம் இயற்றினார்கள். மக்களுக்கு அவர் அதனை அறிவித்து மிம்பரிலிருந்து இறங்கி வரும் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் எழுந்து '
உமரே, அல்லாஹ் திருமண மஹராக 'பொருட் குவியலையே வழங்கியிருந்தாலும்..' என்று சொல்லியிருக்கும் போது நீர் யார் அதை வரையறுப்பதற்கு?' என்று துணிந்தெழுந்து வினவுகின்றாள். 'உமரை விட அறிந்தவர்கள் இருக்கிறார்களே' என்று அப்பெண்ணைப் புகழ்ந்துவிட்டு மீண்டும் பிரசங்க மேடை ஏறி தனது சட்டத்தை வாபஸ்வாங்கிக் கொள்கின்றார். 


உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களது ஆட்சி வரலாற்றில் மக்கள் துணிந்து அவரைக் கேள்வி கேட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அப்போதெல்லாம் கேள்வி கேட்கும் உரிமையை அவர் மக்களுக்குப் பூரணமாக வழங்கியிருந்தார். அதற்கு பதில் சொல்லும் பொறுப்பையும் அவர் நிறைவேற்றினார். 


தனது ஆளுநர் அம்ர் இப்னுல் ஆஸ் ஒரு குடிமகனுக்கு அநீதி இழைத்ததை அறிந்து அவருக்கு எழுதிய கடிதத்தில் '
அம்ரே, மனிதர்களை அவர்களது தாய்மார்கள் சுதந்திரமானவர்களாகப் பெற்றெடுத்திருக்க நீர் எப்படி அவர்களை அடிமையாக்கலாம்?' என்று கேட்டெழுதியிருந்தார்கள். 
நீதியான ஆட்சியாளர்கள் மக்கள் நலனை மட்டுமே கருத்திற்கொள்வார்கள். மக்கள் நலனை பாதுகாக்கவே தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக நம்பி செயற்படுவார்கள். மக்களுக்கு முன்னுதாரணமாக நடந்துகொள்வார்கள். 


அரசியல் ஒரு வியாபாரமாகவும் பதவி ஆசை ஒரு மன நோயாகவும் மாறியிருக்கின்ற எமது நாட்டில் நாம் உமர்களை எங்கே தேடுவது? 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக