-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

16 செப்., 2011

வாழ்த்துக்களோடு சில வார்த்தைகள்.

நாம் படித்து வளர்ந்த எங்கள ஊர் பாடசாலைக்கு மிகப் பெரிய பெருமை சேர்த்த ஒரு குட்டித் தம்பியை பாராட்டுவதிலும், வாழ்த்துவதிலும் மிக மகிழ்ச்சியடைகின்றேன். ஆம், கடந்த 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் ஆகக் கூடிய மதிப்பெண்கள் (195) பெற்று கெக்கிறாவை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பால் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கச் செய்த முஹம்மது ஸக்கீ தனது எதிர்கால கல்விப் பயணத்திலும் சாதனைகள் பல புரிய அல்லாஹ்வுத்தஆலா அருள்பாலிப்பானாக!! ஸக்கீயின் இந்த சாதனைக்குப் பின்னால் உழைத்த வகுப்பாசிரியை, அதிபர் மற்றும் பாடசாலையின்; ஆசிரியர் குலாத்தினர் அனைவருக்கும் அல்லாஹூத்தஆலா நிறைவான கூலியை வழங்குவானாக!!


அல்லாஹ்வின் அருள், நாட்டம் இரண்டுக்கும் அடுத்தபடியாக இந்தச் சாதனைக்கு மிகப் பிரதான காரணம் மாணவன் ஸக்கீயின் திறமையும்;, ஆசிரியர்களான ஸக்கீயின் பெற்றோர் அளித்த ஊக்கமும் வழிகாட்டலுமே என்பதில் சந்தேகமிருக்க முடியாது. இதன் கருத்து இந்தச் சாதனையில் பாடசாலையின் பங்களிப்பைக் குறைத்துச் சொல்வதல்ல.



என்றாலும், இந்தச் சாதனை புகழப்படும் இந்நேரத்தில் கெக்கிறாவை முஸ்லிம் மஹா வித்தியாலம் பற்றி சில வார்த்தைகளையும் சொல்லியாக வேண்டும். எமது கல்விப் பயணத்திற்கு சரியான அடித்தளத்தை வழங்கிய இப்பாடசாலைக் குறித்துச் சொல்லும் இவ்வார்த்தைகள் நாம் படித்த – எங்கள10ர் பாடசாலை என்ற உரிமையில் என்பதனையும், யாரையும் குறை கூறும் நோக்கத்தில் அல்ல என்பதையும் ஆரம்பத்திலேயே கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.


கெக்கிறாவை முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட முன்னர் பிரதேசத்தின் முஸ்லிம் மாணவர்கள் நகரின் முடிவில் அமையப் பெற்றுள்ள தமிழ் மிசனறிப் பாடசாலையில் அல்லது ஏனைய சிங்களப் பாடசாலைகளிலேயே தமது கல்வியைத் தொடர வேண்டிய நிலையிருந்தது. இந்நிலையை அவதானித்த ஊரின் நலன் விரும்பிகள் 1960களின் பின்னரைப் பகுதியில் கெக்கிறாவை டவுன் பள்ளிவாசல் வளவில் ஓர் ஓலைக் குடிலில் இப்பாடசாலையை ஆரம்பித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.


இப்பாடசாலை தனது வராலாற்றில் பல தடவை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சை, க.பொ.த சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளில் பிரதேச ரீதியில் சாதனைமிக்க பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது தேசிய ரீதியிலும் சாதனைப் பெறுபேற்றைப் பெற்று உயர்ந்து நிற்கின்றது. என்றாலும் ஐந்து தசாப்தங்களைக் கடந்தும் தன்னை ஒரு மத்திய மஹா வித்தியாலயமாக தரம் உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உயர் தரத்தில் கலைத் துறையைத் தாண்டி வர்த்தக துறைப் பாடங்களைக் கற்பிக்கின்ற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ளவோ முயற்சிக்காமை துரதிஷ்டவசமானதே.


இதற்குரிய காரணங்களை ஒழிவு மறைவின்றிச் சொல்லப் போனால் பொல்லாப்பாகிவிடும். உனக்கேன் தேவையில்லாத வேலை என்று குடும்பத்தாரிடம் ஏச்சுக் கேட்க வேண்டி வரும். என்றாலும் படித்த பாடசாலையே என்ற நல்லெண்ணத்தில் சொல்ல வந்ததை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.


இப்பாடசாலை ஐந்து தசாப்தங்களாக நிர்வாக திறமைமிக்க ஒர் அதிபரை பெற்றுக் கொள்ளத் தவறியமை இக்காரணங்களில் முதன்மையானது என்பது எனது கருத்து. இதனால் தற்போது இருக்கும் அதிபரையோ அல்லது இதற்கு முன்பிருந்த அதிபர்களின் சேவைகளையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் தம்மால் முடிந்ததை செய்தார்கள். என்றாலும் அதைவிட அவர்கள் ஒருபடி உழைத்திந்தால் இப்பாடசாலை எப்போதாவது ஒருமுறை என்றில்லாமல் எப்போதும் சாதனைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கும்.


அடுத்தது, முரண்பாடு :- பாடசாலையின் முயற்சிக்காக அதிபர், ஆசியர், பழையமாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் ஒட்டுமொத்தமாய்ச் சேர்ந்து உழைப்பதற்கு இதுவரை முயற்சித்ததாக நான் அறியவில்லை. எப்போதும் பாடசாலை விடயத்தில் இரண்டு அணிகள் இருக்கும்...ஆசிரியர்கள் இரண்டு அணிகளாக பிரிந்திருந்து செயற்படுவது பாடசாலையின் கூட்டு நோக்கத்தை அடைவதற்கு தடை என்பதை அவர்கள் சில நேரம் புரியாமல் இருக்கலாம். ஒரு காலத்தில் இந்தப் பிளவு இஸ்லாமியவாதிகள், நாகரிகவாதிகள் என்றிருந்தது. பிறகு ஊர் ஆசிரியர்கள் ஒரு கூட்டம், வெளியூர் ஆசிரியர்கள் மறு கூட்டம் என்றிருந்தது. இப்போதும் இந்தப் பிளவு இருக்கத்தான் செய்கிறது. இதில் அணிசேராதவர்கள் வந்தோம், படிப்பித்தோம், போனோம் என்றிருப்பவர்கள். ஒட்டுமொத்தமாய் அனைத்து ஆசிரியர்களும் 'இது எமது பாடசாலை' என்று பாடசாலை சுவற்றில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளை தங்கள் உள்ளங்களிலும் பதித்துக் கொண்டு பாடசாலையின் குறுகிய, நீண்ட கால அடைவுகளை சரியாக வரையறுத்து ஒன்றுபட்டுச் செயற்படுவார்கள் என்றால் எம் பிரதேச மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு வெளியூர்களுக்குச் சென்று கஷ்டப்படவோ, அல்லது அதற்கு வசதியில்லாதவர்கள் கலைத்துறையோடு தம்மை சுருக்கிக் கொள்ளும் நிலையோ ஏற்படாது. ஆசிரியர்களே!! நீங்கள் எதைச் செய்தாவது – ( உங்கள் பிள்ளைகள் 03 திறமை சித்திகள் பெற்றிருந்தாலும் கூட) அவர்களை மடவளைக்கோ, மருதமுனைக்கோ அனுப்பி படிப்பிக்க வைத்துவிடுவீர்கள். ஆனால் இப்பிரதேசத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கு வசதியில்லாதவர்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இங்கு பாடசாலையின் முன்னேற்றத்திற்காய் முழு மூச்சாக ஈடுபடும் ஆசிரியர்கள் இப்படிச் சொல்வதற்காய் கவலைப்பட வேண்டாம். இது உங்களைக் குறிக்கவில்லை. உங்கள் முயற்சிகளின் முதல் அம்சமாய் பிரிந்து நிற்போரை ஒரு நோக்கத்திற்காய் ஒற்றுமைப்படவைக்க உழையுங்கள். இன்சா அல்லாஹ் அந்த முயற்சிகள் வெற்றி பெறுவது மட்டுமல்ல –நிறைவான கூலியையும் அதற்காக நீங்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வீர்கள்.

அடுத்து, பிரதேச அரசியல்வாதிகளே!! உங்கள் அரசியலில் பாடசாலையின் நலனை பலிக்கடாவாக்கி விடாதீர்கள். அதிபர் நியமணம், ஆசிரியர் இட மாற்றம் என்பவை திறமையினதும், அனுபவத்தினதும் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர அரசியல் அடிப்படையிலல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாக்குப் பெறுவதற்காய் பன்சலைகளுக்கு ஒலி பெருக்கிக் கொடுப்பதையும், பாதைகள் செப்பனிடுவதையும் தாண்டி உங்களுக்கு இந்தப் பாடசாலையின் முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டிய கடமைப்பாடும் இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள். ஹொராபொல, மடாடுகம, மரதன்கடவலை, கள்ளஞ்சியாகமை போன்ற கெக்கிறாவையைச் சூழவுள்ள முஸ்லிம் பிரதேச மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இப்பாடசாலையை நாடியே வருகின்றனர்.

எனவே இப்பாடசாலையின் பௌதீக ரீதியான வளப்பற்றாக்குறையைத் தீர்த்து வைப்பது உங்களின் கடமை. உங்களுக்கு முடியுமென்றால் ஒரு கேட்போர் கூடத்தையும், மைதானமொன்றையும் பெற்றுக் கொடுங்கள். எம் பாடசாலை மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளில் மட்டுமல்ல விளையாட்டிலும், கலை அம்சங்களிலும் சாதித்துக் காட்டுவர்கள். குறைந்தது சுற்று மதிலையாவது அமைத்துக் கொடுங்கள். சுற்றுப்புறத் தொல்லைகள் இன்றி நிம்மதியாகப் படிப்பார்கள்.

அடுத்து, மாணவன் ஸக்கீயின் சாதனை புகழப்படும் இந்நேரத்தில் மிக முக்கியமான விடயமொன்றையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு பாடசாலையில் அடைவு என்பது நல்ல பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமல்ல. அது வெறும் சடரீதியான அடைவு. மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக, மார்க்கப்பற்றுள்ளவர்களாக வளர்த்தெடுப்பதும் முஸ்லிம் பாடசாலையின் மிகப் பெரிய பொறுப்பு. ஏனெனில் பண்பாடுகளை போதிக்காத கல்வி 'அறிவுள்ள பிசாசுகளையே உருவாக்கும்' என்பது ஒரு அறிஞர் சொன்ன கருத்து. இந்தப் பாடசாலை பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்திருக்கின்ற பாடசாலை. பண்பாட்டைச் சொல்லிக் கொடுக்கவும், மார்க்கப் பிண்ணனியோடு மாணவர்கள்; வளரவும் இச்சந்தர்ப்பத்தை பாடசாலை நிர்வாகம் - பள்ளி நிர்வாகத்தோடு சேர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்புக்கும் - மார்க்கத்திற்கும் இடையில் எந்தப் பிரிகோடும் இல்லை. சில முஸ்லிம் ஊர்களில் பாடசாலைகளுக்குள்ளேயே இப்போது சின்னதாய் பள்ளிவாசல்கள் அமைக்கப் பெற்று அவர்கள் தொழுகை நேரங்களில் தொழுது கொள்வதற்கும், மற்றும் மார்க்க ரீதியான விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் ஒழுக்கம் தவறும் பட்சத்தில் அவர்களை வெறுமனே திட்டித் தீர்ப்பதோடு, அல்லது பிரம்பு முறிய அடிப்பதோடு, மிஞ்சிப் போனால் பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதோடு நின்று விடாமல் அவர்களின் மார்க்க, பண்பாடு விடயங்களில் உரிய வழிகாட்டல்களை பாடசாலை வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கடைசியாக...இப்பாடசாலையில் படித்த அனைவரினதும் உள்ளத்தில் 'இது எனது பாடசாலை' என்ற உணர்வு உள்ளத்தின் ஆழத்தில் அழியாமல் பதிந்திருக்கும். அத்தகைய உணர்வினாலேயே இவ்வரிகள் நான் எழுதினேன். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எம் பாடசாலையின் முயற்சிக்காய் பங்களிப்புச் செய்ய முன்வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக