-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

2 மே, 2012

மல்லிகை இதயங்கள்

நூல் அறிமுகம் : பாத்திமா முஸைனா




நூல் : மல்லிகை இதயங்கள் (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர் : ஷாறா
வெளியீடு : ஐ.பீ.ஸி அச்சகம்.
பக்கங்கள் : 119
விலை : 175

இஸ்லாமிய இயக்கத்திற்குள்ளிருந்து உருவான விரல்விட்டு எண்ணக் கூடிய ஈழத்து பெண் எழுத்தாளர்களில் சகோதரி ஷாறா முதன்மையானவர் என்பது மிகைப்பட்ட கருத்தாக இருக்க முடியாது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எழுத்து ஊடக பயணத்தில் அருள்ஜோதி சஞ்சிகைக்கு அடுத்து 1958 – 1960 காலப்பகுதிகளில் வெளிவந்த வழிகாட்டி சஞ்சிகையில் 'சோதரிகள் சோலை' எனும் பெண்களுக்கான பகுதி இஸ்லாமிய இயக்கத்திற்குள்ளிருந்து பெண் எழுத்தாளர்களை உருவாக்கும் ஆரம்பக் களமாக அமைந்தது எனலாம். பிற்பட்ட காலப்பகுதியில் அல்ஹஸனாத்தின் 'அந்நிஸா' பக்கம் மற்றும் எங்கள் தேசம் சஞ்சிகையின் 'பெண்கள் தேசம்' பகுதி என்பன இஸ்லாமிய இயக்கம் ஒரு சில பெண் எழுத்தாளர்களையாவது ஈன்றெடுக்கக் காரணமானது என்றால் அது பிழையாகாது.

இஸ்லாமிய தஃவாவில் பெண்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரிசணைக் காட்டப்படும் இக்காலையில், தஃவாவிற்கான பெண்களின் பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என்பதற்கு சிறந்ததொரு முன்னுதாரணத்தை சகோதரி ஷாறா அவர்கள் தனது 'மல்லிகை இதயங்கள்' எனும் சிறுகதைத் தொகுதி நூல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இலக்கியத்தில் கதாசிரியர்கள் இருவகையான கதாபாத்திரங்களை புனைவார்கள். அதில் ஒரு வகை நேர்வகை (positive) பண்பு கொண்ட கதாபாத்திரங்கள். அடுத்த வகை எதிர்மறை (negative) பண்பு கொண்ட கதாபாத்திரங்கள். சடவாத சிந்தனைக் கொண்ட எழுத்தாளர்கள் இத்தகைய எதிர்மறை பண்பு கொண்ட கதாபாத்திரங்களைப் புனைந்து அவர்களை கதாநாயகர்களாகக் காட்டவே முயற்சிப்பார்கள். ஆனால் சகோதரி ஷாறா இச்சிறுகதைத் தொகுதியில் படைத்திருக்கும் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை 'மல்லிகை இதயங்களாக' மணம் வீசும் நேர் வகைப் பண்பு கொண்ட கதாபாத்திரங்கள். இலக்கியத்தின் மூலம் சமூகத்தில் முன்மாதிரி மனிதர்களை உருவாக்க நினைக்கும் எழுத்தாளர்கள் இத்தகைய கதாபாத்திரங்களைப் புனையவே முயற்சிப்பார்கள்.

'மல்லிகை இதயங்கள்' என்பது மென்மையான பெண்ணின் மனதைச் சுட்டும் குறியீடு என்பது இந்நூலை வாசிக்கும் போது புரிகின்றது. ஏனெனில் இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களைக் கருவாகக் கொண்டவை. பெண்ணின் இயல்புகளைச் சொல்பவை. மட்டுமன்றி சமூக உருவாக்கப் பணியில் பெண்ணின் பங்களிப்பை விளக்குபவை.இக்கதைத் தொகுதியில் சகோதரி ஷாறா சமூக உருவாக்கப் பணியில் ஒவ்வொரு பெண்ணும் தான் இருக்கும் நிலையிலிருந்து கொண்டு எப்படிப் பங்களிப்புச் செய்யலாம் என்பதை அழகாக விபரிக்கின்றார். 'குடை நிழலில்' எனும் கதையில் வரும் நாஹித், 'நிலை மாறிய நிமிசங்கள்' கதையில் வரும் பர்ஹா, 'தோற்றுப் போன வாழ்க்கை' யில் வரும் ரைஹான், 'மௌனமாய் ஒரு...' கதையில் வரும் ரஹ்மத் தாத்தா, 'சுவனத்துப் பெருநாள்' கதையின் நாயகி ஆதிகா, 'நிறம் தெரியாத அத்திபாரங்கள்' கதையில் வரும் ஹஸீனா...இப்படி இத்தொகுதியில் முன்மாதிரிப் பெண்மணிகளை சகோதரி ஷாறா சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். இஸ்லாமிய இயக்கப் பணியில் பெண்ணின் பங்களிப்பென்பது பயான் வகுப்புக்களில் குந்தியெழுந்துச் செல்வதோ, அல்லது கூட்டங்கள் கூடிக் கலைவதோ மட்டுமல்ல, அவர்கள் தமது இயல்புக்கேற்ப பங்களிப்புச் செய்வதற்கு நிறையவே இருக்கின்றது என்பதை ஷாறா மேற்கூறிய கதாபாத்திரங்களின் ஊடாக தெளிவுபடுத்துகிறார்.

மேலும், 'பெண்ணின் குணங்கள்' என்று சமூகத்தில் குறையாகக் கூறப்படும் சில பண்புகளை திருத்திக் கொள்வதற்கான வழிகாட்டல்களையும் சகோதரி ஷாறா இக்கதைத் தொகுதியில் பேசுகிறார். வீண் விரயம், போலி கௌரவம், ஆடம்பரப் பிரியம், சீதனம், மாமி – மருமகள் பிரச்சினை...இப்படி குடும்ப அமைப்பின் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் கேடுகளையும் கதைகளின் கருவாக்கியுள்ளார் சகோதரி ஷாறா. மட்டுமன்றி குடும்ப அமைப்பின் சந்தோசத்திற்கு வழிவகுக்கும் கணவன் - மனைவி புரிந்துணர்வு எனும் விடயத்தையும் சகோதரி ஷாறா ' உன்னைச் சொல்லிக் குற்றமில்லை' எனும் கதையில் தெளிவுபடுத்த முனைகிறார். மொத்தத்தில் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒரு பெண்ணின் பங்கு என்ன என்பதை 'மல்லிகை இதயங்கள்' சிறுகதைத் தொகுதி தெளிவுபடுத்த முனைகிறது.

'கதையென்றால் யாருக்குத்தான் பிடிக்காது?' என்று நூலாசிரியர் முன்னுரையில் கேட்கிறார். ஆம் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இல்லை பிடிக்கின்ற வகையில் எழுதினால்தான் பிடிக்கும். இதைச் சகோதரி ஷாறா நன்றாகவே செய்திருக்கிறார். நூலை வாசித்துப் பாருங்கள். கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். இன்ஷா அல்லாஹ்.
(வாசிக்க :- 2012 மே மாத அல்ஹஸனாத் பக்கம் : 42)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக