-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

29 ஜூலை, 2011

முத்தகீ + ரமழான் + அல் குர்ஆன் = இலக்கு

இஸ்மத் அலி




ரமழான் மாதத்தின் சிறப்புகள் குறித்த பயான்கள் ஒருபுறமும், அம்மாதத்தோடு தொடர்பான சட்டப் பிரச்சினைகள் குறித்த சூடு பறக்கும் விவாதங்கள் மறுபுறமும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், எமது இறுதி இலக்கான "அல்லாஹ்வின் திருப்தியையும்- சுவனத்தையும் அடைதல்” என்ற இலக்கை நோக்கி எம்மை வழிப்படுத்தவே ரமழான் வருகின்றது என்பதை விளக்கும் வகையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

எமது இறுதி இலக்கு மறுமையில் இறை திருப்தியும், சுவனமும்தான் என்பதில் எமக்கிடையில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த இறுதி இலக்கை அடைகின்றவர்களாக நாம் மாற - ரமழான் எவ்வகையில் எம்மைப் பயிற்றுவிக்கிறது என்பதை பின்வரும் வினாக்களுக்கு அல்-குர்ஆன் ஒளியில் பதிலளிப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


வினா 01 : ரமழானில் நோன்பு விதியாக்கப்பட்டது ஏன்?

இதற்குரிய பதிலை அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

' ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்பிருந்த சமூகங்களுக்கு நோன்பு விதியாக்கப்பட்டதைப் போல உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் 'முத்தகீன்களாக' (இறையச்சம் உள்ளவர்களாக) ஆக வேண்டும் என்பதற்காக”
(சூறதுல் பகரா : 183).


இறையச்சமுள்ள 'முத்தகீன்களாக' மனிதர்கள் மாற வேண்டும் என்பதே நோன்பின் நோக்கம் என்பது இங்கு தெளிவாகின்றது. 'தக்வா' என்பதற்கு இறையச்சம் என்றும் 'முத்தகீ' என்பதற்கு இறையச்சமுள்ளவர் என்றும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டாலும், அதன் உண்மையான விளக்கம் ஒருவர் தனது விருப்பங்களை அல்லாஹூக்காக விட்டுக் கொடுத்து அவனது விருப்பத்தை செயற்படுத்த முனைவதைக் குறிக்கும்.

நோன்பில் நாம் இத்தகைய பயிற்சியைப் பெற்றுக் கொள்கின்றோம். சுவையான உணவுகள் கண் முன்னிருக்க - வயிற்றுப் பசியால் உடம்பு தளர்ந்து, நா வரண்டு "உண்டு விடு” என்று உள்மனம் சொல்லியும், அல்லாஹ்வின் விருப்பத்திற்காக நாம் மஃரிபு அதான் கேட்கும் வரை உண்பதற்கு எத்தனிப்பதில்லை. இங்கு எமது ஆசைகளை அல்லாஹூக்காக நாம் விட்டுவிடுகின்றோம். இதே போன்றுதான் எமது பாலுணர்வு, பகையுணர்வு, கோபம் அனைத்தையும் நோன்பு கட்டுப்படுத்தி விடுகின்றது. நோன்பின் மூலம் நாம் பெறும் இத்தகைய பயிற்சிகளே எம்மை 'முத்தகீ' எனும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது.



வினா 02 : சரி, நாம் ஏன் முத்தகீன்களாக மாற வேண்டும் ?


இதற்குரிய பதிலை அல்-குர்ஆன் இப்படிச் சொல்கின்றது.

'அலிப், லாம், மீம். இந்த வேதத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது 'முத்தகீன்களுக்கு' (இறையச்சம் உள்ளவர்களுக்கு) வழிகாட்டியாகும்”
(சூறதுல் பகரா : 1-2)


ஆம், இந்த உலகத்தின் இறுதி வேதம் - அதுவும் ரமழானில் அருளப்பட்ட புனித வேதம் - யாருக்கு வழிகாட்டியாக அமையுமென்றால் முத்தகீன்களுக்கே அது முழுமையான வழிகாட்டியாக அமையும். அல்லாஹ்வின் விருப்பங்கள் என்ன? அவனது வெறுப்புக்கள் என்ன? என்பதை தெளிவுபடுத்தக் கூடிய அல்லாஹ்வின் வார்த்தைகளே அல்-குர்ஆன். ரமழானில் அல்லாஹ்வின் விருப்புக்களை முதன்மைப்படுத்த பயிற்சி பெற்ற ஒருவர் தனது முழு வாழ்வையும் அல்லாஹ்வின் விருப்பத்தின் பிரகாரம் மட்டும் அமைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போது அல்-குர்ஆன் அவருக்கு வழிகாட்டலை வழங்கக் காத்திருக்கின்றது. தனது தனிப்பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, பொருளாதார வாழ்வு, அரசியல் வாழ்வு, சமூக வாழ்வு என்று எல்லா அம்சங்களின் போதும் வழிகாட்டலைப் பெற 'முத்தகீ' அல்-குர்ஆனை நாடி வருவார்.


நாம் எத்தனை ரமழான்களைக் கடத்தி விட்டோம். அதிலே நோன்பு நோற்றோம், நின்று வணங்கினோம், தர்மங்கள் செய்தோம். ஆனால் அந்த ரமழான்கள் எங்களை அல்-குர்ஆனின் வழிகாட்டலைப் பெற்று எமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றவர்களாக ஆக்கியதா? என்பதை இந்த ரமழானுக்கு நுழைவதற்கு முன் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் அல்-குர்ஆனை எமது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொள்வதே நாம் 'முத்தகீ' என்பதற்கு அடையாளமாகும். மேலும், அல்-குர்ஆனின் வழிகாட்டலை புறக்கணித்து, நாம் எடுத்து வைக்கும் ஒரு நகர்வு கூட எமக்கு பயனாக அமையப் போவதில்லை. அல்-குர்ஆனைப் புறக்கணித்து, அதன் வழிகாட்டலை மறந்து செயற்படுகின்றவர்களை அல்லாஹூத்தஆலா இப்படி எச்சரிக்கின்றான்.


'யார் என்னுடைய வழிகாட்டலைப் புறக்கணித்தானோ அவனுக்கு நெருக்கடியான வாழ்வு இருக்கின்றது. மேலும் அவனை மறுமையில் நாம் குருடனாக எழுப்புவோம். அப்போது அவன்> இறைவா! நான் உலகத்தில் பார்வையுள்ளவனாக இருந்தேனே> இப்போது ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? என்று வினவுவான். அதற்கு அல்லாஹ்> அப்படிதான்> எம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது நீ அதை மறந்து வாழ்ந்தாய். இன்று நீயும் மறக்கப்பட்டவனாய் ஆனாய்”
( சூறா தாஹா : 124-126)

எனவே இவ்வுலகத்தில் அல்-குர்ஆனையும், அதன் வழிகாட்டலையும் மறந்து வாழும் நாம் இந்த எச்சரிக்கைக்குப் பயந்து கொள்வோமாக. நாம் அல்-குர்ஆனை வழிகாட்டியாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றால் எம்மை 'முத்தகீ” யாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும், அதற்குரிய பயிற்சியைத் தரவே ரமழான் வருகின்றது என்பதையும் புரிந்து கொள்வோமாக.


வினா : 03 : 'முத்தகீன்களாக மாறி விட்டால் எமக்கு கிடைக்கப் போவது என்ன?


இதற்குரிய விடையினை அல்-குர்ஆன் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்துகின்றது.

- இறைவனின் நேசமும் அன்பும் கிடைக்கப் பெறல்.


'அல்லாஹூத்தஆலா முத்தகீன்களை விரும்புகின்றான்” (அத்-தவ்பா : 4)

'அல்லாஹூத்தஆலா முத்தகீன்களின் நேசனாவான்” (அல்-ஜாஸியா : 19)


- இறைவன் கூட இருக்கின்ற பாக்கியம்.

அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹூத்தஆலா முத்தகீன்களோடு இருக்கின்றான்' (பகரா:194)


- முத்தகீன்களின் செயல்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவை.


' நிச்சயமாக செயல்களை அல்லாஹூத்தஆலா முத்தகீன்களிடமிருந்தே ஏற்றுக் கொள்கின்றான்' (அல்-மாஇதா : 27)


- மறுமையில் அல்லாஹ்விடம் கூட்டமாக அழைத்துச் செல்லப்படும் பாக்கியம்.

மறுமையில் முத்தகீன்கள் கூட்டமாக ஒன்றிணைக்கப்பட்டு ரஹ்மானாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவர்' ( மர்யம் : 85)


- மஹ்சரில் பாதுகாப்புப் பெற்றவர்களாக இருக்கும் பாக்கியம்


' நிச்சயமாக முத்தகீன்கள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் (மறுமையில்) இருப்பர்' (அத்துஹான்: 51)



- சுவனத்தை அடையும் பாக்கியம்.


' நிச்சயமாக முத்தகீன்கள் சுவனங்களில், அருள்கள் வழங்கப்பட்டோராக இருப்பர்' ( அத்தூர் : 17).



எமது இறுதி இலக்கு 'அல்லாஹ்வின் திருப்தியும் – சுவனமும்” என்பதை நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இந்த இலக்கை அடைபவர்கள் முத்தகீன்களைத் தவிர வேறு ஒருவராகவும் இருக்க முடியாது என்பதை மேலுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எனவே, மேலே மூன்று வினாக்களின் மூலம் விளக்கிய விடயங்களை ஒன்றிணைத்து இப்படிச் சொல்ல முடியும். 'அல்லாஹ்வின் திருப்தியும் - சுவனமும்' என்ற இலக்கை முத்தகீன்கள் மட்டுமே அடைந்து கொள்ள முடியும். அல்-குர்ஆனை வழிகாட்டியாகக் கொண்டு அதனை தனது வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதே 'முத்தகீ” என்பதற்கு வரைவிலக்கணமாகும். அத்தகைய முத்தகீன்களாக எம்மை மாற்றியமைக்கும் பயிற்சியை வழங்கவே ரமழான் எம்மை நோக்கி வருகின்றது.. சுருக்கமாகச் சொன்னால் எம் இறுதி இலக்கை அடைவதற்கு எம்மை பயிற்றுவிக்கவே ரமழான் வருகின்றது.

ஆகவே, எம்மை நோக்கி வரும் ரமழானை சென்ற வருடங்களில் எப்படிக் கடத்தினோமோ, அப்படி என்றில்லாமல் நாம் முத்தகீயாக மாறுவதற்குரிய நல்ல சந்தர்ப்பமாக அதனை ஆக்கிக் கொள்ள எம் அனைவருக்கும் அல்லாஹூத்தஆலா அருள் புரிவானாக!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக