-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

31 மே, 2011

தஃவாவின் இலக்கு பற்றி பாசத்தோடு பர்சான் நாநாவுக்கு - மடல் 2 -



بسم الله الرحمن الرحيم

பாசத்தோடு பர்சான் நாநாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், இயக்கத் தோழர்களும் உடல் நலத்தோடும், ஈமானிய பலத்தோடும் வாழ பிரார்த்திக்கிறேன்.


நானும், உங்களை அறிந்த ஏனைய சகோதரர்களும் உங்களைப் பற்றி எம் மனதில் வைத்திருந்த நல்லெண்ணத்தை உறுதிப்படுத்தும் வகையில் உங்கள் பதில் கடிதம் அமைந்திருந்ததில் எம் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி. அல்-ஹம்துலில்லாஹ். இப்படியான உரையாடலொன்றை ஏன் முதற் கட்டத்திலேயே ஆரம்பித்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கவலையடைகின்றேன். அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் என்ற வகையில், இப்போதாவது இப்படியான ஒரு மனந்திறந்த கலந்துரையாடலைத் மேற்கொள்ளும் எண்ணத்தை எம் உள்ளத்தில் ஏற்படுத்திய அல்லாஹ்வை மீண்டும் புகழ்கிறேன்.


''முதலில், விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, விமர்சனத்தில் நியாயங்கள் இருப்பின் என் தவறுகளை களைவதற்கான மனதுடனும், நியாயமற்றதாயின் அதற்குண்டான தெளிவுகளை வழங்க வேண்டும் என்ற கடமைப்பாட்டுடனுமே நான் உங்கள் மடலையும் உள்வாங்கிக்கொள்கின்றேன் என்பதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

முரண்பாடுகள் உடன்பாடுகளாய் மாற வேண்டுமாயின் முரண்பட்டு நிற்பவர்கள் தம் கௌரவத்தை விட்டு, ஒரு மேசையில் அமர்ந்து வஹியின் ஒளியில் தீர்வுகளை தேட முற்பட வேண்டும். இதுவே, ஆரோக்கியமான பிரச்சாரக் களத்திற்கு ஏற்றமான முறையாகும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு''.
என்ற உங்கள் பதில் கடிதத்தின் வரிகளின் மூலம் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் உங்கள் மனோபாவத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். உங்கள் மீதிருந்த மதிப்பு முன்பை விட இப்போது இன்னுமின்னும் அதிகரித்திருக்கிறது.


பர்சான் நாநா, அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடந்த சம்பவங்களைப் பற்றி அலசுவதை விட தஃவா சிந்தனைக் குறித்த விடயங்களை முதலில் கலந்துரையாடி தெளிவு பெறுவது நல்லதென நினைக்கிறேன். அந்த வகையில் தஃவாவின் இலக்கு அல்லது அதன் உள்ளடக்கம் பற்றிய எனது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதோடு, அது பற்றிய உங்களின் தற்போதைய நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளவும் ஆசைப்படுகின்றேன்.

தஃவாவின் இலக்கு

மனிதனை அல்லாஹூத்தஆலா இவ்வுலகத்திற்கான தனது பிரதிநிதியாகப் படைத்தான் என்பதுவே அல்-குர்ஆனின் கருத்து.
' பூமியில் பிரதிநிதியொன்றைப் படைக்கப் போகிறேன் என்று உமது இறைவன் மலக்குமார்களிடம் கூறியதை நபியே ஞாபகப்படுத்துவீராக' ( அல் -பகரா : 30) என்ற வசனம் இதற்கு சான்று பகர்கின்றது.

அல்லாஹூத்தஆலாவை மட்டும் வணங்கி, கட்டுப்படத் தகுதியான இறைவனாக ஏற்று, அல்லாஹ்வின் விருப்பங்களை பூமியில் நடைமுறைப்படுத்துவதோடு, பூமியை வளப்படுத்துவதுமே இப்பிரதிநிதித்துவப் பணியின் மூலம் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மனிதன் மீது சுமத்தப்பட்ட இப்பொறுப்பை உணர்த்துவதற்காகவே அல்லாஹூத்தஆலா நபிமார்களை அனுப்பி வைத்தான். இந் நபிமார்கள் மீது 03 வகையான பணிகள் சுமத்தப்பட்டிருந்தன.

1) அல்லாஹூத்தஆலாவை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழ்வதின் பால் அழைத்தல்.

2) அல்லாஹூத்தஆலாவின் விருப்பு, வெறுப்புக்களை (சட்டங்களை) மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்த முயற்சித்தல்.

3) அல்லாஹூத்தஆலா இறக்கிய சட்டங்களைக் கொண்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்த சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்.


முதல் பணியானது அனைத்து நபிமார்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்ததை பின்வரும் அல்-குர்ஆன் வசனம் உணர்த்துகின்றது.
' என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை, என்னை மட்டுமே வணங்குங்கள் என்று அறிவிக்கப்படாமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை' (அல்- அன்பியா : 25)

அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மனிதர்களுக்கு எத்திவைத்து அதை நடைமுறைப்படுத்தல் என்ற பணியைப் நிறைவேற்றும் பொருட்டே அல்லாஹூத்தஆலா சில நபிமார்களுக்கு வேதங்களையும், இன்னும் சிலருக்கு ஸூஹூபுகளையும், சிலருக்கு அவையிரண்டையும் இறக்கியருளினான். இவை வழங்கப்படாத நபிமார்களுக்கு முன்னைய நபிமார்களின் சரீஅத்தை பின்பற்றுவதும், போதிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் கடமையாக இருந்தது. ' உங்களிலுள்ள அனைவருக்கும் ஒரு சட்ட ஒழுங்கையும், பாதையையும் ஆக்கித் தந்தோம்' ( அல்- மாஇதா : 48) என்ற வசனம் நபிமார்கள் ஏதோ ஒரு வகையில் இரண்டாவது பணியை பொறுப்பாக்கப்பட்டிருந்தனர் என்பதை தெளிவுபடுத்துகின்றது.


மூன்றாவது பொறுப்பை – (ஒரு தலைமையின் கீழ் சமூக அமைப்பொன்றை உருவாக்குதல்) அல்லாஹூத்தஆலா எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கினானா? என்பதை அல்-குர்ஆனோ ஹதீஸ்களோ தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இப்பொறுப்பு நபிமார்களில் சிலருக்கு கடமையாக்கப்பட்டிருந்தததை நாம் அல்-குர்ஆன் கூறும் நபிமார்களின் கதைகளிலிருந்து விளங்கிக் கொள்கிறோம்.


இப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நபிமார்களில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முக்கியமானவர்கள். ஏகத்துவத்தை எத்திவைப்பதோடு, பிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்து பனூ இஸ்ரவேலர்களை விடுவித்து, அவர்களை ஒரு சமூகமாக்கி, சமூக அமைப்பை ஏற்படுத்துவதற்காக அச்சமூகத்திற்கு ஹிஜ்ரத்தை விதியாக்கி, சமூக அமைப்பை பாதுகாப்பதற்காக ஜிஹாதையும் கடமையாக்கி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தூதுத்துவத்தை பூமியில் மேலோங்கச் செய்கின்ற பணியை அல்லாஹூத்தஆலா அவர்கள் மீது சுமத்தியிருந்தான் என்பதை அவர் பற்றிய அல்-குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.


'எமது அத்தாட்சிகளைக் கொண்டு மூஸாவை பிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தாரிடமும் அனுப்பினோம். அவர் அவர்களிடம் நான் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்று கூறினார்' (சுஹ்ருப் : 46)
என்ற வசனம் எத்திவைத்தல் என்ற பொறுப்பை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த விதம் பற்றி பேசுகின்றது.


'நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கி அவருக்குத் உதவியாளராக அவரது சகோதரர் ஹாரூனையும் ஆக்கினோம்' (புர்கான் : 35) என்ற வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஷரீஅத் வழங்கப்பட்டமையையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உதவி செய்ய ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உதவியாளராக ஆக்கியதையும் உணர்த்துகின்றது. இவ்வசனத்தில் அல்லாஹூத்தஆலா ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்க 'வஸீர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது. இச் சொல் சமகாலத்தில் அமைச்சர் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் ஒரு விடயத்தைச் செயற்படுத்துவதில் இன்னொருவருக்கு உதவியாளராக இருத்தல் என்ற கருத்திலேயே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டது. எனவே ஏகத்துவத்தை எத்திவைத்தல் மட்டுமன்றி ஷரீஅத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்தல் என்ற பொறுப்பும் மூஸா அலைஹிஸ்ஸலாம் மீது சுமத்தப்பட்டிருந்தமையை இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது.


'முன்னரும் நாம் வேதனைப் பட்டோம். நீர் அனுப்பப்பட்ட பின்னரும் நாம் வேதனைக்குள்ளாக்கப்படுகின்றோம் என்று பனூ இஸ்ரவேலர்கள் சொன்ன போது, மூஸா 'உங்களின் இரட்சகன் உங்கள் எதிரிகளை அழித்து உங்களைப் பூமியின் பிரதிநிதிகளாக்கி பின்னர் நீங்கள் எவ்வாறு செயற்படுகின்றீர்கள் என்பதை அவதானிக்கக் கூடும்' (அஃராப் :128). இவ்வசனம் மூஸா அலைஹிஸ்ஸலாம் பனூ இஸ்ரவேலர்களை சமூக உருவாக்கப் பணிக்காக அழைத்துச் சென்ற சமயம் அச் சமூகம் பொறுமையிழந்த போது கூறப்பட்ட ஆறுதல் வார்த்தைகள் என்பதை பர்சான் நாநா நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்வதென்னவென்றால் நபிமார்களின் தஃவா எத்திவைத்தல், அல்லாஹ்வின் விருப்பு வெறுப்புக்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து, நடைமுறைப்படுத்தல், அந்த சட்டங்களின் அடிப்படையில் ஒரு தலைமைத்துவத்தின் கீழான சமூக அமைப்பொன்றை உருவாக்கல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது என்பதாகும். இதில் மூன்றாவது பொறுப்பு குறிப்பிட்ட சில நபிமார்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது, ஏனைய இரு பொறுப்புக்களும் எல்லா நபிமார்களுக்கும் விதியாக்கப்பட்டிருந்தது.


இந்த வகையில் இறுதித் தூதரான ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களுக்கும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று மூன்று பொறுப்புக்களும் சுமத்தப்பட்டிருந்தன என்பதை நாம் அல்-குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் வாழ்விலிருந்தும் விளங்கிக் கொள்கிறோம். இந்த மூன்று பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலம் அடையப் பெறும் இறுதி இலக்கான 'அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு, அவனது சட்டங்களை நடைமுறைப்படுத்தி, அவனது திருப்தியை இலக்காகக் கொண்டு வாழும் சமூக அமைப்பு' என்ற இலக்கை நபியவர்கள் தமது வாழ்நாளிலேயே கண்டு கொண்டார்கள். ஆனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகம் அந்த இலக்கை அடைய தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம் அந்த சமூகத்தின் பண்புகளும், நடத்தைகளுமே. இதன் கருத்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்கள் என்பதல்ல. மாற்றமாக அதற்கான முயற்சிகளை அவர்கள் தமது கடைசி மூச்சு வரை மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளின் வெற்றி அவர்களது வாழ்நாளில் கிட்டவில்லை என்பதாகும்.


மேலும் நபிகளாரின் தூதுத்துவம் ஏனைய எல்லா மார்க்கங்களையும் கொள்கைகளையும் மிஞ்சி, அதிகாரம் செலுத்தக் கூடிய அளவுக்கு மாற வேண்டும் என்பது அல்லாஹூத்தஆலாவின் நாட்டமாக இருந்தது.

'மற்றைய எல்லா எல்லா மார்க்கங்களையும் மிகைக்க வேண்டும் என்பதற்காக அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான்'. (தௌபா : 33 ஃ பத்ஹ் : 28 ஃ ஸப் : 9)


மார்க்கத்தை மிகைக்க வைக்க வேண்டிய பணி, வெறுமனே எத்தி வைப்பதால் மட்டும் சாத்தியமாகாது, மாற்றமாக சமூக அமைப்பொன்றையும், அதற்கான தலைமையையும் ஏற்படுத்துவதன் மூலமே முடியும் என்ற வழிகாட்டலையும் அல்லாஹ் நபியவர்களுக்கு வழங்கினான். இதற்காகவே இறை தூதர் மக்காவைத் துறந்து மதீனாவுக்குச் சென்றார்கள். அங்கு நபிகளார் உருவாக்கும் சமூக அமைப்பில் பங்கு கொள்வது ஈமான் கொண்டவர்களின் கடமை என்பதற்காகவே ஹிஜ்ரத்தையும் விதியாக்கினான். பின்னர் அச் சமூக அமைப்பையும், தலைமைத்துவத்தையும் பாதுகாப்பதற்காக ஜிஹாதையும் விதியாக்கினான். இறுதியில் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்கள் அந்த இலக்கை அடைந்ததை நாம் அவர்களது ஸீராவை வாசிக்கின்ற போது அறிந்து கொள்கிறோம். இங்கு அல்லாஹூத்தஆலா நபியவர்களும், ஏனையவர்களும் ஈமான் கொண்டுவிட்டதற்கான பரிசாக 'மதீனா அரசை' வழங்கவில்லை என்பதையும் - அதற்காக தம் உயிர்கள், உடமைகள், சொந்தங்கள் என்பவற்றை அவர்கள் அர்பணிக்க வேண்டியிருந்தது என்பதையும் அதன் கடைசி அடைவே மதீனா அரசு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


நபிகளாருக்குப் பின்னர் அவர்கள் ஒருவாக்கிய அந்த சமூக அமைப்பு கட்டிக்காக்கப்பட வேண்டியது கடமை என்பதை ஸஹாபாக்கள் உணர்ந்திருந்தனர். எனவேதான் நபிகளாரின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட முன்னரே சமூகத்திற்கான தலைமைத் தெரிவில் அவர்கள் ஈடுபட்டார்கள். இங்கு ஜனாசாவை அடக்குதல், சமூகத் தலைமைமையை தெரிவு செய்தல் என்ற இரண்டு சமூகக் கடமைகளில் (பர்ளு கிபாயா) சமூகத் தலைமையை ஏற்படுத்துதல் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது என்பதை அவர்கள் உணர்ந்தமையினாலே அதற்கு முன்னுரிமைக் கொடுத்தனர். (இது முதன்மைப் படுத்தப்பட வேண்டிய பிக்ஹ் - பிக்ஹூல் அவ்லவிய்யாத்திற்கு சிறந்த உதாரணம்) மாற்றமாக 'அண்ணன் எப்போது போவான் - திண்ணை எப்போது காலியாகும்' என்பதனால் அல்ல. ஏனெனில் ஸஹாபாக்கள் உயிர், பொருள், வாழ்ந்த பூமி, சொந்தங்கள் என்று எல்லாவற்றையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணம் செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு ஆசைப்பட்;டு 'தலைமைத்துவத்தை ஏற்படுத்தும்' விடயத்தைச் செய்யவில்லை. மாற்றமாக அது அடிப்படைக் கடமை என்பதனால்தான் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள்.


மேலும் இத்தகைய ஒரு தலைமையினாலும், சமூக அமைப்பினாலுமே அல்லாஹ்வின் விருப்பங்களை இப்பூமியில் நிலைநாட்டும் பிரதிநிதித்துவப் பணியைச் (மனிதன் படைக்கப்பட்ட நோக்கமே இதுதான் என்பதை முதல் பந்தியில் குறிப்பிட்டது போல) செய்ய முடியும் என்பது அறிவுபூர்வமான கருத்தாகும். ஏனெனில் சமூகம் என்பது ஒரு கட்டடத்தைப் போல – மார்க்கமே அதன் அத்திவாரம் - தலைமையே அதன் காவலாளி...எந்த கட்டடத்திற்கு அத்திவாரம் இல்லையோ அது நிலைத்து நிற்காது. அத்திவாரம் சரியாக இருந்தும் காவலாளி இல்லாமலிருந்தால் அக்கட்டடம் பாதுகாப்புப் பெற்றதாக இருக்காது. கண்டவர்கள் கல் வீசிச் செல்லும் நிலையே அக்கட்டடத்திற்கு ஏற்படும்.


எனவேதான் இந்த சமூக அமைப்பையும், தலைமையையும் முஸ்லிம் சமூகம் குறை, நிறைகளோடு சுமார் பதின் நான்கு நூற்றாண்டுகள் 1924ம் ஆண்டில் கிலாபத் ஒழிக்கப்படும் வரை கட்டிக்காத்து வந்தது. இந்த பதின் நான்கு நூற்றாண்டு கால ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினதும்( السواد الأعظم ) ஏகோபித்த முடிவே முஸ்லிம்கள் ஒரு சமூகமாகவும், ஒரு தலைமையின் கீழும் வாழ வேண்டும் என்பதாகும்.


கிலாபத்தின் வீழ்ச்சிக்குப் பின்பு முஸ்லிம் சமூகத்தை ஒரு உம்மத்தாக்கி அவர்களுக்கு ஒரு தலைமைத்துவத்தை வழங்கும் நிலை இல்லாமல் போனது. முஸ்லிம் சமூகம் மேய்ப்பாளன் இல்லாத ஆட்டு மந்தையைப் போலானார்கள். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுக்கும், மீளெழுச்சிக்குமுரிய காரணங்களை யோசித்த அறிஞர்கள் தாம் வாழ்ந்த சூழல், அறிவுப் பின்னணி என்பவற்றைக் கொண்டு சில சீர்த்திருத்த முயற்சிகளை மேற்கொண்டனர். முஸ்லிம் சமூகம் பித்அத்களையும், மூட நம்பிக்கைகளை தமக்குள் உள்வாங்கிக் கொண்டதே காரணம் என்று சிலரும், அவர்கள் இபாதத்தில் கரிசணைக் காட்டாமையே காரணம் என்று சிலரும், இல்லை அவர்கள் இந்த சமூக அமைப்பையும், தலைமைத்துவத்தையும் இழந்ததே காரணம் என்று சிலரும் கருத்துச் சொல்லினர். அவற்றை தமது தஃவாவின் இலக்குகளாக அல்லது உள்ளடக்கமாகவும் மாற்றிக் கொணடனர். அதன் வழியில் சமூக சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொண்டனர், மேற்கொண்டு வருகின்றனர்.


பர்சான் நாநா, இங்கு நான் குறிப்பிட்ட விடயங்களைக் கொண்டு தஃவாவின் இலக்கு, அல்லது அதன் உள்ளடக்கம் 'அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு, அவனது சட்டங்களை நடைமுறைப்படுத்தி, சமூகத்தை வழிநடத்தக் கூடிய தலைமையை உருவாக்கி அத்தலைமைiயின் கீழ் ஒரு சமூக அமைப்பை உருவாக்குதல்' என்ற பரந்த இலக்கே எமது தஃவாவின் இலக்காக இருக்க வேண்டும் என்ற கருத்தை நான் சார்ந்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதன் கருத்து ஷிர்க், பித்அத்களை ஒழித்தல், இபாதத்களை ஊக்குவித்தல் என்பவற்றை மறுப்பது என்பதல்ல. ஒட்டு மொத்த தஃவாவில் அவைகள் முக்கியமான சில பகுதிகள் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் அதுவே தஃவாவின் இலக்காகி சமூக அமைப்பை உருவாக்குதல் என்ற அம்சம் கவனித்திற்கொள்ளப்படாமை, அல்லது அதற்கான முயற்சிகள் 'ஆட்சியைப் பிடித்தல்' என்று மட்டமாக எடைப் போடுகின்றமை என்பவை தவறு என்பதையே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.


ஆரம்பத்தில் நீங்களும் இதே கருத்தில்தான் இருந்தீர்கள். இது குறித்த தற்போதைய உங்கள் நிலைப்பாடு அவ்வாறு அல்ல என்பதை உங்களினதும் நீங்கள் சார்ந்திருக்கின்றவர்களின் எழுத்துக்கள், உரைகள் மூலமும் அறிந்து கொண்டேன். தஃவா பற்றிய இந்த பரந்த இலக்கை எந்த வகையில் நீங்கள் நோக்குகின்றீர்கள்? நீங்கள் அல்லது நீங்கள் சார்ந்திருக்கின்றவர்கள் எவ்வகையான தஃவா இலக்குகளைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் மறு மடலில் எதிர்பார்க்கின்றேன்.


குறைகளைச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்ளும் மனதுடனும், தெளிவுகளை வேண்டி நின்றால் அல்லாஹ்வின் அருளினால் கிடைக்கப் பெற்ற அறிவைக் கொண்டும் என்னால் முடியுமானளவுக்கு தெளிவுபடுத்துவேன் என்று சொல்லி மடலுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன். உங்கள் அழைப்புப் பணிக்கு ஒதுக்கிய நேரம் போக – மீதமுள்ள நேரத்தில் எனக்கும் நேரமொதுக்கி பதலளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
இஸ்லாமியச் சகோதரன்
இஸ்மத் அலி.
2011.05.31

6 கருத்துகள்:

  1. இதை போன்ர கருத்து பரிமாரல் அலஹான முரையில் பேச்சுவார்தயில் நடை பெட்ரால் நன்ராக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  2. இதைப் பற்றி தமிழில் எழுதுவதற்கு நேரம் இடம் கொடுக்காமையினால் அரபியில் இதற்கான மறுப்பொன்றின் லின்க் இதோ: http://ibnuuwais.blogspot.com/2011/06/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. அன்பின் இனிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்களது கருத்துப் பரிமாறல்களை ஆர்வத்தோடு அவதானிக்கத் தொடங்கினேன். தஃவாவை விளங்கிக் கொள்ளவும் அதற்கான ஒழுக்கங்களையும் புரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனைக் கருதினேன்.

    பர்ஸான் நாநா என்பவர் இரண்டாவது மடலுக்கு பதில் மடல் எழுதுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏதோ அரபியில் விளக்கம் இருக்கிறது என்று ஒரு தொடர்பகம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எங்களைப் போன்றவர்களைக் கருத்திற்கொண்டு பதில் மடலை தமிழில் பர்ஸான் நாநா வழங்க வேண்டும்.

    நனறி,
    மாணவன்

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா...
    இந்த பதில் பர்சான் நாநாவால் அனுப்பப்பட்டதல்ல...அவரின் பதிலுக்காக உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஓட்டமாவடி ஜம்மிய்யா26 ஜூன், 2011 அன்று AM 12:21

    ஓட்டமாவடி ஜம்மிய்யா

    இயக்கங்களுக்கிடையான தஃவா இவ்வாறு அமைந்தால் வீனான பிரச்சணைகள் ஏதும் இடம் பெறாமல் இருக்கும்
    ”இஸ்லாமிய்ய தஃவா பிரச்சார மேடைகளுக்கு ஏன் காபிர்கள் ஆயுதம் ஏந்தி (பொலீஸ்) காவள் நிக்க வேண்டும்.”

    பதிலளிநீக்கு
  6. ينبغي على المسلم ألا يتعود تسفيه الآخرين مهما كانت آراءهم خاطئة, فبيان الخطأ شيء وتسفيه الرأي شيء آخر.....ولكن الحوار العقلاني الهادئ يكشف الصواب ويحافظ على المودة.
    قول بالإمام جاسم المهلهل من المجتمع

    பதிலளிநீக்கு