-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

29 மே, 2011

அழைப்பின் ஆசிரியர் பர்சான் நாநாவுக்கு ஒரு மனந்திறந்த மடல்




அன்புள்ள பர்சான் நாநா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.

இந்தக் கடிதம் உங்களுக்குள் எத்தகைய உணர்வுகளைத் தோற்றுவிக்கும் என்பது எனக்குத் தெரியாது. இத்தகைய ஒரு கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டீர்கள். என்றாலும் தஃவாவில் எமக்கிடையிலுள்ள கொள்கை மற்றும் வழிமுறை தொடர்பிலான முரண்பாடுகள் பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கான ஆரம்பமாக இது அமையும் எனக் கருதுகின்றேன். உங்களோடு இருக்கின்ற ஏனைய சகோதரர்களும் இதில் பங்குகொண்டு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை பகிரங்கமாக எழுதுகின்றேன்.


என்னதான் முரண்பாடுகள் எமக்கிடையில் என்றாலும் உங்களை பர்சான் நாநா என்று அன்போடு அழைக்கின்ற மனோபாவமே இன்னும் என்னிடமிருக்கின்றது. கல்லூரி நாட்களில் உங்களால் நான் பயன் பெற்றதும், உங்களின் நன் நடத்தையுமே இதற்கான காரணம். மென்மையான புன்னகை...கண்கொட்டாமல், அசையாமல் செவிமடுக்க வைக்கும் பேச்சு...கடிந்து கொள்ளாத அறிவுரைகள்...ஆரவாரமில்லாத செயற்பாடுகள்...அந்த பழைய பர்சான் நாநாவை மீண்டும் காண வேண்டும் என்பதுவே எனது ஆசையும், பிரார்த்தனையுமாகும்.


இயக்கத்திற்கான எனது முதல் பைஅத் உங்கள் கையில்தான் அமைந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு மறக்கவில்லை. கருத்த இரவுகளில் கல்லூரி வளாகத்தில் நடந்த அந்த ஒன்றுகூடல்களையும், நிகழ்வுகளையும் வெறும் குஞ்சு வீடு விளையாட்டாக நான் கருதவில்லை. ஏனென்றால் அந்தக் கல்லூரி வளாகமும், இயக்கமும்தான் எமது வாழ்விலும், சிந்தனைகளிலும், நடத்தையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.


அந்தச் சீரான கொள்கைத் தெளிவிலிருந்தும், பண்பாடான தஃவா அணுகுமுறைகளிலிருந்தும் உங்களைத் திசைத் திருப்பிய விடயம் என்ன? என்ற கேள்விக்கு எனக்குச் சரியாக பதில் தெரியாது. இயக்கத்தின் தனிமனிதர்களால் ஏற்பட்ட வெறுப்பு, அல்லது உரிய இடம் கிடைக்காமை போன்றவை காரணமாக இருக்குமோ என்று விசாரித்துப் பார்த்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உங்களோடு நெருங்கிப் பழகியவர்கள் சொன்ன செய்தி. அப்படியான நிகழ்வுகள் உங்களை ஒரு சீரான சிந்தனையை மட்டமாக விமர்சிக்கும் அளவுக்கு மாற்றியிருக்கும் என்றால், அது உங்களை திசைத்திருப்ப சைத்தான் பயன்படுத்திய ஆயுதம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளாமலிருக்க வாய்ப்பில்லை.


பர்சான் நாநா, உங்கள் விமர்சனங்களை வாசிக்கின்ற போது அது சிந்தனையை தாக்கிப் பேசுவதை விட தனிமனிதர்களை தாக்கிப் பேசுவதையே பெரு நோக்காகக் கொண்டிருக்கிறது. இது நீங்கள் சேர்ந்திருக்கின்ற அணியினர் தந்த தர்பிய்யத்தின் விளைவாக இருக்கலாம். எமது சிந்தனை தவறு என்பதை நீங்கள் மனதால் பிழையென்றுக் கருதவில்லை – அப்படி உங்களால் கருத முடியாது. ஏனெனில் அச்சிந்தனை சத்தியமானது, இஸ்லாத்திற்கு விடிவை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியது என்பதை எங்களுக்கு உணர்த்தியவர்களில் நீங்களும் ஒருவர். எப்போது? எதனால் அது பிழையென்று உங்களுக்கு தோன்றியதோ தெரியாது. மனதால் அச்சிந்தனை தவறு என்று ஏற்றுக் கொள்ள முடியாமையினாலும், அதில் பிழைக் காண முடியாது என்பதனாலுமே நீங்கள் அச்சிந்தனையை சுமந்தவர்களின் குறைகளைத் தேடி ஆராய்கின்றீர்கள்.


தனிநபர்கள் தொடர்பாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் தொட்டுக் காட்டி நீங்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி இங்கு அவர்களைத் தூய்மைப்படுத்த நான் விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் பாவங்களோ, தவறுகளோ செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்கள் அல்ல. அது பற்றிய தீர்ப்புக்களை அல்லாஹ்விடம் விட்டுவிடுவோம்.


உங்கள் விமர்சனங்களில் அடுத்த அம்சம் எமது தஃவா அணுகுமுறை பற்றியதாகும். நபிகளாரின் தஃவா வரலாறு, அவர்களினதும், ஸஹாபாக்களினதும் தஃவா அணுகு முறைகள் என்பவை பற்றி எனக்கு முன்பே வாசித்தறிந்து எமக்கு பாடம் நடத்தியவர்களில் நீங்களும் ஒருவர். ஒரே நாளில் குப்ரையும், பித்அத்களையும் ஒழித்து சமூகத்தை உன்னத சமூகமாக மாற்றிட முடியாது என்பதையும், பித்அத்களை ஒழிப்பதனால் மட்டும் சமூகத்தை அந்நிலைக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு முதன்மைப்படுத்த வேண்டியவை என்ன என்ற 'பிக்ஹூல் அவ்லவிய்யாத்' பற்றி நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த பிக்ஹின் அடிப்படையில்தான் ஜமாஅத் சிலதை முன்னுரிமையளித்து செயற்படுகின்றது என்பதும், இதன் கருத்து அது ஏனைய விடயங்களை புறக்கணிக்கவில்லை என்றும், ஏனெனில் அது இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாகக் கருதுகின்றது என்பதும் நீங்கள் தெளிவாக அறிந்த விடயங்கள்.


மேலும் நீங்கள் ஜமாஅத் கப்று வணக்கத்தையும், ஷீயாக் கொள்கையையும், மூடக் கொள்கைகளையும் ஊக்குவிக்கின்றது என்றெல்லாம் விமர்சிக்கின்றீர்கள். ஜமாஅத் சிந்தனை மாற்றத்தையே – சமூக மாற்றத்திற்கான அடிப்படையாகக் கருதுகின்றது. இந்த சிந்தனை மாற்றத்தில் குப்ரும், மூட நம்பிக்கைகளும், ஏனைய வழி கெட்ட கொள்கைகள் தவறானவை என்பதும், இஸ்லாம்தான் சீரான நெறி என்பதும் போதிக்கப்படுவதை நன்கறிந்தும் ஜமாஅத் 'இஸ்லாமிய அரசு' பற்றிய மாயைகளை போதிப்பதாகக் கருதுவது எந்த அடிப்படையில் என்று எனக்குப் புரியவில்லை.


அத்தோடு ஜமாஅத்தின் சமூக ஒற்றுமை பற்றிய கருத்தையும், அதன் நடுநிலைப் போக்கையும் மலுப்புதல், சத்தியத்தை மறைத்தல் என்றெல்லாம் வியாக்கியானம் செய்கின்றீர்கள். ஒற்றுமையும், நடுநிலைப் போக்கும் மார்கத்திற்கு முரணானவை என்று எந்த அடிப்படையை வைத்து நீங்கள் கருத்துச் சொல்கிறீர்கள் என்பது விளங்காத புதிராகவே இருக்கின்றது. 'பிரிவு – பிளவு' என்பதை அடிப்படையாக வைத்துச் செயற்படுகின்றவர்களுக்கு மட்டுமே இது நயவஞ்சகத்தனம் என்று தோன்றுகிறதே தவிர இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் இந்த சிந்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய சூழல் உருவாகி வருவதை நீங்கள் இப்போது சார்ந்திருக்கின்ற இயக்கச் சென்டரின் சுவர்களுக்கு வெளியில் வந்து பார்த்தால் உணர்ந்து கொள்வீர்கள். இந்த ஒன்றிணைவையும் 'வழிகெட்டவர்களின் ஒன்றிணைவு' என்று நீங்கள் அர்த்தப்படுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக.


கடைசியாக....


அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதே நாம் தஃவா செய்வதன் நோக்கம். இந்தத் திருப்தியின் மூலமே உள்ளங்களும், உலகமும் நிம்மதியடைய முடியும். ஆனால் நீங்கள் தற்போது மேற்கொண்டு வருகின்ற தஃவா உங்கள் உள்ளத்தையும், ஏனையவர்களின் உள்ளத்தையும், உலகத்தையும் நிம்மதியடையச் செய்திருக்கிறதா? என்பதை உள்ளத்தில் கை வைத்து கேட்டுப் பாருங்கள். உங்கள் உள்ளமும் இந்த உலகமும் நிம்மதி அடைந்ததா? இல்லை குழப்பமடைந்ததா? – தனக்கும் பிறருக்கும் நிம்மதியைத் தராத தஃவாவின் பயன் என்ன என்பதை பர்சான் நாநா நீங்கள் சிந்திப்பீர்கள் என நினைக்கிறேன்.

இதன் கருத்து உங்களை மீண்டும் எமது இயக்கப் பாதைக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதல்ல. எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் பரவாயில்லை – தஃவாவின் உண்மை நோக்கத்தைப் புரிந்து இஸ்லாம் அனுமதித்த வழிமுறைகளைக் கொண்டு பணியாற்றுவதே எமக்கு மறுமையில் வெற்றியைத் தேடித் தரும் என்பதை தம்பியாகிய நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை.

பர்சான் நாநா, மேடை போட்டு வசைபாடி வாதிடுவது நபிகளாரின் சுன்னாவல்ல என்ற வகையில்தான் ஒரு மனந் திறந்த கலந்துரையாடலின் ஆரம்பமாக இக்கடிதத்தை வரைகின்றேன். எப்படியாவது இதற்கு சாட்டையடிக் கொடுக்க வேண்டும் என்றல்லாமல், தூய்மையான உள்ளத்தோடு பதில் தருவீர்கள் என எதிர்பார்த்து முடிக்கிறேன்.

இப்படிக்கு,
இஸ்மத் அலி
2011.05.29

6 கருத்துகள்:

  1. சகோ ஷேய்க் இஸ்மத் அலி,
    உண்மையில் உங்கள் மடல் 'பர்சான்' என்ற நபர் மேல் எனக்கிருந்த கோபத்தை நீக்கி, அவர் மேல் பரிதாபத்தையே இப்போது ஏற்படுத்தியிருக்கிறது.மனிதர்கள் யாரும் தவறு செய்வதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்கள் அல்ல. நீங்கள் கூறக்கூடிய நற்பண்புகளை பெற்ற ஒருவர் இவ்வாறான தவறுகளை செய்யும் பட்சத்தில், நிச்சயமாக ஒரு நாள் அவற்றை உணர்வார். இந்த திறந்த மடல் அதற்கு ஒரு சிறு தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன். அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

    இந்த மடலுக்கு, மனிதர்களில் உள்ள சைத்தான்களில் ஒன்றோ பலவோ, பிழையான வியாக்கியானம் கொடுத்து, குறிப்பிட்ட நபரின் உள்ளத்தில் ஊசாட்டங்களை ஏற்படுத்துவதை விட்டும் பாதுகாக்குமாறு அல்லாஹ்வை வேண்டுகிறேன். ஆமீன்.

    பதிலளிநீக்கு
  2. திறமையான ஒருவர், நற்பண்புள்ளவர் என்ற வகையில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் அவரிடம் இருக்கும் என்று நினைக்கிறேன். சந்தர்ப்பங்களே மனிதர்களின் நடத்தைப் போக்கை கட்டமைக்கின்றன. இங்கு அறிவு பூர்வமாக ஒருவர் யோசிக்கின்ற போதே - சந்தர்ப்ப அலைகளில் சிக்குண்டு போகாமல் தப்பிக் கொள்ள முடியும். ரியாஸ் நாநா உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்புடன் அனைவருக்கும் ஸலாம், சகோதரர் இஸ்மத் அவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது, கருத்துக்களை கருத்துக்களால் விவாதிக்கும் ஒழுங்கு மக்த்தானது, சகோதரர் பர்ஸான் அவர்களின் அடித்தளம் மிகவும் வலுவான சீரிய சிந்தனைகளைக்கொண்டது என்பது மறுப்பதற்கு முடியாத உண்மை. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களும் விமர்சிக்கக்கூடியதல்ல, இந்த நிலையினை சாதகமாகவே கையாளவும் அணுகவும் நான் விரும்புகின்றேன், சரியான போக்கை மிகச்சரியாக விளங்கிக்கொள்ள ஜாஹிலிய்யத் பற்றிய அறிவு முக்கியம், ஜாஹிலிய்யத் பற்றிய அறிவு இல்லாதவன் இஸ்லாத்தையே தகர்த்துவிடுவான் என்பது எமது நம்பிக்கை,இங்கே விடயம் அவ்வளவு மோசமடைந்துவிடவில்லை, வழிமுறைகள் சார்ந்தும் முதன்மைப்படுத்தல் சார்ந்துமே மாற்றுக்கருத்துக்கள் எழுகின்றன, இந்த மாற்றுக்கருத்தாளர்களுள் தற்போது சகோதரர் பர்ஸான் அவர்களும் இணைந்துள்ளார்கள், இதனையிட்டு நான் வேதனை கொள்ளவில்லை, அவருடைய நோக்கம் அல்லாஹ்வின் திருப்த்தியை அடைவதாக இருக்கட்டும், அதுவே எனது பிரார்த்தனை. சகோதரர் பர்ஸான் அவர்களிடமிருந்தும் ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இதனை ஒரு ஆரோக்கியமான கருத்தாடலாக இருவருமே நகர்த்துவார்களாயின் அதுவே முதன்மையாக வரவேற்கத்தக்கது.
    அன்புடன் சகோ.அ.அஸ்மின்

    பதிலளிநீக்கு
  4. கொள்கை, போராட்டம், சகோதரத்துவம்... ஒன்றிணைந்த ஒருகாலம் ஒரு மனிதனால் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல...
    சகோதரர் இஸ்மத் அலி யின் வரிகளை வாசிக்கும் போது சகோதரர் farsan ஐ ஓர் இஸ்லாமிய இயக்கவாதியாய் காண வேண்டும்போல் இருக்கிறது..
    ஓர் மனிதன் எங்கே போனாலும் இதயத்தின் இரகசிய அறைகளில் அவனுக்கென்று ஓர் உலகம் இருக்கும் அதில் அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் ஓர் உரையாடல் இருக்கும்... அதில் அழுத்தமான தூய்மை இருக்கவே செய்யும்.. அந்த நிமிடங்களில் உங்கள் எழுத்துக்களை சகோ. farzan சிந்திக்கக் கூடும்.
    ஆல்லாஹ்வே உள்ளங்களை ஆள்கின்றவன்...
    இம்மையில் இல்லாவிட்டாலும் உங்கள் முயற்சிக்கு மறுமயிளேனும் ஆல்லாஹ் கூலிதரப்போதுமானவன்

    பதிலளிநீக்கு
  5. அன்பன் இஸ்மத் அலியின் மடலுக்கு அன்பார்ந்த பதில்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
    ப்ரிய இஸ்லாமிய தோழா!

    உங்கள் உடல் மற்றும் ஈமானிய ஆரோக்கியத்திற்காய் உளமாற வேண்டியவனாய் உங்களுடனான சினேகபுர்வ உரையாடலை இம்மடல் மூலம் ஆரம்பிக்க முனைகிறேன்.

    சொந்த விருப்பு வெருப்புகளைத் தாண்டி, மறுமை வெற்றியை மட்டும் இலக்காய்க் கொண்டு எம் கருத்துப் பரிமாற்றங்கள் காத்திரமான பங்களிப்பை நல்குவதற்கு இறைவனை வேண்டுகிறேன்.

    ”இறைவா! சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் வேறுபிரித்தறியும் ஆற்றலை எமக்கு வழங்குவாயாக!”

    தோழா!

    ஜாமியா நளீமியா வளாகத்தில் கடந்து போன எம் வாழ்வின் சிலப்பதிவுகளை நினைவு கூர்ந்து, பழையதை நினைவு படுத்தி, புதியவை குறித்து வினா தொடுத்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    உங்கள் ஆதங்கத்தையும், அன்பொழுகும் அரவனைப்பையும் நினைத்து அகமகிழ்கிறேன். என்னைக் குறித்த உங்கள் மடலின் சாராம்சங்களாய் பின்வரும் அம்சங்களை குறிப்பிட முடியும்

    1)ஜமாஅதே இஸ்லாமி எனும் தெளிவான கொள்கையிலிருந்து தடம் புரள்வதற்கான காரணம் என்ன?

    2) கருத்துக்களை விமர்சிப்பதை விட ஏன் தனிமனித விமர்சனங்களை முடுக்கிவிடுகறீர்கள்?

    3)ஜமாஅத்தின் தஃவா அனுகுமுறையில் கண்ட தவறுகள் எவை?

    4)ஷிர்க் - பித்அத் ஒழிப்பால் மட்டும் சமூக மாற்றம் சாத்தியமாகாது.

    5)ஜமாஅத் கடைபிடிக்கும் ஒற்றுமை, நடுநிலைப் போக்கு என்பன மார்க்கத்துக்கு எவ்வகையில் முரணானது?

    6)பிக்ஹூல் அவ்லவியாத் (தஃவாவில் முதன்மைப்படுத்த வேண்டியது எது என்பது பற்றிய தெளிவு தவ்ஹீத் வாதிகளுக்கு பரிச்சயமற்ற ஒன்று)

    7)தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார அனுகு முறை உள்ளத்திலும் உலகிலும் அமைதியை சீர்குழைக்கிறது.

    மேற்குறித்தவை நீங்கள் என்னைக்குறித்து எழுதிய வரிகளின் சுருக்கம்.

    முதலில், விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, விமர்சனத்தில் நியாயங்கள் இருப்பின் என் தவறுகளை களைவதற்கான மனதுடனும், நியாயமற்றதாயின் அதற்குண்டான தெளிவுகளை வழங்க வேண்டும் என்ற கடமைப்பாட்டுடனுமே நான் உங்கள் மடலையும் உள்வாங்கிக்கொள்கின்றேன் என்பதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வரும் மடல்களில் என் குறித்த உங்கள் புரிதல்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் குறித்த உங்கள் நிலைப்பாடுகள், ஜமாஅதே இஸ்லாமி தொடர்பான உங்கள் பிடிமானம் சம்பந்தப்பட்ட அம்சங்கள் குறித்து கருத்துப்பரிமாற்றம் செய்ய மிகுந்த ஆவலுடன் உள்ளேன் என்பதை அறியத் தருகிறேன்.

    முரண்பாடுகள் உடன்பாடுகளாய் மாற வேண்டுமாயின் முரண்பட்டு நிற்பவர்கள் தம் கௌரவத்தை விட்டு, ஒரு மேசையில் அமர்ந்து வஹியின் ஒளியில் தீர்வுகளை தேட முற்பட வேண்டும். இதுவே, ஆரோக்கியமான பிரச்சாரக் களத்திற்கு ஏற்றமான முறையாகும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு.

    அத்தகையதோர் திறந்த கலந்துரையாடலை ஆசித்தவனாய் என் முதல் மடளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

    “எம் என்னங்களை இறைவன் தூய்மை படுத்தி எம் பணிகளை பொறுந்திக் கொள்வானாக!”

    பதிலளிநீக்கு
  6. எந்தக் கருத்துப் பரிமாறல்களும் இரண்டாம் தரப்பை மதித்தே அமைய வேண்டும்...சுமுகமாக ஆரம்பித்த எத்தனையோ கருத்துப் பரிமாறல்கள் இறுதியில் எல்லை மீறியதைப் பார்க்கிறோம்...நல்ல ஆரம்பம் நல்ல முடிவாக இருக்கட்டும்....

    பதிலளிநீக்கு