-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

23 மே, 2011

தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட"ஸலபித்துவம்"


இஸ்மத் அலி



'ஸலபிய்யா' என்ற சொல்லானது "ஸலப்' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும். முன் சென்றவர், கடந்து சென்றவர் என்பதே இதன் கருத்தாகும். இக்கருத்திலேயே அல்-குர்ஆன் இச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது.
فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ 'அவர்களை (உங்களுக்கு) முன் சென்றுவிட்டவர்களாகவும் ஏனையவர்களுக்கு உதாரணமாகவும் ஆக்கினோம' என்ற சூறதுல் சுஹ்ருபின் 56வது வசனம் இதற்கு சான்றாகும்.


பரிபாசையில் 'ஸலப்' என்ற சொல்லானது கருத்து வேறுபாடுகளும், ஏனைய தத்துவச் சிந்தனைகளும் அறியப்படுவதற்கு முன்னர் மார்க்கத்தை தூய்மையாக நடைமுறைப்படுத்தியவர்கள் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்து. இன்னொரு வகையில் சொல்வதென்றால் இச் சொல்லானது ஸஹாபாக்களையும், தாபிஊன்களையும், தபஉத் தாபீஈன்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த வகையில் 'ஸலபிய்யா' அல்லது 'ஸலபித்துவம்' என்பது மார்க்கத்தின் சிந்தனை, நடைமுறை என்பவைகளை ஸலபுகள் தாம் வாழ்ந்த காலத்தில் எந்த ஒழுங்கில் கட்டமைத்துக் கொள்ள முயற்சித்தார்களோ அவ்வொழுங்கில்; கட்டமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை இது குறிக்கும். இதன் கருத்து ஸலபுகள் தமது அனைத்து அம்சங்களையும் எவ்வாறு அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் அமைத்துக் கொண்டார்களோ அவ்வமைப்பில் எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்கமைத்துக் கொள்வதைக் குறிக்கும்.


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனும், சுன்னாவுமே மறுமை வரைக்குமான முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. இதை முஸ்லிம் சமூகம் கொள்கையளவிலாவது ஏற்றுக் கொண்டிருப்பதானது 'ஸலபித்துவம்' எல்லோர் மனங்களிலும் வாழ்கின்ற சிந்தனை என்பதைக் காட்டுகின்றது.

அடுத்து 'ஸலபித்துவம்' என்ற சிந்தனையின் தோற்றம், வளர்ச்சி என்பவை பற்றி நோக்குவோம். ஸலபித்துவத்தின் வளர்ச்சிக் கட்டங்களை அதன் வகைகளை மையமாக வைத்து நோக்குவதே ஸலபித்துவத்தை புரிந்து கொள்ள இலகுவாக அமையும் என்ற வகையில் ஆரம்பமாக அதன் வகைகளை கவனிப்போம். ஸலபித்துவத்தை 03 வகையாக நோக்க முடியும்.

1) ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா ( சட்ட வசனங்களை அடிப்படையாகக் கொள்ளும் ஸலபித்துவம்)
2) ஸலபிய்யதுல் அக்லானிய்யா-(வசனங்களோடு அறிவையும் அடிப்படையாகக் கொள்ளும் ஸலபித்துவம்)
3) ஸலபிய்யதுன் நஜ்திய்யா



ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா


ஸலபிய்ய சிந்தனை தோற்றத்தின் முன்னோடியாக இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ஹி:241) கருதப்படுகின்றார். இஸ்லாமிய அரசானது அறபு தேசத்தையும் தாண்டி ரோம, பாரசீக தேசங்களை வெற்றி கொண்டு ஏனைய சமூகங்களையும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் கொண்டு வந்த ஒரு காலப் பிரிவிலேயே இமாமவர்கள் வாழ்ந்தார்கள். இவ்வெற்றியின் பிரதிபலிப்பாக ஏனைய சமூகங்களின் சிந்தனைகளும், நடைமுறைகளும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைகளிலும், நடைமுறைகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கின. ரோம. பாரசீக தத்துவங்கள் அறபு மொழிக்குப் பெயர்க்கப்பட்டதன் விளைவாக அதன் சிந்தனை தாக்கத்திற்கு முஸ்லிம் அறிஞர்கள் உட்படலாயினர். குறிப்பாக இல்முல் கலாம் (நம்பிக்கை கோட்பாடு) விடயத்தில் முஸ்லிம் அறிஞர்கள் பகுத்தறிவுக்கு முதன்மையளித்து அதன் அடிப்படையில் இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாட்டை விளங்கவும், விளக்கமளிக்கவும் தொடங்கினர். இவர்களே பிற்காலத்தில் முஃதஸிலாக்கள் என அறியப்பட்டனர்.


இதை அவதானித்த இமாம் அஹ்மத் அவர்கள் 'ஸலபுகளின் வழியில் - அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையிலேயே மார்க்கத்தின் சகல அம்சங்களும் விளங்கப்பட வேண்டும்' என்ற சிந்தனையை முன்வைத்தார். இதுவே ஸலபித்துவ சிந்தனையின் ஆரம்பமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய அம்சம் முஸ்லிம் சமூகம் ஸலபுகளின் வழியை விட்டு விலகிச் செல்லும் சந்தர்ப்பத்தில் அவர்களை ஸலபுகளின் வழியின் பால் அழைப்பதே 'ஸலபிய்யா' என்பதாகும்.


இதன் அடிப்படையில் மார்க்கத்தின் அனைத்து அம்சங்களும் நஸ் (அல்-குர்ஆன், ஹதீஸ் வசனங்கள்) அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை இமாமவர்கள் முன்வைத்தார்கள். இமாமவர்கள் வாழ்ந்த சூழலைக் கருத்திற் கொண்டு அறிவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை இமாமவர்கள் முற்றிலும் மறுத்தார்கள். 'அறிவின் அடிப்படையில் செயற்படுவதை விட பலவீனமான ஒரு 'நஸ்'ஸின் அடிப்படையில் செயற்படுவது சிறந்தது' என்று சொல்லுமளவுக்கு இமாமவர்கள் அறிவின் அடிப்படையிலான செயற்பாட்டை கண்டித்தார்கள். இதற்குக் காரணம் வஹீ புறக்கணிக்கப்பட்டு அறிவு மேலோங்கிவிடும் ஒரு சூழலில் இமாமவர்கள் வாழ்ந்தமையாகும். என்றாலும் இக்கடின மனப்போக்கை இமாமவர்கள் அகீதா விடயங்களில் காட்டிய அளவுக்கு பிக்ஹ் விடயத்தில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிக்ஹ் விடயத்தில் கியாஸை (ஒரு சட்ட வசனத்தை சமகால பிரச்சினையோடு ஒப்பிட்டு தீர்வை பெறல்) அவசியத் தேவைகளின் போது பயன்படுத்தலாம் என்ற கருத்தை இமாமவர்கள் கொண்டிருந்தமை இதற்கு சான்றாகும்.


இமாமவர்கள் அறிவை விட சட்ட வசனங்களுக்கு (நஸ்) முதன்மையளித்த காரணத்தினால் இவர் முன்வைத்த ஸலபித்துவம் 'அஸ்-ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா' என அறியப்படுகின்றது.

இமாமவர்களுக்கு பின்னர் தோன்றிய பெரும்பாலான அறிஞர்கள் மார்க்கத்தை விளங்குவதிலும், அதனை விளக்கப்படுத்துவதிலும் இந்த 'ஸலபிய்யதுன் நஸ்ஸிய்யா' வையே பின்பற்றினர்.



ஸலபிய்யதுல் அக்லானிய்யா


இமாம் அஹ்மத் அவர்களின் முயற்சியினால் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான அறிஞர்கள் ஏனைய தத்துவங்களினால் தாக்கமுறுவதிலிருந்து பாதுகாப்புப் பெற முடிந்தது. என்றாலும் அறிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மார்க்கத்தை விளங்கும் கூட்டத்தை முற்றிலுமாக துடைத்தெறிய முடியவில்லை. அவர்களுக்கிருந்த அரச ஆதரவு அவர்களின் நிலைபேற்றுக்குக் காரணமாக அமைந்தது. இந்நிலையில் இவர்களுக்கு அறிவைக் கொண்டே பதிலளிப்பதற்கான முயற்சிகளை சில இமாம்கள் மேற்கொண்டனர். இவர்களில் இமாம் அபுல் ஹஸன் அல்-அஸ்அரீ, இமாம் பாகிலானீ, இமாம் ஜூவைனி, இமாம் கஸ்ஸாலி ஆகியோர் முக்கியமானவர்கள்.இவர்களின் முயற்சிகள் இஸ்லாத்துக்கு எதிரான ஏனைய தத்துவங்களின் கேள்வியெழுப்புதல்களுக்கும், பகுத்தறிவுவாதிகளின் சிந்தனை தடுமாறல்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தன.


ஆனால், இவர்களின் வழிமுறையைக் கைக் கொண்ட பின்வந்தோரில் சிலர் சட்ட வசனங்களுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை மறந்து தத்துவங்களுக்கும், கற்பனைகளுக்கும் அதிக முக்கியத்துவமளிக்கத் தொடங்கினர். எனவே மீண்டும் உம்மத்தை 'ஸலபிய்யத்'தின் பால் அழைக்க வேண்டிய தேவையேற்பட்டது.


இந்த வகையில் மீண்டும் ஸலபிய்யத்தை நோக்கிய அழைப்பை இமாம்களான இப்னு அகீல் (ஹி:513), இமாம் இப்னு தைமிய்யா (ஹி:728) அவரது மாணவரான இமாம் இப்னு கையும் அல்-ஜவ்ஸிய்யா (ஹி:751) போன்றோர் முன்னெடுக்கத் தொடங்கினர். இவர்கள் இமாம் அஹ்மதைப் போன்று அறிவுக்குள்ள அந்தஸ்த்தை புறக்கணிக்காமல் அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் மார்க்கத்தை அணுகும் வழிமுறையைக் காட்டித்தந்தனர். சட்ட வசனங்களை அறிவைக் கொண்டு ஆராய்வதையும், இன்னொரு சட்ட வசனத்திற்கு முரண்படாத வகையில் தீர்வு காண்பதையும் இவர்கள் ஆகுமானதாகக் கருதினர்.


மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் சட்ட வசனங்களுக்கும், அறிவுக்குமிடையிலான தொடர்பை விளங்கி சமூகத்தை 'ஸலபு'களின் வழியில் இட்டுச் சென்றதன் காரணமாக இவர்கள் முன்வைத்த ஸலபித்துவம் 'ஸலபிய்யதுல் அக்லானிய்யா' என அழைக்கப்படுகின்றது. இவ்வகை ஸலபிய்யத் இமாம் அஹ்மத் முன்வைத்த ஸலபிய்யத்திலிருந்து வித்தியாசமானதாகவும், விசாலமானதாகவும் இருந்தது. சட்ட வசனங்கள் இல்லாத விடயங்கள் மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல என்றே இமாம் அஹ்மத் கருதினார். ஆனால் இமாம் இப்னு தைமிய்யா, இமாம் இப்னு ஜவ்ஸீ போன்றோர் அரசியல், சமூகவியல் துறைகளிலும் மார்க்கத்தையும், அறிவையும் பயன்படுத்தி அவற்றுக்கான அடிப்படைகளை வகுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



ஸலபிய்யதுன் நஜ்திய்யா

இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (கி.பி : 1892) சவூதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகளைக் கொண்டு இந்த 'ஸலபித்துவம்' அறியப்படுகின்றது. நஜ்த் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூட நம்பிக்கைகளிலும், பித்அத்களிலும் மூழ்கிப் போயிருப்பதைக் கண்ட இமாமவர்கள் அவர்களை அல்-குர்ஆன், சுன்னாவை மட்டுமே பின்பற்றுமாறு அழைப்புவிடுக்கத் தொடங்கினார். மேலும் அவர்களது செயல்களை இணைவைப்பு என்றும் இறை மறுப்பு என்றும் எச்சரித்தார்.


இமாம் அப்துல் வஹ்ஹாப் அழைப்புவிடுத்த ஸலபித்துவம் மேலே குறிப்பிட்ட இருவகையான ஸலபித்துவங்களின் அளவுக்கு விரிவானதாக இருக்கவில்லை. ஏனெனில் இமாமவர்கள் வாழ்ந்த நஜ்த் பிரதேசம் கிராமப்புறமாக இருந்தமையால் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்களும், அக்காலை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருந்த சவால்களையும் முழுமையாக புரிந்து கொள்ளும் சூழல் அவருக்கு இருக்கவில்லை. எனவே அவர் அழைப்புவிடுத்த 'ஸலபித்துவம்' மூடக் கொள்கை ஒழிப்பு, இபாதத்களிலுள்ள பித்அத்களை ஒழித்தல் என்ற வரையறைக்குள் சுருங்கியதாகக் காணப்பட்டது. என்றாலும் இவரது சிந்தனைத் தாக்கம் அரேபியாவில் மிக வேகமாக வளர்ச்சியடையலானது.


மேலும் இமாம் அஹ்மத், இமாம் இப்னு தைமிய்யா ஆகியோர் ஸலபித்துவத்தை ஏற்படுத்துவதற்காக கையாண்ட வழிமுறைகளும் இமாம் அப்துல் வஹ்ஹாப் கையாண்ட வழிமுறைகளும் வித்தியாசமானதாக இருந்தன. இமாம் அஹ்மதோ, இமாம் இப்னு தைமிய்யாவோ ஸலபித்துவத்திற்கு வெளியில் நின்றோரை ஒரு போதும் குப்ரைக் கொண்டோ, சிர்க்கைக் கொண்டோ அழைக்கவில்லை. ஆனால் இமாம் அப்துல் வஹ்ஹாபின் வழிமுறை இதற்கு மாற்றமாக இருந்தது.


இமாம் அப்துல் வஹ்ஹாப் அழைப்புவிடுத்த 'ஸலபித்துவம்' சமகால முஸ்லிம் உலகு எதிர்கொண்டிருந்த சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கவில்லை. காலணித்துவச் செல்வாக்கும், அறிவியல் வளர்ச்சியும் முஸ்லீம்களை இஸ்லாத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்திருந்தது, இந்த நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தை மீட்டெடுத்து அவர்களை மீண்டும் 'ஸலபிய்யத்'தின் பால் அழைத்துச் செல்ல வேண்டிய தேவை உணரப்பட்டது.


இத்தேவையை உணர்ந்தோர்களில் இமாம்களான ஜமாலுத்தீன் ஆப்கானீ, முஹம்மது அப்தூஹ் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்கள் அல்-குர்ஆன், சுன்னா அடிப்படையில் முஸ்லிம் சமூகம் நவயுகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளை முன்வைத்தனர். இவர்களது சிந்தனையால் தாக்கமுற்ற இமாம் ஹஸனுல் பன்னா, மௌலானா மௌதூதி போன்றோர்கள் மீண்டும் 'ஸலபிய்யத்'தை சிந்தனை ரீதியாகவும், செயல்ரீதியாகவும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.


இறுதியாக...

முஸ்லிம் சமூகம் மறுமை வரை 'ஸலபிய்யத்'தில் நிலைத்திருப்பதில்தான்; அதன் இம்மை, மறுமை வெற்றி தங்கியிருக்கின்றது. ஸஹாபாக்களும், அவர்களைத் தொடர்ந்தோரும் இந்த மார்க்கத்தை எவ்வாறு தெளிவாக அதன் நோக்கங்களை விளங்கி, அதை நடைமுறைப்படுத்தினார்களோ அதன்பால் மீள்வதும் அதன்பால் அழைப்பதுமே உண்மையான 'ஸலபிய்யத்'. முஸ்லிம் சமூகம் அல்-குர்ஆனையும், சுன்னாவையும் விட்டு விலகி ஏனைய கொள்கைகளையும், சிந்தனைகளையும், தமது மனோ இச்சையையும் பின்பற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 'ஸலபிய்யத்'தை நோக்கி அழைக்க வேண்டிய தேவையேற்படுகின்றது. இந்த அழைப்பானது சுருங்கிய வரையறைகளைக் கொண்டிருப்பதும், 'ஸலபு'களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்பதுவும் 'ஸலபிய்யத்'தை நோக்கிய உண்மையான அழைப்பாக இருக்க முடியாது. அதே போல கால, சூழலைக் கருத்திற் கொண்டதாகவும், காலத்தின் தேவையை புரிந்து கொண்ட வகையிலும் இந்த அழைப்பு அமைய வேண்டும். இல்லையெனில் ஸலபிய்யத்தை நோக்கிய அழைப்பு மக்களை விரண்டோடச் செய்யுமே தவிர அவர்களை இந்த அழைப்பை நோக்கி ஓடோடி வரச் செய்து விடாது.

ஆனால் இன்று 'ஸலபிய்யத்'திற்கு சொந்தம் கொண்டாடும் சிலர் 'ஸலபிய்யத்' என்பதன் உண்மை அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்களா? அதன்பால் அழைக்கின்ற போது 'ஸலபு'களின் வழிமுறைகளைக் கைக்கொள்கின்றார்களா? என்பது கேள்விக் குறியே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக