-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

20 மே, 2011

நுனிப்புல் மேயும் ஸலபித்துவ ஆய்வுகள். தஜ்ஜாலின் வருகையை மௌலானா மௌதூதி மறுக்கிறாரா?



இஸ்மத் அலி


தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்களாகிவிட்ட நிலையாகிவிட்டது இன்றைய தஃவாக் களம். அல்-குர்ஆனையும்> சுன்னாவையும் அதன் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ளத் தெரியாத பலர்> சில ஒன்லைன்களை தமது முதற்தர சட்ட மூலாதாரமாக்கிக் கொண்டு தீர்ப்புக்களையும்> தீர்வுகளையும்> விமர்சனங்களையும் அள்ளி வீசுவதையே தஃவா என்று எண்ணிச் செயற்படுகின்ற அவலநிலையே இன்றைய தஃவாக் களத்தில் காண முடிகின்றது.

இவர்களின் இத்தகைய விமர்சனங்களுக்கு மறுப்பெழுதி> இஸ்லாமிய சமூக மாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் நேரத்தை வீணடிக்காதிருப்பதும்> மனஸ்தாபங்களை வளர்க்காதிருப்பதுமே சிறந்தது என்ற வழிமுறையை இயக்கம் எமக்குக் கற்றுத் தந்திருந்தாலும் தொடர்ந்தேர்ச்சையான இவர்களின் இச்செயல்கள் அறியாமையா?> வீம்பா?> அல்லது மறை கரங்களின் சதியா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

சத்தியத்தைச் சொல்வதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள் எப்படி செய்திகளை புனைகிறார்கள்?> திரிபுபடுத்துகிறார்கள்? என்பதை நடுநிலையாக சிந்திக்கின்றவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

இலங்கை தௌஹீத் ஜமாஅத் வெளியிடும் மாத இதழான 'அழைப்பு' அண்மையில் 'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி – பதில் தருமா ஜமாஅத்தே இஸ்லாமி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. இக்கட்டுரையில் மௌலானா மௌதூதி மீது பின்வரும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

1) தஜ்ஜாலின் வருகையை மௌதூதி மறுக்கிறார்.
2) நபியவர்கள் வஹியின் அறிவில்லாமல் தஜ்ஜால் பற்றி அறிவித்துள்ளார்கள் என்று கூறி மௌதூதி நபிகளார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தி அவதூரு பரப்புகின்றார்.

கடந்த ஏப்ரல் (2011 – 1-15) மாத சமரசம் (இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் சஞ்சிகை) இதழில் வெளியான 'எங்கே தஜ்ஜால்?' என்ற கட்டுரையை ஆதாரமாக வைத்தே இக்குற்றச் சாட்டுக்களை இவர்கள் முன்வைக்கின்றனர்.

இனி விடயத்திற்கு வருவோம். உண்மையில் மௌலானா மௌதூதி அவர்கள் தஜ்ஜாலின் வருகையை மறுக்கின்றாரா?> அச்சிந்தனையில்தான் ஜமாஅத்தே இஸ்லாமி செயற்படுகின்றதா? என்றால் அது உண்மையல்ல.

இவர்கள் ஆதாரம் காட்டும் சமரசம் கட்டுரையை இவர்கள் திறந்த கண்களோடு வாசித்திருந்தால் இப்படியான ஒரு பொய்யை புனைந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் இவர்கள் குரோதம்> காழ்ப்புணர்வு என்ற கருப்புக் கண்ணாடியணிந்தே இக்கட்டுரையை வாசித்திருக்க வேண்டும். ஏனெனில் மௌலானா மௌதூதி அவர்கள் தனது கட்டுரையின் ஆரம்பத்திலேயே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள் :

' தஜ்ஜால் எங்கோ இருக்கிறான் என்பதைதான் நான் கதை என்றேன். இதைத் தவிர மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தப் போகும் தஜ்ஜால் வெளிப்பட உள்ள செய்தியையே நானும் சார்ந்துள்ளேன். அத்துடன் எப்போதும் என் தொழுகையில் 'மஸீஹூத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்' என்ற துஆவை ஓதி வருகின்றேன்'.


இப்பந்தியை இவர்கள் வாசித்திருக்காமல் விட்டிருக்க முடியாது. இதை வாசித்த பிறகும் தமது கட்டுரைக்கு 'தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மௌதூதி' என்று தலைப்பிட இவர்களைத் தூண்டிய காரணி எதுவாக இருக்க முடியும்? சிந்திப்பவர்கள் காரணத்தைப் புரிந்து கொள்வார்கள்.


அது மட்டுமன்றி மௌலானா அவர்கள் தமது தப்ஸீரான தப்ஹீமுல் குர்ஆனில் தஜ்ஜாலின் வருகை உண்மையானது என்பதை ஏற்றுக் கொள்வதோடு அதை ஹதீஸ் ஆதாரங்களோடும் நிரூபிக்கின்றார்கள். சூறதுல் அஹ்சாபின் 40வது வசனமான 'مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا என்ற வசனத்திற்கான விளக்க உரையில் இறுதி நபித்துவத்தோடு சம்பந்தப்படுத்தி ஈஸா அலைஹிஸ்ஸலாம்> தஜ்ஜால் ஆகியோரின் வருகைப் பற்றி ஒரு நீண்ட விளக்கத்தை மௌலானா அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில் தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்களைக் குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றார் மௌலானா :

' நாம் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களை நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்த்தீர்கள் என்றால் தஜ்ஜால் என்பவன் யஹூதிகளிலிருந்து தோன்றுவான் என்பதையும்> அவன் எழுபதினாயிரம் பேருடன் சிரியாவுக்குள் நுழைந்து தமஸ்கஸ் வரை முன்னேறுவான் என்பதையும்> அது சமயம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள் என்பதையும்> அவர்களைக் கண்ட தஜ்ஜால் இஸ்ரேல் நோக்கி விரண்டோடுவான் என்பதையும்> அல்-லித் எனும் இடத்தில் அவன் கொல்லப்படுவான் என்பதையும் நீங்கள் சந்தேகமின்றி புரிந்து கொள்வீர்கள்' (தப்ஹீமுல் குர்ஆன் - சூறதுல் அஹ்சாப் - அரபுப் பதிப்பு – பக்கம் : 78)


இந்த ஆதாரத்திற்குப் பின்னும் இவர்கள் 'மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுக்கிறார்' என்று சொல்வார்களாயின் இவர்கள் பத்திரிகை தர்மங்களின் அடிப்படையில் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர்கள். இவ்வுலகில் இல்லாவிட்டாலும் மறுமையில் தமது விதண்டாவாதங்களுக்காக அல்லாஹ்விடத்தில் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இனி இவர்களின் இரண்டாவது குற்றச்சாட்டு பற்றி நோக்குவோம். 'தஜ்ஜால் பற்றிய ஹதீஸ்களை நபிகளாரின் எண்ணமே அன்றி வஹியல்ல என்று கூறி மவ்தூதி நபிகளார் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தி அவதூரு பரப்புகின்றார்'. என்பதுதான் அது.

உண்மையில் தமீம் அத்தாரி என்ற ஸஹாபி தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்ட கடற் பிரயாணமொன்றில் தஜ்ஜாலை சந்தித்த நிகழ்வு பற்றி வந்திருக்கும் ஹதீஸ் குறித்து மௌலானா மௌதூதி அவர்கள் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சைனப் பின்த் கைஸ் ரழியல்லாஹூ அன்ஹா அறிவிக்கும் இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் 'கிதாபுல் பிதன்' அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸ் பற்றி மௌலானா குறிப்பிடும் போது :

'தமீம் தாரி அவர்கள் கூறிய சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் சரியானது என நினைத்தார்கள். எனினும் பதின் மூன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தமீம் தாரி அத்தீவில் பார்த்த நபர் வெளிப்படவில்லை. அவ்வாரிருக்க அம்மனிதர் தன்னைத் தஜ்ஜால் என்று தமீம் தாரி அவர்களிடம் கூறியது உண்மையல்ல என்பதற்கு இதுவே போதுமானதாக இல்லையா? நபி (ஸல்) அவர்களுக்கு தஜ்ஜால் தம்முடைய காலத்திலேயே தோன்றுவான் அல்லது தமக்குப் பிறகு வெகு விரைவில் தோன்றுவான் என்கிற எண்ணம் இருந்தது. பதின் மூன்றரை நூற்றாண்டு வரலாறு நபியவர்கள் நினைத்தது சரியல்ல என்பதை உறுதிப்படுத்தவில்லையா?' என்று வினவுகின்றார்.

இந்த ஹதீஸைப் பற்றிய ஆய்வுக்கு முன்னர் மௌலானா மௌதூதி அவர்கள் நபியவர்கள் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிட்ட எல்லா ஹதீஸ்களையும் மறுக்கவில்லை என்பதையும்> அவற்றை வஹியின் அறிவின்றி தமது அனுமானத்தின் அடிப்படையிலேயே குறிப்பிட்டார்கள் என்றோ மௌலானா கருதவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாற்றமாக தமீம் அத்தாரி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் சம்பந்தமான ஹதீஸை மட்டுமே மௌலானா நபிகளாரின் அனுமானம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து மேற் கூறிய ஹதீஸை நபிகளாரின் அனுமானம் என்று விளங்கிக் கொள்வதற்கான சாத்தியம் இருப்பதை அந்த ஹதீஸை ஆழ்ந்து நோக்குகின்ற போது புரிந்து கொள்ளலாம்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் சைனப் பின்த் கைஸ் ரழியல்லாஹூ அன்ஹா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'தொழுகை முடிந்து நபிகளார் சிரித்த வண்ணம் மிம்பரில் அமர்ந்து கொண்டார்கள். பிறகு அனைவரையும் அவரவர் இடத்தில் அமருமாறும் பணித்தார்கள். பின்னர் 'உங்களை ஏன் அழைத்தேன் என்று தெரியுமா?' என்று ஸஹாபாக்களைப் பார்த்து வினவ> அதற்கு அவர்கள் 'அல்லாஹூம் ரஸூலுமே அறிந்தவர்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்கள் கூறினார்கள் :

'உங்களுக்கு உபதேசிக்கவோ> எச்சரிக்கை செய்யவோ நான் அழைக்கவில்லை. மாற்றமாக கிறிஸ்த்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற தமீம் அத்தாரி சொன்ன ஒரு சம்பவத்தைக் கூறவே உங்களை அழைத்தேன். உங்களுக்கு ஏலவே நான் தஜ்ஜால் பற்றிக் கூறியிருக்கிறேனல்லவா? தமீம் அத்தாரி குறிப்பிட்ட அச்சம்பவம் நான் சொன்னவைகளோடு உடன்படுகின்றது' என்று கூறிவிட்டே தமீம் அத்தாரி அவர்கள் குறிப்பிட்ட சம்பவத்தை ஸஹாபாக்களுக்கு நபிகளார் அறிவித்தார்கள்.

இங்கு நபிகளார் ஆரம்பத்திலேயே, தான் 'உபதேசிக்கவோ> எச்சரிக்கவோ உங்களை அழைக்கவில்லை' என்று குறிப்பிட்டது நபிகளார் வஹியின் மூலம் அறிவிக்கப்பட்ட செய்தியொன்றை கூறவில்லை என்ற விளக்கத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு உடன்பாடாக அமைகின்றது.

இதன் அடிப்படையிலேயே மௌலானா அவர்கள் தஜ்ஜால் ஏற்கனவே தோன்றிவிட்டான் என்ற செய்தி நபிகளாரின் அனுமானமே தவிர வஹியல்ல என்ற முடிவுக்கு வருகின்றார். இம்முடிவுக்கு வந்ததன் காரணமாக மௌலானா நபிகளாரின் ஹதீஸ்களை மறுக்கின்றார்> அவர் மீதே சந்தேகப்படுகின்றார்> அவதூரு பரப்புகின்றார் என்று கூறுவது சரியாகது. தௌஹீத்வாதிகள் சொன்னதுக்காக சத்தியமும் ஆகிவிடாது.

நபிகளார் மீதும்> அவர்களின் நபித்துவத்தின் மீதும் மௌலானா கடுகளவு கூட சந்தேகம் கொண்டிருக்கவில்லை என்பதை இவர்கள் ஆதாரம் காட்டும் சமரசம் கட்டுரையே சான்றுபகர்கின்றது. அக்கட்டுரையில் மௌலானா பின்வருமாறு குறிப்பிடுகின்றார் :
(நபி) அவர்களின் கூற்று (தஜ்ஜால் தோன்றி விட்டான் என்ற அனுமானம்) உண்மையானது என்று உறுதிப்படவில்லையானாலும் அவர்களின் நபித்துவத்தில் எவ்விதமான குறையையும் ஏற்படுத்துவதில்லை. நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையிலும் குறை ஏற்படுவதில்லை'
இதற்கும் மேலாக இறுதி நபித்துவத்திற்கு எதிரான காதியானிய சிந்தனைக்கு எதிராக மௌலானா போராடி தூக்கு மேடை வரைச் சென்று வந்தவர். அத்தயை ஒருவருக்கு 'நபிகளாரின் மீது அவதூரு பரப்புகின்றார்' என்று குற்றம்சாட்டுவது எத்தகைய அசத்தியமாக இருக்க முடியும்.

நுனிப்புல் மேய்ந்து, அழுக்கைத் தேடியலையும் சில ஸலபீக்களின் மட்டமான ஆய்வுகளுக்கு இந்தக் கட்டுரை முற்றிப் புள்ளி வைத்துவிடாது என்று தெரியும். என்றாலும் - சத்தியம் மேலோங்கும் போது அசத்தியம் சுவடில்லாமல் அழிந்து போகும் என்பது திண்ணம்.



அழைப்பில் வெளிவந்த கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
http://www.rasminmisc.tk/

சமரமசம் இதழில் வெளியான மௌலானா மௌதூதியின் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.samarasam.net/01-15_Apr_11/index.htm#60

3 கருத்துகள்:

  1. பெயரில்லா20 மே, 2011 அன்று AM 7:49

    சொற்போர்களுக்கு அப்பால் இத்தகைய உரையாடல்கள் எத்தகைய பங்களிப்பையைம் ஏற்படுத்தப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் அவர்களே, நான் தங்களின் கட்டுரையை படித்தேன், இன்ஷா அல்லாஹ் நடுனிலையோடு என் பதிலை விரைவில் பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அழைக்கும்,
    சஹோதரர் அவர்களே நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு நிச்சயமாக மவ்தூதி அவர்கள் தஜ்ஜாலின் வருகையை மறுக்கவில்லை என்பது உறுதி.
    fazlyhussain akurana.

    பதிலளிநீக்கு