-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

17 ஆக., 2013

ஜ.உலமா தொடர்பான உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரின் கருத்தும் அது பற்றிய தவறான சித்தரிப்புகளும்








 
மௌலவி ஹைதர் அலி அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்

மௌலவி அவர்கள் எழுதிய மடலும் பகிரங்க மடல் என்ற காரணத்தினால் நானும் இம்மடலை பகிரங்கமாகவே எழுத யோசித்தேன் என்பதை ஆரம்பமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் மௌலவி அவர்களே! 

நீங்கள் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு எழுதியிருந்த திறந்த மடலை நான் முழுமையாக வாசித்து விட்டு இக்கடிதத்தை உங்களுக்கு மிகவும் மனவேதனையுடன் எழுதுகின்றேன்.

உண்மையில் வரிக்கு வரி பதில் எழுதி, அடுத்தவர்களை கண்டபடி விமர்சிப்பது நான் வளர்ந்த இயக்கத்தின் கலாசாரமல்ல என்பதை முதலாவதாக உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் எழுதியிருந்த அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் பல நூறு முறைகள் யோசித்துவிட்டே இதனை நான் எழுதுகின்றேன். இது உண்மையில் உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரை தூய்மைப்படுத்தும் நோக்கில் எழுதப்படும் கடிதமல்ல. அவர் உயிரோடிருக்கும் காலம் மட்டும் அவரை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்வது அவருடைய பொறுப்பாகும். அவரது சிஷ்யர்கள் தனக்கு தூய்மையைத் தேடித் தர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அவரிடமும் இல்லை. அக்கடமைப்பாடு எமக்குமில்லை. ஆனால் ஓர் உண்மை உங்களால் பிழையாகப் புரியப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும். 

மௌலவி அவர்களே!

சமூகத்தில் தலைவர்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. அதனால் தான் அல்லாஹுத் தஆலா நீதியான ஆட்சியாளனுக்கு அர்ஷின் கீழ் நிழல் கொடுக்கின்றான், அநியாயக்கார ஆட்சியாளனுக்கு நரக வேதனையை பல மடங்காகக் கொடுக்கின்றான்.

நீங்கள் உங்களுடைய கடிதத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையையும் ஜமாஅதே இஸ்லாமியின் தலைமையையும் ஒப்பிட்டுப் பேசியிருக்கின்றீர்கள். ஆனால் அப்படி ஒப்பிட முடியாது என்பதே எனது தாழ்மையான கருத்தாகும். ஏனெனில் ஜம்இய்யதுல் உலமா ஓர் இயக்கமல்ல, மாற்றமாக அது மார்க்க விவகாரங்களுக்கான ஆலிம்களுடைய ஓர் அமைப்பாகும். அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைக்கு வருகின்றவர்களுக்கு ஏதாவது ஒரு ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை விட பல மடங்கு பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.

ஒரு ஜமாஅத்தின் தலைவரது தனிப்பட்ட கருத்து அந்த ஜமாஅத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடும். ஆனால் ஜம்இய்யதுல் உலமா போன்ற ஒரு நிறுவனத் தலைமையின் கருத்து இந்த நாட்டு முஸ்லிம்கள் அனைவரையும் பாதிப்படையச் செய்யக் கூடியது என்ற விடயத்தை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

எல்லோரும் றிஸ்வி முஃப்தி அவர்களை விமர்சித்தது போல சிறுபிள்ளைத்தனமாக நீங்களும் விமர்சித்திருக்கின்றீர்கள் என்று நீங்கள் உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பரின் விமர்சனத்தையும் நோக்கியுள்ளீர்கள். இந்த விடயத்தைப் பற்றி விமர்சித்தவர்களில் பெரும்பாலானவர்கள் எதற்காக விமர்சித்தார்கள் என்பது அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம். ஆனால் அவர்களில் பலர் சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு விமர்சிக்கவில்லை என்பது அவர்களது விமர்சனங்களை வாசித்த போது எளிதில் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.

இந்த இடத்தில் தான் சிறுபிள்ளைத்தனமான சுய குரோதங்களை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களுக்கும் சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது.

உஸ்தாத் அவர்களுடைய விமர்சனத்தில் றிஸ்வி முஃப்தி அவர்களுடைய நலவுகள் எதுவும் மறுக்கப்படவில்லை, அவருடைய சொந்த வாழ்க்கை சந்திக்கிழுக்கப்படவில்லை, பழைய தவறுகள் பட்டியல் போடப்படவில்லை. மாற்றமாக பிறை விவகாரம் தொடர்பான தீர்மானத்தில் இருந்த சமூகம் பாதிப்படையக் கூடிய விவகாரங்கள் மாத்திரமே சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. (ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமல்ல உள்ளங்களிலிருப்பது எங்களுக்கும் தெரியும் என்று நினைக்கின்ற பலர் இந்தக் கட்டுரைகளுக்கு ஷரஹ் செய்திருக்கின்றார்கள், அந்த விரிவுரைகளிலிருந்து நீங்களும் சில மேற்கோள்களை சந்தேகங்களாக முன்வைத்துள்ளீர்கள).

உங்கள் மீது எனக்கிருக்கும் பக்தி சிரத்தையை ஒருபக்கம் வைத்துவிட்டு... என்று நீங்கள் தொடங்கியிருக்கிறீர்கள்.  உண்மையில் இந்த வசனம் எனது இஸ்லாமிய அறிவுக்குற்பட்ட வகையில் பிழையானது என்று நினைக்கின்றேன். ஏனெனில் பக்தி சிரத்தை ஒரு மனிதனின் மீது வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியுமானதல்ல. அதனைத்தான் உஸ்தாத் அவர்கள் தனது கட்டுரையில் கட்டுப்பாடு மூன்று விதத்தில் வரலாம் என்று எழுதியிருந்தார்கள். அதில் பக்தி சிரத்தையினால் வரும் கட்டுப்பாடு மார்க்கம் அங்கீகரித்ததல்ல என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.


உங்கள் கட்டுரையின் உண்மை வெளிப்பாடு.... என்று கூறி நீங்கள் எழுதியிருக்கும் விடயங்கள் விடயத்தில் ஒரு ஹதீஸை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். யுத்த களத்தில் கலிமா சொன்ன ஒருவரை கொலை செய்து விட்டு வந்த ஒரு சஹாபியைப் பார்த்து நபியவர்கள் கூறினார்களே, அவருடைய உள்ளத்தை நீங்கள் பிளந்து பார்த்தீரா?! என்று. இந்த ஹதீஸின் பாரதூரம் பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். அப்படியிருக்கும் போது நீங்கள் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் பற்றி தூய்மையான எண்ணத்தோடு நீங்கள் இன்னொரு முறை சிந்திக்க வேண்டும். ஏனென்றால் றிஸ்வி முஃப்தியைப் பற்றி உங்களுக்குத் தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன் என்ற உங்களுடைய எழுத்து உண்மையில் அவருடைய உள்ளத்தில் இருப்பவற்றை அறிந்து கொண்டு எழுதியது போன்ற தோரணையில் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது.
 
அதே போன்று இரண்டாவது கட்டுரையின் நோக்கமும் நீங்கள் கூறியது போலவே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாகவே அமைந்திருந்தது. ஏனெனில் முதல் கட்டுரையில் தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும், ஏதோ தவறு நடைபெற்றிருக்கிறது திருத்திக்கொள்ளட்டும் என சித்தரிக்கப்பட்டிருந்தன. பின்னால் இணையதளங்கள்இ சமூக ஊடகங்கள் போன்ற குட்டையைப் பார்த்த போது நன்றாகவே கலங்கி இருந்தன. பின்னர் ஆகா! எனது வார்த்தைகள் காரம் போதாததாக ஆகிவிட்டதே. இது தான் சந்தர்ப்பம் என தமது சுய ரூபத்தைக் காட்டி இருந்தது உண்மையில் எமக்கு மனவேதனையாக இருக்கிறது. என்ற உங்களுடைய கருத்தும் ஒரு வித்தியாசமான தொனியை பிரதிபலிக்கின்றது, உண்மையில் உங்களுடைய உள்ளத்தில் உஸ்தாத் அவர்கள் பற்றி என்ன கருத்திருந்தாலும் அது உங்களது தனிப்பட்ட விடயம், அதனால் வரும் பாதிப்புக்களும் உங்களுக்கு மட்டுமே! ஆனால் நீங்கள் உங்களது சுயரூபத்தைக் காட்டியிருக்கின்றீர்கள் என்ற வார்த்தை பாரதூரமானது என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில் சுயரூபங்களை அறிந்தவனும் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். அது மட்டுமல்ல ஒரு சந்தர்ப்பவாதியாக அவரை சித்தரிக்கும்; வகையில் உங்களது எழுத்துக்கள் அமைந்திருப்பதாகவே எனது அறிவுக்குப் புலப்படுகின்றது.

 
அது மாத்திரமல்ல அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருந்த சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிட்டு இதுவெல்லாம் தஃப்லீக் ஜமாஅத்தை கேலி செய்யும் நோக்கில் எழுதப்பட்டிருக்கின்றன என்று விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள். அவருடைய நோக்கம் அதுதானென்று நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? என்ற கேள்வியை மிகவும் தாழ்மையாக உங்கள் முன் வைக்கின்றேன்.

மற்ற ஜமாஅத்களுக்கு உள்ளே என்ன நடக்கின்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் ஜமாஅதே இஸ்லாமியைப் பற்றி நன்கு தெரியும். அடுத்த இயக்கத்தையோ தனிமனிதர்களையோ விமர்சிப்பதில்லை சந்திக்கிழுப்பதில்லை என்பதை தனது விதியாகக் கொண்ட இயக்கம் ஜமாஅதே இஸ்லாமி என்பதை பதிமூன்று வருடகாலம் எனக்கும் அவ்வியக்கத்திற்குமிடையில் இருக்கும் தொடர்பைக்கொண்டு நான் உறுதியாக் கூறுவேன். இலங்கையில் ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்காத ஜமாஅதே இஸ்லாமியை சந்திக்கிழுக்காத அதன் தலைமையை தாறுமாறாக விமர்சிக்காத ஒரு இயக்கமாவது இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் தன்னை விமர்சித்த தனக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்ட எந்தவொரு இயக்கத்துக்கும் எதிராக ஜமாஅத் எதுவும் செய்ததில்லை என்பது யாராலும்  மறுக்க முடியாத உண்மையாகும்.

உங்களுடைய கருத்துக்களை வாசித்த போது ஏன் இந்த மனிதர் தனக்குத் தெரியாத விடயங்களைப் பற்றியெல்லாம் எண்ணுகின்றார், எண்ணங்களில் அதிகமானவை பாவமாயிற்றே என்ற நினைப்புத்தான் ஏற்பட்டது என்பதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஜமாஅதே இஸ்லாமியின் தலைவருக்கு இந்த சமூகத்துக்கு வழிகாட்டும் பொறுப்பு இருப்பதை விட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருக்கு அந்தப் பொறுப்பு மிக அதிகம் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

யார் கூடி மஷூறா செய்தாலும் இறுதி முடிவுக்கு பொறுப்புச் சொல்லும் கடமை தலைவருக்கே இருக்கின்றது என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். 
பிறைக்குழுவின் முடிவால் சமூகம் தளம்பியதை விட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரின் அடுத்த நாள் உரையால் இந்த சமூகம் அமளிதுமளிப்பட்டதும் உண்மை என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.



இவ்வளவு காலமும் பிறை விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் போது யாருமே ஜம்இய்யதுல் உலமா வேறு பிறைக் குழு வேறு என்று பிரித்துப் பார்க்கவில்லை என்ற உண்மையையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்த அத்தனை உண்மைகளுடனும் சமூகத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தில் யாருமே அறிவுபூர்வமாக ஆக்கபூர்வமாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்ற மறுக்க முடியாத உண்மை ஒன்றிருப்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

உண்மையில் தலைமைக்கு சாதனைகளின் போது வரும் பாராட்டுக்கள் மட்டுமல்ல சோதனைகளின் போது வரும் விமர்சனங்களும் உரித்தானது என்பது உலக நியதியாகும். நலவுகளின் போது தலைவர்களை நபிமார்களாகப் பார்க்கும் மக்கள் சறுக்கல்களின் போது தலைவர்களை நாயை விடக் கேவலமானவர்களாகப் பார்ப்பார்கள். இது மக்களின் மனோபாவம்.

ஆனால் உஸ்தாத் அவர்களின் விமர்சனம் இந்த பாமரத்தனமான மனோபாவத்துக்கு அப்பால் நின்று சமூகம் பற்றிய அக்கறையோடு எழுதப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை நடுநிலையாக நின்று அதனை வாசிக்கின்ற எவரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் எமது சமூகத்தில் நடுநிலையான வாசிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது, ஒருவரது எழுத்தை அவர் பற்றிய தன்சார்பான மனப்பதிவுடனே வாசிப்பதற்கு இந்த சமூகம் பழகியிருக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். சமூகத்தை வழிநடாத்தும் ஆலிம்களும் இதில் விதிவிலக்கில்லையோ? என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.

உஸ்தாத் அவர்களின் விமர்சனத்தில் சமூகம் பாதிக்கப்பட்ட இடங்கள் தான் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அப்படி சமூகத்தைப் பாதிக்கும் வகையில் ஒரு தலைமை செயற்பட முடியாது என்பது தான் அந்தக் கட்டுரையின் மூலம் அவர் சமூகத்துக்குச் சொல்ல வந்த செய்தியாகும். எனவே தான் அப்படி சமூகத்தைப் பாதிக்கும் ஒரு தலைமை சமூகத்தை வழிநடாத்தப் பொருத்தமானதல்ல என்பதை அவர் தைரியமாகக் கூறியிருக்கின்றார்.

அந்த முன்மொழிவு றிஸ்வி முஃப்தியையோ வேறுயாரையுமோ மட்டம் தட்டும் நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல என்பதற்கு அவர் அந்த முன்மொழிவையடுத்து கூறியிருக்கும் உதாரணமே போதுமானதாகும் என்று நான் நினைக்கின்றேன்.

அது மாத்திரமல்ல அந்த ஆக்கத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட குறிப்பிப்படாத அனைவரிடமும் அந்தக் கட்டுரையின் கருத்துக்களால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் மன்னிப்பும் கேட்டுள்ளார். உண்மையில் சமூக வளைத்தளங்களில் உலாவரும் பலருடைய ஆக்கங்களுக்கும் இந்த ஆக்கத்துக்கும் இடையில் உள்ள பாரிய வேறுபாடுகள் இவையாகும்.

இப்போது சில சகோதரர்கள் கிண்ணியாவுக்கு சென்று அங்குள்ள ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள், பிறை கண்டவர்கள் ஊரவர்கள் என அனைவரையும் சந்தித்து பேட்டி கண்டு அதனை ஆவணப்படுத்திய அந்தக் காணொளிகளை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் பார்த்த பின்னரும் கூட பிறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவு சாணக்கியமற்ற சமூகத்தில் குழப்பத்தை உண்டுபன்னக் கூடிய முடிவு என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதா?

ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் தனதுரையில் பாவித்த வார்த்தைகளுக்கும் ஜமாஅத்தின் அமீர் தனது கட்டுரையில் பாவித்த இந்த வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்ற ஒரு கேள்வியை முன்வைத்திருக்கின்றீர்கள். நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவே நான் நினைக்கின்றேன். அந்த உரையில் பாவித்த வாசகங்களால் சமூகம் குழம்பியது, ஹலாலுக்கும் ஹராமுக்கும் இடையில் தத்தளித்தது. ஆனால் இந்தக் கட்டுரையில் பாவிக்கப்பட்ட இந்த வார்த்தைகளால் அந்த சமூகம் அமைதியடைந்தது. ஆனால் நீங்கள் சொல்வது போல் ஒரு கூட்டத்தினர் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஒரு சிலருக்கேற்பட்ட பாதிப்பை சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பாக சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்றே நான் நினைக்கின்றேன். ஏனெனில் தங்களுக்கு வலித்தால் அது சமூகத்துக்குப் பாதிப்பு வேறு யாருக்கு வலித்தாலும் அது சமூகத்துக்கான பாதிப்பு இல்லை என்ற நிலைப்பாடு நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. ஏனென்றால் இந்த சமூகம் யாருடைய கருத்தால் பாதிக்கப்பட்டது என்பதை சமூகத்தில் போய் கேட்டுப்பார்த்தால் நிச்சயம் நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் சமூகம் என்பது ஒரு இயக்கமல்ல என்பதை நான் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.

உங்களுக்குத் தெரியும் நமது மார்க்கத்தில் தனிமனித நலனை விட சமூக நலனுக்கு முன்னுரிமை இருக்கின்றது என்ற விடயம், அந்த வகையில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் என்ற தனிமனிதனை விட சமூகம் என்ற நிறுவனத்துக்கு பெரிய இடம் காணப்படுகின்றது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

பிறைப் பிரச்சினைக்குத் தீர்வல்ல தலைவரை மாற்றுவது, என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது. அந்த ஆக்கத்தில் எங்குமே அப்படியொரு கருத்து தொனிப்பதாக எனக்குப் படவில்லை. சரியான வழிநடாத்தலுக்கும் சமூகத்துக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதற்குமே மாற்றம் தேவை என்பதை அந்தக் கட்டுரை உறுதிபடச் சொல்லியிருக்கின்றது. சந்தர்ப்பம் பார்த்து ஜம்இய்யதுல் உலமாவைக் கைப்பற்றும் நோக்கம் ஜமாஅதே இஸ்லாமிக்கோ அதன் தலைவருக்கோ இருக்கின்றதென்றால் ஒருவரது பெயரைக் கூட அந்த விமர்சனத்தில் முன்மொழியாமல் இருந்திருக்கலாம். ஆனால் தனது உள்ளத்துக்குப்பட்ட ஒருவரை இந்த சமூகத்தின் பல மட்டங்களில் தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கும் யாருமே துணியாத வகையில் தைரியமாக முன்வைத்ததானது ஜம்இய்யதுல் உலமாவின் அதிகாரத்தைக் கைப்பற்றும் உள்நோக்கம் ஒரு சிறிதும் இன்றி முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து அது என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.   

தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற முன்மொழிவானது சமூக ஒற்றுமைக்கெதிரானது, சிறுபிள்ளைத்தனமானது, ஊரோடு ஒத்துப்பாடியது என்று நீங்கள் கூறியிருப்பதை நான் ஆச்சரியத்தோடு பார்க்கின்றேன். அப்படியென்றால் தலைவர் எப்படி வழிநடாத்தினாலும் அதற்கு உடந்தையாக இருப்பதுதான் ஒற்றுமையா? அது தான் முதிர்ச்சியடைந்த நிலையின் வெளிப்பாடா? என்று என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. அவர் தலைமைத்துவத்தை மாற்ற வரவுமில்லை, மாற்றுங்கள் என்று உங்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கவுமில்லை, அந்த அதிகாரமும் அவரிடம் இல்லை, அவர் சொன்னதால் நீங்கள் மாற்ற வேண்டும் என்றுமில்லை. அப்படியிருக்கும் போது நீங்கள் கூறியிருப்பதைப் போன்று தப்லீக் ஜமாஅத்தின் அளவு பெரிய ஜமாஅத்தாக இல்லாத மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு சிறிய கூட்டத்தை மாத்திரம் வைத்து இயக்கம் நடாத்திக் கொண்டிருக்கும் பெரிய அளவுக்கு மக்கள் கேட்க விருப்பமில்லாத ஒருவருடைய கருத்தை நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள வேண்டும்? என்று கேட்கத் தோன்றுகின்றது. உண்மையில் நீங்கள் கூறியது போன்று அவர் செல்வாக்கற்றவராக இருப்பின் அவரது சாதாரண ஒரு கருத்துக்கு ஏன் நீங்கள் இவ்வளவு தூரம் அஞ்ச வேண்டும்? என்ற கேள்வியும் எழுகின்றது. இவையெல்லாம் நியாயமான கேள்விகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

இந்த இடத்தில் உஸ்தாத் அவர்களது முன்மொழிவு தொடர்பாக யூஸுஃப் முஃப்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாகவும் ஒரு விடயத்தைக் கூற வேண்டும். மிகவும் கண்ணியமான முறையில் அவர் அதனை வெளியிட்டுள்ளார். உஸ்தாத் அவர்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதற்கு உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீங்கள் தனது கருத்தை இந்த சமூகத்தில் சொல்வதற்குக் கூட உரிமை இல்லை என்ற தோரணையில் எழுதியிருப்பது மனதுக்கு வேதனை அளிக்கின்றது. தலைவர் என்னதான் தவறு செய்தாலும் அதற்கு மாற்றுக் கருத்துத் தெரிவிக்க முடியாது என்ற அளவுக்கு தலைமையிடம் ஒரு சிந்தனை இருக்கின்றதா என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.

உண்மையில் எந்தக் கருத்தால் சமூகம் குழம்பியது என்பதற்கு ஒரு சிறிய கணிப்பீடு செய்து பார்த்தால் தெளிவு பிறக்கும் என்று நம்புகின்றேன். ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரின் உரையைத் தொடர்ந்து சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் ஏற்பட்ட அதிர்வையும் தளம்பலையும் ஜமாஅத்தின் அமீர் அவர்களது கருத்தால் நீங்கள் ஏற்பட்டதாகச் சொல்லும் குழப்பத்தையும் தராசின் இரண்டு தட்டுக்களிலும் போட்டு நிறுத்துப் பார்த்தால் எதனால் குழப்பம் ஏற்பட்டது என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். சம்பந்தப்பட்;ட தரப்பு குழம்பியுள்ளது, என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அந்தக் குழப்பத்தின் விளைவாகத் தான் நீங்களும் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு தெளிவோடு இருந்த நான் கூட அந்த ஒரு மணி உரைக்குப் பின்னால் எனது வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு ஹராத்தை செய்து விட்டேனா என்று குழம்பாத அளவு குழம்பிப் போனேன்.

சமூகத்தில் உலமாக்களது கருத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் எந்தளவு குழம்பிப் போயிருப்பார்கள் என்பதனை என்னால் ஊகிக்க முடியுமாக இருக்கின்றது. உஸ்தாத் அவர்களுடைய அந்தக் கட்டுரை அந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடனே எழுதப்பட்டது, அந்த நோக்கத்தை அந்தக் கட்டுரைகள் நூறு வீதம் இல்லாவிட்டாலும் நிறைவு செய்திருக்கின்றன என்பதே எனது அவதானமாகும்.

இந்த இடத்தில் உங்களுக்கு இன்னுமொரு விடத்தை ஞாபகப்படுத்துவது பொருத்தம் என்று நினைக்கின்றேன். அந்த உரையால் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து இந்த நிமிடம் வரையில் ஜம்இய்யதுல் உலமாவினால் உத்தியோகபூர்வமாக அந்தக் குழப்ப நிலையை தவிர்ப்பதற்குரிய எந்த நடவடிக்கையும் சமூக மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு யாப்பு இருக்கின்றது, அதன் அங்கத்தவர்கள் இஸ்லாமிய இயக்கங்கள் அல்ல தகுதியான உலமாக்கள் மாத்திரமே றிஸ்வி முஃப்தி சரியான தகுதியான தலைவர் என்பதற்கு அவர் மூன்று முறை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டதே போதுமான ஆதாரமாகும். ஆனால் உங்களைப் போன்ற தப்பான கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு அது புரியாது என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.
திரும்பவும் நான் கேட்கின்றேன் நீங்கள் ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? ஏன் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் றிஸ்வி முஃப்தியைத் தப்பான கண்கொண்டு பார்ப்பதாக எண்ண வேண்டும்

மௌலவி அவர்களே!

ஒரு விடயத்தை சொல்லித்தான் ஆக வேண்டும். பிறைப் பிரச்சினை என்று தொடங்கிய உங்களுடைய கடிதத்தில் பிறை வாசமே வீசவில்லை. மாற்றமாக முழுப் பிறையும் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டு பிறை தொடர்பான பிரச்சினைகளும் மறைக்கப்பட்டு அது தொடர்பாக பொறுப்புச் சொல்ல வேண்டிய ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கடமை மறைக்கப்பட்டு சமூகத்தைக் குழப்பியவர் ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் தான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்ற அமைப்பில் உங்களது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள், இந்த சமூகம் பிறையின் மூலமாக ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையை அவ்வளவு இலகுவாக இந்தத் தடவை மறந்து விடும் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.

அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என நான் தூய்மையாக பிரார்த்தித்துக் கொள்கின்றேன். உங்களுடைய இந்த எழுத்துக்களில் திருத்தப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.

முதலில் இஸ்லாமிய இயக்கங்கள் பலவற்றிலும் மிகத் தகுதியான உலமாக்கள் இருக்கின்றார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அது மட்டுமல்ல ஜம்இய்யதுல் உலமாவில் இருக்கின்ற அனைவரும் ஏதாவதொரு இயக்கம் சார்ந்தவர்களே அல்லாமல் ஜம்இய்யதுல் உலமாவுக்காகவென்றே பட்டம் பெற்று வந்தவர்களல்ல என்ற உண்மையையும் என்னை விட நீங்கள் நன்கறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.

இரண்டாவதாக மூன்று முறை ஜனநாயக வழிமுறையில் தெரிவு செய்யப்பட்டதால் ஒருவர் தகுதியானவர் என்ற வாதம் எந்தளவு பொருத்தம் என்ற கேள்வியையும் உங்களுக்கு முன்னால் வைக்கின்றேன்.

ஒரு பேச்சுக்காக சொல்வதாக இருந்தால் நீங்கள் யாரை சாடி எழுதியிருக்கின்றீர்களோ அந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் (சாடி எழுதவில்லை என்று நீங்கள் கூறினாலும் அதனை நீங்களே இன்னுமொரு முறை ஆற அமற வாசித்தால் அது சாடலைத் தவிர வேறில்லை என்பதை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்) அவர்கள் அவர் தன்னைத் தெரிவு செய்ய வேண்டாம் என்று கூறியும் ஐந்துக்கு மேற்பட்ட தடைவைகள் நூற்றுக்கு நூறு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர் என்பதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஒரு நீதியான அமீராக நீங்கள் இருந்தால் என்று தொடங்கி நீங்கள் சில விடயங்களைப் பேசி இருக்கின்றீர்கள்... உண்மையில் ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் நீதியாக நடந்து கொள்கின்றாரா இல்லையா என்ற கேள்விக்கு ஜமாஅத்தின் அங்கத்தவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஜமாஅதே இஸ்லாமியின் அமீரிடம் எந்த வகையில் நீதி தேவைப்படுகின்றது என்பதும் எனக்குப் புரியவில்லை. தனது கருத்தை பகிரங்கமாகத் தெரிவிப்பது அநீதி என்றால் இந்த சமூகத்தில் அனைவரும் பேசாமல் யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருந்து விட வேண்டும் என்றல்லவா பொருளாகி விடும்?!

அதனைத் தொடர்ந்து றிஸ்வி முஃப்தி அவர்கள் எவ்வளவு நல்லவர் அவரால் எவ்வளவு நலவுகள் சமூகத்துக்கு நடந்துள்ளன என்று சில விடயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றை நான் ஏற்றுக் கொள்கின்றேன், அதில் ஒன்றைக் கூட மறுக்கவில்லை. ஆனால் ஆயிரம் நலவுகள் ஒரு பெரிய தவறை நியாயப்படுத்த மாட்டா என்ற மிகப் பெரும் உண்மையையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். காலித் இப்னு வலீத் என்ற அல்லாஹ்வின் வாளை தளபதிப் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணம் அவரது தவறுகளல்ல, அவரது நலவுகளை மறுதலிப்பதுமல்ல. மாறாக அவர் எந்தத் தவறுமே செய்யாமல் அவரது பதவி வேறொருவருக்குக் கொடுக்கப்பட்டது மக்கள் அவரால் வழிகெட்டுவிடக் கூடாதே என்ற உமர் (ரழி) அவர்களின் அச்சத்தின் காரணமாகவே. அவரது நலவுகளால் அவர் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ளட்டும். உண்மையில் அதுவே நலவுகள் செய்வதற்கான நோக்கமாகும். மாற்றமாக இவ்வளவு நலவு செய்திருப்பவரை எப்படி விமர்சிக்கலாம் என்ற கேள்வி சில வேளைகளில் நலவு செய்தவரது தூய்மையைக் கூட பாதிப்பதற்கு இடமுண்டு என்ற அச்சமே என்னுடைய உள்ளத்தில் ஏற்படுகின்றது.



அதே போன்று உங்கள் கருத்தை தலைமையிடம் கூறாமல் ஏன் பகிரங்கமாகக் கூறினீர்கள்? என்று உஸ்தாத் அவர்களிடம் நீங்கள் ஒரு கேள்வியை முன்வைத்திருக்கின்றீர்கள். உண்மையில் இக்கேள்விக்கு பதிலளிக்க அவரே பொருத்தமாக இருப்பினும் கூட எனது அறிவுக்குட்பட்ட வகையில் நான் அதனை இப்படித்தான் பார்க்கின்றேன். ஜம்இய்யதுல் உலமாவிடம் இதுவரை இந்த நாட்டில் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் எதுவுமே எந்த முறைப்பாடுகளையும் செய்ததில்லையா?! யாருமே எத்தகைய ஆலோசனைகளையும் முன்வைத்ததில்லையா?! தமக்கு அநீதி இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களை அறியத்தந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டியதிpல்லையா?!

மற்ற இயக்கங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஜமாஅதே இஸ்லாமியின் அமீருக்கு கண்டியில் ஒரு இஸ்லாமிய இயக்கத்தால் அனுப்பப்பட்ட அடியாட்கள் நேரடியாக வந்து கொலை அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பாக ஜம்இய்யதுல் உலமாவில் முறைப்பாடு செய்யப்படவில்லையா?!


பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அதே இஸ்லாமிய இயக்கம் அழைத்து நுவரெலியாவில் ஆள் வைத்து அடித்து படுகாயப்படுத்தி அனுப்பியதைப்பற்றி ஜம்இய்யதுல் உலமாவுக்கும் நீங்கள் சார்ந்த இயக்கத்தின் தலைமைக்கும் அறியத்தரப்படவில்லையா?!


வெல்லம்பிடியவில் ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்தவர்களை ஆள் வைத்து அடித்து விரட்டிய சம்பவம் பற்றி ஜமாஅதே இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவிடம் முறைப்பாடு செய்யவில்லையா?!

இது போன்ற பல சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் செய்தார்கள் என்று சமூகமெங்கும் தூற்றித் திரியாமல் விமர்சித்துத் திரியாமல் பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் முஸ்லிம் சமூகத்தின் அங்கங்கள் என்ற வகையில் அந்நியர்களிடம் காட்டிக் கொடுக்காமல் ஜம்இய்யதுல் உலமாவை மதித்து ஜமாஅதே இஸ்லாமி செய்த எந்த முறைப்பாட்டுக்கும் 'செய்தவர்கள் யார் என்று தெரியாது, அவர்கள் எங்களது கட்டுப்பாட்டுக்குட்பட்டவர்களல்ல' என்ற பொறுப்பற்ற பதிலைத் தவிர வேறு எந்தப் பதிலும் கிடைக்கவில்லையே!

இப்படியெல்லாம் முன் அனுபவம் இருக்கும் போது இதனை மட்டும் இரகசியமாக ஜம்இய்யதுல் உலமாவுக்கு தெளிவு படுத்துவதால் சமூகத்தின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்? அந்த ஆலோசனைகள் முறைப்பாடுகள் போன்று இதுவும் தூக்கிக் கிடப்பில் போடப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் தான் உஸ்தாத் அவர்கள் தனது உள்ளத்தில் பட்ட கருத்தை பகிரங்கமாக இந்த சமூகத்துக்கு சொல்லியிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

அதே போன்று 'ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரது சில கருத்துக்களை விமர்சித்து எழுதியதானது தலைவரையும் தலைவரைத் தெரிவு செய்த தகுதிவாய்ந்த பல உலமாக்களையும் கேவலப்படுத்தியதற்கு சமம். அதற்காக நீங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்' என்று நீங்கள் கூறியிருக்கின்றீர்கள்.
மௌலவி அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பாசறையில் வளர்ந்த தலைவருடைய முன்மாதிரியைப் பாருங்கள்.

உமர் (ரழி) அவர்கள் மின்பரில் குத்பா செய்யும் போது கூறிய சில கருத்துக்கள் முழு சமூகத்தையுமே பாதிக்கும் கருத்தாக இருக்கின்றது என்று கருதிய போது ஒரு பெண் கூட எழுந்து பகிரங்கமாக அந்தக் கருத்துக்கான ஆட்சேபனையை மிகவும் கடுமையான தொனியில் வெளியிட அந்த உமரின் சாம்ராஜ்யத்தில் சுதந்திரம் இருந்தது. பள்ளிக்கு வெளியே வந்த பின்னர் உமரின் தோழர்கள் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தவுமில்லை அவள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தவுமில்லை, அந்த ஆட்சேபனையை உமரையோ உமரைத் தெரிவு செய்த அபூபக்ரையோ கேவலப்படுத்தும் அம்சமாக யாரும் பார்க்கவுமில்லை. மாற்றமாக மன்னிப்புக் கேட்டதெல்லாம் யாரைக் கண்டு ஷைத்தான் கூட அஞ்சி வேறு வழியால் செல்வான் என்று நபியவர்கள் கூறினார்களோ அந்த உமர்தான். அவர் தனது கருத்தை வாபஸ் வாங்கிக் கொள்கின்றார்.

உண்மையில் தலைவர்கள் தமது முன்மாதிரியை இங்கிருந்து தான் பெற வேண்டும். அதைத் தவிர்த்து ஆட்சேபனைகளுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லாத ஒன்றாக தலைமை மாறக் கூடாது.
அது மட்டுமல்ல உமர் (ரழி) அவர்களிடம் மக்கள் அவரது சொந்த வாழ்க்கை பற்றிக் கூட பகிரங்கமாக எழுந்து கேள்வி கேட்டிருக்கின்றார்கள். 'மக்களே! செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்' என்று உமர் மின்பரில் வைத்துக் கூறிய போது 'நீர் அணிந்திருக்கும் ஆடையைப் பற்றி சரியான விளக்கம் தராதவரை உமக்கு செவிமடுக்கவும் மாட்டோம் கட்டுப்படவும் மாட்டோம்' என்று ஒரு ஸஹாபி எழுந்து கேட்கின்றார். தன் சார்பாக தனது மகன் அப்துல்லாஹ்வை அதற்கு பதில் கூறத் தான் உமர் சொன்னாரே அல்லாமல் நீங்கள் யார் அமீருல் முஃமினீனைக் கேள்வி கேட்க? இப்படிக் கேட்டு ஏன் சமூகத்தைக் குழப்பப் பார்க்கின்றீர்கள்? என்று உமர் அவரிடம் பதில் கேள்வி கேட்கவில்லை.

ஆனால் உஸ்தாத் அவர்களுடைய கட்டுரையில் எந்தத் தனிநபருடைய தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வீடு தொடர்பாக வாகனம் தொடர்பாக ஆடை தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை, எந்த விளக்கமும் கோரப்படவில்லை. சமூகம் ஏன் குழப்பப்பட்டது என்பது தான் அவருடைய ஒரே ஒரு கேள்வி.
அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் இவர் சமூகத்தில் குழப்பத்தை உண்டுபன்னப் பார்க்கின்றார் என்று பழியை மாற்றி உஸ்தாத் அவர்களின் தலையில் கட்டிவிட முயற்சிப்பது பொறுப்புள்ள ஒரு நிறுவனத்தின் சார்பாக எழுதியிருக்கும் உங்களுக்கு எவ்வளவு தூரம் பொருத்தம் என்ற ஒரு கேள்வியையும் முன்வைக்கின்றேன்.

இறுதியாக இந்த சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டியவர் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரா? அல்லது அவரது தவறை சுட்டிக்காட்டிய ஜமாஅதே இஸ்லாமியின் தலைவரா? இயக்கம், நெருக்கம் ஆகியவற்றை மறந்து நடுநிலையாக சிந்தித்து முடிவெடுக்குமாறு உங்களிடம் மிகத் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்த வரை ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து தவிர்ந்து இம்மடலை வரைய முழுமையாக முயற்சித்திருக்கின்றேன், உங்களது மனதை நோகச் செய்யும் நோக்கம் நிச்சயமாக இந்த எழுத்துக்களுக்கு இல்லை. ஆனால் நீங்கள் இக்கருத்துக்காளால் பாதிக்கப்பட்டால் அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் நிறைவு செய்கின்றேன். வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் பொருந்திக் கொள்வானாக. அனைவரையும் சுவனத்தில் ஒன்றுசேர்த்து வைப்பானாக!.

வஆஃகிற தஃவானா அனில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

அன்புடன் இஸ்லாமியச் சகோதரன்

2 கருத்துகள்:

  1. Usthaz ur criticism is awesome may allah increase ur knwldge nd grant u jannah ....Aameen
    Yours student

    பதிலளிநீக்கு
  2. indru vimarsanam endra peyaril thittith theerkkum velaithaan nadakkum, ithu pondru alahiya muraiyel vimarsanam nadaiperum endraal kurotham uruwahamal pathukaakkalam. i.a.

    பதிலளிநீக்கு