-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

14 செப்., 2010

ஒரு இலட்சம் பேரோடு பெருநாள் கொண்டாடிய புரூனை சுல்தான்.






ஆசியாவில் மலேசியாவுக்கும் - இந்தோனேசியாவுக்கும் அருகில் இருக்கும் குட்டி நாடு புரூனை. இலங்கையை விட பத்து மடங்கு சிறிய நாடு. நான்கு இலட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் சுல்தான் ஹஸன் அல்புல்கிய்யா ஆட்சியாளராக இருக்கின்றார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்களை விட மன்னரான சுல்தான் ஹஸன் புல்கிய்யா மக்களோடு அதிகமான தொடர்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாக மக்கள் அவரை மிகவும் விரும்புகின்றனர். அறபு நாட்டு மன்னர்களை விட புரூனை சுல்தான் வித்தியாசமானவர். மக்கள் தன்னோடு தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்களை தாராளமாகவே ஏற்படுத்தி வைத்திருக்கின்றார். ஜூம்ஆ, பெருநாள் தொழுகை, கலாசார நிகழ்வுகள் என்பவற்றில் இவர் மக்களோடு ஒருவராக கலந்து கொள்வார். நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் சுல்தானின் கரம் பிடித்து கைலாகு கொடுத்து முத்தமிடுவதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.

கூட்டத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சலிக்காமல் அனைவருக்கும் கைலாகு கொடுத்துவிட்டே அவர் செல்வார். இம்முறை பெருநாள் தினத்தில் ஜூம்ஆத் தொழுகைக்காக அவர் ஜாமிஉல் அஸ்ரி பள்ளிவாசலுக்கு வந்த போது நானும் முகமன் கூறினேன். கடந்த ஒரு வருடத்தில் சுல்தானுக்கு கைலாகு செய்து முகமன் கூறிய நான்காவது சந்தர்ப்பம் அது.

சுல்தான் ஹஸன் அல்புல்கிய்யா முஇஸ்ஸூத் தீன் வத் தவ்லா புரூனையின் 29வது மன்னர். மன்னருக்கு மூன்று மனைவியர். இருவரை தலாக் கூறி விட்டார். பட்டத்து ராணியாக இருப்பவர் ஹாஜியானி சாலிஹா. மொத்தமாக 12 பிள்ளைகள். கடைசி மகள் இளவரசி அமீராவுக்கு இப்போது இரண்டு வயசு.




மன்னரின் மாளிகை 'இஸ்தானா நூருல் ஈமான்' என அழைக்கப்படுகின்றது. ஈத் தினத்தை தொடர்ந்து வரும் மூன்று நாட்களையும் மன்னர் மக்களை சந்திப்பதற்காக ஒதுக்கியிருக்கிறார். இம்மூன்று தினங்களிலும் இஸ்தனாவுக்குச் சென்று மன்னரைச் சந்தித்து முகமன் கூறுவதை மக்கள் வழமையாக்கிக் கொண்டுள்ளனர். வெறுமனே கைக் கொடுத்து விட்டு வருவது மட்டுமல்ல, செல்கின்ற அனைவருக்கும் வயிறார உணவும், இனிப்புக்களும் வழங்கப்படும். சுல்தானைச் சந்தித்து விட்டு வரும் அனைவருக்கும் சுல்தானின் ஈத் வாழ்த்து அட்டையும், பெருநாள் பரிசும் கொடுக்கப்படும். சிறுவர்களாக இருந்தால் ஐந்து டாலர் புரூனை காசும் உண்டு. சுல்தானுக்கு கைலாகு கொடுக்கின்ற போது அவரது சகோதரர்கள், மகன்மார் அனைவரும் கூடவே இருப்பார்கள். மறு பக்கத்தில் பெண்கள் பட்டத்து ராணிக்கும், இளவரசிகளுக்கும் சலாம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.







கடந்த மூன்று நாட்களாக சுல்தானைச் சந்தித்தவர்களின் மொத்தத் தொகை 99487 பேர் (கிட்டத்தட்ட 1லட்சம் பேர்) என புரூனைச் செய்திச் சேவை அறிவித்திருந்தது. இத்தொகையில் 52,000 ஆவது நபராய் நானிருந்தது சந்தோசமாய் இருக்கின்றது.இஸ்தனாவுக்கு நானும் - இலங்கை நண்பன் சிஹானும் சிஹானின் நண்பன் புரூனை ஹஸ்மியம் போயிருந்தோம்.






ஒரு நாட்டில் ஆட்சியாளனுக்கும்- மக்களுக்கும் இடையிலான நல்லுறவுக்கு இதை விடச் சான்றொன்று இருக்க முடியாது. இப்டியான ஆட்சியாளர் ஒருவரை நீங்கள் விரும்புவீர்களா?? வெறுப்பீர்களா?? சத்தியமாக புரூனை மக்கள் தமது மன்னரை மனசாற நேசிக்கிறார்கள்.

1 கருத்து:

  1. பலதரப்பட்ட ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இவர் ஒரு வித்தியாசமானவர் என்றும் கூரலாம்.
    மக்களால் தெரிவு செய்யப்பட ஆட்சியாளர்களே.., பதவி பெற்றதன் பின் பாராமுகமாக இருந்து விடுவர்.
    மாறாக இவரின் இந்த ஆட்சிமுறை இதர மன்னர்களுக்கெல்லாம் ஓர் உதாரணமாகவே திகழ்கின்றது.

    பதிலளிநீக்கு