-
نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

4 பிப்., 2015

இலங்கை மண்ணில் எமது வரலாறும் பங்களிப்பும்

இஸ்மத் அலி (நளீமி)

அரேபியத் தீபகற்பத்தில் இஸ்லாம் அறிமுகமாகி வளர்ச்சி பெறத்தொடங்கும் காலத்திலிருந்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் தொடங்குகின்றது என்பது வரலாற்று நூற்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் கி.பி 2ம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது என்று Thomas Arnold எனும் மேற்கத்தேய அறிஞர் Preaching Of Islam  என்ற நூலில் குறிப்பிடுகின்றார். 

நபி (ஸல்) அவர்களின் தூதுவர் வஹாப் இப்னு அபீ ஹப்ஸா கி.பி. 628ல் முதலாம் அக்கபோதியை சந்தித்து இஸ்லாத்தைத் தெளிவுபடுத்தி இங்கிருந்த அரேபியர்களில் சிலரை இஸ்லாத்தைத் தழுவச் செய்தல். அல்கியா பாக்கரி, ஹூசைன் பின் முஹம்மத், பக்: 184 – குறிப்பிடுவதாக சித்திலெப்பைக் குறிப்பிடும் குறிப்பு.
அஜாஇபுல் ஹிந்த் எனும் நூலில் இப்னு ஷஹ்ரயார் 'இலங்கை மன்னன் அரேபியாவுக்கு இஸ்லாத்தை அறிந்து வர ஒரு தூதரை அனுப்பினான்' என்று சொல்லும் குறிப்பு.
கி.பி. 700 ல் 2ம் தாதோபதிஸ்ஸ மன்னன் பனூஹாஷிம் இனத்துப் பெண்களை அரேபியாவுக்கு அனுப்பி வைத்த சம்பவம். 
என்பன இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலிருந்து அது இலங்கையிலும் பரவ ஆரம்பித்தது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. 

அப்பாஸிய கலீபா ஹாருன் அல்ரஷீதால் அனுப்பிவைக்கப்பட்ட காலித் பின் அபூ பகாயா என்பவரின் ஞாபகார்த்தமாக நடப்பட்ட நடுகல். (ஹி:317ஃகி.பி. 929 மரணம்)
'இலங்கை மன்னனின் ஆலோசனை சபையில் நான்கு பௌத்தர்கள், நான்கு முஸ்லிம்கள், நான்கு கிறிஸ்த்தவர்கள், நான்கு யூதர்கள் இருந்தனர்' என்ற அல்-இத்ரீஸி எனும் 12ம் நூற்றாண்டு அறிஞரின் கூற்று
மூன்றாம் விஜயபாகுவின் முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த வத்ஹிமி பண்டார குருநாகலையில் ஆட்சி செய்தமை 
1211ல் மரணித்த காழி யூஸூப் அல்அலவி, அமீர் பத்ருத்தீன் ஹூசைன் என்பவரின் புதல்வி ஆகியோரின் கல்லறை நடுகற்கற்கள் 
1344 ல் இலங்கையை தரிசித்த இப்னு பதூதா முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடும் குறிப்புக்கள்

என்பன எமது வரலாறு இந்த நாட்டில் 1000 ஆண்டுகளை விடப் பழமைவாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் இன்னும் சில ஆதராங்களாகும். 


இந்நாட்டிற்கு வியாபாரிகளாக வந்த எமது முன்னோர்கள் இலாப நோக்கத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளவில்லை. தாம் சுமந்திருந்த இஸ்லாமியத் தூதின் நல்லம்சங்களை எத்திவைப்பதற்கும் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்வதற்கும் அவர்கள் பின்நிற்கவில்லை.  கி.பி. 1070 சோழர்களை வெற்றிகொண்ட ருஹூனு மன்னன் முதலாம் விஜயபாகு காலத்தில் முக்கிய வணிகராக பெரிய தம்பி மரிக்கார் இருந்தமை, இவரது கப்பல் ஊடாக இந்தியாவிலிருந்து மன்னனின் முடி சூட்டு விழாவுக்கு பிராமணர்கள் அழைத்து வரப்பட்டமை...
தம்பதெனியவை ஆட்சி செய்த 3ம் விஜயபாகுவின் காலத்தில் பேருவலை மீராலெப்பை என்பவர் சாலியர் எனும் நெசவாளர்களை இலங்கைக்கு அழைப்பித்து நெசவுத் தொழிலை இங்கு உயிர்ப்பித்தமை.
இரண்டாம் பராக்கிரமபாகுவின் (1236-1270) தம்பதெனிய காலப்பகுதியில் கோபால முதலிகே அன்சார் துபைல் என்பவர் அரச வைத்தியராகச் செயற்பட்டுள்ளமை
யாப்பஹூவையை ஆட்சி செய்த 1ம் புவனேகபாகு (1273-1284) மன்னன் எகிப்திய மம்லூக்கிய சுல்தான் கலாஊனுக்கு 1283ம் ஆண்டு அனுப்பிய தூதுக் குழுவுக்கு அபூ உஸ்மான் என்பர் தலைமை தாங்கியமை.
2ம் ராஜசிங்கனின் காலத்தில் (1634-1684) மன்னனின் உதவிக்காக சென்ற முஸ்லிம்களின் 'ஒட்டுபந்திய' எனும் ஒட்டகப் படை 
இவை எமது முன்னோர்கள் இந்நாட்டுக்குச் செய்த பல்துறை பங்களிப்புக்கான ஒரு சில உதாரணங்களே. மேலும் எமது முன்னோர்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்காக பௌத்த, இந்துத் தலைவர்களோடு கைகோர்த்து உழைத்திருக்கிறார்கள். இந்நாட்டை ஆக்கிரமிக்க வந்த போர்த்துக்கேயர்களையும் ஒல்லாந்தர்களையும் எதிர்த்து நின்றவர்களில் முதன்மையானவர்கள் எம் மூதாதையர்கள். ஏனெனில் நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் என்ற வகையிலும் கப்பல் மூல வர்த்தகத்தில் ஏக போக உரிமைப்பெற்றவர்காக அது வரை திகழ்ந்தவர்கள் என்ற வகையிலும் காலணித்துவவாதிகளை எதிர்த்து நிற்பது அவர்களின் தேவையாக இருந்தது. எனவே சிங்கள மன்னர்களுக்கு உதவியாக அவர்கள் அரும்பெறும் தியாகங்களை மேற்கொண்டனர். கரையோரங்களிலிருந்து விரட்டப்பட்ட அவர்கள் பின்பு நாட்டின் உட்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சிங்கள மன்னர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் அவர்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுப்போராகவும் இதயசுத்தியோடு செயற்பட்டனர். 

ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் அவர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்காய் ஏனைய இனத்தவர்களோடு தோளோடு தோள்நின்று செயற்பட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையைக் கட்டியெழுப்பும் விடயத்தில் தமது நிலங்களையும் சொத்துக்களையும் வழங்கி எமது முன்னோர்கள் பெரும்பங்களிப்புச் செய்துள்ளனர்.

எமது முன்னோர்கள் ஒன்றிணைந்து பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாமும் கொண்டாடுவோம்! அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டிற்கு பங்களிப்புச் செய்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக