-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

26 அக்., 2014

புதிய வருடம் - புதிய பயணம் - ஹிஜ்ரி - 1436

இஸ்மத் அலி




புதியதொரு ஹிஜ்ரி வருடத்தில் (ஹி 1436) நாம் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். கடந்த வருடத்தில் நாம் எதனை சாதித்தோம்? எதனை சாதிப்பதற்கு தவறினோம்? எவற்றையெல்லாம் நாம் இழந்தோம்? என்பதை இந்த தருணத்தில் சிந்தித்துப் பார்ப்பதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கின்றோம்.


நாம் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த வருடம் முன்னைய வருடங்களை விட அருள்மிக்கதாக இருப்பதற்கு அல்லாஹூத்தஆலா ஒருவனே போதுமானவன். என்றாலும் நாம் எதிர்கொள்கின்ற சவால்களும், பிரச்சினைகளும் எமது இந்த வருடம் எப்படி அமையப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்குள் இன்று ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த சவால்களை புத்திசாலித்தனத்தோடு எதிர்கொண்டு வெற்றிபெற்று இந்த வருடத்தை எமக்கும், எமது குடும்பத்திற்கும், எமது ஊருக்கும், எமது நாட்டிற்கும், முழு அகிலத்திற்கும் சுபீட்சம் மிக்கதாய் அமைத்துக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். 

இந்த புதிய வருடத்தின் ஆரம்பம் எமக்கு நபிகளாரின் ஹிஜ்ரத்தை ஞாபகப்படுத்த வேண்டும். ஒரு பலவீனமான நிலையில் மக்காவை துறந்து மதீனாவைத் தளமாகக் கொண்ட பேரரசு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு மேற்கொண்ட பயணமே  இந்த ஹிஜ்ரத் நிகழ்வாகும். இதனை ஞாபகப்படுத்துவதன் மூலம் நாம் எமது உள்ளங்களை பலப்படுத்திக்கொள்வதோடு எமக்குள் இருக்கின்ற அச்ச உணர்வை நீக்கிக்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். மேலும் இந்த புதிய வருடத்தில் எம்மை 03 முக்கியமான விடயங்களில் பலப்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். இம்மூன்று காரணிகளும் ஒரு சமூகத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

ஈமானிய பலம் : (قوة الإيمان)

எம்மைப் படைத்த இறைவனுக்கும் எமக்கும் இடையிலான தொடர்பு எப்போதும் பலமானதாக இருக்க வேண்டும். இந்த அகிலத்தில் இருக்கின்ற அத்தனை சக்திகளும் ஒன்றிணைந்து எம்மை அழிப்பதற்கு முயற்சித்தாலும் அல்லாஹூத்தஆலாவுடனான எமது இருக்கமான தொடர்பு அந்த சக்திகள் அனைத்தையும் பலவீனப்படுத்திவிடும் என்பதையும், அந்த தொடர்பு பலவீனமானதாக அமைகின்ற போது எமக்குள் இருக்கின்ற அனைத்து பலங்களும் பலவீனமானதாக ஆகிவிடும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொழுகை, பிரார்த்தனை, அல்குர்ஆனுடனான பிணைப்பு, தவ்பா, இஸ்திஃபார் மற்றும் ஏனைய வணக்கங்கள் என்பன எமக்கும் எமது இறைவனுக்கும் இடையிலான தொடர்பை பலப்படுத்தி நெருக்கமாக்கின்ற விடயங்களாகும். 


சகோதரத்துவப் பலம் : (قوة الأخوة)

எமக்கு மத்தியில் உள்ள இயக்க, அரசியல், பிரதேச ரீதியான பிளவுகள் எம்மை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன. 'அல்லாஹ்வின் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடியுங்கள்' என்ற குர்ஆனிய வசனம் எமக்குள் மறக்கடிகக்கப்பட்டுள்ளது. அற்பமான விடயங்களுக்காய் முரண்பட்டு பிரிந்துநிற்கின்ற அவலத்தையே எமது சமூகமெங்கிலும் காண்கின்றோம். கருத்து முரண்பாடுகளை அணுசரித்து செயற்படுகின்ற தன்மையும், உம்மத்தின் அனைத்து தரப்பினரையும் சகோதரர்களாக எண்ணுகின்ற நிலையும் எமக்குள் ஏற்பட வேண்டும். ஸலாம் சொல்லுதல், அன்புகாட்டல், மனித நேயம், உதவி மனப்பான்மை, ஆலோசித்தல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற பண்புகளின் ஊடாக எமக்கிடையிலான சகோதரத்துவத்தை நாம் பலப்படுத்த முடியும். குறிப்பாக ஊர் மற்றும் சமூக, தேசிய விடயங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற பொழுதுகளிலும் சமூக அபிவிருத்திக்கான செயற்பாடுகளிலும் எமது முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட நாம் முன்வரவேண்டும். 


சடரீதியான பலம் : (قوة المادية)

 

அல்லாஹ்வின் மார்க்கத்தை எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப, ஊர், தேசிய மட்டங்களில் நிலைநாட்ட வேண்டுமெனில் சடரீதியான சில பலங்களை நாம் பெற்றிருப்பது அவசியமாகும். உடல் ஆரோக்கியம், சிறந்த கல்வி, சுத்தமான சூழல், உயர் பொருளாதார நிலை, நீதியான அரசியல் என்பவை எமது சமூகத்தின் வெற்றிக்கு இன்றியமையாத விடயங்களாகும். இவற்றில் எமக்குள் இருக்கின்ற பலவீனங்கள் என்ன என்பதை கண்டறிந்து அவற்றைப் பலப்படுத்துவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பலவீனங்கள் எமது மார்க்கத்தினதும் சமூகத்தினதும் பலவீனமாகவே பிறரால் நோக்கப்படும்.

மேற்சொன்ன மூன்று வகையான பலங்களையும் பெற்று புதிய ஹிஜ்ரி வருடத்திலிருந்து புதியதொரு பயணத்தைத் தொடர அல்லாஹூத்தஆலா அருள்பாலிப்பானாக!!

(முஹர்ரமை முன்னிட்டு எழுதிய இந்த ஆக்கம் துண்டுப் பிரசுரமாக சில முஸ்லிம் பிரதேசங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. (புகழ் அனைத்தும் அல்லாஹூக்கே). )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக