-




نَصْرٌ مِنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் மிக சமீபத்தில் இருக்கின்றது

16 மார்., 2011

துருக்கிய இஸ்லாமிய அரசியல் இயக்கத்தின் முன்னோடி அர்பகானின் மறைவு

இஸ்மத் அலி (நளீமி)




கடந்த பெப்ரவரி 27ம் திகதி இறையடி சேர்ந்த பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகான் துருக்கிய இஸ்லாமிய அரசியல் இயக்கத்தின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

1926ம் வருடம் பிறந்த அர்பகான் ஸல்ஜூக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பாட்டன் அக்குடும்பத்தின் கடைசி நிதி அமைச்சராகப் பணியாற்றியவர். இத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்ட அர்பகான் ஒரு பொறியியல் துறைப் பேராசிரியர். 1948ம் வருடம் இத்துறையில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து அடுத்த 05 வருட காலத்தில் தனது எம்.ஏ. மற்றும் கலாநிதிப் படிப்பினை ஜேர்மனியில் பூர்த்தி செய்தார்.

1969ம் வருடம் அர்பகான் அரசியலுக்குள் பிரவேசித்தார். அவ்வாண்டு கவ்னிய்யா நகராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இஃவானிய சிந்தனைப் போக்குக் கொண்ட அர்பகானின் இவ்வெற்றி, துருக்கியில் மீண்டுமொரு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது.




சுமந்து செல்லப்படும் அர்பகானின் ஜனாஸா



ஹிஸ்புந் நிழாமில் வதனி

கிலாபத்தின் வீழ்சிக்குப் பின்னர் துருக்கியில் நிறுவப்பட்ட முதலாவது இஸ்லாமிய கட்சியாக ஹிஸ்புந் நிழாமில் வதனி கருதப்படுகின்றது. 1970ம் ஆண்டு அர்பகான் இக்கட்சியை தாபித்தார். இது பற்றிய கலந்துரையாடல்களில் புத்திஜீவிகளையும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டார்.
இக்கட்சியை நிறுவும் விடயம் பற்றி கமால் அதா துர்க்கின் மறைவின் பின்னால் துருக்கியை ஆட்சி செய்த அதிபர் இஸ்மத் இனனுவிடம் சிலர் வினவிய போது 'அவர்கள் ஆரம்பித்து செயற்படட்டும். துருக்கியில் இஸ்லாம் என்பது எப்போதோ முடிவடைந்த கதை. இவர்கள் அதை நிரூபிப்பார்கள், அவர்களுக்குகப் பின்னால் செல்வதற்கு யாருமில்லை' என்றார்.

என்றாலும் துருக்கிய ஆட்சியாளர்களின் கூற்றுக்களும் எண்ணங்களும் பொய்த்துப் போயின. இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் மாத்திரம் 15,000 பேர் அர்பகானுடன் இணைந்து கொண்டனர். மட்டுமன்றி ஜமாஅதுன் நூர் (இமாம் சஈத் நூர்ஸியால் ஆரம்பிக்கப்பட்டது) போன்ற கட்சி உறுப்பினர்களும் அர்பகானின் கட்சியோடு இணைந்து கொண்டனர்.



இக்கட்சியின் வளர்ச்சி மதச்சார்பற்ற துருக்கிய ஆட்சியாளர்களுக்கு சவாலாக அமைந்ததால் 1971ம் வருடம் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இக்கட்சியின் அங்கத்தவர்கள் யாரும் அடுத்து வரும் 05 வருடகாலங்களுக்கு இன்னொரு அரசியல் கட்சியில் அங்கத்துவம் பெற முடியாதென்றும், தேர்தல்களில் பங்கு பெற முடியாதென்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.



மில்லி கோரிஸ் இயக்கம்.

அரசியல் ஈடுபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் அர்பகான் தளர்வடையவில்லை. இக்காலப்பிரிவில் மில்லி கோரிஸ் என்ற இஸ்லாமிய இயக்கத்தோடு அர்பகான் தன்னை இணைத்துக் கொண்டார். அதை துருக்கிய மண்ணுக் கேற்ற தஃவா இயக்கமாகவும் மாற்றி அமைத்தார். துருக்கிய இஸ்லாமிய அரசியல் கட்சிகளான 'ஸலாமா', 'ரபாஹ்', 'பழீலா', 'ஸஆதா' ஆகிய கட்சிகளின் பெரும்பாலனவர்கள் மில்லி கோரிஸ் இயக்கத்தில் பயிற்றப்பட்டவர்களே.

அர்பகான் அரசியல், சமூக இயக்கத்தையும், தஃவா, தர்பிய்யா இயக்கத்தையும் இரு வேறாக்கி செயற்பட்டார். மில்லி கோரிஸ் தஃவா இயக்கமாக செயற்பட்ட அதேவேளை அவர் ஆரம்பித்த ஸலாமா,ரபாஹ் போன்ற கட்சிகள் அரசியல் இயக்கமாகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஹிஸ்புஸ் ஸலாமா

1971ம் ஆண்டு துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக இடதுசாரிகள் மேற்கொண்ட ஆயுதப் புரட்சிகளின் காரணமாக அப்போதைய அதிபர் ராஜினாமாச் செய்தார். புதிய பிரதமராக நிஹாத் இப்ராஹீம் தெரிவானார். இப்புதிய அரசியல் சூழ்நிலையில் புதிய கட்சிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியது. அவ்வனுமதியைப் பயன்படுத்தி ஹிஸ்புஸ் ஸலாமா அல்வதனீ என்ற கட்சியை அர்பகான் ஆரம்பித்தார். 1973ம் வருடம் நடைபெற்றத் தேர்தலில் இக்கட்சி 12 வீதமான வாக்குகளைப் பெற்று 48 பாரளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டது.

இடதுசாரிகள் அமைத்த இவ்வரசாங்கத்தில் அர்பகான் இணைந்து பதில் பிரதமராகச் செயற்பட்டார். இக்காலப்பிரிவில் அர்பகானின் முயற்சிகளினால் கிலாபத்தின் மறைவுக்குப் பின்னர் முதன்முறையாக 3000 அல்-குர்ஆன் மத்ரஸாக்களும், 10 இஸ்லாமிய கலாநிலையங்களும் உருவாக்கப்பட்டன. மேலும் இஸ்லாமிய நாடுகளுடனான துருக்கியின் தொடர்புகள் வலுப்பெறத் தொடங்கின. இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம், இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி () என்பவற்றில் துருக்கி அங்கத்துவத்தையும் இக்காலப்பிரிவிலேயே பெற்றுக் கொண்டது.




அர்பகான் பதில் பிரதமராகச் செயற்பட்ட போது



அர்பகானின் இம்முயற்சிகளில் மேற்குலக நாடுகளும், மதச் சார்பற்ற துருக்கிய ராணுவமும் அவதானத்தோடு இருந்தன. அவருக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளை மேற்குலக ஊடகங்கள் முடக்கிவிட்டன. எனவே 1977ம் ஆண்டு தேர்தலில் அர்பகானின் கட்சியால் 24 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது.




1980ம் ஆண்டு ராணுவப் புரட்சி


அர்பகானின் அரசியல் பிரவேசம் துருக்கியில் பெரியதொரு இஸ்லாமிய அலையை ஏற்படுத்தியிருந்தது. 1980ம் வருடம் சர்வதேச முஸ்லிம் இளைஞர் மாநாட்டை துருக்கியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அர்பகான் மேற்கொண்டிருந்தார். என்றாலும் அரசாங்கம் இம்மாநாட்டில் அர்பகான் உரை நிகழ்த்துவதற்கு தடை விதித்திருந்தது. அத்தடையையும் மீறி அர்பகான் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இம்மாநாடு நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு சுமார் ஐம்பதினாயிரம் துருக்கிய இளைஞர்கள் குத்ஸ் விடுதலைக்கான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலைமை மதச்சார்பற்ற துருக்கியின் அரசியல் யாப்புக்கு முரணானது என்ற வகையில் ராணுவம் அரசியல் அதிகாரத்தை தம் கைக்குள் கொண்டு வந்தது. அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே தாம் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக ராணுவம் தெரிவித்தது. ராணுவத் தளபதியாக இருந்த கன்ஆன் அப்ரீன் அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும் அனைத்துக் கட்சிகளும் தடைசெய்யப்பட்டதோடு அர்பகான் உள்ளிட்ட இஸ்லாமியவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அர்பகானுக்கு 04 வருட சிறைவாசம் விதிக்கப்பட்டது.



ஹிஸ்புர் ரபாஹ்.


பல்வேறு வகையில் அர்பகானின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அல்லாஹ்வின் உதவியினால் அர்பகான் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நின்றார். தனக்குக் கிடைக்கின்ற சின்னதொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள அவர் தவறவில்லை.

1983ம் ஆண்டு ராணுவ ஆட்சியிலிருந்து மீண்டும் ஜனநாயக வழிக்கு துருக்கி மீளலானது. தடைசெய்யப்பட்ட கட்சிகள் மீண்டும் அரசியலில் ஈடுபடவும், புதிய கட்சிகளை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அர்பகானின் ஆதரவாளர்கள் ஹிஸ்புர் ரபாஹ் கட்சியை ஆரம்பித்தனர். தனது சிறைவாசம் முடிவடைந்து விடுதலையான அர்பகான் 1987ம் ஆண்டு ரபாஹ்வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவ்வருடம் நடைபெற்றத் தேர்தலில் இக்கட்சியானது 8.2 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. மேலும் 1991ம் ஆண்டுத் தேர்தலில் 17 வீதமான வாக்குகளைப் பெற்று 44 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

1994ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இக்கட்சியானது 400 சபைகளில் வெற்றிபெற்றது. துருக்கியின் பிரதான நகரங்களான இஸ்தான்பூல், அன்காரா, கௌனிய்யா போன்ற நகராட்சி சபைகளும் இதில் உள்ளடங்கும். ரபாஹ் கட்சியின் கீழ் செயற்பட்ட உள்ளுராட்சி சபைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் வளர்ச்சி கண்டன. அது வரை நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுப்போக்குவரத்து அதிகார சபை போன்ற நகராட்சி சபைகளுக்கு கீழ் இயங்கி வந்த சபைகள் துருக்கிய வரலாற்றில் முதல் தடவையாக இலாபமீட்டிக் கொடுக்கும் சபைகளாக மாறின.

அர்பகானின் அரசியல் வாழ்வில் 1995ம் வருட பாராளுமன்றத் தேர்தல் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இத்தேர்தலில் தேசிய ரீதியில் அதிகப்படியான வாக்குகளை (21 வீதம்) ரபாஹ் கட்சிப் பெற்றுக் கொண்டது. எனவே அரசாங்கத்தை அமைப்பதற்கு அர்பகானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் அரசாங்கம் அமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவை அர்பகான் வேண்டி நின்றார். இறுதியில் பல்வேறு உடன்பாடுகளுக்குப் பின்னர் தன்சோ சீலர் தலைமையிலான கட்சியோடு கூட்டமைப்பை ஏற்படுத்தி அர்பகான் அரசாங்கத்தை அமைத்தார். சுமார் 02 வருடங்கள் மாத்திரமே ஆட்சியிலிருந்த அர்பகானின் அரசாங்கம் பின்வரும் சாதனைகளை துருக்கிய அரசியல் வரலாற்றில் மேற்கொண்டது.

1) அணு மின் உற்பத்தியை ஆரம்பித்தமை.
2) துருக்கிய நாணயத்தின் பெறுமதியை உயர்த்தியமை.
3) தேசிய உற்பத்தியை 6.7 வீதத்தால் அதிகரித்தமை.
4) இஸ்லாமிய வங்p அமைப்பை அறிமுகப்படுத்தியமை.
5) கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை.
6) இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளை புதுப்பித்தமை. இதன் முக்கிய அம்சமாக துருக்கி, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, மலேசியா, இந்தோனேசியா, ஈரான், நைஜீரியா ஆகிய எட்டு முஸ்லிம் நாடுகளின் அபிவிருத்திக்கான டீ -8 ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
7) அதாதுர்க் காலத்திலிருந்து அமுல்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்பட்டமை.

அர்பகான் மேற்கொண்ட இம்முயற்சிகள் மேற்குலகை அச்சம் கொள்ளச் செய்தன. துருக்கியை ஐரோப்பாவின் நோயாளியாக வைத்திருக்கவே அவைகள் விரும்பின. எனவே மதச் சார்பற்ற துருக்கிய இராணுவம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அர்பகானை பதவி கவிழ்த்தது. ஜனநாயகத்துக்காக குரல் எழுப்பும் ஐரோப்பிய நாடுகளின் நாவுகள் இச்சந்தர்ப்பத்தில் மௌனித்துப் போயின. இந்நிகழ்வோடு அர்பகானின் நேரடி அரசியல் ஈடுபாடு முடிவுக்கு வந்தது.



என்றாலும் அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் துருக்கியை இஸ்லாம் வாழும் தேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். ரஜாஇ கௌதான் தலைமையிலான ஹிஸ்புல் பழீலா, ரஜப் தையுப் அர்துகான் தலைமையிலான ஹிஸ்புஸ் ஸஆதா ஆகிய கட்சிகளின் ஊடாக அர்பகானின் சிந்தனைக் கொண்டோர் ஜனநாயக ரீதியிலான அரசியல் முன்னெடுப்புக்களை தொடர்ந்தனர். இதன் விளைவாக 2002ம் ஆண்டுக்குப் பின்னரான தேர்தல்களில் ஹிஸ்புஸ் ஸஆதா வெற்றி பெற்று துருக்கிiயை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை சமயோசிதமாக மேற்கொண்டு வருகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக